Tue05262020

Last updateSun, 19 Apr 2020 8am

சிங்கப்பூர் பிரஜை அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் குடியுரிமை, இலங்கையில் பிறந்த குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமை இல்லை!

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் இலங்கை பிரஜாவுரமை வழங்கவும், இலங்கையில பிறந்த தன்னை நாடு கடத்தவும் நல்லாட்சிக்கான அரசாங்கம் எடுக்கும் முயற்சி கவலையளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் கூறுகிறார்.

குமார் குணரத்தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஆரம்பம் தொட்டே அதனை பின்தொடர்ந்து வந்த அரச அடக்குமுறையின் அகோரக் முகம் பல்வேறு வேடங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்சியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் எமது யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் லலித் குமார் வீரராஜு மற்றும் கட்சியின் செயல் வீரரான தோழர் குகன் முருகானந்தம் ஆகிய இருவரும் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டதை இந்த நாடே அறியும். ஆரம்பத்திலிருந்தே கட்சியின்மீதும், என்மீதும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி, எமது கட்சி சம்பந்தமாக தவறான சித்திரத்தை சமூகத்தில் நிர்மாணிக்க முயற்சி செய்து அடக்குமுறைக்குத் தேவையான சுற்றுச் சூழலை உருவாக்க முயன்ற வரலாறை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறோம்.

முன்னிலை சோஷலிஸக்கட்சிக்கு மட்டுமல்ல, ராஜபக்ஷ ஆட்சியின் சமூக, பொருளாதார, அரசியல் நாசகார வேலைத்திட்டத்தை எதிர்த்த அனைவரும் இந்த அடக்குமுறைக்கு பலியாயினர். இந்த சூழலில்தான், எமது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குள் ஜனநாயகம் குறித்து கோரிக்கையும், ஆர்ப்பாட்டமும் மேலோங்கியது. கடந்த ஜனாதிபதித் தேரதலில் அதே பாணிலான இன்னொரு ஆட்சிக்கு பாதையை அமைத்துக் கொள்ளவதற்கு, இந்த மக்கள் மத்தியில் நிலவிய ஜனநாயகம் சம்பந்தமான கோரிக்கையும் எதிர்ப்பார்ப்பும் தெரிந்தோ, தெரியாமலோ இதற்காக பயன்படுத்தப்பட்டது.

முகத்தை மாற்றுவதால் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென நினைப்பது உழுந்தை விதைத்து விட்டு, எள்ளை அறுவடை செய்ய எதிர்ப்பார்த்திருப்பது போன்றதாகுமென தேர்தல் காலங்களில் நாங்கள் கூறியது அதனால்தான். தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் ஆழமான மாற்றத்தை கொண்டுவராமல் முகத்தை மாற்றுவதால் மாத்திரம் மக்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாதென்பது மீண்டுமொரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது அரசியலும் அவ்வாறான பரந்த சமூக மாற்றத்திற்கான அரசியல்தான். அது நாட்டின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் நூற்றுக்கு தொன்னூறு சதவீத மக்களுக்கு மகிழ்ச்சியை, சுதந்திரம் நிறைந்த வாழ்வை பெற்றுக் கொள்வதற்காக எதிர் நீச்சலடிப்பதை போன்றதாகும். அது, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முதற்கொண்டு; 1948 போலி சுதந்திரத்தின் பின்பு மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த அரசியல் கூட்டணிகளின் ஏமாற்று அரசியலுக்கு எதிராக மக்கள் பலத்தை கட்டியெழுப்பும் இக்கட்டான பயணமாகும். அது, இதுவரை நாட்டில் செயற்பட்டு வந்த அரசியலைவிட முற்றிலும் வேறுபட்ட புரட்சிப்பாதையாகும். கடந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் இன்றைய ரணில்- மைத்திரி ஆட்சியிலும் அந்த அரசியலுக்கு வேலி போடப்பட்டுள்ளது.

