Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதமும், சாதியவாதமும் வெற்றியடைந்த தேர்தல்

இனவாத மற்றும் சாதியவாத(சில சந்தர்ப்பங்களில் மதவாத) சக்திகள் தம்மை வலுப்படுத்தும் களமாக நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சித் தேர்தல்- 2018 வடக்கு -கிழக்கில் அமைந்திருந்தது.  வேட்பாளர்கள் தெரிவு தொடக்கம், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் யாருக்கு அதிகாரங்களை - பதவிகளை வழங்குவது போன்ற விடயங்களில் இனவாத- சாதியவாத "தகமைகளே"  அடிப்படையானiவாயக கொள்ளப்பட்டதென்பது வெளிப்படையான விடயமாக விளங்கியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தாம் தான் நேரடிப் போட்டியாளர்கள் என எல்லாக் கட்சிகளும் அறிவித்துக் கொண்டாலும், பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திரகுமார் மற்றும் குதிரை கஜேந்திரன்  தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசு கட்சியே(தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இந்தத் தேர்தலில் அந்தத் தகமையைக் கொண்டிருந்தது. புலிகளுக்குப் பின்னான அரசியற் தளத்தில் தம்மை "ஏகப்பிரதிநிதிகளாக" அறிவித்துக் கொண்ட- குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது சொந்த முன்னணியாகப் பாவிக்கும் தமிழரசுக் கட்சியை, அகில இலங்கை தமிழ் காங்கிரசு(அ.இ.த.கா) தமிழ் தேசிய மக்கள் முன்னணி - சயிக்கிள்காரர்கள் அனைத்துவிதமான வாதங்களையும் முன்வைத்துத் தோய்த்துக் காய விட்டார்கள். துரோகிப்பட்டங்கள் சர்வ சாதரணமாக அ.இ.த.கா மேடைகளில் வாரி வழங்கப்பட்டது. சுமந்திரன் தமிழ் தேசிய இனத்தின் தலைமைத் துரோகியாக முன்னிறுத்தப்பட்டார். மாவை சேனாதிராசா மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுயதேவைக்கு பாவிப்பவராகவும், மகனை அரசியலில் இணைத்ததன் மூலம் வாரிசு அரசியலை முன்னெடுப்பவராகவும் முத்திரை குத்தப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட தாம் அதிதீவிர தேசியவாத சக்திகள் என நிரூபிப்பதற்காக- இந்திய சீமானின் பேச்சுமுறையை கொப்பி பண்ணி பேசினார்கள். "தமிழரின் பாரம்பரியம்".... "தமிழர் உலகத்தை கட்டியாண்ட திறமை" பற்றிய பேச்சுகளும் ..... மிருகத்தின் வாரிசுகள் சிங்களவர்கள், சிங்களர்கள் தமிழர் நிலத்தைக் கொள்ளையடிக்கின்றனர், யாழ்ப்பாணத்தின் வளங்கள்- செல்வங்கள் சிங்கள வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றது, முஸ்லீம்கள் துரோகிகள், முஸ்லீம்கள் கிழக்கில் தமிழ்த்தேசியத்தின் முக்கிய எதிரிகள் போன்ற இனவாத அர்ச்சனைகளும் பரவலாக சயிக்கிள் காரர்களின் மேடைகளில் தெறித்தது.

 

ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்கள் தவிர்ந்த, வேறெங்கும் தமிழ் தேசிய ஒடுக்குமுறையை முன்னெடுக்கும் அரச இயந்திரத்தையோ அல்லது இன்றுள்ள ரணில்-மைத்ரி அரசையோ மறந்தும் கூட விமர்சிக்கவில்லை.

ஒரு நாடு இரு தேசம் என்பது தமது கொள்கை என பிரகடனம் செய்யும் சயிக்கிள் கோஸ்டி, கூட்டமைப்பின் "உள்ளக சுயநிர்ணய உரிமையை" கேலி செய்தனர். ஆனால், ஒரு நாடு இரு தேசம் என்ற தமது கொள்கைக்கும் கூட்டமைப்பின் உள்ளக "சுயநிர்ணய உரிமை" என்ற கோசத்துக்கும் இடையிலான கோட்பாட்டு -நடைமுறை வித்தியாசத்தை எங்கும் அவர்கள் மக்களுக்கு விளக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தமிழ் அரசியலை அவதானிப்பவர்கள் எல்லோருக்குமே இலகுவாக விளங்கும் மேற்படி இரு பகுதியினரும் கதைப்பது ஒரே விடையம் பற்றித்தான். அதாவது, தமது சுய அரசியல் தேவைகள் மற்றும் முதலாளித்துவ இனவாத அரசின் தேவைகளுக்கு உகந்ததாக - மேம்போக்கான அரைகுறைத் தீர்வைப் பற்றியே! இந்த இரு தரப்பும் எந்தக் காலத்திலும் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்துக்கு - இன்றுள்ள அரசியற் கட்டமைப்புக்குள் பெற்றுக் கொடுக்க முடியாது. 

