Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்

கேப்பாப்புலவுவில் தம் வாழ்வின் தடம் பதிந்த தம் மண்ணை விட்டு வெளியேறு என்று மக்கள் போராடுகிறார்கள். மட்டக்களப்பில் "மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினது கால வரையறை அற்ற சத்தியாக்கிரகம்" தொடர்கிறது. "கல்வியை விற்பனை செய்யாதே"; "மாலபே மருத்துவக் கல்லூரி என்னும் தனியார் கல்விக் கடையை மூடு" என்று இலங்கை முழுவதும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களும் அவர்களிற்கு ஆதரவாக பொது மக்களும் போராடுகின்றார்கள். இலங்கை அரசு என்னும் மக்கள் விரோதிகளிற்கு எதிராக நடக்கும் இப்போராட்டங்களை அரசு எதிர்க்கும் என்பது இயல்பானது. ஆனால் இப்போராட்டங்களை தாம் முன்னின்று செய்ய வேண்டிய இலங்கையின் எதிர்க்கட்சிகள் என்பவர்கள் தாம் மக்களுடன் நிற்பது போல் நடித்து இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை கைவிடச் சொல்லும் கொடுமை ஒரு புறம் என்றால் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் இருக்கும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் மறுபுறத்தில் போராட்டங்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

கேப்பாப்புலவு மக்களினதும், அவர்களைப் போல் இலங்கை அரசின் அராஜகத்தால் நிலங்களையும், வீடுகளையும், ஊர்களையும் இழந்த மக்களினது போராட்டங்கள் ஆக்கிரமித்த நிலத்தை திருப்பித் தா!; நம் நிலங்களை விட்டு வெளியேறு! என்னும் அரசியல் போராட்டங்களை வெறும் காணி உறுதியைத் பெறுவதற்கான போராட்டங்களாக திசை திருப்பி விடும் அழிவு வேலையை இந்த தன்னார்வ நிறுவனங்கள் செய்யப் பார்க்கின்றன. ஒட்டு மொத்த மக்களின் போராட்டத்தை ஓரிவருக்கு காணிகளை திருப்பி கொடுத்து முடக்கி விடலாம் என்று இவர்கள் திட்டமிட்டு ஊருடுவுகிறார்கள்.

சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்று தமிழ் மக்களைக் கொல்லும் இனவாதக் கட்சிகளில் அங்கத்தவர்கள்; தாமாக தனிக்கடை வைத்திருந்தாலும் இலங்கை அரசிற்கு கால் கழுபுவர்கள் என்னும் முதலாவது கோஸ்டி அடிமைத்தனத்தாலும், அற்பத்தனத்தினாலும் தாம் பிழைப்பு நடத்துவது போல மக்களையும் தன்மானம் அற்றவர்கள் என்று எண்ணி பேரம் பேசுகிறது. இந்தக் கும்பல்களைப் பற்றி மக்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனவே இவர்களின் ஏமாற்றுத்தனங்கள் மக்களிடம் எடுபடப் போவதில்லை.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு இலங்கை அரசு, இந்தியா, மேற்கு நாடுகள் என்னும் மக்களின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் இரண்டாவது கோஸ்டி தான் மிகவும் ஆபத்தானது. விளம்பரங்களிற்கு நடுவே அவ்வப்போது கொஞ்சம் போல நிகழ்ச்சிகளைப் போடும் தமிழ்த் தொலைக்காட்சிகள் போல தேர்தலிற்கு தேர்தல் தமிழ்த் தேசியம் பேசும் இந்தக் கும்பல்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காண்போம் என்ற கீறல் விழுந்த ஒலித்தட்டை திரும்ப திரும்ப போட்டு மக்களைத் தம் பிரச்சனைகளிற்காக போராடாமல் ஒதுங்கி இருக்க சதி செய்கிறது.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு இலங்கை அரசுடன் கூடிக் குலாபுவர்கள்; தன்னார்வக் குழுக்கள்; இலங்கை அரசுடன் பேசி பேசி சலுகைகள் பெறலாம் என்னும் அரச ஆதரவு ஒட்டுண்ணிகள் என்னும் இந்தக் கயவர்கள் கூட்டம் கேப்பாப்புலவுவில் போராடும் மக்களிடம் போராட்டத்தைக் கை விடுங்கள் பணம் வாங்கித் தருவோம் என்று தம் தரகு வேலையைக் காட்டுகிறார்கள். "பத்து இலட்சம் ரூபா வாங்கித் தருகிறோம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்" என்று தம்மிடம் கேட்டதாக கேப்பாப்புலவுவில் போராடும் சகோதரி ஒருவர் காணொளி ஒன்றில் வெளிப்படையாகக் கூறுகிறார்.

பணத்திற்கும், பதவிகளிற்கும் வாயைப் பிளக்க அந்த மக்கள் உங்களைப் போல பிழைப்புவாதிகள் அல்ல. உங்களைப் போல ஊழல் செய்து பிழைப்பு நடத்த அந்த உழைக்கும் ஏழை மக்களிற்கு என்றைக்குமே தெரியாது. அதனால் தான் உங்களைப் போல கேவலமான மனிதர்களைப் பார்த்து அந்தப் பெண் சொல்கிறார் "நான் செத்தாலும் இந்த மண்ணிற்காக, எனது மக்களிற்காக சாவேனே தவிர என்றைக்கும் விலை போக மாட்டேன்". கேப்பாப்புலவுவில் பகலின் வெய்யிலிலும், இரவின் குளிரிலும் வாடுனாலும் சற்றும் தளராது தம் தாய், தந்தையருடன் சேர்ந்து போராடும் குழந்தைகளுடன் போய் ஐந்து நிமிடங்களாவது பேசிப் பாருங்கள். போராட்டம், உண்மை, நேர்மை என்று உங்கள் வாழ்நாளில் ஒரு நாளும் கேள்விப்படாத, தெரியாத விடங்களை ஒரு முறையாவது கண்டு வாருங்கள்.

எதிரிகளிற்கும், துரோகிகளிற்கும் எதிராக ஏழை மக்கள் நாம் போர் செய்வோம். கோப்பாப்புலவுவில், மட்டக்களப்பில், மலையகத்தில், காலியில் என்று போராடும் எம் மக்களே; சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை ஒன்றை உமக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

இழப்புகளைப் பற்றிய ஏக்கமில்லை

தகர்வுகள் பற்றிய தயக்கமும் இல்லை

ஒரு பெரும் நிகழ்வை தரிசித்துள்ளோம்

அதன் பலத்தில்

அதன் விறைப்பில்

அதன் லயத்தில்

அதன் துணிவில்

நிமிர்ந்து நிற்கிறோம்

 

கண்ணீரைக் கடந்துள்ளோம்

வியப்புகளை மீறியுள்ளோம்

உணர்ச்சிச் சுழிப்புகளை உதறியுள்ளோம்

நிசத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறோம்