Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

விடுதலை செய்யப்பட்ட தோழி திமுது ஆடிக்கல -பத்திரிகையாளர் சந்திப்பு

விடுதலை செய்யப்பட்ட தோழி திமுது ஆடிக்கல உடனான இன்று(10 சித்தரை 2012 ) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்த பேட்டி    

முன்னிலை சோஸலிச கட்சியின் உறுப்பினரான திமுது ஆட்டிகல கடந்த 06 ம் திகதி கடத்தப்பட்டிருந்தார். 04 நாட்களாக எவ்வித தகவல்களும் இல்லாமல் இருந்த போதிலும் இன்று காலை யாரும் எதிர்பார்த்திராத வேளை மாதிவெல மு.சோ.கட்சியின் அலுவலகம் திரும்பினார்.

முன்னிலை சோஷலிசக் கட்சி இன்று (10 சித்தரை 2012 )  ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டார்.

அவருடைய உரையின் தமிழ் மொழியாக்கம் கீழே.


"6ம் திகதி மாலை கட்சியின் வேலைகளில்   தோழர்களுடன்  ஈடுபட்டுவிட்டு,  பொல்வத்தை பகுதியில் கட்சி வாகனத்தில் இருந்து இறங்கி, பஸ்ஸில் வீடு செல்ல தயாரானேன்.  கொடகமயில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளை வானில் வந்தோர் கண் வாயை கட்டி வானுக்குள் போட்டனர். வானில் ஏற்றியது தொடக்கம் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர். "ஆங்கில ஆசிரியை தானே?" .. "மக்கள் போராட்ட இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்டுள்ளீர்கள் " எனக்கூறி அது குறித்து கேள்வி எழுப்பினர்.


வானில் வைத்து நான் கதைக்காமல் இருந்ததால் என்னை ஒரு முறை தாக்கினர். அதன் பின்னர் தாக்கவில்லை. தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர். என்னை தூர இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கருதினேன். வாகனத்தில் ஆயுதம் இருந்தது. அத்துடன் என்னை கடத்திய வாகனத்தில்  6 பேர் வரை இருந்தார்கள்.


என்னை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அது பாதுகாப்பு(ராணுவம் / போலீஸ் ) தொடர்பான இடம் என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணை கட்டி என்னை தூர இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாடிப்படி ஏற்றி என்னை ஒரு அறையில் அடைத்தனர்.


அதன் பின்  2 மணித்தியாலங்கள் சென்றவுடன்,  யாரோ ஒரு அதிகாரி என்னிடம் கேள்விகளை கேட்டார். மக்கள் போராட்ட இயக்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்பினர். எனது பையில் இருந்து வங்கி  கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேட்டனர். யாருடை பணம் எனவும் வினவினர். ஆயுத போராட்டம் நாங்கள் நடதப்ப் போகிறோமா என கேள்வி எழுப்பினர். லலித் மற்றும் குகன் தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் என வினவினர். எம்முடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் பற்றியும் அவர்களின் வீடுகளுக்குச் செல்லும் வழி தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர்.


அதன் பின்னர் மீண்டும் என்னை அறைக்குள் போட்டு பூட்டி வைத்தனர். கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போட்டிருந்தனர். அதன் பின்னர் காலை 5.30 மணியிருக்கும் பறவைகள் சத்தமிடும் ஒலி கேட்டது.அப்போது பொழுது விடிந்து  விட்டதாக   நினைக்கிறேன்.


என்னை கைது செய்து வைத்திருந்த   இடத்துக்குள்  இருந்த  வேறு பகுதிக்கு என்னை  அழைத்து வந்தனர். என்னை அதன் பின்னர் விசாரணை செய்யும் போது தோழர் குமார் அருகில் இருந்தார். குமார தோழரையும்  என்னை வைத்துக் கொண்டு, மாற்றி மாற்றி அவரிடம் ஒன்று என்னிடம் ஒன்று என கேள்வி எழுப்பினர். அதன் போதும் ஆயுக்குழு தொடர்பில் வினவினர். "எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?"   "9ம் திகதி நீங்கள் இல்லாவிட்டால் உங்கள் திட்டம் தோல்வியடைந்து விடுமா?" உங்கள் திட்டப்படி நடக்காமல்   நிறுத்தி விடுவார்களா?" என கேட்டனர்.