2015 ஜனவரி 08ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ரணில் - மைத்திரி ஆட்சி மக்களுக்களித்த வாக்குறுதியின்படி ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் உறுதி செய்வதற்காக (இது குறித்து எமக்கு வேறு விமர்சனங்கள் உண்டு) எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் கூறிய பிரகாரம் திருடர்கள், ஊழல் பேர்வலிகள், பொருளாதார குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் அவற்றின் மாபெரும் மூளைசாலிகளான அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கூற்றுப்படி, ஜனநாயகத்திற்கு தடையாகவுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பது சம்பந்தமான விவாதங்கள் பலமிழந்து, திருத்தங்கள் கொண்டுவருவது வரை பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நவ தாராளமய பொருளாதார அரசியல வேலைத்திட்டம் எவ்வித மாற்றமுமின்றி செயற்படும்போது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது ஒருபோதும் சாத்தியப்படாது என்பது எமது நிலைப்பாடாக இருப்பினும், அதிகாரத்திற்கு வந்த புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அப்படியே நிறைவேற்றப்படுவதை காண்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மக்கள் முன்பாக வைத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டுவரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதை புறந்தள்ளிவிட்டு, குமார் குணரத்தினத்ததை நாடு கடத்துவதற்கு துரித நடவடிக்கையில இறங்கியிருப்பது தெரிகிறது.

முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைக்கு மத்தியில் மேலும் பலரைப் போன்று எனக்கும் அரசியலில் ஈடுபட்டமையால் எதிர்கொண்ட அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு செல்ல நேரிட்டது. என்னை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் நிலை உருவாகியிருந்தமையால்தான் வெளிநாடு செல்ல நேரிட்டதேயன்றி எனது விருப்பத்தின் பேரில் நான் வெளிநாடு செல்லவில்லை. ஜனநாயக விரோத ராஜபக்ஷ ஆட்சியினால் அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்த பலர் வெவ்வேறு அடையாளங்களுடன் செயற்பட நேர்ந்தமை ஊரறிந்த இரகசியமாகம். எனக்கும் அவ்வாறு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டதை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

2012 ஏப்ரல் மாதம் 07ம் திகதி ராஜபக்ஷ ஆட்சியினால் நான் கடத்தப்பட்டேன். என்னை படுகொலை செய்ய முயற்சித்த வேளையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட நெருக்குதல் காரணமாக நான் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் காணாமல் போனவர்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்திருக்கும். அச்சந்தர்ப்பத்தில் அரசியல் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் கடத்தப்படுமளவிற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தின அடக்குமுறை மேலோங்கியிருப்பதாக அன்றைய எதிர்கட்சித் தலைவரும் இன்றைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியது நினைவிருக்கிறது. அன்று ஜனநாயம் சம்பந்தமான பிரச்சினையாக இருந்த குமார் குணரத்தினத்தின் அரசியல் தொடர்பிலான பிரச்சினை, இன்று அதனை, ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அவர்கள் காணாதது ஏன்? கண்டும் காணாமல் இருப்பதும் ஏன்?

அரசியலில் ஈடுபட முடியாக காரணத்தினால் நாட்டில் வாழ முடியாத நிலைமை உருவாகும்போது, உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உபயோகித்த வேறு அடையாளங்களை காரணம் காட்டி நாட்டிலிருந்து வெளியேற்றச் செய்யும் முயற்சி எந்த ஜனநாயகத்தை சேர்ந்தது எனக் கேட்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய கேலிக்கூத்தான விடயம் என்னவெனில், அரசியல் காரணங்களுக்காக உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்புமாறு ஊடகங்களின் வாயிலாக பகிரங்க அழைப்புவிடும் அதேநேரம், அவ்வாறு நாடு திரும்பிய என்னை நாட்டிலிருந்து விரட்ட சட்டப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கும் விகடமாகும். நாங்கள் போராடிக் கொண்டிருப்பது உயிரை பாதுகாக்கும் நோக்கில் வேறு அடையாளததை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிடமிருந்து பெற்ற பிரஜவுரிமையை ரத்துச் செய்து, பிறந்து வளர்ந்து கல்வி கற்ற மண்ணில் வாழவும், அரசியல் செய்யவுமான உரிமைய பெற்றுக் கொள்வதற்கேயன்றி, இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கல்ல.

