Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)

நேற்று லண்டனில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் பகிரங்க கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்ணம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


தோழர் குமார் "இன்று என்ன செய்யப்பட வேண்டும்" என்னும் தலைப்பில் உரையாற்றியதுடன் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் இன ஐக்கியத்தையும் வலியுறுத்தினார். கூட்டத்தின் இறுதியில் கேள்வி நேரத்தில் இரண்டும் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

 1) முன்னிலை சோசலிச கட்சி மற்றைய இலங்கை கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் பங்குபற்றுமா?

2) தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுக்கின்றீர்களா?


இதில் முதலாவது கேள்விக்கு தாம் ஒருபோதும் ஏனைய பாராளுமன்ற அரசியல் கட்சிகளுடன் இணையும் சாத்தியம்  கிடையாது என்றும் தமது பிரதான நோக்கம் தேர்தலில் பங்கு பற்றி பாராளுமன்றம் செல்வதல்ல, இந்த சமூக அமைப்பினை மாற்றுவதே என்று தோழர் குமார் அவர்களால் பதில் அளிக்கப்பட்டது.


இரண்டாவது கேள்விக்கு தமிழ் மக்களின் உரிமைகளை தமது அமைப்பு மறுக்கவில்லை என்றும், மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விவாதம் தமது அமைப்பினுள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், தாம் தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றி பேசும் குழுக்களுடனும் தனிநபர்களுடனும் ஒரு ஐக்கிய முன்னணி அமைத்துள்ளதுடன்,  இவர்களுடன் சேர்ந்து சமஉரிமை இயக்கத்தில் வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர்களின் சுயநிர்ணயத்துக்கான வழிமுறையையும் ஒரு நேச முரண்பாடாகவே கவனத்தில் கொள்வதாகவும், இதற்கான தீர்வு என்பது நடைமுறை வேலையினுடாகவே கண்டறியப்பட முடிவதுடன், முரண்பாடும் தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டார்.


முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாடுகள் உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடையமாகவே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சுயநிர்ணயம் என்ற ஒரு சொல் பதத்திற்கு அப்பால் சிறுபான்மை இன மக்களின் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொண்டு தீர்விற்க்கான பொறிமுறைகளை காண விளைவதுடன், இன்று இலங்கையில் நிகழும் அரச பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராகவும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு இதுவாகத் தான் உள்ளது. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட குரல் கொடுக்காத தமிழ் மக்களின் பல விடையங்களுக்கு இவர்கள் தான் குரல் கொடுக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-சீலன் 8/10/12