Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்கால இலக்கு

கல்வி மற்றும் சுகாதார சேவையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வரலாற்றில் எழுந்த பாரிய மக்கள் இயக்கமாகிய சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட சைட்டம் திருட்டுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானமிக்க திருப்புமுனையை பதிந்துவிட்டு நாம் இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளோம். 

மாணவர் அமைப்பானது இப்போராட்டத்தில் கலந்திருப்பது பொதுவான சைட்டம் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சைட்டம் திருட்டு பட்டக் கடையின் சட்டபூர்வ தன்மை மற்றும் தரம் சம்பந்தமான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டோ அல்ல. கல்வி சம்பந்தமாக நீண்டகால கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இப்போராட்டத்தோடு இவ்வியக்கம் கலந்திருக்கின்றது. 

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்காக பயிற்றுவிக்கும் அடிமைத்தனமான பயிற்சியோ அல்லது பாத்திரத்தில் தண்ணீரை நிரப்புவது போன்று மாணவர்கள் மீது அறிவை நிரப்புவது அல்ல என்பதை ஒவ்வொரு கல்வியியலாளரும் விவாதமின்றி ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

கல்வி என்பது ஒருவருக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொண்டுவர மேற்கொள்ளும் ஆளுமை வளர்ச்சி என்பதாக அறிவியல் கல்வியின் வளர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கல்வி என்பது வெறுமனே அறிவு பரிமாற்றமல்லாத கற்பித்தல் செயற்பாடாகும். அதேபோன்று யுனெஸ்கோ உடன்பாட்டிற்கு அமைய கல்வி என்பது வாழ்வதற்கு கற்றுக் கொள்வதாகும். அதாவது கல்வி என்பது வாழ்க்கையாகும். 

கல்விக்கான உரிமை இழக்கப்படுவது என்பது வாழ்வதற்கான உரிமையை இழப்பதாகும். வாழ்க்கைக்காகவும் மனிதகுலம் வரலாறு பூராவும் பெற்றுக்கொண்ட கலாச்சார பொக்கிஷங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருப்பதால்தான் கல்வியானது அனைவருக்கும் உரிய மீறமுடியாத உரிமையாக இருக்கின்றது. வரலாறு பூராவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வளர்ச்சிபெற்ற அறிவு தனியொரு மனிதனது முயற்சியின் பலனல்ல, சமூகம்சார் உழைப்பின் பிரதிபலனாகும். ஆகவே, அந்த அறிவை பெற்றுக்கொள்ள சமூகத்திற்கு உரிமை உண்டு.

தனியார்மய நடவடிக்கையின் ஊடாக கல்வியை வர்த்தகப் பண்டமாக்கும் போது சமூகத்திற்கு சொந்தமான இந்த உரிமை இழக்கப்படுகின்றது. அதேபோன்று ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரித்தான கலாச்சார பாரம்பரியங்கள் இலாபத்தின் பின்னால் ஓடும் வியாபாரிகளின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆகிவிடும். கல்வி தனியார்மயத்தை நாம் எதிர்ப்பது அது ஒருபோதும் நெறிமுறைகளை கொண்டிராததால் மாத்திரமல்ல. அது சமூக முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதனாலும் தான்.

என்றாலும், “ஒஸ்கார் வைல்ட்” என்ற பிரபல எழுத்தாளரின் கூற்றிற்கு அமைய எந்தப் பொருளினதும் மதிப்பை அறியாத, ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க மாத்திரமே அறிந்த கேவலமான சமூகமொன்று உருவாவதன் ஊடாக கல்வியும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதுமாக உள்ளது. 

இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலவசக்கல்வி தொடர்பில் நீண்டகாலமாக நிலவிய பாரம்பரிய முறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளிக் கல்வி முற்றாக பணத்திற்கு பெற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பள்ளிக் கல்வி தொடர்பில் தரத்தை ஆய்விற்கு உட்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகியிருக்கும் நிலையில் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி குழம்பியுள்ளது.

 

பாடசாலைக் கல்விக்கான அரச மானியங்கள் நாளுக்கு நாள் வெட்டப்பட்டு, பாடசாலைக் கல்வியின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுவதுடன் அதன் சுமை முழுமையாக மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. இது பல வகைகளில் செயற்படுகின்றது. ஒருபுறம் தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதும், மறுபுறம் அரச பாடசாலைகளை மூடுவதும் காரணமாக கல்வி என்பது பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டிய வரப்பிரசாதமாக ஆக்கப்பட்டுள்ளது. வசதிகளைக் கொண்ட சில பாடசாலைகளுக்காக போட்டி நிலவும் நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான பாடசாலைகள்  பராமரிக்க முடியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. தனியார் பாடசாலைகளில் மாத்திரமல்ல அரச பாடசாலைகளிலும் கட்டணம் அறவிடுவது பொதுமையாக்கப்பட்டிருப்து செலவீனங்களின் பொறுப்பிலிருந்து அரசு விலகியிருப்பதனால்தான். அவ்வாறு மாணவர்களினால் செலவு செய்யப்பட்டாலும் தரமான கல்வி கிடைக்காமையால் மீண்டும் மேலதிக வகுப்புகளுக்காக செலவு செய்ய நேரிடுகின்றது.

எனவே, இலவசக் கல்வி என்பது பெயரளவில் மாத்திரம் ஆக்கப்பட்டு ஒட்டுமொத்த பாடசாலைக் கல்வித்துறையும் படிப்படியாக வணிகமயமாக்கப்பட்டு வருகின்றது. தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி சம்பந்தமாக பார்க்கும்போது நிலைமை மிக பயங்கரமாகும். நீண்டகாலமாக கவனிக்காமல் விடப்பட்டமையும் மானியங்கள் வெட்டப்பட்டமையும் காரணமாக தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் விவசாயக் கல்லூரிகள் அழிவின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளன. ஆகவே, அத்துறைகளில் கல்வி பெறும் வாய்ப்பு முற்றிலும் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயர்கல்வியின் நிலையும் இதுதான்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும் வாய்ப்புகள் உயர்ந்து வரும் தேவைகளுக்கு ஒப்பீடாக விஸ்தரிக்கப்படாமையால் உயர்கல்விக்காக போட்டி நிலவுகின்றது. உயர்தர பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்தும் அநேகமானோருக்கு இலவசக் கல்வியின் கீழ் அந்த உரிமை கிடைப்பதில்லை. பல்கலைக்கழக கல்விக்காக ஒதுக்கப்படும் மானியங்கள் வருடாவருடம் வெட்டப்படுவதுடன் கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு அவற்றின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கான ஆலோசனையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு குறுகிய கால பாடவிதானங்கள் மற்றும் வெளிவாரி பட்டங்கள் பணத்திற்கு விற்கப்படுவதன் ஊடாக தமக்கான செலவீனங்களை பெற்றுக் கொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதோடு அரசாங்க தலையீட்டைக் கொண்டு மக்கள் பணத்தினால் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. கொத்தலாவல பல்கலைக்கழகம் இதற்கு ஓர் உதாரணமாகும்.

இவை அனைத்தும் நடப்பது பாடத்திட்டத்தில் வெட்டு, கல்வியின் உள்ளடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மட்டத்திற்கு ஏற்ப வெட்டுதல், நவதாராளமய பொருளாதாரத்திற்கு பொருந்தாத பாடங்களை கற்கும் உரிமையை மறுத்தல் போன்றவற்றிற்கு மேலதிகமாக இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பிற்குள்தான் இலவசக் கல்விக்காகவும், கல்வியில் சுதந்திரத்திற்காகவும் மாணவர் இயக்கம் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றது.

