Mon09232019

Last updateSat, 29 Jun 2019 5am

ரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி!

நேற்று யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நெடுஞ்சாலை அமைச்சருடன் வடமாகாணத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும், மீள்குடியேற்றத்திற்காக வட மாகாணத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் பத்திரிகை 5வது இதழில் (செப்டம்பர் 2013) “நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்” எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை நாம் வெளியிட்டிருந்தோம். அப்போது மகிந்தா ஆட்சியில் இருந்த காலம். இலங்கை முழுவதும் அதிவேக வீதிகள் அமைக்கப்படவுள்ள திட்டம் குறித்தும், நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்க இந்த அதிவேக பாதைகள் இயற்கையை நாசம் செய்து அமைக்கப்பட இருப்பதனை தெளிவாக விபரித்து இருந்தது. இந்த அதிவேக பாதைகள் அமைக்கப்படுவதன் நோக்கம் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுகளுக்கு அல்ல. நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும் பல்தேசிய கம்பனிகள் மற்றும் பெரும் முதலாளிகள் கொள்ளையிடுவதற்கே.

இந்தியா வீட்டுத்திட்டம் அமைப்பதன் மூலம் ஏற்கனவே அகதி முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள குடியமர்த்தாது, அபகரித்த காணிகளை அந்நிய பல்தேசிய கம்பனிகளிற்கு நிரந்தரமாக கையளிக்க முடியும். பலாலி, தையிட்டி உட்பட யுத்தத்தின் பின்னர் அபகரிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்களின் வதிவிடங்கள் மற்றும் விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரில் இந்தியா எதிர்ப்புகள் இன்றி நிரந்தரமாக கையகப்படுத்த முடியும். 

மேலும் அதிவேக வீதிகள் அமைக்கும் போது பொது மக்களின் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக பறித்தெடுக்கப்படும். அந்த மக்களை இந்த வீட்டு திட்டத்திற்குள் இணைப்பதன் மூலம் அபகரிக்கப்பட்ட மற்றும் மேலும் அபகரிக்கப்படவுள்ள நிலங்களிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை இலகுவாக நீர்ந்து போக செய்ய முடியும்.  

வீட்டுத் திட்டம் என்பது சிறு துண்டு நிலத்தில் ஒரு அறையுடன் கொண்ட சிறிய வீடுளை தொடராக அமைத்து கொடுப்பதே. இதன் மூலம் மக்களை விவசாய நிலங்களில் இருந்து அந்நியப்படுத்தவும், குறைந்த சம்பளத்திற்கு கூலிகளாகவும் ஆக்குவதே ரணில் மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கம்.

மேலும் இந்த அதிவேக பாதைகளை அமைக்கப்போவது இந்திய கம்பனிகளே. இதற்க்காக இந்தியாவில் இருந்து தொழிலாளர்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளனர். மோடி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பிரதான நோக்கம் ETCA ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்க்கான ஆரம்ப வேலைகளை முன்னெடுக்கவே என அறிய முடிகின்றது. இந்த ஒப்பந்தம் இந்திய தொழிலாளர்கள் இலங்கையில் வந்து எத்தகைய தடைகளும் இன்றி தொழில் புரிய வழி திறந்துவிடும்.

இந்த வகையில் ரணிலின் வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி என்பது வட மாகாணத்திற்கு பொருளாதார ரீதியிலோ அன்றி வேலை வாய்ப்பிலோ எந்த நன்மையையும் வழங்கப்போவதில்லை. உண்மையில் இந்த திட்டமானது, பல்தேசிய கம்பனிகள் மற்றும் பெரும் முதலாளிகளின் நலன்களை பேணும் ஒரு பெரும் மோசடி நடவடிக்கையின் ஆரம்பமாகும்.