Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வட மகாணசபைத் தேர்தல் களம் தமிழ் ஈழக் களமாகின்றதோ?

பொதுபல சேனாவிற்கு கொள்ளி தூக்கி கொடுக்கும் வேலைதான்…

வட மகாணசபைத் தேர்தல் களம் தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது என்ற நினைப்பில் இருந்து கருமங்கள் ஆற்றப்படுகின்றன. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் மிடுக்கி விடப்படுகின்றன.

மாகாண சபையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது எனவும், அதற்குள் இருக்கும் சில அம்சங்களை அலகாகக் கொண்டு சிலவற்றை அனுபவிக்கவும் பிரயோசனப்படுத்தவும் முடியும் எனவும் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார செயற்பாட்டுக்களம், இப்போ தமிழ்ஈழம் நோக்கி நகர்கின்றது.

கடந்த ஞாயிறு யாழ்-வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் அவர்களின் பேச்சு இதற்கு கட்டியம் கூறி விதப்புரைக்கின்றது.

"வட மாகாணத்தில் தமிழ்பேசும் அரசு எம்மால் நிறுவப்பட வேண்டும். இதை மூன்றாம் கட்டப் போரின் மூலம் முன்னெடுப்போம். இதுவே காலத்தின் தேவையாக உள்ளது. இதற்கூடாக நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை என்ற தூரநோக்கு இலக்கை அடைந்தே தீருவோம்" என முழங்கியுள்ளார்.

இப்பேச்சுக்களுக்குள் தமிழ்ஈழ அரசு, ஆயுதப்போரட்டம், பிரிவினை என்பன இல்லையா எனக் கேள்வி கேட்டால் "சட்டநாதர் சம்பந்தனும் நீதிபதி விக்கினேஸ்வரனும் லொஜிக்காக" மறுமொழி சொல்வார்கள்.

முதுலாவதும், மூன்றாவதும் அகிம்சை கொண்ட போராட்டங்கள்.. இரண்டாவதுதான் ஆயுதப்போராட்டம். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் வெற்றி பெறும் மாகாணசபையை தமிழ்பேசும் அரசு என்பதில் என்ன தவறு?.. அதை தமிழ் அரசாக ஆள்வதில் என்ன குறை? சுயநிர்ணயம் என்றால் பிரிவினையா? மாகாணசபையும் சுயநிர்ணயத்தின் ஒரு கூறுதானே என்பார்கள்.

நீங்கள் தமிழஈழக் கனவில் இருந்து சொல்லும் "லொஜிக்" கொண்ட விளக்கங்களை சிங்களப் பேரினவாதத்தின் பொதுபலசேனா, போன்ற இனவெறி அமைப்புக்கள், உங்களின் விதங்களில் கணக்கு கொள்ளுமா? தமிழ் பெண் நவநீதம்பிள்ளையுடன் தமிழ்ஈழமும் வந்து விட்டது என சொல்லமாட்டார்களா?

உங்களின் இப்படியான பிரச்சாரங்கள் உங்களுக்கு வாக்குகளைக் கூட்டலாம். ஆனால் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறியைத்தான் தூண்டும்.

சம்பந்தர் கடந்த மேதினத்தில் சிங்கக்கொடியைத் தூக்கி எம் அரசியல் ஐக்கிய இலங்கைக்கு உட்பட்டதுதான் என சொன்னார். சொல்லியும் வந்தார். இப்போ தேர்தலும், பிரச்சாரமும் வர இவர்களின் "குறுகிய இனவெறி வேதாளம" மறுபடி முருக்க மரத்தில் ஏறுகின்றதோ?

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக செய்யப்பட்ட வேதாள இனவாத அரசியல் விளைச்சலின் பெறுபேற்றை 2009-ல்தான் முள்ளிவாய்காலில் அறுவடை செய்தோம். இதை பட்டறிவு கொண்டாவது தமிழ் மக்களுக்கு அரசியல் செய்ய முயலுங்கள்.

முள்ளிவாய்க்காலின் வெற்றியை மகிந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் ராணுவ வெற்றியாகக் கொண்டாடுகிறது. தமிழ்மக்களை தோற்கடிக்கபட்ட இனமாகக் காட்டுகின்றது. அவர்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை என்கின்றது.

