Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் – 15)

இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.

 

இதுபோல் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான ஒரு உரிமைப் போராட்டத்தை கோரியவர்கள், போராடுவதற்காக ஆயுதத்தை எந்தினர். ஆனால் ஆயுதத்தை எந்தியவர்கள் ஆயுதம் மேல் ஆளுமை செலுத்தத் தவறி, போராட்டத்தை ஆயுதத்திற்கு அடிமையாக்கினர். இதில் இருந்து போராட்டம் மீள முடியாதுவாறு, போராட்டம் ஆயுதத்திற்கு அடிமையாக்கியது. இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை, மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளினர். ஆயுதத்தின் முன் சுயமாக சிந்திக்கும் ஆற்றல், மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. இப்படி மனித உணர்வுகள் நலமடிக்கப்பட்ட நிலையில், ஆயுதத்தை வழிபடவும், அதற்கு அடிமையாக இருப்பதுமே போராட்டமாக மாறிவிட்ட, புலிகளின் பாசிச சர்வாதிகார சமுதாயத்தில் நாம் வாழ்ந்தோம்.

புலிகளின் மக்கள் விரோத பாசிசமோ, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை வென்று தருவதாக கூறியபடியே, அதை தனது தலையில் வைத்து கூத்தாடியது. "மக்கள்" "மக்கள்" என்று சொல்லுக்கு பத்து தரம் காவடி தூக்கி ஆடுபவர்கள், மக்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாத பாசிட்டுகளாக மாறி மக்களை கேவலமாகவே நடத்தினர். மக்களிடம் இருந்து அன்னியமாகினர். மக்களுடன் இணைந்து எந்த உழைப்பிலும் ஈடுபடாது, ஆயுதமேந்திய லும்பன் வாழ்வை கொண்டிருந்தனர். இதற்கமைய மாபியாவுக்குரிய கட்டமைப்புடன், மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் இணைந்து செயற்படுவதில்லை. உலகில் எங்கும் காண முடியாத அளவுக்கு, மக்களின் உழைப்பின் மீது கொடூரமான வரி விதித்தனர். இதற்கு வெளியில் மிரட்டி பணம் பறித்தும், மக்கள் சொத்தை கொள்ளையிடுவதும், மக்களை கொடூரமாக சுரண்டுவதும், வலுக்கட்டாயமாக மக்களின் சொத்தை பறித்தும் புலிகளின் நிதி மூலமாகியது. இப்படி தம்மை நிர்வகிக்கும் புலிகளின் லும்பன் கட்டமைப்புடன் கூடிய சொகுசு வாழ்க்கை முறை தான், மக்களை எப்போதும் எதிரியாக காண்டது. தமது லும்பன் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாக்குவதை, புலிகளை சார்ந்து பிழைத்துக் கொள்ளும் யாரும் அனுமதிததில்லை. இந்த புலிகளை எதிர்ந்து எந்த தமிழ் மக்களும் கேள்வி கேட்டு உயிருடன் வாழ்ந்ததில்லை அல்லது சித்திரவதையை சந்திக்காது வாழ்ந்துவிடவில்லை. புலிகளின் பின்னால் ஒட்டுண்ணிகள் போல பிழைத்துக் கொள்ளும் ஒரு கூட்டமும், சொந்த புகழ் சார்ந்து பொழுது போக்கும் ஒரு நக்கிபிழைக்கும் கூட்டமும், இந்த லும்பன் அரசியல் வாழ்வின் பின்பு தமிழ்மக்களை எதிரியாக கருதி அவர்களை ஒட்டச் சுரண்டினர்.

கூலிக்கு கரை வலை இழுக்கவோ, மீன் பிடிக்கவோ, மம்பெட்டி பிடித்து நிலத்தை பண்படுத்தவோ தெரியாத தலமையைக் கொண்டதே புலிகள் இயக்கம். இதற்கு தன்னை தயார்படுத்த மறுக்கும் தலைமை, இதையே வாழ்க்;;கையாக கொண்ட மக்களை இழிவாக பார்ப்பது இயற்கையாகும்;. போராட்டத்தைச் சொல்லி ஒரு பகுதி இளைஞர்களை கடுமையாக உழைக்க கோரும் புலிகள், அந்த உழைப்பை மூலதனத்துக்கு வெளியில் மதித்ததில்லை. இங்கு சுரண்டுவது மையமான நோக்கமாக குறிக்கோளாக கொண்டே, உழைப்பை இயக்கத்துக்குள் பயன்படுதியது. எமது மக்களின் உழைப்பை மதிக்காது, அவர்களின் நலனை சூறையாடிய பாசிசப் புலிகள், மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை மறுத்தது. இதை மககள் அனுபவிப்பது, தங்கள் லும்பன் சொகுசு வாழ்வுக்கு சாபக் கேடாக அமைந்துவிடும் என்று கருதினர். இதனால், மக்களை அடிமையாக கேவலமாக நடத்தினர். இதை அவர்களின் அனைத்து நடத்தைகளுடன் கூடிய நடவடிக்கைகள் முதல், அவர்களுக்கே உரிய லும்பன் மொழியென, அனைத்திலும் துல்லியமாக இதை இனம் காணமுடியும்.