அவுஸ்திரேலிய சட்டத்தின்படி அதன் குடியுரிமையை நீக்கிக் கொள்வதாயின், இலங்கையில் குடியுரிமை வழங்க வேண்டும். அல்லது குடியுரிமை வழங்குவதாக அரசாங்கத்தின் சான்றிதழை வழங்க வேண்டும். அவ்வாறான சான்றிதழ் இல்லாமல் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்தவொரு குடிமகனினதும் குடியுரிமையை நீக்கமாட்டாது.

குடியுரிமை வழங்குவதாகவோ அல்லது வழங்க விருப்பதாகவோ குறிப்பிட்டு உத்தியோக ரீதியான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இலங்கை குடியுரிமை சட்டத்தின்படி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடமே உள்ளது. அதன்படி தற்போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக உள்ள ஜோன் அமரதுங்கவிடம் இது சம்பந்தமான விண்ணப்பத்தை சமர்ப்பித்த போதிலும், அது குறித்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் நெருங்கிய நண்பரான சிங்கப்பூர் பிரஜை அர்ஜுன் மகேந்திரன் என்பவருக்கு ஒரே நாளில் குடியுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளிவந்தன.

ராஜபக்ஷ ஆட்சியில் அநீதியிழைக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சர்த் பொன்சேகா போன்றவர்களின் உரிமைகள் மீண்டும் உறுதி செய்யப்படுவதற்கு அவசர அரசியல் தீர்மானங்கள் எடுத்ததைப் போன்று, சிறைச்சாலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தில்ருக்ஷான், நிமலரூபன் போன்ற தடுப்புக்காவல் கைதிகளுக்கும், தண்ணீர் கேட்டு போராடிய காரணத்தால் ரத்துபஸ்வல பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், கட்டுநாயகவில் படுகொலை செய்யப்பட்ட ரொஷான் சானக போன்ற தொழிலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து அவர்களுக்கு நீதி வழங்குவதோடு, லலித் - குகன் உட்பட காணாமல்போனவர்கள் சம்பந்தமான உண்மையான தகவல்களை மக்களுக்க வெளியிடுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.

பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினையை தவிர்த்து குறிப்பிட்ட சிலரின் பிரச்சினைகளை மட்டும் ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை எனக் கொண்டு தீர்வை தேடுவது ஜனநாயகமாக இருக்காது என்பதை வலியுறுத்துகிறோம்.

தற்போதை ரணில்-மைத்திரி அரசாங்கம் விரும்பும் அரசியலை செய்பவர்களுக்கு அனைத்து உரிமைகளை வழங்குவதும், அதற்கு மாற்றமான அரசியலை செய்பவர்களை சிறைக் கூடஙகளுக்குள் தள்ளுவதும் ராஜபக்ஷ கொள்கையேயன்றி வேறொன்றுமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பெரும்பாலான மக்களின் பொருளாதார சுதந்திரத்தையும், உண்மையான ஜனநாயகத்தையும் பெற்றுக் கொள்வதற்காக அரசியலில் ஈடுபடுபவர்களின் உரிமையை பறிக்க இடமளித்துவிட்டு வாய்மூடியிருக்க மக்கள் தயாராக இல்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமே மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வை பெற முடியும். அதற்காக முன்வருமாரு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடமும் அழைப்பு விடுக்கிறோம்.

குமார் குணரத்தினம்

அரசியல் சபை உறுப்பினர்

முன்னிலை சோஷலிஸக் கட்சி