Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையகம் எரிகிறது, வாக்கு வாங்கிப் போன கள்ளர்கூட்டங்கள் எங்கே?

புலிகள் உறுமிய, நரிகள் ஊளையிட்ட காடுகளை அழித்து அங்கு குடில்களைக் கட்டினார்கள். கோப்பியை பயிர் செய்ய மலைச்சாரல்களில் கூனியடித்து, குழி வெட்டி நட்டார்கள். இந்த ஆரம்ப வேலைகளில் எத்தனையோ அபாயங்கள்! எத்தனையோ உயிர் பலிகள் என்று "நாடற்றவர் கதை" என்னும் நூலில் சி.வி வேலுப்பிள்ளை 1824 இல் ஆரம்பமான கோப்பிக் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர்களின் அவலவாழ்வின் வரலாற்றை பதிவு செய்கிறார். அந்த நிலைமைகள் இன்றும் மாறவில்லை.

இன்றும் சிறுத்தைகள், பன்றிகளின் துரத்தல்கள்; பாம்புக்கடிகள்; இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகள் என்பவைகளோடு தான் நரம்புகள் கூதலடிக்க பனி பெய்யும் மலைக் காடுகளில் அவர்கள் தம் உழைப்பை தெயிலைச் செடிக்கு உரமாக வழங்குகிறார்கள். அவர்களிற்கு வழங்கப்படும் ஊதியமும் பிரித்தானியர்களின் காலத்தில் கொடுக்கப்பட்ட சொற்ப பணம் போலவே இன்றைக்கும் உழைத்துக் களைத்த தொழிலாளிக்கு பசியடங்க உண்ணமுடியா அளவு சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பகுதி பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, இரப்பர் என்பன மூலமாகவே கிடைக்கிறது. ஆனால் அவற்றை உற்பத்தி செய்யும் மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்கள் பசித்த வயிற்றுடன் தான் பாதி நாட்கள் வாழ்கிறார்கள். ஏற்றுமதிகளிற்கான ஏலச் சந்தைகளில் தேயிலை ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாவிற்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால் தம் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்து உழைப்பவர்களிற்கு ஒரு நாளைக்கு 450 ரூபா தான் சம்பளமாக கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் ஒரு கிலோ அரிசி தொண்ணூறு ரூபா, கோதுமை நூறு ரூபா, சீனி நூறு ரூபா, உப்பு தொண்ணூறு ரூபா, தேங்காய் ஐம்பது ரூபா. தோட்டத் தொழிலாளர்கள் 450 ரூபாயில் தான் இந்த விலை விற்கும் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். தங்களின் குழந்தைகளின் கல்வியைக் கவனிக்க வேண்டும். இன்ன பிற வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க வேண்டும்.

"எங்களால் வாழ முடியவில்லை" என்று அந்த ஏழைத் தொழிலாளர்கள் வறுமை தாங்க முடியாமல் கலங்கி அழுகிறார்கள். "எங்க வாழ்க்கை தான் இப்பிடிப் போச்சு; எங்க பிள்ளைகளையாவது படிக்க வைக்கலாம் என்றால் முடியலயே" என்று அந்தத் தாய்மார்கள் கதறி அழுகிறார்கள். அரிசி விலை கூடுது, அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றினதும் விலைகள் அடிக்கடி கூடுகின்றன. ஆனால் தோட்ட முதலாளிகளும், இலங்கை அரசும் தொழிலாளர்களின் சம்பளத்தை மட்டும் அப்படியே வைத்து அவர்களின் வாழ்க்கையை மேலும், மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலின் போது மலையகத்து தலவாக்கலையில் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் வைத்து ரணில் விக்கிரமசிங்கா "நாங்கள் தேர்தலில் வென்றால் தோட்டத் தொழிலாளர்களிற்கு ஒரு நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவோம்" என்று வாக்குறுதி கொடுத்தார். அவர்கள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இலங்கை ஆட்சியாளர்களின் எல்லா வாக்குறுதிகளையும் போல இந்த வாக்குறுதியும் காற்றிலே கரைந்து போய் விட்டது.

"நல்லாட்சியின்" பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லித் தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். "நீங்க தாண்டா சொன்னீங்க, ஆயிரம் ரூபா தருவோம் என்று அதைத் தாண்டா நாங்க கேட்கிறோம்; நம்பிக்கை துரோகம் செய்கிறீர்களே" என்று கோபம் கொப்பளிக்க ஒரு ஏழைத் தொழிலாளித் தாய் கேட்கிறாள். அரசியல்வாதிகளின் மொழியில் உண்மை, நம்பிக்கை என்ற சொற்களே இல்லை என்பது உழைப்பையையும், உண்மையையும் மட்டுமே தெரிந்த அந்த ஏழை மனிதர்களிற்கு எப்படித் தெரியும்.

மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களிற்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களாக யார் இருக்கிறார்கள்? பாமர ஏழைத் தொழிலாளர்களை சுரண்டும் தோட்டத்துரைமாருக்கு கால் கழுவி அடிமைச் சேவகம் செய்து கொண்டு தமது சொந்த மக்களான தோட்டத் தொழிலாளர்களை மிரட்டி வேலை வாங்கிக் கொண்டு, அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கங்காணிகள் என்னும் கயவர்களும் அவர்களின் வாரிசுகளும் தான் தொழிலாளர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பாட்டன் தொண்டமானில் இருந்து பேரன் செந்தில் தொண்டைமான், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தகப்பன் வி.பி கணேசன், மகன் மனோ கணேசன் வரை இது தான் மலையாக தொழிற்சங்கங்கள் என்னும் கொள்ளைக் கூட்டங்களின் வரலாறு.

கங்காணிகளாக இருந்து தொழிலாளர்களைச் சுரண்டிய இந்தக் கள்ளர் கூட்டங்கள் பின்பு தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருப்பதற்கு தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கும் சந்தாப் பணத்தை கொள்ளையடித்து தமது வசதிகளைப் பெருக்கிக் கொண்டார்கள். தொழிலாலர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் போனார்கள். மந்திரிகள் ஆகினார்கள். தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளிகளிற்கும், இலங்கை அரசுகளிற்கும் காட்டிக் கொடுத்து கமிசன் பெற்றுக் கொண்டார்கள்.

இன்று தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் தோட்டங்கள், நகரங்கள் எங்கும் ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டுப் போராடும் போது இந்தக் கள்ளர் கூட்டங்களைக் காணவில்லை. வழக்கம் போல தமது காட்டிக் கொடுக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் 730 ரூபாவிற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று தனது கமிசன் புத்தியை காட்டுகிறார்.

உற்பத்தியை அடிப்படையாக வைத்து சம்பள உயர்வு வழங்குவதற்கான திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது என்று சுனில் பொகலியத்த என்ற தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர் சட்டங்களிற்கு முரணான இந்த அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்க சந்தா பிச்சைக்காரர்கள் எவரும் வாயே திறக்கவில்லை. ஆனால் தொழிலாளர்கள் இம்முறை இறுதி வரை போராடுவோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். தலைவர்கள் என்னும் ஏமாற்றுக்காரர்கள் எமக்குத் தேவையில்லை. எமது போராட்டத்தை நாமே முன்னெடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இழப்பதற்கு எதுவும் இல்லாத தொழிலாளர்களின் போராட்டங்களிற்கு முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி சக்திகள் இணைந்து குரல் கொடுப்போம்.