Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தலோ தேர்தல்!!

தேர்தல்கள், பாட்டாளி மக்களின் இரத்தத்தை விற்றுப்பிழைக்கும் வலதுசாரிகளுக்கு புள்ளடியிட வைக்கும் ஒரு அரசியல் ஏமாற்று வேலை. உழைப்பவன் மீது அதிகாரங்களையும் சுமைகளையும் அதிகரித்து, உழைப்பவர் கொண்டுள்ள அற்ப சொற்ப உரிமைகளை மேலும் மேலும் பிடுங்கி சுரண்டிக்கொழுக்கும் உழையா வர்க்கங்களின் கைகளில் அதிகாரத்தை குவிப்பதற்கான ஒரு "அரசியல் ஆயுத" ஒடுக்குமுறை வழி தான் அவர்கள் நடாத்துகின்ற தேர்தல்.

இவ்வாறான தேர்தல்களில் இன்று உலகப் பரப்பில் வலதுசாரிகள் வென்று வருகின்றார்கள். அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் நடந்தேறிய தேர்தல்கள் வலதுசாரிகளிடமும், நிறவெறி மதவெறி சக்திகளிடமும் "ஜனநாயக" பெருந்தன்மை இருப்பதாய்க் அவர்களைக் கண்டு ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றது.

தேர்தல் முடிவுகளை உற்று நோக்கின் ஒரு வலதுசாரிய இரத்தவாடை அங்கு வீசுவதைக் காணலாம். நிறவெறியை தமது அடிப்படையாக நிதமும் உச்சாடனம் செய்து விசமாகக் கக்குகின்றவர்களோடு கூட்டுச் சேர்ந்தாலேயொழிய ஒரு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுவிட முடியாதபடி வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள் "ஜனநாயகம்" என்ற நாடகத்தைப் போட முடியாதுள்ளது.

நிற, மத வெறி தலைக்கேறி "ஜனநாயகப்" பாராளுமன்றத்தையே குண்டு வைத்து ஆகாயத்துக்கு கிளப்பிய, தன் சொந்த நாட்டவரையே சுட்டுக் கொலை செய்த "அன்டர்ஸ் பிரைவிக்" என்பவனை "பாலூட்டி" வளர்த்த வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறி, மதவெறிக கட்சிக்கு வாக்குகள் அள்ளித்தரப்பட்டிருக்கின்றன. இந்த நிற மத வெறிக் கட்சியின் நிபந்தனைகளை வெட்கமின்றி ஏற்று ஆட்சியமைப்பதற்கு அவர்களை கட்டியணைத்திருக்கின்றது முதலாளித்துவ வலதுசாரிக்கட்சி. அவர்களது நோக்கமே அரச பொதுநிறுவனங்கள், கல்வி, பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்கள், அரசாங்க மருத்துவ மனைகள் என எல்லாவற்றையும் பிடுங்கி தனியார் மயப்படுத்தி கொள்ளையிடுவது தான். பேயுடனும் பிசாசுடனும் இரத்தக்காடடேறிகள் கூட்டுச் சேராமல் வேறென்ன செய்வார்கள்? இந்த வலதுசாரி முதலாளித்துவ நிற, மத வெறி கட்சிகளின் ஆட்சியில் வேலையில்லாதவர்களும், அங்கவீனர்களும், வெளிநாட்டவர்களும், மாணவர்களும், தொழிலாளிகளும் நசுக்கப்படுவது சட்டங்களாகின்றன. இது தான் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகம். இதுவே தான் இலங்கையிலும் கும்மாளமிடும் தேர்தல் கூத்து.