Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாள இதைப்போல் வேளை பிறக்குமா?

உறவு உறவெண்டாலும்
பறியில கைவையாதையடா மேனே
எவனுக்கும் குழிபறிக்காம
சிவனுக்கும் அடிபணியாம
கருக்கல் பொழுதுகள்ள
கணுக்கால் கரையில
மெல்ல மெல்ல
சலசலக்காம
பதுங்கிப்பதுங்கி
வீசின வலையில
சிக்கின பாடொடு
இடுப்பில கட்டின
பறியில இன்னும்
உயிராய் துடிக்கிற
மீன்கள கரையில
கடற்கரை மணலில
பரப்பிப் போட்டு
வித்துப் பிழைக்கிற
விட்டுணு மாமா
கள்ள குடித்து
குலுங்கிக் கலங்கி
பாடின பாட்டு
நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்.

 

பூஞ்சி எரியிற
குடிசை விளக்கில
தன் காதல
பிள்ளயள் காதில ஓத
பாடுற பாட்டு
காத்தில கலக்கும்
ஊரில உள்ள
காதுகள் எல்லாம்
ரசிப்பில லயிக்கும்.

கள்ளு வெடிலோட
கருவாடு கடிக்கிற
கண்கள் ரெண்டு
காதல் தாரத்த
கனிவில கிறக்கும்.

காயப் போட்ட
வலயைப் பொத்தி
இடுப்புத் துண்டில
முகத்தை ஒத்தி
காத்துத் திசைய
வானம் பார்த்து
கணிக்கிற முகத்தில
இருக்கிற வாழ்க்கைய
எடுப்பவர் யாரவர்

நாள இதைப்போல்
வேளை பிறக்குமா?

சிறி

26/02/2011