Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரத்தினத்தின் பிரஜாவுரிமைக் கோரிக்கை - சேனாதீர குணதிலக

கடந்த நவம்பர் 4ம் திகதி தோழர் குமார் குணரத்தினம் அவரது தாயாரின் வீட்டில் வைத்து கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் 18 ம் திகதி வரை  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருத்தமை என்ற விடயத்தை முன்வைத்து அவரை நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அது குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் இது விடயத்தில் மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்கும்போது மேற்படி நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் கைதுசெய்யப்பட்ட கையோடு தோன்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இந்தப் பிரச்சினையின் வரலாறு சம்பந்தமாகவும் ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

தோழர் குமார் குணரத்தினம் 1965 நவம்பர் 18ம் திகதி கேகாலையில் பிறந்தார். அவரது தாயார் ராஜமணி குணரத்தினம் ஆவார். தந்தை ஆதிமூலம்பிள்ளை குணரத்தினம் ஆவார். அவரது அடையாள அட்டை இலக்கம் 653531890V.  வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கம்: K0257946. கேகாலை புனித மரியாள் வித்தியாலயத்தில் 11ம் தரம் வரை கல்விபயின்ற அவர், பின்பு, உயர்தரம் படிப்பதற்காக கேகாலை, பின்னவலை மத்திய மஹா வித்தியாலயத்தில் சேர்ந்தார். அங்கு உயர்தர வகுப்பில் சித்தியடைந்த அவர் பட்டப்படிப்பிற்காக பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் சேர்ந்தார். 1982ல் பாடசாலை மாணவனாக இருந்த காலந்தொட்டு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலோடு இணைந்து கொண்டார். அவரது மூத்த சகோதரனான ரஞ்சிதம் குணரத்தினம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசிலோடு அப்போதே இணைந்திருந்தார். அவர் 1989 காலப்பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 87 – 88 காலப் பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் சிறைபடுத்தப்பட்ட தோழர் குமார், 1993ல் விடுதலை செய்யப்பட்ட உயிர் பிழைத்திருந்த சிலருடன் சேர்ந்து ம.வி.முன்னணியை மீளக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். விஷேடமாக, 2004ல் கூட்டணி அரசாங்கத்தை கட்டியெழுப்பிய விடயத்தில் ம.வி.முன்னணியின் மத்தியகுழுவில் நடந்த நீண்ட கருத்தாடலின்போது கூட்டணி அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்ட அவர், கட்சி பயணித்துக் கொண்;டிருந்த வலதுசாரிய பயணத்திலிருந்து அதனை மீட்டெடுக்கப் போராடினார். அந்தப் போராட்டத்தில்; 2005 ஜனாதிபதித் தேர்தலின் பின்பு ம.வி.மு. அரசாங்கத்துடன் சேருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக நடந்த கருத்தாடல் சூடுபிடித்தது. 2005 – 2006 களில் ம.வி.மு. அரசாங்கத்துடன் இணைய வேண்டுமென மூன்று சந்தர்ப்பங்களில் ஆலோசிக்கப்பட்டதுடன் முதல் இரு சந்தர்ப்பங்களிலும் ஆலோசனை தோற்கடிக்கப்பட்டது. 2006 இறுதிப்பகுதியில் அந்த ஆலோசனை வெற்றிபெற்ற தருணத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சிலர் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்திருந்தமையால் (கரு ஜயசூரிய, உட்பட சிலர்) அரசாங்கத்துடன் இணையக் கூடிய சந்தர்ப்பம் ம.வி.மு. க்கு கிடைத்தது.

என்றாலும், மேற்படி கருத்தாடலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், தனிநபர் பலவீனங்களும், கட்சியின் அந்தரங்கங்களை அரசாங்கத்திற்கு வழங்கி அதனூடாக தோழர்களுக்கு உயிராபத்துக்கள் அதிகரிக்குமளவிற்குரிய காரணங்களாக இருந்தன. அந்தக் காலப்பகுதியில் தோழர் குமார் குடியிருந்த இடங்களை உளவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தல், பின் தொடர்தல் பத்திரிகைவாயிலாக தகவல் அனுப்புதல் போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்சபை உயிர் பாதுகாப்பிற்காக அவரை நாட்டிலிருந்து வெளியே அனுப்பத் தீர்மானித்தது. (தோழர் குமார் குணரத்தினம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்சபை உறுப்பினராக இருந்ததை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் தோழர் சோமவன்ஸ அமரசிங்க சமீபத்திய ஊடக சந்திப்பொன்றின்போது உறுதி செய்திருந்தார்). அப்படியான சூழலில்தான் தோழர் குமார் தனது தனித்துவ அடையாளத்தை மாற்றி 2006ல் வெளிநாடு சென்றார்.