தமிழ் மக்களின் போராட்டம் என்பது, புலிகளின் பாசிச உள்ளடகத்தில் இருந்து முற்றிலும் வேறானதாக இருந்தது. தமிழ்; மக்களின் சுயநிர்ணயம் என்பது, தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறையையும் களைவதாகும்;. இதில் தமிழ் மக்களுக்குள், தனிச் சலுகைகளை வழங்குவதல்ல. வெறுமனே சிங்கள அரசை மட்டும் எதிர்த்தல்ல. தமிழ் துரோகிகளையும், அனைத்து சமூக அடக்கு முறையாளர்களையும் எதிர்த்த சுயநிர்ணயத்தைத்தான் தமிழ் மக்கள் கோரினர்.

தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயத்தை, தமது சொந்த தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட போராட்டத்திலேயே வரையறுக்கின்றனர். இந்த தேசியப் பொருளாதாரம், அன்னிய பொருளாதாரம் ஊடுருவுவதை அனுமதிப்பதில்லை. அன்னிய பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தை சிதைப்பதை அனுமதிப்பதில்லை. இந்த தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சுயநிர்ணயத்தை அடைய, தமிழ் மக்களின் உள்ளான அனைத்து ஏற்றுத் தாழ்வையும் நீக்கக் கோருகின்றது. இது சாதியத்தை எதிர்க்கின்றது. இது ஆணாதிக்கத்தை எதிர்க்கின்றது. பிரதேசவாதத்தை எதிர்க்கின்றது. சிறுபான்மை தேசிய இனங்களை அரவணைக்கின்றது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கரம் கொடுக்கின்றது. இது தமிழ் மக்கள் சுரண்டப்படுவதை எதிர்க்கின்றது. இது சொந்த மொழி வளத்தை பாதுகாக்கின்றது. மற்றைய இன மக்களுடன் ஐக்கியத்தையும், ஒன்றிணைவை முன்மொழிகின்றது.

இந்த தேசிய சுயநிர்ணயமே, தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் உள்ளடக்கமும் அரசியல் அடிப்படையுமாகும்;. எமது இந்த தேசிய போராட்டத்தை மறுத்தது புலிகளின் பாசிசம். சமூகம் மீதான படுகொலைகள் மூலமும், துப்பாக்கி முனையிலும் இதுவல்லாத ஒன்றையே தேசியமென்றனர். தேசிய சுயநிர்ணயத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்து, தமது பாசிசத்தை தேசியமென்றனர். இப்படி தமிழ் மக்களின் போராட்டத்தை பாசிச படுகொலைகள் மூலம் குத்தகைக்கு எடுத்தவர்கள், தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகளை எதிர்த்தே தமது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். தமிழ் மக்கள் சுரண்டப்படுவதை அங்கீகரிப்பதுடன், அதற்கு படுகொலைகள் மூலம் பாதுகாப்பு கொடுத்தனர். சாதிய ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டு, அதை அப்படியே பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாக எழும் போது, குண்டுகளை பரிசளித்தனர். ஆண்களின் ஆணாதிகத்தை கம்பளம் விரித்து படுக்கவிட்டு பாதுகாப்பதிலும், இருக்கின்ற ஆணாதிக்க குடும்ப ஒழுங்கு சிதைவதை பண்பாட்டு சிதைவாக காட்டி பெண்களுக்கு ஜனநாயக மறுப்பை பரிசளித்தனர். மற்றைய இன மக்களை எதிரியாக காட்டி, அவர்களை ஈவிரக்கமின்றி கொன்று வெறியாட்டம் போட்டனர். இதன் மூலம் தேசிய வெறியை ஊட்டி வளர்த்து, இனவாதத்தை தமது பாசிசத்துக்கு வேலியாக்கினர்.

சிங்கள இனவெறி பாசிச அரசு தமிழ் மக்களுக்கு எதிராக கையாளும் நேரடி இனவொடுக்கு முறை என்ற ஒரேயொரு விடையத்தில் மட்டுமே, மக்களின் கோரிக்கையுடன் புலிகள் துரதிஸ்டவசமாக இணைந்து நின்றனர். தமிழ் மக்களின் இந்த உடன்பாடு, எதிரி மீதான புலிகளின் லும்பன் அரசியல் நடவடிக்கைகள் மீதானதல்ல. சிங்கள பாசிச பேரினவாத இனவெறி அரசு தமிழ் மக்களின் எதிரி என்பதில், கொள்கை ரீதியாக மட்டுமே புலிகளுடன் ஒன்றுபட்டு நின்றனர். ஏன் அவர்கள் எதிரி என்ற புலிகளின் உள்ளடகத்தில் மீது அல்ல. சிங்கள பாசிச இனவெறி அரசு தமிழ் மக்களின் எதிரி என்று கொள்கை ரீதியான உடன்பாடு தவிர, தமிழ் மக்களின் மற்றைய அனைத்து கோரிக்கையையும் பாசிச கரங்கள் மூலம் புலிகள் அடக்கியொடுக்கினர். தமிழ்மக்கள் தமது அடிப்படை உரிமையை கோருவதையே துரோகமென்று முத்திரை குத்தி, கொன்று போட்டனர். அரசுடனும், இந்தியா மற்றும் ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவி காட்டிக் கொடுக்கும் தமிழ் குழுக்களின் துரோகம், இந்த உரிமைப் போராட்டத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது. தமிழ்மக்கள் தமது கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோருவதை, சுரண்டலையும், ஆணாதிக்கத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்து போராடுவதை, புலிகள் துரோகமாக முத்திரை குத்தி படுகொலை செய்தனர். இப்படி தமிழ் மக்களுக்கு எதிரான அப்பட்டமாக ஜனநாயகத்தை மறுக்கும் துரோகத்தைச் செய்தனர். சிங்கள இனவெறி அரசின் இடத்தில், தமிழ் குறுந்தேசிய ஜனநாயக மறுப்பு பாசிச அதிகாரத்தை நிறுவுவதன் மூலம், தமிழ் மக்களை ஒட்டச் சுரண்டி அடக்கியாளும் அதிகாரத்தை பிரபாகரனின் தலைமையில் தம்மிடம் தரும்படியே புலிகள் கோரினர்.

இங்கு தமிழ் மக்களை அடக்கியாளும் சிங்கள இனவாதிக்குப் பதில், குறுந்தேசிய இனவாதத் தமிழனை (பிரபாகரனை) அதிகாரத்தில் ஏற்றக் கோரினர். இதன் மூலம் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்கு முறையை களைவதற்கு அப்பால், மக்கள் எதையும் பெற்றுவிட விடப்போவதில்லை என்பது புலிகளின் அரசியலாக இருந்தது. சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கும் இனவெறி அடக்குமுறை மட்டுமே, புலிகளின் ஆட்சியில் இல்லாது போகும். இதற்கு பதில் புதிய அடக்குமுறை தமிழன் தலைமையில் இருப்பதுதான் தேசியம் என்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்ததை விட, கோராமாக இதை பரிசளிக்க தம் சொந்த நடைதுறையால் புலிகள் நிறுவி வந்தனர். சுரண்டல், சாதிய கொடூமைகள், ஆணாதிக்கம் என்று அனைத்து அடக்கு முறையையும் புலிகள் பாதுகாத்ததுடன், மேலும் கூர்மையாக அடக்குமுறையை தமிழ் மக்கள் மேல் தொடர்ந்தும் கையாண்டனர். அதை தனிச் சர்வாதிகார பாசிச நடைமுறை ஊடாகவே நிறுவிப் பாதுகாத்தனர்.

இனவெறி அரசுக்கு எதிரான புலிகளின் போராட்டடும், தமிழ் மக்களின் நிலையம் இந்த ஒரு விடையத்தில் ஒன்றினைந்து நின்றதால் மட்டுமே, புலிகளை அரசியல் ரீதியாக தன்னை தக்கவைக்க முடிந்தது. இலங்கையில் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாக இருந்த நிலையில், அந்த முரண்பாட்டில் போராடும் சக்திகளை சரியாக மதிப்பிடுவது அவசியமாக இருந்தது. இந்த வகையில் புலிகளின் மக்கள் விரோத பாசிச போக்குகளை கடுமையாக விமர்சிக்கும் அதேநேரம், இலங்கை அரசுக்கு எதிரான போரட்டத்தில் புலிகளின் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. தமிழ் மக்களின் எதிரிகளான அரசு மற்றும் அன்னிய தலையீட்டை நடத்த முனையும் எந்த சக்தியும், எந்த வடிவிலும் புலிகளை அழிப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது இருந்தது. ஏனெனின் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாக தெளிவாக எமக்கு முன்னால் நின்றது. புலிகளின் பாசிச குறுந்தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோத போக்கை முறியடித்து, மக்களின் அடிப்படை உரிமையை உள்ளடக்கிய போராட்டத்தை முன்னெடுக்க, இன முரண்பாட்டை கையில் எடுக்க வேண்டியிருந்தது. இன முரண்பாட்டை கையில் எடுத்து போராடுபவர்களே, புலிகளை அரசியல் ரீதியாக அழிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை உள்ளடங்கிய போராட்டத்துக்கும், புலிகளுக்கு பதிலாக தலைமை கொடுக்க வேண்டிய வரலாற்று கட்டத்தில் நின்றோம். இதை மீறி எந்த வரலாறும், மக்களுக்காக சுயமாக இயங்கி விடுவதில்லை.

தொடரும்

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 

பாகம்- 2 & 3

பாகம்- 4 & 5

பாகம்- 6 & 7

பாகம்- 8 & 9

பாகம்- 10

பாகம்- 11

பாகம்- 12

பாகம்- 13

பாகம்- 14