Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக!?

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள், ஒடுக்கும் தேசிய இனத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசில் அங்கம் வகிப்பது எதற்காக!? இது ஒடுக்கப்பட்ட மக்களின் கேள்வி.

அரசில் அங்கம் வகிப்பதற்கு அவர்கள் கூறுவது, தன் இனத்திற்கு, தன் மதத்துக்கு, தன் சாதிக்கு, தன் பிரதேசத்துக்கு சேவை செய்வதற்காகவே என்கின்றனர். இப்படி தமிழ், மலையக, முஸ்லிம் தரப்புகள் கூறுவதுடன், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயாராகவும் இருக்கின்றனர்.

தங்கள் பதவிகள் அதிகாரங்கள் மூலம் தன் இனம் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவம், தன் இனத்திற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர். இப்படி காலத்துக்கு காலம் அரசுகளுடன் இணைந்து செயற்படும், மலையக, முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தாங்கள் அரசுடன் சேரவிட்டால், எந்த அபிவிருத்தியும் நடந்திருக்காது என்கின்றனர்.

இப்படி அபிவிருத்தியாக காட்டப்படும் திட்டங்களும், அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பும், அரசு மற்றும் இனரீதியாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் தேசிய கொள்கையினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உலகளாவில் உற்பத்தி மூலதனத்தை விட நிதிமூலதனம் குவிந்து விட்ட நிலையில், குவிந்த பணத்திற்கான வட்டி மூலம் மேலும் கொழுக்க வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையே, நாட்டின் அபிவிருத்தியாக – வேலைவாய்ப்பாக முன்தள்ளப்படுகின்றது.

இங்கு தேசம், தேசியம், உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் அடிப்படையில், எந்த அபிவிருத்திக்கும் இடமில்லை. நிதி கொடுப்பவன் அதை அனுமதிப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வட்டியை மட்டுமின்றி, உற்பத்தியை மக்கள் நுகராது ஏற்றுமதி செய்ய வைப்பதன் மூலமும், வட்டி அறவிடப்படுகின்றது. இந்த கொள்ளைக்கு வரும் சர்வதேச நிதி தான், அரசும் அரசுடன் கூடிக்குலாவும் தரப்புகளும் முன்வைக்கும் அபிவிருத்தி. இந்த அபிவிருத்தி நடந்தால் தான், ஊழல் செய்யமுடியும். ஊழல் செய்வதற்காகவே அரசிடம் அதிகார பதவிகளை பெறுவது நடந்தேறுகின்றது.

அபிவிருத்தி பெயரில் பணம் புரண்டால் தான், ஊழல் செய்ய முடியும். இந்த பணப் புழக்கமே அபிவிருத்தியாக காட்டப்படுகின்றது. இந்த அபிவிருத்தி திட்டங்கள், தனியார்துறையை அடிப்படையாகக் கொண்டதும், இடைத் தரகர்களைக் கொண்டதும் ஆகும். இது அரசு பணத்தை லாபம் பார்க்கும் அபிவிருத்தியாகவும், மக்கள் பணத்தை கொள்ளையிடும் தரகு அமைப்பு முறையுமாகும்.

இப்படி தன் இனத்திற்கு சேவை செய்வதாக கூறிக் கொண்டு, அரசுடன் கொஞ்சிக் கூத்தாடி வாலாட்டும் கூட்டத்தின், தனிப்பட்ட செல்வம் பெருகிச் செல்வதைக் காணமுடியும். இந்த அரசியல்வாதிகள் யாரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைத்து செயற்படுபவர்கள் அல்ல, இந்தக் கட்சியின் பின் உள்ளவர்கள் பொறுக்கித் தின்பதைத் தவிர, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த எந்த கொள்கையுடனும் செயற்படுபவர்கள் அல்ல.

