Mon08152022

Last updateSun, 19 Apr 2020 8am

நவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் எல்லோரும் கூடி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என எவரும் முன்மொழியவில்லை. காரணம் இதற்குள் உள்ள சட்ட வரைவாக்க ஒழுங்குகளில் உள்ள பலவீனமான ஓட்டை ஒடிசல்களே முக்கிய காரணியாகும்.

ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிக்காலத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அன்றைய பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தால் இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும். தவிரவும் கடந்த ஜெனீவா கூட்டத் தொடரில் "இலங்கையில் உள்ளக விசாரணை" ஒன்று நடைபெற வேண்டுமானால், இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் அதை நடாத்த முடியாதென இந்தியா பெற்றுக்கொடுத்த தடையுத்தரவும் பிரதான காரணிகள் என சர்வதேசத்தின் சட்டக ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.

இவையெல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் "ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிக அதீத அட்டகாசம் கொள்கின்றார். அத்தோடு வாக்களிப்பின் போது எதிராகவும் வாக்களிக்காமலும் 24 நாடுகள் இருந்தன. இது தனக்கு கிடைத்த பெருவெற்றியென பெருமிதம் கொள்கின்றார்.

மேலும் "இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்ததன் காரணமாகவே அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை" எனும் (இந்தியா குற்றவாளிகளான தன்னையும், இலங்கை அரசையும் காப்பாற்றிய) தந்திரோபாய நிலைப்பாடு அமெரிக்காவின் ஜெனீவா கூட்டத் தொடருக்கும நவநீதம்பிள்ளைக்கும காதில் பூ வைத்த வேலைப்பாடுதான்.

ஓர் அழிவுற்ற மக்கள் கூட்டத்தின் அவல இருப்பை தங்களுக்கு ஆனதாக்கியுள்ள, வல்லாதிக்கவாதிகள்…. எப்படியெல்லாம் தேசிய-சர்வதேசிய சமூகமாகி, ஐ.நா. சபைக்கூடாக அழிவின் "இளவு" அரசியலை நடாத்துகின்றார்கள். இதில் திக்கற்ற எம்மக்களையும் இச்சூட்சுமங்கள் ஆடடுவிக்கின்றன.

ஜெனீவாத் தீர்மானத்திற்கூடாக எம்மக்களுக்கு கிடைத்தது… ஓர் அழுத்தமே தவிர, குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்கும் தார்ப்பரியங்களுக்கான எதுவுமேயில்லை. தமிழ்மக்கள் தமக்கு நீதி கேட்டு, போகாத மாமன்றங்கள், மகாசபைகளே இல்லை எனலாம்.

ஆனால் போகாத இடம் இச்சூட்சுமங்களின் உண்மை நிலை பற்றி சரியாக எதுவுமறியா சாதாரண சிங்கள மானிடத்தின் மாமன்றமே. இம்மானிடத்தின் மத்தியில் இக்கூட்டத் தொடர்களை தொடராக நடாத்துவோமேயானால், ஜெனீவாவில் கண்டு பிடிக்க முடியாத பல குற்றங்களை, குற்றவாளிகளை இம்மக்கள் மாமன்றம் தாமாகவே கண்டு பிடித்து விடும். இதன்பின் நவநீதம்பிள்ளையும், ஜெனீவாவும், இந்தியாவும் தேவைப்படாது. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை என்ன என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள்.

இதை உலகமெலாம் அலையும் தமிழ் தேசியங்கள் செய்ய முற்படுமா? சகல இனவாதங்களையும் கடந்த ஜனநாயக-முற்போக்குத் தேசியங்களுடன் இணைந்தால் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைப்போரை வென்றெடுக்க முடியும். ஏகாதிபத்தியங்கள் அல்ல மக்களே தங்களுக்கானவைகளை தமக்கானதாக்குவார்கள். ஆகவே நவநீதம்பிள்ளைகளின் பூனைகள் எலிகளைப் பிடிக்காது. இது வரலாறு தரும் பாடங்கள்.