Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இரணில்- மைத்திரி அரசின் கொள்கைகள் மீதான வெறுப்பே, மகிந்தவின் தேர்தல் வெற்றி

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை முன்னிலை சோஷலிஸக்கட்சி 11.02.2018 அன்று நடத்தியது. இதன்போது அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, இந்திரானந்த சில்வா மற்றும் புபுது ஜயகொட ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சார்பில் அதன் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம்:

சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. என்றாலும் அந்த உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி 42 வீத வாக்குகள் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது தெரிகின்றது.

ரணில்-மைத்திரியின் கொள்கைகளின் தோல்வி

2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நிராகரித்து வாக்களித்த மக்கள் ரணில் - மைத்திரி கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். இப்போது இந்த கூட்டரசாங்கம் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை மிகப் பாரதூரமான நிலைமையாகவே நாம் காண்கிறோம். 2015ல் மஹிந்த ராஜபக்ஷவை படுதோல்வியடையச் செய்த மக்கள்தான் தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவர வாக்களித்தார்கள். நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. மூன்று இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ரத்துபஸ்வல மக்களின் போராட்டம், ரொஷான் சானக என்ற தொழிலாளர்- தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தனியார்துறை தொழிலாளர்களின் போராட்டம், சிலாபத்தில் அந்தோனி என்ற மீனவத் தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவ மக்களின் போராட்டம், சானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி உரிமைகளை பாதுகாக்கும் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் ஆகியவற்றை ராஜபக்ஷ அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

 

அப்போராட்டங்கள் அனைத்தும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையோடு சம்பந்தப்பட்ட மக்கள் எழுச்சிகள். ஆனால் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அந்த மக்கள் எதிர்ப்புகள் பிரகாசிக்கவில்லை. ரத்துபஸ்வல மக்களால் முன்வைக்கப்பட்ட இந்தப் போலி அபிவிருத்தியினால் ஏற்படும் சூழல் அழிப்பு குறித்தோ, மாணவர் போராட்டங்களின் போது முன்வைக்கப்பட்ட கல்வி வியாபாரமயமாவது குறித்தோ, கட்டுநாயக போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் வெட்டப்படுவது குறித்தோ, மீனவ மக்கள் முன்வைத்த உற்பத்திப் பொருளாதாரத்தின் மதிப்பை இல்லாதொழிக்கும் நவதாராள மறுசீரமைப்புகள் குறித்தோ அந்த தேர்தல்களின்போது பேசப்படவில்லை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆதிக்கம் போன்ற கோஷங்களே முன்வைக்கப்பட்டன. ஜனநாயகம் எனக்கூறி நாட்டின் சாமானிய மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது குறித்த பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கொலைகளினால் துன்பத்திற்கு ஆளானவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பது போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஜனநாயகம் என்ற பெயரில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மாத்திரமே முன்வைக்கப்பட்டது. இவை மாத்திரமல்ல மக்கள் அபிலாஷைகளை கொள்ளையடித்து அதிகாரத்திற்கு வர பாதை அமைக்கப்பட்டது.

இப்போது மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நவதாராளமய பொருளாதார மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதன் ஊடாக மக்களின் எந்தவொரு உண்மையான பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்ததாக இல்லை. அவை மேலும் உக்கிரமடைந்து வருகின்றன. அவர்களாகவே கூறிய பிரச்சினைகளுக்குக் கூட இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் அபிலாஷைகளை காட்டிக் கொடுத்தமையால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் மக்கள் போராடியதற்கான காரணிகள் இன்னும் தொடர்கின்றன. அரிசி நூறு ரூபாய்,  தேங்காய் நூறு ரூபா எனும் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடைந்து வருகின்றன. அதிக வரிகளை சுமத்தி மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். அரச ஊழியரின் ஓய்வூதியம் ரத்துச் செய்யப்பட்டமை, தனியார் துறையின் 8 மணிநேர வேலைநாள் சம்பந்தமான பிரச்சினை, கல்வி தனியார்மயமாக்கல், துறைமுகம் மற்றும் எண்ணெய்த் தாங்கிகள் போன்ற பொதுச் சொத்துகள் விற்கப்படுதல், விமானச் சேவை, அரச வங்கிகள் தனியார்மயமாக்கல் போன்ற பாரதூரமான பிரச்சினைகள் இன்னும் உள்ளன. ஆகவே இப்பிரச்னைகள் சம்பந்தமான மக்கள் எதிர்ப்பையே, இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

மஹிந்த கொள்கையின் வெற்றியா?