மறுபுறத்தில் உங்கள் தம்பிமார்களின் 30-வருடப் போர் தமிழ்மக்களை போராடும் வல்லமையற்ற இனமாக்கியுள்ளது. தாம் நம்பிய இலட்சியத்திற்காக போராட வந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள் அழிக்கப்பட்டார்கள் முடக்கப்பட்டார்கள். ஏனையோர் சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள். இத்தன்மைகள் மேற்சொன்ன பேரினவாத இட்டுக்கட்டல்களுக்கு மேலும் வலுச் சேர்க்கின்றன.

மொத்தத்தில் தமிழ்மக்கள் பிச்சைவேண்டாம் நாயைப் பிடி எனும் அரசியலில் உள்ளார்கள். இப்படியான தமிழ்-சமூக ஓட்டத்தில் தேர்தல் என வரும்போது, அதில் உங்களின் (வேதாள முருக்கமர) குறுகிய இனவாதப் பிரச்சாரங்கங்களால், அம்மக்களை சிங்களப் பேரினவாத இனவெறிக்கு மேலும் பலியாக்க முயற்சிக்கின்றீர்கள்.

இன்றைய இலங்கையில் மகிந்த சிங்களப் பேரினவாதம், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இன-மத வெறித் தீயை மூட்ட எத்தணிக்கின்றது. இதில் கூட்டமைப்பின் தமிழ்ஈழக் கனவு கொண்ட பிரச்சாரங்கள், "வீடு கொழுத்தும் ராசாவிற்கு கொள்ளி தூக்கிக் கொடுக்கும் மந்திரியின் வேலையாகத்தான் இருக்கின்றது.

தமிழ்த்தேசியத் தரப்பு தமிழ்மக்கள் இந்நாட்டின் சிறுபான்மை இனமக்கள் எனும் நிலைகொண்டு தங்கள் அரசியல் கருமங்களை ஆற்றவில்லை. அவர்கள் மரம் பழுத்தால் வெளவால் வரும் எனும் நினைவில் இருந்தே கருமங்களை ஆற்றுகின்றார்கள்.

கடந்தகாலத்தின் தந்தை- மைந்தர்கள், அண்ணன் தம்பிகள் கொண்ட இனவுறவுகளின் குறுகிய இனவாதத்தின் செயற்பாட்டால் ஏற்பட்ட பாரிய மக்கள் அழிவுகளுக்கான தம் பொறுப்பை இவர்கள் இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மேலும் அழிவின் பாற்பட்ட மக்களை இன்றும் அழவைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள். இலங்கை வந்துள்ள நவநீதமபிள்ளை "அம்மாவை" மக்கள் தெய்வத் தாயாக்கி வணங்கிட, அதற்கும் அரோகராச் சொல்லி, வெட்கமில்லாமல் ஆராதனை செய்கின்றார்கள்.

இன்றுவரையும் இம்மக்கள் அழிவிற்கும், அழுகை கூக்கரலிற்கான தம்பொறுப்பையும், சுயமகொண்ட சுயவிமர்சனத்தின் பால் ஏற்றுக்கொள்ளவேயில்லை.

உண்மையில் தமிழ் சிங்கள இனவாதிகள் தங்களின் வர்க்க நலன் கொண்ட சுகபோக அரசியல் வாழ்விற்காக சாதாரண-தமிழ் மக்களை மோதவிட்டு தம் அதிகார அரசியல்-வாழ்வை தொடர்கின்றார்கள்.

இவ் அரசியல் உண்மை சாதாரண தமிழ்-சிங்கள மக்களிடம் இன்னும் சரியாக சென்று அடையவில்லை. ஏனெனில் ஏகப் பெரும்பான்மையான தமிழ்-சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர். இப்பெரும் உண்மை சகல இனவாதங்களையும் கடந்து, அம்மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு ஆகவேண்டும்.

ஏனெனில் இச்சாதாரண மக்கள் இந்நாட்டில் நிரந்தர அமைதியுடன் வாழவிரும்புகின்றார்கள். அவ்வாழ்விற்கான தடைகளைத் தாண்ட வைக்க வேண்டும். இப்பாரிய கடமை சகல இனவாதங்களையும் கடந்த புரட்சிகர-முற்போக்கு-ஜனநாயக-தேசபக்த சக்திகளின் கடமையாகும். எனவே இந்நிலை நோக்கி சகல தடங்கல்களையும் தாண்டுவதற்கான சகல பாதைகளையும் திறக்கும் நோக்கிலான வேலைகளில் தடம் பதிப்போம்.