Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கழுத்து வெட்டும் இனவாதக் குறியீடும் புலிக்கொடி காட்டும் இனவாதமும்

இலண்டன் இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட இலங்கையின் 70வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது, இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிராக, இலங்கையின் சுதந்திரதினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கறுப்புதினம் என்றும், தமிழீழம் எங்கள் தேசம், பிரபாகரன் எங்கள் தலைவர் என்றும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்றினை இலண்டன் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடிகளையும் பிரபாகரனின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் தாங்கிய வண்ணம் நடாத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலண்டன் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்க பர்னான்டோ தூதரக வளாகத்தின் முன்னால் கூடியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என்பதாக சைகை காட்டிச் சென்றது மீண்டும் தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியிருந்தது.

இலங்கையின் «நல்லாட்சி» அரசு காணாமலாக்கப்பட்டோர் பற்றியோ, அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை பற்றியோ, கேப்பாப்புலவு போன்ற இடங்களில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட குடிமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது பற்றியோ எழுந்த உள்ளுர் மக்களின் போராட்டங்களுக்கு உரியமுறையில் என்றும் செவிசாய்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, 

தமிழீழக் கொடியும் பிரபாகரனின் உருவப் படமும் காற்றிலாட ஒரு புறத்தாரும், இலங்கையின் சுதந்திரதினத்தில் இலங்கையரசின் தேசியக் கொடியின் கீழ் நின்று இராணுவப் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பர்னான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என சைகை செய்ததன் மூலம், ஒடுக்குமுறை அரசு என மறுபுறத்தினரும் நடந்து கொண்டமை ஊடகங்களுக்கு இனவாத செய்தியாக மட்டுமல்ல அதன் மூலம் சிங்கள, தமிழ் இனவாத அரசியல் சக்திகளுக்கும் தீனிபோட்டு உருவேற்றியிருந்தது.

இந்தக் குறிப்பிட்ட தூதரக பாதுகாப்பு இராணுவ அதிகாரியின் செயலைக் கண்டித்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து நலிந்த குரலாயிருந்தாலும் உறுதியான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ஆனால் அவைகளை என்றும் இனவாதச் சகதி ஊடகங்கள் பிரபலப்படுத்துவதில்லை, முன்னிலைப்படுத்துவதில்லை.

 

மறுபுறத்தில் இனவாதத்துக்குள் மக்களை மூழ்கடித்து அதிகாரத்துக்கு வர விரும்புகின்ற மகிந்தாவுக்கு இச் சுதந்திரதின எதிர்ப்பில் புலிக்கொடியும் பிரபாகரன் படமுமே எதிர்மறையாக பிரச்சாரக் கருவிகளாக போயின. அது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மகிந்தவுக்கு கைகொடுத்தது. ரணிலுக்கும் மைத்திரிக்கும் எதிராக மகிந்தா தன்னை வாக்குவேட்டையில் தூக்கி நிறுத்த தனக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மிகப் பொருத்தமான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

தேர்தல் பரப்புரையில் தென்னிலங்கையில் பொருளாதார இலஞ்ச ஊழல் பிரச்சனைகள் சூடாகிப்போய், மிகுதியாகப் பேசப்பட்ட வேளையில், மகிந்தவுக்கு இலண்டன் சம்பவம் தனது வாக்கு விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ள, இனவாதத்தைக் கிளறிவிடவும், திசைதிருப்பவும் இன்னுமொரு ஆயுதமாகப் போய்ச் சேர்ந்தது. பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பர்னான்டோ «தேசபக்தன்» ஆக்கப்பட்டார்.

«தமிழீழம் தவிர்க்க முடியாதபடி உருவாவதற்கு மகிந்தவே காரணமாவார்» என உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு சொன்ன சம்பந்தனும், மகிந்த ஆட்சிக்கு மீண்டும் வந்துவிட்டால் பழையபடி புலம்பெயர் நாடுகளில் தமிழீழ வியாபாரம் தழைத்தோங்கும் என ஏங்கும் தமிழினவாதிகளும் இங்கு ஒரு புள்ளியில் சந்தர்ப்பவாதிகளாக சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களது ஒரே நோக்கு, மக்கள் மேல் ஒடுக்குமுறை மகிந்த போன்றவர்களால் அதிகரிக்கப்பட வேண்டும். அது நின்று நீடிக்க வேண்டும்.

இவ்வாறு இனவாத சேற்றுக்குள் மக்களை ஆழ்த்திவைக்க வேண்டும் என்பதே இரு தரப்பாரதும் ஒரே நோக்கமாகும். அவர்கள் இப் புள்ளியில் அரசியல் முரணாய் காட்டிக்கொண்டபடி ஒன்றிணைகிறார்கள். இன மத சாதிய வர்க்க வேறுபாடுகளைக் களைந்தெறிய ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் உள்நாட்டு முகவர்களில் மகிந்த மட்டுமல்ல, மேற்சொன்ன புலம்பெயர் «தமிழீழப்» பேர்வழிகளும் இவ்வாறு தான் இணைந்து இருக்கிறார்கள்.