சைட்டம் திருட்டுக் கடை என்பது இவ்விதமாக கல்வியை மூலதன அபிலாஷைகளின் பொம்மையாக ஆக்கக்கூடிய மேற்கூறிய நாசகார வேலைத்திட்டத்தின் ஒரு திருப்புமுனையாகும். ஆகவேதான் சைட்டம் எதிர்ப்பு போராட்டமானது இலவச கல்விக்காகவும் கல்வியில் சுதந்திரத்திற்காகவும் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியேயன்றி சைட்டத்திற்கு எதிராக மாத்திரம் நடக்கும் போராட்டமல்ல. மாணவர் இயக்கம் இப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முதல் அடிப்படையும் அதுதான்.

கல்வியை பணத்திற்கு விற்பதும் மற்றும் கல்வியின் தரப்பிரிவிற்கு மூலதன தேவைகளை கொண்டு இடையூறு விளைவிப்பதும் வெறுமனே கல்வித்துறையின் பிரச்சினை மாத்திரமல்ல. இந்நாட்டு ஆட்சியாளர்களின் பொருளாதார மற்றும் சமூகம் தொடர்பிலான தந்திரோபாயமாக இருப்பது நவதாராளமய தந்திரோபாயமாகும். அதன் முக்கிய பண்பாக இருப்பது மூலதனத்திற்குள் நுழைவதற்கு இதுவரை இருந்த தடைகளை நீக்கி அனைத்தையும் வர்த்தகப் பண்டங்களாக ஆக்குவதுதான். 1977லிருந்து இதுவரை 82 அரச நிறுவனங்கள் விற்றுத் தள்ளப்பட்டதும், துறைமுகம் - எண்ணெய் தாங்கிகள் - விமானச் சேவைகள் - அரச வங்கிகள் ஆகிய மக்கள் சொத்துக்களை தனியார்மயமாக்குவதும், முதலீட்டாளர்களை மகிழ்விப்பதற்காக தொழில் சட்டங்கள் வெட்டப்படுவதும் மற்றும் எட்கா போன்ற ஒப்பந்தங்கள் ஊடாக உழைப்பின் ஊதியத்தை குறைப்பதும், சூழல் சட்டங்களை பலவீனப்படுத்துவதும், காணி – தண்ணீர் - விதைகள் ஆகிய துறைகளையும், ஒட்டுமொத்த விவசாயத்தையும் பல்தேசியக் கம்பனிகளின் பலிக்கடாவாக ஆக்குவதும் கல்வியையும் சுகாதார சேவை போன்ற சமூக பாதுகாப்பு சேவைகளை முதலாளிகளின் கையில் ஒப்படைப்பதும் அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான். 

ஆகவே, கல்வித்துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் என்பன நவதாராளமய தந்திரோபாயம் காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுள்ள அழிவின் ஒரு பகுதியேயாகும். இரும்பு பற்றி எரியும் வீட்டில் பஞ்சு எஞ்சப் போவதில்லை என்ற சொல்வடையொன்று உள்ளது. சமூகத்தில் சகல துறைகளிலும் வியாபித்துள்ள நவதாராளமய ஒட்டுண்ணியை முற்றாக ஒழித்துக் கட்டாமல் கல்வியை மாத்திரம் அந்த தலைவிதியிலிருந்து மீட்டிட முடியாது.

இந்த சமூகவிரோத மற்றும் மக்கள் துரோக நவதாராளமய வேலைத்திட்டததிற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழில் இல்லாத இளைஞர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர், சிறு உற்பத்தியாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினர் போராடி வருவதோடு, கல்வி உரிமைக்கான போராட்டமும் அந்தப் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். மாணவர் இயக்கமானது சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் நுழைவதற்கான இரண்டாவது அடிப்படையானது அது ஏகாதிபத்தியத்தினதும் நவதாராளமய திட்டத்தினதும் நாசகார செயல்களுக்கு எதிராக நடக்கும் சமூகத்தின் பொது போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், அவ்வாறான போராட்டத்தின் உந்துசக்தியாகவும் ஆக்கும் நோக்கத்திலேயேயாகும்.