இலங்கையில் பெரும்பான்மையான கிராமங்கள் மற்றும் பிரதேசங்கள் சாதியக் கட்டமைப்பு     அடிப்படையிலான சமூகங்களைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. இது தமிழர் வாழ் பிரதேசங்கள் மட்டுமல்ல சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இந்த வகையில் புதிய தேர்தல் விதிகளுக்கமைய நடாத்தப்பட வட்டார அடிப்படையிலும் விகிதாசார முறையிலும் கலந்து பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யும் முறையானது, சாதிய சக்திகளை ஊக்குவித்துள்ளது.

தமிழ் தேசியம் கதைக்கும் இரு கட்சிகள்  மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப்  படுத்துவதாகக் கூறிவரும் ஈபிடிபி போன்ற கட்சிகளும் கூட "எந்தச் சாதிக்கு கூடுதல் வாக்குண்டு"  என்ற கணக்கின் அடிப்படையிலேயே வேட்;பாளர்களை தெரிவு செய்தன.

உதாரணமாக, தீவகத்திலுள்ள 4 பிரதேசசபைகளில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மீன்பிடி சமூகத்தை குறிவைத்து வேட்;பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதேவேளை, காரைநகர், வேலணை பிரதேசங்களில் வெள்ளாளர்களின் வாக்கு வங்கி குறிவைக்கப்பட்டது. புளியங்கூடல் வட்டாரத்தில் சயிக்கிள் குழு வெள்ளாள மேலாதிக்க வெறியர்களை தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் நிறுத்தியது. அதேபோல யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலிலும் மீன்பிடி சமூகங்களை குறிவைத்து தமிழ் கூட்டமைப்பு, ஈபிடிபி போன்றன தமது வேட்பாளர்களை தெரிவுசெய்தது. பாஷையூரை சேர்ந்த ஆர்னோல்ட் என்பவரை கூட்டமைப்பு தனது மேயர் வேட்பாளராக அறிவித்தது.

தமிழ் காங்கிரசு(அ.இ.த.கா)தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது "படித்த" "நாகரீகமான" "சுத்த சைவ" "நகர் சார்ந்த" சமூகங்களை (அதாவது சைவ-வெள்ளாளியதை) குறிவைத்து தனது வேட்;பாளர்களை தெரிவு செய்தது. இதனடிப்படையிலேயே சயிக்கிள் குழு யாழ்.சைவ வேளாளிய பிரதிநிதி பிரக்கிராசி மணிவண்ணனை யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்தது. மணிவண்ணன் ஒடுக்கப்பட்ட சமூக பாரம்பரியங்களுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிராக தொடரப்படும் வழக்குகளில் இலவசமாக வாதாடும் வக்கீல் என அறியப்பட்டவர். இவர் தான் வேள்வி வழக்கை வென்று சிறு தெய்வ வழிபாட்டு உரிமைக்கு எதிராக இயக்கி வருபவர்.

தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், வட்டாரங்களில் நேரடியாக வென்றவர்கள் போக, விகிதாசார அடிப்படையில் கட்சிகள் வென்றுள்ள தமது பிரதிநிதிகளை "எந்த சாதிக்கு - எவ்வளவு பிரதிநிதித்துவம்" ... "எந்த சாதி தமது கட்சிக்கு ஆதரவு வழங்குகிறது" என்ற கணக்கின் அடிப்படையிலே பிரதிநிதிகளை பிரதேச சபைகளுக்கு நியமிக்கின்றனர்.

சாதியம் சார்ந்த மேற்படிச் செயற்பாடானது தமிழர்வாழும் பிரதேசங்கள் எங்கும் பரவலாக நடைமுறைப் படுத்தப்பட்டது. எல்லா கட்சிகளும் திட்டமிட்ட முறையில் கடைப்பிடித்தன. இந்திய நாட்டில் நிலவும் சாதிய கட்டமைப்பு போன்று நமது நாட்டில் இல்லாவிடினும், தற்போதுள்ள அரசியற் களநிலை மற்றும் தேர்தல் முறைமையானது உக்கிரம் குறைந்த இலங்கையின் சாதியக் கட்டமைப்புக்கு வலுவூட்டி விடுமோ என, சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் விழிப்பாக வேண்டிய தேவையை  உணர்த்தியுள்ளது.