பின்னர், 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி கருத்தாடல் மீண்டும் சூடுபிடித்தது, கூட்டணி அரசியலுக்குள் நுழைவதற்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு, கட்சி மீண்டும் வலதுசாரிய பாதையில் பயணிக்கத் துவங்கியிருப்பதை காட்டியது. 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு மத்தியகுழுவில் ஆரம்பிக்கப்பட்ட அக்கருத்தாடல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த கட்சிக்குள்; பரவலாகியது. இதன்போது 1994லிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குறித்து மீளாய்வு நடந்ததுடன், கூட்டணிவாதத்திற்கும், மறுசீரமைப்புவாதத்திற்கும், இனவாதத்திற்கும் கட்சி பலியாகியதாக கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, 2010ன் பின்னர் புதிய பாதையில் கட்சியை இட்டுச் செல்வதற்கான திட்டமொன்று நிறைவேற்றப்பட்டதோடு, அதற்காக புதிய மத்தியகுழுவொன்றும் நியமிக்கப்பட்டது,

ஆனால், கட்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பயணப்பாதையில் பயணிக்கும் விதத்தில் நிலைமைகள் இருக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் அந்த வேலைத்திட்டம் செயற்படுவதை தடுத்ததனைத் தொடர்ந்து, 2005லிருந்து ஆரம்பமான இக்கருத்தாடல் உட்கட்சி மோதலாக மாறியது. இறுதியில் மக்கள் விடுதலை முன்னணி இரண்டாகப் பிரிந்து முன்னிலை சோஷலிஸக் கட்சி பிறக்க காரணமாயிருந்தது. இக்கருத்தாடலில் நேரடியாகக் கலந்து கொள்ள குமார் குணரத்தினம் இலங்கை வந்ததனை அடுத்து, அவரது கருத்தை சகிக்க முடியாத சிலர் பாதுகாப்பு பிரிவிற்கும், பத்திரிகைகளுக்கும் அவர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டனர்.

நாம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த உடனேயே அரசியற்கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு நடைமுறை பிரச்சினைகள் இருந்தமையால் மக்கள் போராட்ட இயக்கம் என்ற பெயரில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்கினோம். மக்கள் போராட்ட இயக்கம் தொடங்கப்பட்ட நிமிடத்திலிருந்து அரச அடக்குமுறை எங்களை பின் தொடர்ந்தது, எமது யாழ். மாவட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 டிசம்பர் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டனர். அதன் பின்பு, ராஜபக்ஷ ஆட்சியின் உளவாளிகள் எம்மை பின்தொடர்ந்ததுடன், சில மாதங்களுக்குப் பின்னர், 2012 ஏப்ரல் 07ம் திகதி அதிகாலை தோழர் குமார் குணரத்தினம் மற்றும் தோழி திமுத்து ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டனர். அத்தருணத்தில் மனித உரிமை அமைப்புகள், அன்று எதிர்க்கட்சியில் இருந்த அநேக அரசியற்கட்சிகள், தொழிற்சங்கங்கள, மாணவர் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், ஊடக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அநேகமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஷேடமாக இன்றைய பிரதமரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியும் கடத்தலை எதிர்த்து குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைக்காக வாதிட்டனர். அதேபோன்று, சர்வதேச மட்டத்திலான தூதுவராலயங்களின் தலையீடும் விஷேட தாக்கத்தை ஏற்படுத்தியது.

இறுதியில், 72 மணித்தியாலயங்களுக்குப் பின்பு ஏப்ரல் 9ம் திகதி இரவு தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தோழர் குமார் குணரத்தினம் கைவிடப்பட்டிருந்தார். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார். அதன் பின்பு, தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நாம் இன்றுவரை போராடி வருகிறோம்.