இந்த நாசகார நவதாராளமய வேலைத்திட்டமானது இலங்கையின் எல்லைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஏகாதிபத்திய தேவைகளின் மீது ஒட்டுமொத்த உலகத்தையும் இரையாக்கிக் கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவதாகும். அவ்வேலைத்திட்டம் உலக பரிமாணத்திலானது என்பதால் அதற்கெதிரான போராட்டம் உலகமயமாக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களின் வற்புறுத்தல் ஊடாக நவதாராளமய மறுசீரமைப்பை முழு உலகின் மீதும் சுமத்திக் கொண்டிருக்கின்றது. சமீபத்திய சில வருடங்களில் அமெரிக்க குடியரசில், பிரித்தானியாவில் மற்றும் கிரேக்கத்தில் அரசியல் போக்குகளும் இந்தியாவின், பிரான்ஸின் மற்றும் மேலும் பல நாடுகளில் மக்கள் போராட்டங்களும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

எமது போராட்டமானது எமக்கு சமமான தலைவிதியில் தள்ளப்பட்டுள்ள உலகின் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் நாம் அப்போராட்டத்தை பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளோம். இலங்கை மாணவர் இயக்கத்தின் தலைமையில் உருவாகிய சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கமானது அந்த அடிப்படை நியதியை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால தத்துவார்த்தத்தின் மீது பயணிக்கும்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போன்று வரலாற்றில் மாணவர் இயக்கத்தை உருவாக்கிய விரிவான மக்கள் இயக்கம் சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தின் ஊடாக உருவாகியுள்ளதுடன் அதன் உடனடி கடமையாக சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகொண்டு இலவசக் கல்வியும் இலவச சுகாதாரமும் உட்பட உரிமைகளை நாசமாக்கும் நவதாராளமய நாசகார கொள்கையை தோற்கடித்து திடசங்கற்பத்துடன் வெற்றி வரை தளராது தாமதிக்காது இந்த மக்கள் இயக்கம் முன்னேறும் என உறுதியாகக் கூறுகின்றோம். மக்கள் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய இறுதி வெற்றிவரை தடைகள், இடையூறுகள், அவமானங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரிலும் இலங்கை மாணவர் இயக்கத்தினால் சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்திற்கு முன்னோடி தலைமையை வழங்குவதாக இலங்கை ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னிலையில் சபதமிடுகின்றோம்.

 

--சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தின் மாணவர் மக்கள் மாநாடு 2017 ஆகஸ்ட் 15

--மருத்துவபீட மாணவர் செயற்குழு

--அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம்

--அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

 

மாநாட்டு ஆலோசனைகள்

01.கல்வியையும் சுகாதார சேவையையும் தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மற்றும் அத்திட்டத்தின் முதன்மை தேவையான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு வழிவகுக்கும் திட்டம் என்ற வகையில் நடைமுறை சட்டத்திற்கு புறம்பாகவும், இலங்கை மருத்துவ சபையின் அங்கீகாரத்திற்குக் கூட தகுதியற்ற தரத்தினைக் கொண்டதும், வெறுமனே இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதும் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு ஆளாகியிருப்பதுமான மாலம்பே திருட்டு பட்டக் கடையை உடனடியாக ரத்து செய்யுமாறு வற்புறுத்தும் இம்மாநாடு மேற்படி திருட்டு பட்டக் கடையை ரத்துச் செய்யும் வரை தொடர்ந்து போராடுவதாக சபதம் செய்வதோடு அதற்காக திடசங்கற்பத்துடன் ஐக்கியப்டுமாறு போர்க்குணம் கொண்ட சகல சக்திகளுக்கும் முன்மொழிகின்றது.

02.கல்விக்காக ஒதுக்கப்படும் மானியங்களை வெட்டும் கொள்கை சில தசாப்தங்களாக செயற்படுத்தப்பட்டு வருவதோடு, பாடசாலைகளில் கட்டணம் அறவிடுதல், பாடசாலைகளில் முரண்பாடுகள் வளர்ச்சியடைதல், பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்த்தல் அதிகரிக்கப்படாமை, சமீபகாலத்தில் தலைதூக்கிய பல்கலைக்கழக உள்ளீர்த்தலில் வெட்டு, ஆசிரியர்களினதும் விரிவுரையாளர்களினதும் சம்பளப் பிரச்சினைகள் அதன் நேரடி விளைவுகளாகும் எனவும், இந்த பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்கு அத்தியாவசிய கொள்கைரீதியான அணுகுமுறையாக கல்விக்காக தேசிய உற்பத்தியில் 6 வீதம் வரை மானியங்களை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம். அந்த வாக்குறுதியானது தற்போதை அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்காக வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக இருந்த போதிலும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதற்கு மாற்றமாக மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட்டிருப்பதுடன் அந்த கொள்கையை எதிர்க்கும் இம்மாநாடானது கல்விக்காக 6 வீதத்தை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து போராட வேண்டுமென முன்மொழிகின்றது.

03.சுகாதார சேவைக்கான மானியங்கள் வெட்டப்படுவதன் விளைவாக அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கான பற்றாக்குறை உருவாகியுள்ளமை, வார்ட்(றுயசன) வசதிகள் போதுமானளவு இல்லாமை, அரசாங்க வைத்தியசாலைகளில் ஆகக் குறைந்தளவு இரசாயன வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமை, அலுவலக உத்தியோகத்தினர்களுக்கான பற்றாக்குறை உட்பட பாரதூர பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதுடன், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறையாக சுகாதார சேவைக்காக மொத்த தேசிய உற்பத்தியில் ஒதுக்கப்படும் மானியங்கள் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும் இலவச சுகாதாரத்திற்கான மானியங்களை அரசாங்கம் தொடர்ந்தும் வெட்டுவதோடு அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டத்திற்கு எதிரான இம்மாநாடு சுகாதார சேவைக்காக ஒதுக்கப்படும் மானியங்களை அதிகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து போராட வேண்டுமென முன்மொழிகின்றது.

04.கல்வியும் சுகாதாரமும் மக்களின் அடிப்படை உரிமைகளாகவும் வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கங்களாக இருந்த போதிலும், கல்வியையும் சுகாதார சேவையையும் வர்த்தகப் பண்டங்களாக்கி, அது விடயத்தில் தலையிடும் உரிமையை பெரும்பான்மை மக்களிடமிருந்து பறித்து அதனூடாக மக்களின் வாழும் உரிமையை இல்லாமலாக்கும், அதேபோன்று அந்த மதிப்புவாய்ந்த சமூக சேவைகளை வியாபாரிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இலாபம் பெறும் நோக்கில் இரையாக்கும் தற்போதைய நவதாராளமய வணிகமய திட்டத்தை வெறுப்புடன் கண்டிக்கும் இம்மாநாடு அதனை தோற்கடித்து மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்காக சகல முற்போக்கு சக்திகளோடும் ஒன்றுபட்டு போராட வேண்டுமென முன்மொழிகின்றது.

05.கல்வியையும் சுகாதார சேவையையும் இலாப நோக்கத்திற்காக இரையாக்குதல் உட்பட மேலும் பல துறைகளை ஆக்கிரமித்து ஒட்டுண்ணிகளாக பரவிக் கொண்டு, சமூகத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் உறிஞ்சிக் குடித்து, மக்கள் சமூகத்தை அசைபோடும் தற்போதைய சமூக பொருளாதார கொள்கையை இறுதியாக தோற்கடிக்கும் தேவையும் வலிமையும், அதற்கான வரலாற்று அணிவகுப்பும் தொழிலாளர் வர்க்கம் முதன்மையாக உழைக்கும் மக்கள் வசம் இருப்பதாக உறுதியாக நம்பும் இம்மாநாடு, இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவை உட்பட சமூக உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கும் இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தோடு கைகோர்த்துக் கொள்ளும் தேவையை வலியுறுத்தி அந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற முன்வருமாறு தொழிலாளர் முதற்கொண்டு இலங்கை உழைக்கும் மக்கள் சக்திகளுக்கு முன்மொழிகின்றது.

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம்