Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சியே ஒரே தீர்வு: துமிந்த நாகமுவ

இடதுசாரிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளராகிய முன்னிலை சோசலிச கட்சியினை சேர்ந்த தோழர் துமிந்த நாகமுவ அவர்கள் 10-12-2014 அன்று யாழில் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்: பேடடி கண்டவர்: செல்வி வீ.எஸ்.ரி. டிலீப்

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர் போட்டியிட்டாலும் போட்டி பிரதானமாக மைத்திரிபால சிரிசேனாவுக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கும் இடையே இருக்கின்றது. இரு பிரதான வேட்பாளர்களிலிருந்தும் நீங்கள் எவ்வாறு வேறுபடுகின்றீர்கள்?

பதில்: நாங்கள் இடதுசாரிகள். அதனையே முதன்மைப்படுத்துகின்றோம். பிரதான இரு கட்சிகளும் அடிப்படையில் ஒரே கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றன. அவர்களது கொள்கைகளில் வித்தியாசத்தை காணமுடியாது. ஆனால் நாங்கள் அடிப்படையில் வேறு மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோம். சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையே முதன்மைப்படுத்துகின்றோம்.

இது எமது போராட்டத்தின் ஆரம்பம். இடதுசாரிகளை முன்னிலைப்படுத்தி மாற்றம் ஒன்றுக்காகப் போராட ஆரம்பித்திருக்கின்றோம். மாற்றத்துக்கான இந்த ஆரம்பம் படிப்படியான வெற்றிகளை எங்களுக்குப் பெற்றுத்தரும்.

கேள்வி: இதுவரை இடதுசாரிகளினால் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியவில்லையே?

பதில்: அரசைப் பொறுத்தவரை மக்களை அது அச்சுறுத்தி வைத்திருக்கின்றது. தனது இராணுவம், பொலீஸ் தரப்புக்களினூடாக மக்களை அச்சுறுத்தி தன்பக்கம் வைத்திருக்கின்றது. அடுத்து இனவாத, மதவாத கோசங்களினால் மக்களைத் திசைதிருப்பி தமது பக்கத்தில் அவர்கள் வைத்திருக்கின்றார்கள்.

இதனை மீறியே நாம் மாற்றுக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதனாலேயே இதுவரை எம்மால் தேர்தல்களை வெற்றி கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால் நாம் எமது மாற்றத்துக்கான ஆரம்பத்தை தொடங்கியிருக்கின்றோம். இருப்பினும் மாற்றத்துக்குரிய பயன் கிடைக்கும். ஆனால் உடனடியாக அது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

கேள்வி: நீங்களும் இடதுசாரிகள் என்கின்றீர்கள். அரசில் இருக்கும் அமைச்சர்களான வாசுதேவா, டியூ குணசேகர, திஸ்ஸவிதாரன போன்றவர்களும் இடதுசாரிகள் என்கின்றார்கள். அரசிலிருந்து கொண்டிருக்கும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். யார்தான் இடதுசாரிகள்?

பதில்: மேடையில் பேசும் பேச்சக்களை மாத்திரம் வைத்து எடைபோடக்கூடாது. அவர்கள் நடைமுறையில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதைப் பாருங்கள். நாங்கள் அவர்களிடமிருந்து எந்த இடத்தில் வேறுபடுகின்றோம் என்பதைப் பாருங்கள். இதன் மூலம் அவர்களை நீங்கள் இடதுசாரித் தலைவர்களா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

மேலும் அவர்கள் என்ன காரணத்துக்காக ஒருவரை ஆதரித்து நிற்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கின்றது என்பதையும் பார்க்க வேண்டும். யார் சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுகின்றார்கள் என்பதையும் நோக்கினால், இடதுசாரிகளாக இப்போதும் இருப்பவர்கள் யார் என்பது தெரியவரும்.

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உங்களின் கொள்கை என்ன?

