Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே? லலித் குகன் எங்கே?

அன்புள்ள தாய், தந்தையரே, சகோதர, சகோதரியரே!

உங்களுக்கு தெரியும் கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாம் அனைவரும் கடுமையான துன்பங்களை எதிர் நோக்கினோம். தண்டனை, கடத்தல், காணமலாக்குதல், கைது, கொலை இவைகளுக்குள் முழு நாடும் சிக்குண்டிருந்தது. இப்படியான பல சம்பவங்களுக்கு மத்தியில் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டது பலத்த எதிர்ப்புக்குள்ளான பிரச்சினையாகும்.

யுத்தம் முடிந்த நிலையில் லலித் வடக்கிற்கு வந்ததும், கிழக்கிற்கு சென்றதும் கஸ்டப்படுகின்ற மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கேயாகும்.

குகன் அது சம்பந்தமாக நம்பிக்கை கொண்டு லலித்துடன் சேர்ந்து கொண்டார். கடந்த 3 1/2 வருடங்களுக்கு முன் அதாவது 2011 செப்டம்பர் 10ம் திகதி இவர்கள் கடத்தப்பட்டார்கள்.

இன்னும் இந்த ஆட்சியாளர்கள் லலித் குகன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்று எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

லலித் குகன் மட்டுமல்ல கடத்தப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்று இதுவரையில் எந்தவித தகவலையும் அரசாங்கம் வெளியிடவில்லை. அவர்களது குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் நடந்த கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் பற்றி இன்னும் எதுவித தகவலையும் புதிய அரசாங்கம் இதுவரையிலும் வெளியிடவில்லை.

புதிய அரசாங்கம் ஜனநாயகம் தருவதாகக் கூறிக்கொண்டு வந்த போதிலும் இதுவரையிலும் இந்தப்பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் எட்ட அரசாங்கத்தால்
முடியவில்லை.

எனவே நாட்டிற்கு ஜனநாயகம் தருகிறோம் என்று சொன்ன புதிய அரசாங்கம் இன்னும் ஜனநாயகத்தை கொடுக்கவில்லை. தருகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதனால் மக்களின் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்ள மக்கள் அதிகாரம் அவசியம். மக்கள் சக்தி அவசியம். இடதுசாரிய சக்தி அவசியம்.

வடக்கிலும்,  தெற்கிலும் ஒன்று சேர்ந்து கட்டியெழுப்பவுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சக்தி அவசியம்.

லலித், குகன் போராடியது இந்த இலக்குகளுக்காகவே. லலித், குகனை கடத்திய ஆட்சியாளர்களுக்கு அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன் அவர்கள் கேட்டுக் கொண்ட இலக்குகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முன்னிலை சோசலிச கட்சி

25/03/2015