Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்

இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பு எழுதுவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய யாப்பு ஏன்? எதற்காக? எப்படி? வரைய வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதும் யாருக்காக? யாரால்? அது எழுதப்படல் வேண்டும் என்பதும் ஒரு ஜனநாயக நடைமுறையின் கீழ் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகளாகும்.

கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட யாப்புக்கள் யாவுமே இலங்கை மக்களின் கருத்தறியாமல் பெரும்பான்மையின மேட்டுக்குடி ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புக்கு அமைவாகவே எழுதப்பட்டன. இந்தத் தடவையும் முன்னர் போல் மேட்டுக்குடியினர் நாட்டு மக்களின் கருத்தை நாடாமல் தாங்களே புதிய யாப்பினைத் தயாரிக்கும் முனைப்புடனேயே காணப்படுகின்றனர்.

இந்நிலையில் யாப்பு பற்றிய கலந்துரையாடலை இன்று குடிமக்கள் மத்தியில் நடாத்தினால் அவர்கள் எடுக்கும் முடிவு அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையிலேயேதான் அமைந்திருக்கும். அதனடிப்படையில் பார்ப்போமானால் மக்கள் இன-மத-சாதி-பால்-வர்க்க பிரிவுகளின் கீழ் நின்றுதான் கருத்தை முன் வைப்பார்களேயொழிய இலங்கை-இலங்கையர் என்ற சிந்தனையுடன் யாப்பை நோக்கமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு ஊட்டப்பட்ட கல்வியே.

இலங்கையிலிருந்து காலனித்துவ எசமானர்கள்தான் வெளியேறினார்களேயொழிய காலனித்து சுரண்டல் நடைமுறை நிறுத்தப்படவில்லை. அது இன்றுவரை தொடர்ந்தபடிதான் உள்ளது. ஆங்கிலேயர் உருவாக்கி விட்டுச் சென்ற கல்வி முறைமையில் வளர்க்கப்படும் மக்கள் அந்நியருக்கு-ஆங்கிலேயருக்குப் பணிவிடை புரிந்து பரவசம் அடைவதையே வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மனோபாவம் கொண்டு நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு துணையாக செயற்பட்டு வருகின்றனர்.

காலனித்துவ காலம் முதற் கொண்டே கல்வியில் முன்னேற்றம் பெற்றிருந்த தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பிரதேசங்கள் இதுவரை அடைந்த முன்னேற்றம் யாது? அல்லது அப்பகுதி பாமர பாட்டாளி மக்கள் பெற்ற நலன்கள் யாவை? இலங்கையின் இலவசக் கல்வி பயின்று பட்டம் பெற்ற பின் அந்நிய நாடுகளுக்குச் சென்று "தானுண்டு தன் குடும்பம் உண்டு" என வாழ நினைத்தார்களே அன்றி தனது சமூகத்தையோ- தான் சார்ந்த மக்களையோ பற்றி சிந்திக்கவில்லை. தங்களது திறமைகளை அந்நியருக்கே பயன்படுத்தினர். இப்படியான ஒரு மனோபாவத்தை வளர்க்கும் கல்வித் திட்டமே இன்று வரை நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.

உலகத்தில் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட நாடுகளின் ஆட்சியாளர்கள் இந்த அடிமைத்தன மனோபாவத்தை வளர்க்கும் கல்வித் திட்டத்தின் ஊடாக தங்களது சொந்த நாட்டின் வளங்களை அந்நியருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக சொந்த நாட்டு மக்களை பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் மோத விட்டு தாங்கள் மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தபடி உள்ளனர்.

இலங்கையின் கல்வித் திட்டம் மக்களை சமூக சிந்தனை அற்றவர்களாகவே உருவாக்கி விட்டுள்ளது. சமூக சிந்தனையற்ற மக்கள் ஒருபோதும் சுதந்திரம் படைத்தவர்களாக வாழமுடியாது. எமது நாட்டில் சமூக சிந்தனையென்பது இன-மத-சாதி-பால் என்ற அடித்தளத்துடன் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டு வருவதற்கான கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. நாம் பெற்ற கல்வி எமக்கு "தேசப்பற்று" என்பதை "தேசத்தை விற்றுப் பிழை" என்பதாகவே அர்த்தப்படுத்தியுள்ளது. "சுதந்திரம்" என்பதை "அயலவனை சுரண்டிப் பிழை" என்றே வலியுறுத்தி நிற்கிறது.

நாம் பெற்ற கல்வி நமது மக்களுக்குப் பயன்படவில்லை. நமது திறமைகள் நமது மக்களுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் அக்கல்வி எமது மக்களை உறவு-ஊர்-சாதி-சமயம்-இனம்-நாடு என்ற வரையறைக்குள்ளும் பிளவுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு எம்மை அடுத்தவர் தயவிலும் அந்நியர் உதவியிலும் வாழ வேண்டிய அடிமைகளாக்கி விட்டுள்ளது.

ஆங்கிலேயர் இலங்கையில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்திலேயே அதாவது 1920 களிலேயே "அவர்களுடைய கல்வித் திட்டம் மக்களை அடிமைகளாக வளர்க்கும் திட்டம்" எனவும் "அது மாற்றியமைக்கப்படாத வரைக்கும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது" என்றும் 'யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" வலியுறுத்தி இன-மத-சாதி-பால் வேறுபாடு கடந்து அறிஞர்களை ஒன்று கூட்டி வைத்துப் பல மாநாடுகளை நடாத்தியது. ஆனால் அன்று அதிகாரத்தை கையில் வைத்திருந்த அடிமைக் கல்வி பெற்ற மேட்டுக்குடிகள் அதனை உதாசீனம் செய்ததால் நாட்டில் இரத்த ஆறுகள் பல நாம் கடக்க வேண்டியதாயிற்று.

ஆயினும் கடந்த கால அனுபவங்களின் பின்பும் கூட நமக்கு "அறிவு"க் கண் திறக்கவேயில்லை. அதற்கான கல்வி எமக்கு வழங்கப்படவேயில்லை. எனவேதான் ஆங்கிலேயர் போய் 67 ஆண்டுகள் கழிந்தும் மீண்டும் இன்று அந்நிய ஆதிக்க சக்திகளை வெற்றிலை பாக்கு தேசிக்காய் தட்டு வைத்து ஆலாத்தி செய்து வரவேற்று உபசாரம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆணுக்குப் பெண் அடிமை - கணவனுக்கு மனைவி அடிமை - பெற்றோருக்குப் பிள்ளை அடிமை - மூத்தவருக்கு இளையவர் அடிமை - சமயங்களுக்கு பக்தர்கள் அடிமை - ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை - பதவியில் உள்ளவர்களுக்கு பாமர பாட்டாளி மக்கள் அடிமை. இவைகள்தான் நாம் பெற்ற கல்வியின் பயன்.

இலங்கையில் அமைதியும் சமாதானமும் சுபீட்சமும் உருவாக வேண்டுமானால் தொழில்சார் தகைமைகள் மட்டுமல்லாது கூடவே சமுதாய நோக்குடைய சிந்தனையாளர்களையும் சமூக அக்கறை கொண்ட அறிஞர்களையும் உருவாக்கும் ஒரு கல்வித் திட்டம் அமைக்கப்படல் வேண்டும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் அதனைப் புறந் தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்த விதமான மாற்றங்களும் நாட்டையும் அதன் குடிமக்களையும் மேலும் மேலும் அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்லும்.

"படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான் போவான் ஐயோன்னு போவான்"

(பாரதியார்)