பதில்: சாதாரண மக்களின் பிரச்சினைதான் எங்களின் கொள்கை. நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஒருவரும் இல்லை. ஏன் பொதுமக்களே தமது பிரச்சினைகளை கதைப்பதற்கு பயப்படுகின்றார்கள். அந்த மக்களைப் பற்றி கதைக்க வேண்டும். அதைத்தான் நாம் எமது கொள்கை நிலைப்பாடாக கொண்டுள்ளோம்.

மகிந்தாவும் மைத்திரியும் தம்மை மக்களின் மீட்பர்களாக, இரட்சகர்களாக காட்டிக் கொண்டுள்ளனர். ஆனாலும் மக்களின் இரட்சகர்கள் மக்களே தான். அதைத்தான் நாங்கள் சொல்கின்றோம். மக்களின் மீட்பர்களாக மக்களே இருக்க முடியும். அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நாம் இருக்க முடியுமே ஒழிய அவர்களின் மீட்பர்கள் என்று எம்மை சொல்ல முடியாது.

மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக அணிதிரள வேண்டும். மக்கள் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். தங்கள் விடிவுக்காக அணிதிரளும் மக்களை சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் ஒரே வழி காட்டியாகவே நாம் இருக்க முடியும். அதைத்தான் எமது கொள்கையாக முன்வைத்து செயற்படுகின்றோம்.

கேள்வி: தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வாக நீங்கள் எதனை முன் வைக்கின்றீர்கள்?

பதில்: இதற்கு நேரடியாக குறுகிய விளக்கத்துடன் பதில் சொல்ல முடியாது. இது எமது நாட்டில் புரையோடிப்போன விடயம். அதற்கு முழுமையான பதிலை வழங்குகின்றேன்.

தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு இங்கு இன்னமும் பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. வடக்கில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். காணாமல் போனவர்களுக்கு அரசு இன்னமும் பதில் சொல்லவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த நிலத்துக்கு திரும்பவில்லை. அவர்களின் காணிகளை ராணுவம் எடுத்து ஹோட்டல்கள் கட்டியிருக்கின்றது. விவசாயம் செய்கின்றது. போதாக்குறைக்கு சம்பூரில் தமிழ் மக்களின் காணியை இந்தியாவிற்கு தாரை வார்த்திருக்கின்றனர்.

மொழி தொடர்பில் சமத்துவம் பேணப்படவில்லை. அரசகரும மொழி சிங்களத்துடன் தமிழும் என்றே தான் பார்க்கப்படுகின்றது. அரச முதலாளித்துவ தரப்புக்கள் இன்னமும் இனவாதத்தையே கிளறிக் கொண்டிருக்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் முஸலீம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன.

இவர்கள் ஏன் இன்னமும் இனவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பதையும் நோக்க வேண்டும். சிறு வியாபாரிகளினால் மொத்த வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணுகின்றார்கள். அதாவது தமிழ் - முஸ்லீம் என்ற சிறு வியாபாரிகளினால் தாம் பாதிக்கப்படுவதாக சிங்கள வியாபாரிகள் எண்ணுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக அமைந்தது 1983ம் ஆண்டு கலவரம். கலவரத்தின் போது தமிழ் - முஸ்லீம் மக்களின் எத்தனை வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கினார்கள். இதனையே சாட்டாக வைத்து தமக்கான பிரித்தாளும் தந்திரத்தை அரசுகள் கடைப்பிடிக்கின்றன.

தமிழ் - முஸ்லீம் - சிங்களவர்கள் என தனித்தனியே பிரித்து வைத்திருப்பதன் மூலம் தம்மால் இலகுவாக ஆட்சி செய்ய முடியும் என எண்ணுகிறார்கள். அதனாலேயே இனவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்களவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினையை பற்றி சிங்களவர்கள் சிந்திக்கவில்லை. அவர்களுக்கான மிகப் பெரிய பிரச்சினையான இதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக தமிழ், முஸ்லீம் மக்களுடனான இனவாதப் பிரச்சினையைப் பற்றி பேசுகின்றனர்.

பிரச்சினைக்கான மூலாதாரத்தை இனங்கண்டு கொள்ள வேண்டும். இங்குள்ள இனப்பிரச்சினையை தீர்க்காமல் விட்டதன் காரணமாகவே வெளிநாடுகள் தலையிடுகின்றன. இதனை சிங்கள மக்களிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் -முஸ்லீம் மக்களிற்கு பிரச்சினை இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதே போன்றே ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிற்கும் பிரச்சினை இருக்கின்றது. இந்த மூன்று தரப்பும் ஒன்றுபட்டு போராட்டம் நடத்த வேண்டும். தமிழ் - முஸ்லீம் மக்கள் - ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுடன் நம்பி இணைந்து போராட வேண்டும். இந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்த முனைகின்றோம். இவ்வாறு ஒன்றிணைந்து போராடினால் மாற்றம் என்பது நிச்சயம் கிடைக்கும்.

லலித், குகன் இவர்களை தமிழ் மக்கள் நிச்சயம் மறந்திருக்க முடியாது. காணாமற்போனோருக்காக குரல் கொடுத்த இவர்கள் இன்று காணாமற் போயுள்ளார்கள். இவர்களை எடுத்து நோக்குங்கள் தனிச் சிங்கள மக்கள் வாழ்கின்ற பகுதியில் பிறந்த தமிழ் இளைஞர்தான் லலித். தமிழ் மக்கள் வாழும் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் குகன். இவர்கள் இருவரும் இணைந்து எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இந்த உதாரணத்திலிருந்து யோசியுங்கள்.

பாதிக்கப்பட்ட சிங்கள மக்களில் நம்பிக்கை வைத்து தமிழ் பேசும் மக்கள் போராட முன்வர வேண்டும். இந்த சக்திகள் ஒன்றிணைவதன் ஊடாகவே இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போது தான் தீர்வுக்கான வழி திறக்கும். இந்த இனவாதத்தை தோற்க்கடிக்க மேற்சொன்ன வழியே சரியானது.

இந்த மாற்றம் தெற்கில் ஏற்க்கனவே நிகழ ஆரம்பித்துள்ளது. வடக்கை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவன் மீது சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உடனேயே தமிழ் பேசும் மாணவர்களுடன் இணைந்து சிங்கள மாணவர்களும் போராட்டம் நடத்தினர். இந்த மாற்றம் இன்னமும் தொடர வேண்டும்.

சோசலிச முறைக்குரிய சுயாட்சி தான் இங்கு தீர்வாக இருக்க முடியும். இந்த வினைத்திறனான தீர்வையே நாங்கள் முன்வைக்கின்றோம். இன்று தமிழ் - முஸ்லீம் அரசியல் தலைமைகள் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சரியான முறையில் சிந்திக்கவில்லை.

கேள்வி: போர்க்குற்றம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ஒரு தரப்பு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னா நடந்த குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கின்றது. மற்றொரு தரப்பு நந்திக்கடலில் நடந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சொல்கின்றது. நாங்கள் சொல்கின்றோம் போர் முழுவதையும் விசாரிக்க வேண்டும் என்று.

போரில் சிங்கள, தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனையோ அப்பாவிகள் எதிலிகளாக்கப்பட்டார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. நீண்ட நெடிய போர் தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எந்தெந்த காலங்களில் எந்தெந்த சம்பவங்கள் நடந்தன என்று ஆராயப்பட்டு அது தொடர்பில் அந்தந்த ஆட்சியாளர்கள் பதில் பொறுப்பு கூற வேண்டும்.

நன்றி உதயன் பத்திரிக்கை

http://euthayan.com/view.php?urldel=backend/html/2014-12-21/07/Untitled-1.gif