2015 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய சமயத்தில் நாட்டின் அரசியல் சூழல் மாறியது. அதன்போது, ராஜபக்ஷ ஆட்சியின் பிடியில் சிக்கியிருந்த இலங்கை அரசியலில் ஓரளவு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு பகுதியினர் விலகியதால் புதிய முன்னணியொன்று தோன்றியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோழர் குமார் குணரத்தினத்தை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் முடிவு செய்தோம்.

இதன்படி, 2015 ஜனவரி 01ம் திகதி தோழர் குமார் குணரத்தினம் இலங்கைக்கு வந்தார். ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசோன அதிகாரத்திற்கு வந்தார். அந்த ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையின்போது மைத்திரிபால சிறிசேன, ஜனநாயகம் சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தியிருந்தார். ராஜபக்ஷ ஆட்சியின்போது மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதே தேர்தல் நடவடிக்கையின் முதன்மை வாக்குறுதியாக இருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரும் அவர் கூறியிருந்தார். அரசியல் காரணங்களுக்காக நாட்டிலிருந்து வெளியேற நேர்ந்தவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தான் நடத்திய ஊடக சந்திப்பின்போது கேட்டுக் கொண்டார்.

ஆனால், நிலைமை மாறியது. முன்னர் குமார் குணரத்தினம,; நொயெல் முதலிகே என்ற பெயரில் நாட்டுக்கு வரவேண்டி நேர்ந்திருந்தது. அதுவும் ஒருமாத காலத்திற்கு பெற்றுக்கொண்ட விசா மூலமாகவே வரவேண்டி ஏற்பட்டது. ஜனவரி 30ம் திகதி விசா காலாவதியாகும் என்பதாலும், மீண்டும் நாடுகடத்தக் கூடிய நிலை இருப்பதை உணர்ந்தமையாலும் விசா காலம் முடிவதற்கு முன்பு ஜனவரி 27ம் திகதி மீண்டும் விசாவை நீடிக்குமாறு விண்ணப்பித்தோம். எவ்வித நியாயமான காரணமுமின்றி அந்த விண்ணப்பம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டது.

பின்பு, முறையாக ஜனவரி 28 மற்றும் 29ம் திகதிகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவரை நாடுகடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் குடியுரிமையை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி அடிப்படை உரிமைகள் சம்பந்தமான மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அந்த மனு மீதான விசாரணை பெப்ரவரி 18ம் திகதி வரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டதுடன், அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்ற அடிப்படையில், வழக்கு, மேலதிக விசாரணைக்காக எடுக்கப்படவில்லை. தோழர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக அவரது அடிப்படை உரிமையொன்று மீறப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தையே அதன்போது நாம் முன்வைத்தோம். இது, நிறைவேற்று அதிகாரத்தினால் தீர்க்கப்பட வேண்டிய விடயம் எனவும், அதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாதெனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர். அவர்களது கூற்றுக்கேற்ப வழக்கை விசாரிக்க முடியாவிடினும், குமார் குணரத்தினத்தை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

தவிரவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் பரப்புரையின்போது பங்கேற்ற மாதுளுவாவே சோபித தேரர், தர்மசிறி பண்டாரநாயக, நிர்மால் ரஞ்சித் தேவசிரி, ஜகத் மனுவரன, சமனலீ பொன்சேகா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் இது குறித்து ஜனாதிபதியிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்தோம்.

மேலும், எமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் அஜித் குமார ஊடாக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையின்போது இது சம்பந்தமாக கேட்டபோது அரசாங்கத்தின் சார்பில் கருத்து தெரிவித்த பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா இந்த கோரிக்கை நியாயமானது எனவும், அதனை தீர்க்க வேண்டுமெனவும் கூறியிருந்தார். குடியுரிமை சட்டத்தில் வரம்புகள் காணப்படின், தேவை ஏற்படும் பட்சத்தில் திருத்தங்களை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழி வகுக்க வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார்.

