Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

சரத் பொன்சேக்காவுக்கு விடுதலை; அரசியற் கைதிகளுக்கு ஏனில்லை?

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது?

அந்த வகையில் தமது விடுதலைக்காக நீதி கோரி கடந்த 5 நாட்களாகச் சிறைகளில் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானவையாகும். அவர்களின் விடுதலைக் கோரிக்கையை அரசாங்கம் முழுக் கவனத்தில் கொண்டு உடன் விடுதலைக்கு ஆவன செய்தல் வேண்டும்.


முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொசேகா ஆளும் வர்க்க சக்திகளுக்கிடையிலான முரண்பாட்டின் காரணமான அரசியல் பழிவாங்கலின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் சிறைவாசம் அனுபவித்தார். இவை ஜனநாயக மறுப்பும் அதிகாரத்தின் பழிவாங்கலுமாகும். இவை எவ்வாவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல.

இந்நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். இவை ஜனநாயகத்தின் அடிப்படையில் அல்ல. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணிந்தே இப்பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டுமென்றே பேரினவாத அடிப்படையில் இழுத்தடித்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே சட்டத்தின் பெயராலும் ஜனநாயகம் மனித உரிமையின் பெயராலும் நீண்டகாலம் சிறைகளில் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தழிழ் அரசியல் கைதிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். என எமது கட்சி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

–புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்தில்வேல்