Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே!

நாம், கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலை நிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.

மாத்திரமல்ல, அரசியல கைதிகள் சம்பந்தமான பிரச்சினை ஜனநாயக விரோதத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. இது சம்பந்தமாக எழுச்சிபெற்ற சமூகத்தின் எதிர்ப்பு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது.

முந்தைய ஜனநாயக விரோத ஆட்சியை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த ஆட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது மேற்படி செயற்பாடுகளை சமூகத்திலிருந்து துடைத்தெறிவதும், அந்த ஜனநாயக விரோத ஆட்சியினால் அநீதியிழைக்கப்பட்ட, பாரபட்சம் காட்டப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதையுமேயாகும். அதனால்தான, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது. அதேபோன்று, கடந்த காலங்களில் நடந்த காணமலாக்கல்கள மற்றும் கடத்தல்களுடன் சம்பந்தப்பட்ட வெள்ளை வேன் கலாச்சாரத்தையும், உத்தியோகபற்றற்ற இராணுவ செயற்பாடுகள் சம்பந்தமாக தொடர்புடைய நபர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். கடத்தப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

2012 ஏப்ரல் மாதம் 07ம் திகதி குமார் குணரத்தினம் மற்றும் திமுது ஆடிகல ஆகியோர் கடத்தப்பட்டமையும், அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமையும் முந்தைய ராஜபக்ஷ ஆட்சில் முன்னிலை சோஷலிஸக் கட்சி முகம் கொடுத்த பாரதூரமான அடக்குமுறை அனுவங்களாகும். லலித் மற்றும் குகன் சம்பந்தமாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காததோடு, குமார் குணரத்தினம் கடத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடந்த ஜனநாயகத்திற்கு முரணான பயங்கரவாத செயற்பாடுகளின் முன்னால் அவருக்கிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் வெளி நாட்டில் இருந்து அரசியலில் ஈடுபட நேர்ந்தது. அவர் கடத்தப்பட்மையினால் இது ஊர்ஜிதமாகியது.

இப்படியான அனுபவங்களுக்கு முகம் கொடுத்த மேலும் பலர் விருப்பமின்றியேனும் நாட்டிலிருந்து வெளியேறினர். அவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் உயிர் பிழைப்பதற்காக நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட அநேகமானோர் நாட்டுக்கு திரும்ப எதிர்பார்த்துள்ளனர்.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் நாட்டுக்கு திரும்பி அரசியல் நடவடிக்கைகளில ஈடுபடும் உரிமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனை உறுதி செய்வது இன்றைய அரசாங்கத்தின் மீதுள்ள கடமையாகுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

குமார் குணரத்தினம் அவர்களும் அந்த அடிப்படையில் நாட்டில் தங்கியிருக்கவும், தனது அரசியல் கருத்துக்களை வெளியிடவும், தான் விரும்பிய ஜனநாயக அரசியலில் ஈடுபடவும் உள்ள உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் எப்படியான அரசியல் கருத்தை கொண்டிருந்தாலும், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடும் அவரது ஜனநாயக சுதந்திரத்திற்கு அது தடையாக இருக்கக் கூடாது.

சட்ட ரீதியான செயற்பாட்டை பயன்படுத்தி அவரை கைது செய்து தடுத்து வைப்பதோ, அல்லது அவரை மீண்டும் நாடு கடத்துவது என்பதோ அவரைப்போன்று நாட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைவரினதும் உரிமைகளை பறிப்பதாக அமையும்.. இந்த நிலைமைய தோற்கடிக்க அணிதிரளுமாறு ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சக்திகளிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.

• குமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே !

•  சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் !

•   காணாமலாக்கல்களையும், கடத்தல்களையும் வெளிப்படுத்து !

 

முன்னிலை சோசலிச கட்சி

4/2/2015