இதைத்தவிர, குடியுரிமை சட்டத்தில் 8வது உறுப்புரையின்படி 'இலங்கையில் மரபுவழி குடியுரிமையை உறுதி செய்தல்" என்ற விண்ணப்பப் படிவத்தின் ஊடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பெப்ரவரி 18ம் திகதி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமையை அல்லாது இலங்கையில் மரபுவழி குடியுரிமையை உறுதி செய்யுமாறே அதன் மூலம் கேட்டுள்ளோம். தற்போதுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்துச் செய்வதும் எமது நோக்கமாக உள்ளது. அதற்காக நாம் கேட்பது அவுஸ்திரேலிய குடியுரிமையை நீக்கி இலங்கையின் மரபுவழி குடியுரிமையை உறுதி செய்யும் அறிவித்தலையேயாகும். குடியுரிமை கட்டளைச் சட்டத்தின்படி இரட்டைக் குடியுரிமை பெறுவதும், இலங்கையில் மரபுவழி குடியுரிமையை உறுதி செய்வதும் இரண்டு அதிகாரங்களுக்கு உரியதாகும். மரபுவழி குடியுரிமையை உறுதி செய்வதற்கான முழு அதிகாரம் விடயம் சம்பந்தமான அமைச்சரிடம் உள்ளது. எந்த நாட்டிலிருந்து அல்லது எந்த இடத்திலிருந்து விண்ணப்பிக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்படாமையால், மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் முன்வைக்கும் வாதம் எடுபடாது போகும். மரபுவழியாக குடியிருப்பவர் என்றாலும் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் மீண்டும் தனது நாட்டில் குடியுரிமை கேட்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பத்தின் ஊடாக கேட்க முடியும். அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக மேற்கொள்ளப்ட்ட நடவடிக்கையாகவே குமார் குணரத்தினம் அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக் கொண்டார். ஆனால், இலங்கையில் அரசியல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் முதல் நிமிடத்திலேயே அதனை கைவிட அவர் தயாராக உள்னார்.

ஜனவரி மாதம் 1ம் திகதி அவர் இலங்கைக்கு வந்த நேரத்திலிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைதான் அவ்வாறு விசா வழங்க மறுப்பதற்கான காரணமென கூற முடியும். அதுவும்கூட சட்டப்படி குற்றமாக இருப்பது, வேறொரு நாட்டின் குடியுரிமையுள்ள ஒருவர் 'மனச்சாட்சியின் சுதந்திரத்தின்" படி எந்தவொரு நாட்டிலிருந்தும் கருத்து தெரிவிக்கும் உரிமையை மறுப்பதால்தான். இலங்கையில் இது சம்பந்தமான வழக்கொன்றின் தீர்ப்பொன்று உண்டு. 'ப்ரஸ்கர்டல் சம்பவம்" என்ற பெயரில் காலனித்துவ காலத்தில் அது பிரபலமடைந்திருந்தது. ப்ரஸ்கர்டல் என்பவர் அவுஸ்திரேலிய பிரஜையாகும். அவர் 1935ல் இலங்கைக்கு வந்து இலங்கை சமசமாஜக் கட்சியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அதன்போது விசா அனுமதிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டமைக்காக அவரை கைது செய்து நாடுகடத்த அன்றைய பிரித்தானிய ஆட்சி முயன்றது. மனச்சாட்சியின் சுதந்திரம் என்பதனை தேச எல்லை இடையூறு செய்ய முடியாதென கூறிய நீதிமன்றம், கருத்து கூறும் சுதந்திரத்தை தடுக்கும் விதத்தில் ப்ரஸ்கர்டலுக்கு தீர்ப்பு வழங்காததோடு, அவரை அந்த குற்றத்திலிருந்தும் விடுதலை செய்தது,

சட்டவாதங்களை முன்வைத்து குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை பறிக்க முயல்வது சட்டரீதியானது அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. என்றாலும், இது அரசியல் ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். தோழர் குமார் மட்டுமல்ல மேலும் பலர் இந்த பிரச்சினைக்கு கடந்த காலங்களில் முகம் கொடுத்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் நாட்டிற்குள் நுழைவதற்கு ஏதுவான விதத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல் தலையீடு செய்யுமாறு இன்றைய ஆட்சியை வற்புறுத்த வேண்டும்.

விஷேடமாக, ஜனநாயகம் குறித்து இன்றைய ஆட்சி வழங்கிய வாக்குறுதியையும், அதனை செயற்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட வேண்டியுள்ளது. அவ்வாறான தலையீட்டிற்கு அரசாங்கத்தை தூண்டுவதற்கு தேவையான தலையீட்டை வழங்குமாறு உங்களிடமும் வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி

சேனாதீர குணதிலக
தலைமைச் செயலாளர்
முன்னிலை சோஷலிஸக் கட்சி