Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்திற்கு அரசியல் உரிமையை வழங்க வேண்டியது ஏன்?

மத குருமார்களே, அன்புத் தாய்மார்களே, தந்தையரே, தோழரே, தோழியரே!

சட்டத்தைப் பயன்படுத்தி தோழர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையையும், அரசியல் உரிமையையும் பறிப்பதற்கான முயற்சியில் இன்றைய கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் பிறந்து வளர்ந்த, கல்விகற்ற, அரசியலில் ஈடுபட்ட தோழர் குமார் குணரத்தினத்திற்கு அவர்கள் தரும் பதில்தான் "நீ ஒரு அவுஸ்திரேலிய குடிமகன், விசா இன்றி தங்கியிருப்பவன்; எனவே, நீ நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்பது. அவரை நாடுகடத்த எத்தனிப்பது அவரை மட்டும் பாதிக்கக்கூடிய விடயமல்ல. அதனூடு எதிர்காலத்தில் இந்நாட்டுத் தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள், மீனவர் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர் தலைவர்கள் போன்றோர் மீதான எதிர்கால சவாலின் அறிகுறிகள் தென்படுகின்றன.

தோழர் குமார் குணரத்தினத்தினதும், முன்னிலை சோஷலிஸக் கட்சியினதும் செயல்கள் இந்நாட்டை ஆள்பவர்களுக்கு நஞ்சாகியது ஏன்? ஏற்கனவே பணபலம் மற்றும் ஊடகபலத்தைக் கொண்டு பெரும்பாலான அரசியல் கட்சிகளை, தமது ஆட்சிக்கு சவாலாக இல்லாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருப்பது எமக்குத் தெரியும். எப்போதாவது நாடாளுமன்றத்திலும், சிலவேளைகளில் பாதை ஓரங்களிலும் குரலெழுப்பும் அவ்வாறான கட்சிகளின் சவால்கள் பாரதூரமாக இருக்காது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

தோழர் குமார் குணரத்தினம் திடீரென பாஸ்போட்டைத் தயாரித்துக் கொண்டு இலங்கைக்கு வந்தவரா? இல்லை. அவர் ஆட்சியாளரின் முன்னால் மண்டியிடாத, பழைய இடதுசாரிய இயக்கத்திற்கு பதிலாக நாட்டு மக்களின் உரிமைகளுக்காக புறப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர். 80களின் ஆரம்பத்திலிருந்தே போராட்டத்தில் பங்கேற்றவர். 89ல் அடக்குமுறையிலிருந்து தற்செயலாக உயிர்பிழைத்த சில பேரில் அவரும் ஒருவர். அப்போதும்கூட கட்சியை கட்டியெழுப்புவதற்காக தன்னால் இயன்றவற்றை செய்தார். அவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தோழர் குமாரை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜேவிபியின் தலைமை தீர்மானித்தது.

மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் சந்தர்ப்பவாதத்திற்குள் வீழும்போது, தான் சரியானது என நம்பிய அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அவர் இலங்கை வந்தார். இலங்கையின் விடுதலை அரசியலுக்கு புதிய ஆரம்பத்தைத் தருவதில் பங்களிப்புச் செய்தார். இந்தப் போராட்டத்துடன்தான் முன்னிலை சோஷலிஸக் கட்சி உதயமாகியது. அச்சமயத்தில்தான் ராஜபக்ஷ அரசாங்கத்தால் அவர் கடத்தப்பட்டார். குமார் குணரத்தினம் என்பவர் இந்நாட்டு இடதுசாரிய அமைப்பிற்குள் போர்க்குணம் படைத்த சக போராளி. எனவேதான், அவரை விரட்டியடிக்க, அவரது அரசியல் குரலை நசுக்க ஆட்சியாளர்கள் எத்தனிக்கின்றனர்.

தோழர் குமார் குணரத்தினம் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பயணத்தை தடுக்க அன்றைய ராஜபக்ஷ அரசாங்கம் முயன்றது. இன்றும் அதுதான் நடக்கின்றது. ஜனநாயகத்தை பற்றி, சுதந்திரத்தைப் பற்றி கூச்சலிட்டு ஆட்சிக்கு வந்த இன்றைய ரணில் - மைத்திரி கூட்டாட்சியும் பழைய வேலையையே செய்கிறது. ஆனால், சட்டத்தையும், சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களையும் பயன்படுத்தியே இந்த அடக்குமுறை அரங்கேறுகிறது.

இந்த அரசாங்கத்தினது 'ஜனநாயக ஊர்வலத்தின்" முன்னறிவிப்புதான் இது. எதிர்காலத்தில் தண்ணீரை விற்கும் சட்டமூலம், விதைகளின் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமூலம், கல்வியை தனியார்மயமாக்குவதற்காக தனியார் பல்கலைக்கழக சட்டம் மாத்திரமல்ல, சேமலாப நிதியத்தை கொள்ளையடிக்கும் திட்டமும் எதிர்காலத்தில் வரவிருக்கிறது. அவற்றிற்கு எதிராக போராடும் மக்களுக்கு கிடைப்பதும் பழைய பதில்தான். அடக்குமுறை, அதுதான் பதில். சுத்தமான குடிநீர் கேட்டு பந்தகிரிய பிரதேசத்தில் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் செய்த மக்கள், கல்வி உரிமைகளை வெட்ட வேண்டாமென ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், விதைகள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெஹிஅத்தகண்டிய விவசாயிகள் உட்பட அநேகமானோர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையின் ஊடாக இது உணர்த்தப்பட்டுள்ளது.

தமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துபவை குறித்து தமது கருத்தை கூறுவதும், விரும்பாதவற்றை எதிர்ப்பதும்தான் ஜனநாயகம். அது மக்களின் உரிமை. அதைப் பறிக்க அனுமதிக்க முடியாது. நீங்கள் பிறந்த இலங்கை மண் உங்களது மண்ணல்லவென உங்களை நாடு கடத்த முயன்றால் உங்களது உணர்வுகள் எப்படியிருக்கும்? சிந்தித்துப் பாருங்கள். இந்த ஆட்சியாளர்கள் தோழர் குமார் குணரத்தினத்திற்கும் இதைத்தான் செய்யப்போகிறார்கள். ஒன்று, அவரை நாடு கடத்த அல்லது, பொய் வழக்கில் சிக்கவைத்து சிறையிலடைக்க எத்தனிக்கிறார்கள். நாங்கள் உங்களிடம் கேட்பது இதுதான். தமது குடியுரிமையை உறுதி செய்யுமாறு கேட்கும் குமார் குணரத்தினத்தின் கோரிக்கையை முன்வைத்து நடாத்தும் போராட்டத்திற்கு உங்களது ஒத்துழைப்பை நல்குங்கள் என்பதே.

ரணில் விக்கிரமசிங்கவின் சொத்தில் பாதியை நாம் கேட்கவில்லை. இந்நாட்டில் பிறந்த ஒரு மனிதனுக்கு உரித்தான நியாயமான உரிமையையே கேட்கிறோம். அவுஸ்திரேலிய குடியுரிமையிலிருந்து விலகுவதற்கு இலங்கையின் மரபுவழி குடியுரிமையை உறுதி செய்யும் அறிவித்தலை மட்டுமே கேட்கிறோம். உரிமைகளை பாதுகாத்து கொடுப்பதற்காக அணிதிரள்வோம். ஜனநாயக ரீதியில் போராட முன்வருவோம்.

வெற்றி நமதே!

முன்னிலை சோஷலிஸக் கட்சி
2015- 11- 20