Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கில் புலிகளின் ஆதிக்கமும் "தீப்பொறி"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63

வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டு முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவர் மீதும் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த போதிலும் என்னுடன் பேசுவதற்கு செல்வி எனது வீட்டுக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் என்னை வழிமறித்து பேச அழைத்தபோது நான் பேசுவதை எதற்காகத் தவிர்த்துக் கொண்டேன் என்பதை செல்விக்குத் தெளிவுபடுத்தியதுடன் செல்வி தனது பேச்சை ஆரம்பித்தார். நான் எதிர் பார்த்தது போலவே செல்வியினுடைய பேச்சு நீண்டு சென்று கொண்டிருந்தது. புளொட்டில் இணைந்து நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் செயற்பட்ட காலங்கள், புளொட்டின் தலைமையின் அராஜகப் போக்கால் ஆயிரக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் உழைப்பு, தியாகம் என்பன விரயமாய்ப் போனமை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் புத்திஜீவிகளையும் அப்பாவித் தமிழ், சிங்கள மக்களையும் பலி கொண்டுவிட்டிருந்ததையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.முற்போக்கு சக்திகள் எனப்படுபவர்களின் பலவீனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமாக மாறி விட்டது என ஆதங்கப்பட்டார்.

இவ்வளவு நெருக்கடிகளுக்கும் ஆபத்துக்களுக்கும் மத்தியிலும் எதற்காக யாழ்ப்பாணத்தில் நிற்கிறீர்கள் என்ற கேள்வியையும் கூட என்னிடம் செல்வி கேட்டிருந்தார். இத்தகையதோர் கேள்வி செல்வி குறித்து என்னிடமும் இருந்தது. யாழ்பாணத்தில் எதற்காக நிற்கின்றேன் என்பதை கூறக்கூடிய நிலையில் நான் அன்று இருந்திருக்கவில்லை.நாம் தீப்பொறிக் குழுவாக இரகசியமாக செயற்படுவது குறித்தோ அல்லது நாம் யாழ்ப்பாணத்திலேயே இருந்து கொண்டு செயற்பட வேண்டும் என்ற தீப்பொறி செயற்குழுவின் முடிவு குறித்தோ நான் செல்விக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தேன். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் நெருக்கடிகளும் ஆபத்துக்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் விரைவிலேயே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியவர்களாக உள்ளோம் என்பதையும் செல்விக்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் செல்வியோ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டே நாடகத் துறை மூலமாக மக்களுக்குள் முற்போக்குக் கருத்துக்களை கொண்டு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளை அம்பலப்படுத்த  முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதேவேளை ரஜனி திரணகமவின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட பூரணி மறுவாழ்வு நிலையத்தில் செயற்படுவதாகவும் அதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி புரிய முடியும் எனவும் கூறினார். இத்தகைய செயற்பாடுகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து நேரலாம் என்பதை செல்வி ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் தனக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆபத்து நேரும் பட்சத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் செல்வி தங்கியிருந்த சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்  சேர்ந்த மக்களும் தனக்காகப் போராடுவார்கள் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். "தமிழீழ விடுதலைப்  புலிகளைப் பொறுத்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகமோ  அல்லது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களோ ஒரு பொருட்டல்ல" என்று நான் கூறிய போது "தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பயந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை விட்டோ அல்லது பூரணி மறுவாழ்வு நிலையத்தை விட்டோ ஓடப் போவதில்லை" என்று செல்வி ஆணித்தரமாகக் கூறினார்.தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்ததொரு சரியான கண்ணோட்டத்தை செல்வி கொண்டிருக்கத் தவறியதை நான் உணர்ந்து கொண்டிருந்த போதும் போரினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச்  செய்ய வேண்டும் என்ற உறுதியான முடிவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை அம்பலப்படுத்த முன்வந்த துணிச்சலும் செல்வியின் மக்கள் மீதான நேசிப்பையும் அவரது மக்கள் அரசியலையும் வெளிப்படையாகக் காட்டி நின்றது. ஆனால் எத்தகைய உறுதி கொண்டவர்களையும் எத்தகைய துணிச்சல் மிக்கவர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் ஒரு கணப் பொழுதுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதை எம்மில் பலர் புரிந்து கொண்டிருக்கவில்லை. நீண்ட நேர சந்திப்பின் முடிவில் செல்வி என்னிடமிருந்து விடை பெற்றுச் சென்றிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளோ நிழல் போல எம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். குறிப்பாகத் தீப்பொறிக் குழுவினராகிய எமது செயற்பாடுகள் எமது நடமாட்டங்கள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் "கரிசனை" கொண்டிருந்தனர் என்பதை என்னால் அறிய முடிந்தது. எனது அயலவரின் உறவினரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கீழணியில் செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கொட்டடியைச் சேர்ந்த ஒருவர் எனது அயலவரிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் எனக்கு வரவிருக்கும் ஆபத்துக் குறித்துக் கூறியிருந்ததுடன் என்னை யாழ்ப்பாணத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுமாறு கூறும்படி என் அயலவரிடம் தெரிவித்திருந்தார்.எனது அயலவர் இந்த விடயத்தை என்னிடம் தெரிவிக்கும் போதே தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விசாரணைக்குச் சென்ற யோகன் விடுவிக்கப்படாததால் எனக்குக் கிடைத்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து எந்தவித ஐயப்பாடும் எழவில்லை. இந்தத் தகவலை ஏனைய தீப்பொறிச் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி எமது பாதுகாப்புக் குறித்து அதிக சிரத்தை கொள்ளவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழணி உறுப்பினரின் தகவலை செயற்குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால் என்னால் தெரிவிக்கப்பட்ட தகவலை செயற்குழு உறுப்பினர்களாகிய ரகுமான் ஜான், டொமினிக், சண்முகநாதன், தர்மலிங்கம் போன்றோர் முக்கியத்துவமானதொன்றாகக் கருதியிருக்கவில்லை. செயற்குழு உறுப்பினராகிய தேவன் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த போதும் எப்பொழுதும் போலவே தனது கருத்தை செயற்குழுக் கூட்டத்தில் உறுதியாக முன்வைத்துப் பேசத் தவறியிருந்தார். யோகன் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும் கூட தீப்பொறிச் செயற்குழுக் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழணி உறுப்பினரால் கூறப்பட்ட விடயத்தை ஒரு பிரச்சனைக் குரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழணி உறுப்பினர்களின் கட்டுக் கதையாக இருக்க முடியும் எனக் கூறிய தீப்பொறிச் செயற்குழு உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகச் சென்று பேசும்படி ஆலோசனை தெரிவித்திருந்தனர்.பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாத போதும் கூட செயற்குழுவின் முடிவுக்குக் கட்டுப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சந்திக்கச் சென்றேன், இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம்  தாங்கிய உறுப்பினர்கள் கொக்குவில் பகுதியில் இரவு வேளைகளில் தங்கி அதிகாலையில் புறப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளை அதிகாலை வேளையில் சந்திப்பதை நோக்கமாகக் கொண்டு புளொட் உறுப்பினராக விருந்த மோகனும் நானும் சென்றிருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அதிகாலையில் இடைமறித்து பேசிய நான் "உங்களால் எனக்குப் பிரச்சனை என அறிந்தேன் என்ன பிரச்சனை என்று அறிந்து கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பினேன். அவர்களோ "உங்களுடன் எமக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. உங்களை நாம் அறிவோம்" எனப் பதிலளித்திருந்தனர். ஆனால் நாம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவரும் கீழணியைச் (பிஸ்டல் குரூப்) சேர்ந்த தலைமையின் உத்தரவுகளை சிரம்தாழ்த்தி நடைமுறைப் படுத்துபவர்களே ஒழிய முடிவெடுக்கும் தகுதியுள்ள பொறுப்பாளர்களல்ல. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவரும் என்னுடன் எந்தப் பிரச்சனையும் கிடையாது எனத் தெரிவித்திருந்த போதும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட யோகன் விடுவிக்கப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எம்மைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதை அறிந்திருந்தேன். எது எப்படியிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மைக் குறிவைத்துத் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்ததை அவர்களது தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தன. விசாரணைக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்த யோகன் பலநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யோகனுடன் தீப்பொறிக் குழு சார்பில் உறவைப் பேணி வந்தவரும் தீப்பொறிச் செயற்குழு உறுப்பினரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாணக் கிளையில் பணியாற்றியவருமான தர்மலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் விசாரணைக்கு வருமாறு அழைக்கப் பட்டிருந்தார். தர்மலிங்கம் விசாரணைக்கென அழைக்கப்பட்டதானது தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக எம்மை அளிப்பதை நோக்கி செயற்பட ஆரம்பித்து விட்டதையே எடுத்துக் காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யோகனுடன் தொடர்புபட்டே தர்மலிங்கம் விசாரணைக்கென அழைக்கப்பட்டதை நோக்கியிருந்தோம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் கொடிய ஆபத்தை உணர்ந்து கொண்டவர்களாக செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் காணப்பட்டிருக்கவில்லை.

செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கமைய தர்மலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்குச் விசாரணையை முகம் கொடுப்பதற்குச் சென்றார். விசாரணைக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமுக்குச் சென்ற தர்மலிங்கம் வீடு திரும்பியிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் எம்மீதான தமது பிடியை மேலும் இறுக்கிக் கொண்டிருப்பதை இதன் மூலம் தெளிவாகக் காணக் கூடியதாகவிருந்தது. இருந்தபோதும் நாம் எம்மைப் பாதுகாப்பதை நோக்கிய எந்த விதமான காத்திரமான செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. இரவு நேரங்களில் எமது வீடுகளில் தங்குவதை மட்டும் தவிர்க்கத் தொடங்கினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தர்மலிங்கம் மேலான விசாரணை பல நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. நாம் முடிந்தவரை எமது சந்திப்புக்களை தவிர்த்துக் கொண்டிருந்தோம். தீப்பொறிக் குழு செயற்பாடுகள் அற்ற ஒரு நிலைக்கு, தற்காப்பு என்கின்ற ஒரு நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்குள் நின்று கொண்டுதான் எமது செயற்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்  என்ற தீப்பொறிச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவு இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்ததோடு அம்முடிவு நடைமுறையில் தவறானது என்பதும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருதது. எனது வீட்டை அண்டிய பகுதிகளில் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரவில் பாதுகாப்பாக வந்து தங்கிச் செல்லும் வீட்டைச் சேர்ந்த எனது அயலவர் "நீர் என்ன காரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் நிற்கின்றீர்" "யாழ்ப்பாணத்தில் நிற்பது உமக்கு ஆபத்தை விளைவிக்கும். உடனடியாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிவிடும்" என்று கூறினார். அவரிடம் "என்ன பிரச்சனை?" என வினவியபோது அதைச் சொல்ல மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழணியில்   செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் ஏற்கனவே எனக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் ஆபத்து உண்டு என எனது அயலவர் மூலம் தெரியப் படுத்தியவரும் மற்றும் தெல்லிப்பளையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழணி உறுப்பினர் ஒருவரும் எனது அயலவர்களுக்கூடாக நான் யாழ்ப்பாணத்தில் நிற்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் ஏற்படவிருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறியிருந்தனர்.எமது ஆதரவாளர் யோகனும் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கமும் விசாரணைக்கெனச் சென்று வாரக்கணக்காக விடுவிக்கப்படாத நிலையில் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் எனது வீட்டை அண்டிய இடங்களில் அதிகரித்து விட்டிருந்த நிலையில் என்னுடன் மிக நட்புறவுடன் பழகும் எனது அயலவர்களின் என் மீதான அக்கறையுடன் கூடிய தகவல்களை நான் நம்பவேண்டியிருந்தது. ஆனால் இந்தத் தகவல்களை செயற்குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளா எமக்கு வரவிருக்கும் ஆபத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களாக செயற்குழு உறுப்பினர்கள் காணப்பட்டனர்.  யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக நான் வெளியேறுவதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சரியான பார்வையின்மை, நடப்பு நிலவரங்களை இனம் காணவும் புரிந்து  கொள்ளவும் தவறுதல், எமக்கு வரவிருக்கும் ஆபத்துக் குறித்து எச்சரிக்கையின்மை என்பன தீப்பொறிச் செயற்குழு உறுப்பினர்களிடம் காணப்பட்ட பலவீனங்களாக இருந்தன.இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எனது முடிவை செயற்குழு உறுப்பினர்களிடம் முன்வைத்தேன். செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு மாறாக நான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறப் போவதான எனது முடிவை தெரிவித்திருந்தேன். எனது முடிவு செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவுக்கு எதிரான முடிவாக இருந்த போதும் அம்முடிவின்படி மறுநாள் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை  வந்தடைந்தேன். தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்ட, ஈழ விடுதலைப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் அழித்தொழித்து தமது பாசிசப் போக்கை தொடர்ந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் எனது வாழும் உரிமை  மறுக்கப்பட்டு எனது சொந்தமண்ணில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன்.