பொறுக்கித் தின்னும் அடாவடித்தனங்களுடன்;, அதிகாரத்தைக் கொண்டு ஊர் உலகத்தை மொட்டை அடிக்கின்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியுமாக இருப்பவர்கள் தான் இவர்கள். இவர்கள் மக்களுக்காக அபிவிருத்தி செய்வதாக கூறுகின்றதன் பின்னால், கொள்ளையடிக்கும் திட்டங்களே அபிவிருத்தி என பெயர் மாறுகின்றது. பதவிகள், அதிகாரங்கள் மூலம் சிலருக்கு சலுகை கொடுப்பதை, வேலைவாய்ப்பு என்கின்றனர்.

அனைத்துத் திட்டங்களும் தனியார்மயமாகிவிட்ட நிலையில், அரசுதுறையே தனியார்மயமாகும் நிலையில், எங்கிருந்து எப்படி இவர்களால் வேலையை வழங்க முடியும். இருக்கும் அரசுத்துறையில் இருக்கும் வேலைகளை பொதுத்தகுதி அடிப்படையில் வழங்கும் சிவில் அமைப்பு முறைக்கு முரணாக, அதிகாரம் மூலம் சிலருக்கு சலுகை கொடுப்பது என்பது ஊழல் வகைப்பட்டது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது.

இன்று முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களை எடுத்தால், அவை பெரும்பாலும் சுற்றுச்சூழலை மீறுகின்ற, சுற்றுச்சூழலை அழிக்கின்றவாக இருக்கின்றது. நாடு முழுக்க அமைக்கப்பட்ட நவீன வீதி அமைப்பு மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கிய போது, மனிதகுலத்திற்கு எதிரானதாகவே இருக்கின்றது.

பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட வீதி அமைப்பானது, சர்வதேச நிதிமூலதனத்திற்கு வட்டியைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டம். அத்துடன் சுற்றுச்சூழல் காரணமாக மேற்கில் வீதி அமைப்புகள் சிறிதாக்கப்படுவதாலும், மக்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற்று வாகனப் பயன்பாட்டை குறைப்பதால் வாகன உற்பத்தி முடங்குகின்றது. இந்த வாகன உற்பத்தி முடங்காது இருக்கவும், எண்ணை உற்பத்தி பாதிக்காமல் இருக்கவும், மூன்றாம் உலக நாடுகளில் வீதிகள் நவீனமாக்கப்படுகின்றது. அதேநேரம் மேற்கில் நுகர்வு மலிவாகவும், விரைவாகவும் கிடைக்க நவீன வீதிகள் அவசியமாகிறது. அதாவது மக்கள் உற்பத்தி செய்வதை நுகராது அதை ஏற்றுமதியாக மாற்றுவது, அதை வட்டியாக அறவிடுப்படுவது நடக்கின்றது.

இந்த நோக்கில் அமைக்கப்பட்ட வீதிகள், மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளை இல்லாதாக்கியதுடன், சைக்கிள் செல்வதற்கான வழித்தடங்களை மறுத்திருப்பதை அபிவிருத்தியில் காண முடியும். கட்டாயமாக வாகனங்கள் மூலமே பயணம் செய்ய வேண்டும் என்ற புதிய நிலையை, அபிவிருத்தி பெயரில் செய்து முடித்திருக்கின்றனர். வீதிகளோ நிழல் தரும் மரங்களற்ற, பாலைவனங்களாக மாறியிருக்கின்றது. இப்படி இருக்க, மேற்கில் இதற்கு மாறாக வீதிகள் நடைபாதையாக மாற்றப்படுவதும், சைக்கிள் தனித்தடங்கள் உருவாக்குவதுடன்;, இரு பக்கமும் மரங்கள் நடப்படுவதன் மூலமும், வீதிகள் குறுக்கப்படுகின்றது. அத்துடன் வீதிகள் மூடப்பட்டு வாகனங்கள் செல்லுவதற்கு தடைசெய்யப்படுகின்றது. வாகனப் பாவனை குறைகின்றது, சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கின்றது. நடந்து செல்வது ஊக்குவிக்கப்படுகின்றது. இதன் மூலம் நவதாராளவாத நுகர்வாக்கம் உருவாக்கியுள்ள நோய்களை தடுப்பதுடன், மருந்துப் பயன்பாடு குறைகின்றது.

மருந்துக் கம்பனிகளின் சந்தைக்கு ஏற்பவே, மூன்றாம் உலக நாடுகளின் வீதி அபிவிருத்தியானது, மக்களை நோயாளியாக்கும் வண்ணம், மக்கள் நடப்பதை குறைக்கும் நோக்கிலும், சைக்கிள் பாவனையை நிறுத்தும் வண்ணம் நவீன வீதி அமைப்பு காணப்படுகின்றது. இதன் மூலம் திட்டமிட்டு மக்களிள் ஆரோக்கியத்தைத் தகர்த்து, மருந்து பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

இப்படி பன்னாட்டு உற்பத்தி மூலதனங்களின் தேவைக்கு அமைவாகவும், பன்னாட்டு நிதி மூலதனங்களே அபிவிருத்தியின் பெயரில் முன்வைக்கப்படுகின்றது. அதை தாங்கள் செய்வதாக பிதற்றுகின்ற அரசு எடுபிடிகள், தன் இனத்துக்காக உழைப்பதாகவும், உழைக்கப்போவதாகவும் கூறுகின்ற அரசியல் பித்தலாட்டத்தை முன்வைக்கின்றனர்.

1.தன் இனம், மதம், பிரதேசம் என்று எப்போது எல்லாம் குறுக்குகின்றனரோ, அப்போதே அது மனிதவிரோதத்தைக் கொண்ட நேர்மையற்ற அரசியலாக பரிணமித்துவிடுகின்றது. தங்கள் தனிப்பட்ட சொத்தைப் பெருக்கும் அபிவிருத்தி மூலம், மக்களிடையே பிரிவினைவாதமும், பிளவுவாதமும், பொறுக்கித் தின்பதும், அண்டிப் பிழைக்கின்ற அறமற்ற வாழ்க்கை முறையும் முன்வைக்கப்படுகின்றது.

2.மக்களுக்காக சேவை செய்கின்றவன் உண்மையானவனாக, நேர்மையானவனாக இருந்தால், அதிகாரம், பதவி இன்றியே, சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவனாக இருப்பான். அரசு அதிகாரம், பதவி என்பது ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கானதே. இதன் மூலம் ஒடுக்கும் தரப்புக்கு உதவுவதே. அரசு என்பது எங்கும் எப்போதும் ஒடுக்கும் ஒரு கருவி தான்.

3.அரசு அதிகாரம் மற்றும் பதவியைக் கோரும் அரசியல் என்பது, தங்கள் தனிப்பட்ட செல்வத்தைப் பெருக்க, நவதாராளவாதத்தை அபிவிருத்தியாக காட்டுகின்றனர். ஊழல் மூலம் பணத்தைச் சம்பாதிப்பதே, அரசியலாக இருக்கின்றது.

4.அபிவிருத்தி என்பது பணத்தை சூறையாடுவதற்;கான நெம்புகோல். இடைத்தரகரர்கள் கொண்ட கொள்ளையிடும் அமைப்பு தான் அபிவிருத்தி. சுதந்திரமாக கொள்ளையடிக்கவும், தங்கள் குற்றங்களை மூடிமறைக்கவும், சட்டரீதியான அதிகாரம் தான் பதவி.

இனம், மதம், சாதி, பிரதேசம் சார்ந்து செயற்படுவதாக கூறுவது, நேர்மையற்ற அரசுக் கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்குமான பொது சிவில் சமூக அமைப்பை இல்லாதாக்குவதன் மூலம், ஜனநாயக விரோத அமைப்பு முறையை உருவாக்குவது தான்.

இவர்களை பொறுத்த வரையில் பதவி, அதிகாரம் என்பது எப்படியும் கொள்ளை அடிக்கலாம், அதை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. தாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யலாம், அதை தண்டிக்க முடியாது. இது தான் பதவி, அதிகாரம் பின்னுள்ள எதார்த்தம். கடந்தகாலத்தில் இதற்காக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. தனிப்பட்ட சொத்து வரைமுறையின்றி பெருக்கிச் செல்வதையே காணமுடியும். தேர்தல் அரசியல் என்பது, தனிப்பட்ட சொத்தை முறைகேடாக பெருக்கும் துறையாகிவிட்டது.