ஜனநாயகம் சம்பந்தமாக எடுத்துக் கொண்டால் கடந்தகால வேலைநிறுத்தங்களில் தலையிட்ட விதம், மாணவர் எதிர்ப்புகளின்போது மேற்கொண்ட கொடூர அடக்குமுறை, நீதிமன்ற உத்தரவை பெற்று மக்களின் நியாயமான எதிர்ப்புகளை அடக்க முயற்சித்தமை போன்ற இவை அனைத்தையும் இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ உட்பட தாமரை மொட்டுக்காரர்கள் பீற்றிக் கொண்டாலும், அவர்களுக்கு பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகக் கூறினாலும் இது அவர்களது கைங்கரியமல்ல. அரசாங்கத்தினது தோல்வியின் பிரதிபலிப்புதான் இது. இந்த அரசாங்கத்தினால் தீர்வுகாண முடியாத எந்தவொரு பிரச்சினைக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணியால் கொள்கை ரீதியான தீர்வுகாண முடியாது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் கூட தீர்வுகாண முடியாமல் மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தமைக்கான பிரச்சினைகளுக்கு வெற்றிபெற்றதாகக் கூறுபவர்களிடமும் பதில் கிடையாது. இவ்வாக்களிப்பானது மஹிந்த ராஜபக்ஷ மீதுள்ள மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடல்ல. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான வெறுப்பைத்தான் இவ்வாக்களிப்பு வெளிப்படுத்துகின்றது. எனவே இவ் வெற்றி திருடுவதற்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டதாக, கொலை செய்வதற்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அல்லது வேறு யாராவது நினைப்பார்களேயானால் அது தவறாகும். இனவாதத்தை விதைப்பதற்காக அடிப்படைவாதிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டதாக நினைத்தாலும் அதுவும் தவறு. இது தெளிவாகவே அரசாங்க எதிர்ப்பாகும் என்பதை உணர வேண்டும். மாற்றீடு இல்லாமை காரணமாக மக்கள் காட்டிய எதிர்ப்பின் வெளிப்பாடு.

வடக்கில் தமிழ் "தேசிய"வெற்றி

வடக்கின் உள்ளுராட்சி அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டணிக்கும் சில தீவிர தேசியவாத கருத்துடையவர்களுக்கும் வடக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இவர்களின் அரசியலானது பாரிய கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளது. மக்கள் தமது நலன்களின் அடிப்படையிலான விடையை பதிவு செய்வதற்குப் பதிலாக, இந்த அரசியலினால் வழங்கப்பட்ட விடைகளைக் கொண்டு மாற்றீடை தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தமக்கான விடையைக் காணும் நாளில் மட்டுமே உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அரசாங்கத்திற்கு நாம் கூறுகிறோம்

இத்தேர்தல் முடிவுகளின் பின்னராவது அரச ஊழியர்களின் ஓய்வூதியம் மறுக்கப்படுவதை நிறுத்துங்கள். கடைநிலை ஊழியர்கள் நலன் சார்ந்து சட்டமூல திருத்தங்கள் பற்றி சிந்தித்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்திற்கு முடியும். யார் எதிர்த்தாலும் நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்ற ரீதியில், மாணவர்கள் விரிவுரையாளர்கள் பெற்றோர்கள் எதிர்க்கும் நிலையிலும், சைட்டம் நிறுவனத்தை பாதுகாக்கும் கல்வியை விற்பது குறித்து மீண்டும் அரசு சிந்திக்க வேண்டும். விவசாயியின் உர மானியத்தை வெட்டுவது குறித்து, காணிக் கொள்ளை, விதைகள் சட்டமூலம், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட உரிமைகள் ஒழிக்கப்படுவது குறித்து மீண்டும் சிந்திப்பதற்கு இத்தேர்தல் முடிவே போதுமானதாகும்.

அதேபோன்று இடதுசாரிய அரசியலில் மீண்டும் சிந்திக்கவும், எமது அரசியல் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் எமக்கு சமிக்ஞை கிடைத்துள்ளது. இந்த சமூகத்தின் குறைபாடுகளை முகாமைத்துவம் செய்யும் அரசியலுக்குப் பதிலாக அது விடயத்தில் தீர்வுகாண மக்களுக்கு விழிப்பூட்டும் அரசியல் தேவைப்படுகின்றது. 70 வருடங்கள் அடிமைகளாக இருப்பதற்கு கற்பிக்கப்பட்ட மக்கள், தேர்தலின்போது ஒரு அடிமை முதலாளிக்குப் பதிலாக இன்னொரு அடிமை முதலாளியையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆகவே, இங்கே அடிப்படைப் பிரச்சினை என்னவெனில் அடிமை மனோபாவம் கொண்ட மக்களை- சுதந்திர சமூகமாக மாற்றுவது சம்பந்தமானதுதான்!!! முன்னிலை சோஷலிஸக் கட்சியானது அடிமைச் சிந்தனை முறையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு சார்பானது  என்பதையும், சகல இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்களோடு இணைந்து செயற்பட தயாராக உள்ளது என்பதையும் கூற விரும்புகின்றது. மக்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தோடு இணையுமாறு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும், சகல முற்போக்காளர்களையும் அழைக்கின்றோம். மக்கள் எப்போதும் தவறானதையே தெரிவு செய்கிறார்கள் என்பது ஒருபக்கமிருக்க, மக்கள் தெரிவுசெய்வதற்கான மாற்றீடொன்று அவர்களுக்கு இல்லை என்பதுதான் இன்றுள்ள உண்மையான நிலை. இத்தேர்தல் முடிவுகளை பாரதூரமாக கருதுங்கள், இந்த நிலைமையை மாற்ற முன்வாருங்கள் என அழைக்கின்றோம்.