Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே

அதிகாரமும், வன்முறையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததல்ல, ஒடுக்கும் தரப்பின் ஆயுதங்களே. ஒடுக்கப்பட்ட மக்களை சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் மதத்தின் ஒரு கூறு தான் மதப் பயங்கரவாதம். இவை எந்த வடிவில் வெளிப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் அரசின் ஒடுக்குமுறைகளை பலப்படுத்துகின்ற மறைமுகக் கருவிகளாகவே எதார்த்தத்தில் இயங்குகின்றது.

இந்த வகையில் மதத்தையும், மத அடிப்படைவாதங்களையும் அரசு ஆதரவளிக்கின்றது. சட்டரீதியாக அதற்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. அரச நிகழ்வுகளிலும், அரச நிறுவனங்களிலும் மதத்தை முன்னிறுத்தி, அரசை ஒரு தலைப்பட்சமாக்குகின்றது. அதேநேரம் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், நாட்டை மதரீதியாக கூறு போடுகின்றது.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம், இந்த அரச பின்னணியிலேயே செழித்தது. அரசின் ஆதரவுடன் தான் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தளுவியது. இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பங்குக்கு நிகராகவே, அரசுக்கும் பங்குண்டு.

சரியாச் சட்டத்தை (இஸ்லாமிய மதச் சட்டத்தை) அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழகம் முதல் வழிபாட்டுதலங்களில் குவிந்து கிடக்கும் வாள்கள் வரை, சொல்லும் செய்தி இதுதான். காத்தான்குடியை சவூதி வடிவிலான இஸ்லாமிய நகரமாக்குவதாகட்டும், இஸ்லாமிய அடிப்படையில் அரபு மொழிக்; கல்வியை கற்பிப்பது வரை எண்ணற்ற நிகழ்வுகளின் பின்னணியல் அரசும், அரசியல் தலைவர்களும், இஸ்லாமிய கட்சிகளும் இருந்து இருக்கின்றனர்.

வடக்கில் இந்தியத் தூதரகம் சமூகத்தை இந்துமயமாக்கி, இந்துப் பயங்கரவாதத்தை உருவாக்கும் வண்ணம் எண்ணற்ற நிகழ்வுகள் எப்படி நடக்கின்றதோ, அதைத் தான் சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளும் செய்தன. சமூகத்தை இஸ்லாமிய மயமாக்கி, இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்டனர். இந்துத்துவம், இந்துத்துவ அடிப்படைவாதம், இந்துப் பயங்கரவாதத்தின் பொது வெளிப்பாடுகள் தான், யாழ்ப்பாணத்தில் மாட்டு இறைச்சி குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடங்கி, மக்களின் உணவுமுறைக்கு எதிரான பொது வன்முறைகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகின்றது.

மதத்தை முன்னிறுத்தி மக்களை ஒடுக்கும் சூழலை உருவாக்குவது தான், இந்தியா, சவூதி .. முதல் ஏகாதிபத்தியம் வரையான நாடுகளின், நவதாராளவாதக் கொள்கையாகும். இதுதான் இலங்கை அரசின் கொள்கையும் கூட. மத முரண்பாடுகளும், மத வன்முறைகளும் கொண்ட இலங்கை சமூகமாக இருத்தல் என்பது தான், அரசின் தெரிவு. மதமும், மத அடிப்படைவாதமும், மதப்பயங்கரவாதமும் அரசின் அனுமதியுடன், சமூகத்தில் புரையோடி வெளிப்பட்டு இருக்கின்றது.

நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பிற மதத்தைச் சேர்ந்த மக்களின் மத வெறுப்புகள் அனைத்தும், மத அடிப்படைவாதத்தைச் சார்ந்ததே. அதுவும் வன்முறையை சார்ந்தது தான். வன்முறைக்கான தனது சந்தர்ப்பத்தையே அந்தந்த மத அடிப்படைவாதங்கள் கோருகின்றன. இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அங்குமிங்குமாக நடந்த வன்முறைகள், பிற மத அடிப்படைவாத வன்முறைகள் தான். இவை தான் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) பொங்கி வழிகின்றது. ஊடகங்கள் எண்ணை ஊற்றி தீ வைப்பதையே தங்கள் ஊடக தர்மம் என்கின்றனர்.

அரசு மக்களை ஒடுக்கியாளத் தேவைப்படும் பயங்கரவாதச் சட்டத்தை கொண்டு வர, மத பயங்கரவாதத்தை அனுமதித்தது. இதற்காக முன்கூட்டி வந்த பயங்கரவாத எச்சரிக்கையை புறந்தள்ளியது. ஆளும் அதிகார வர்க்கங்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியாளரைக் கொண்டு வர, பயங்கரவாதம் நிகழ்வதற்கு மறைமுகமாக உதவினர்.

இந்த வகையில் புதிய பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்களை ஒடுக்கியாளும் அரசின் கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் இஸ்லாமிய பயங்கரவாதம் நடந்தேறியது. பயங்கரவாதத்தை ஒடுக்க பயங்கரவாதச் சட்டம் என்று அரசு கூறிய போது, அது ஒட்டுமொத்த மக்களை ஒடுக்குவதற்கான சட்டமே.

இலங்கை வரலாறு காட்டுவதும் இதனைத்தான். கடந்தகாலத்தில் இந்த சட்டம் சிவில் சட்ட அமைப்பு வடிவத்தையே ஒடுக்கியதுடன், சட்டவிரோதமான பல்வேறு குற்றங்களை மக்களுக்கு எதிராக இழைத்திருக்கின்றது.

கடந்தகாலத்தில் பயங்கரவாதச் சட்டம் மூலம் பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததுடன், இறக்கவும் இந்த சட்டம் காரணமாக இருந்தது. கப்பங்களுக்காக கடத்தப்பட்ட பலர் கொல்லப்பட இந்த சட்டம் காரணமாக இருந்ததுடன், பணத்தை கொடுத்து உயிர் மீண்டவர்கள் பலர். தனிப்பட்டவர்களின் சொத்துகளை இந்த சட்டம் மூலம் பறித்தெடுக்க முடிந்தது. பெண்களை கைது செய்து பாலியல் வன்முறை செய்ய இந்தச் சட்டம் உதவியது. இப்படி பல. இந்த சட்டம் மூலம் நவதாராளவாத திடீர் பணக்கார கும்பல் உருவாகியதுடன், கிரிமினல்மயமான நவதாராளவாத அரசியலை உருவாக்கியுள்ளது.

இந்த குற்றக் கும்பலைத் தண்டிப்பதற்கு முடியாத வண்ணம், அவர்களைக் கொண்டதே ஆட்சி அமைப்பு முறையாகி இருக்கின்றது. கடந்த பயங்கரவாதச் சட்டம் மூலம் உருவானவர்களே, அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றனர். சிவில் சட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்றதற்கு தானே ஒழிய, ஒடுக்கியவரை தண்டிபதற்கு அல்;ல. இதுதான் இன்றைய நிலை.

அவசரகாலச் சட்டம் என்பது சுரண்டும் வர்க்க பிரிவுகள், சட்டவிரோதமாக மக்களை ஒடுக்கி கொழுக்க உதவுகின்றது. அந்த அடிப்படையில் தான் இந்த சட்டத்தின் வருகையை, ஆளும் வர்க்கம் கோரி நிற்கின்றது. மக்களுக்;கு எதிரான தனிநபர் பயங்கரவாதத்தை காட்டி, அதை ஒடுக்குவதன் பெயரில் பொது சிவில் சட்டத்தை செயலற்றதாக்கி, சுரண்டும் வர்க்கம் கொழுக்கின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கின்ற மக்களை ஒடுக்க உதவுகின்ற இந்தச் சட்டம், மக்களுக்;கு எதிரான பயங்கரவாதத்தை ஒழிக்கவே என்று கூறித்தான் சமூக அங்கீகாரத்தை கோருகின்றது.

ஆனால் பயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு நிகரான, மற்றொரு பயங்கரவாதம் தான். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இரண்டு பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்பதே, இன்றைய வரலாற்றுக் கடமை.