9ம் திகதி மாநாட்டில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் விபரங்களை பெயருடன் கோரினர். அரசியல் குழு யார்? கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படுவார்? என வினவினர். இதேபோன்று பல கேள்விகளை இரண்டு மணித்தியாலங்களாக கேட்டனர். மீண்டும் என்னை அறைக்குள் இட்டு பூட்டினர்.


குமார் தோழரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் எம்மை அழைத்துச் சென்ற நாளுக்கு அடுத்த நாள் 7ம் திகதி இரவு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரு மணித்தியாலமான வாகனம் சென்றது. அந்த வாகனத்தில் குமார் தோழர் இருந்தார் என நான் நினைக்கிறேன். அவர்கள் கதைத்துக் கொண்டு வந்ததை வைத்து நான் அதனை புரிந்து கொண்டேன்.


அதுவும் ஒரு முகாம் என நினைக்கிறேன். வீதி ஓரத்தில் மக்கள் நடமாட்ட சத்தம் கேட்டது. அருகில் வீடுகள் இருந்ததை உணர முடிந்தது. அங்குதான் எம்மை இன்று காலை வரை வைத்திருந்தனர். நேற்று இரவு புதிய அதிகாரி ஒருவர் என்னை சந்திக்க வந்தார். குமார் தோழரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவோம். அவருடைய கடவுச்சீட்டில் பிரச்சினை உள்ளது. அவர் அவுஸ்திரேலிய பிரஜை. அதனால் அவரை நாடு கடத்துவோம். அவர் நாடு திரும்பியதும் உங்களை விடுவிக்க முடியும் என்றனர். அவர் அங்கு சென்று நாங்கள் சொல்வது போல் நடந்து கொண்டால் என்னை விடுவிப்பதாக கூறினர். அது தொடர்பில் நான் எதுவும் கூறவில்லை.


எனினும் நேற்றிரவு செல்ல தயாராகுமாறு கூறினர். நான் தயாராகி இருந்த போதும் இரவு செல்லவில்லை என்பதை விளக்கிக் கொண்டேன். அதன் பின் மறுநாள் காலை தயாராகுமாறு கூறினர். பின்னர் மற்றுமொருவர் வந்து என்னிடம் கதைத்தார். குமார் தோழர் அவுஸ்திரேலியாவுக்குச் அனுப்பப்பட்டு  விட்டதால்  என்னை விட்டு விடுதலை செய்வதாக கூறினர். என்னை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வரும்போது "உங்கள் கண் கட்டை அவிழ்ப்போம், திறப்போம். நீங்கள் கண்ணை திறந்து பார்க்க வேண்டாம். வாகன இலக்கத்தை பார்க்க வேண்டாம். பார்த்தாலும் பயனில்லை. எங்களை யார் என அடையாளம் காண முயற்சிக்க வேண்டாம்.
 
எனது கையில் பணம் கொடுத்து இந்த பணத்தை கொண்டு ஆட்டோவில் வீடு செல்லுமாறு கோரினர். எங்கு செல்ல வேண்டும் என கேட்டனர். நான் கட்சி மாதிவெல அலுவலகம் செல்ல வேண்டும் என்றேன். கட்சி அலுவலகத்திற்கு எம்மால் வர முடியாது. அருகில் எங்காவது வீதியில் விடுகிறோம் என்று கூறினர். தலபத்பிட்டி வீதி நடுஹேன பகுதியில் என்னை இறக்கிவிட்டு பின் பக்கம் திரும்ப வைத்து வாகனம் செல்லும்வரை திரும்பிப் பார்க்க வேண்டாம் எனக்கூறி சென்றனர். நான் பார்த்தேன் இலக்கம் சரியாக விலங்கவில்லை. 28 1 என 01 என ஞாபகம் இருக்கிறது. ஆனால் வாகன இலக்கத்தை பார்த்து பயனில்லை என அவர்களே கூறிவிட்டனர். பின்னர் நான் ஆட்டோவில் சற்று முன்னர் அலுவலகம் வந்தேன். இவைதான் நடந்தது.
 
இந்த கடத்தல் அரசுக்கோ, பாதுகாப்பு தரப்பினருக்கோ தொடர்புடையதல்ல என தொடர்ச்சியாக கூற முற்பட்டனர். அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம். அரசுக்கு தேவை நாங்கள் ஆயுதக் குழுவா புலிகளுடன் தொடர்பு உள்ளதா என தெரிந்து கொள்ளவே என நான் அடிக்கடி அவர்களிடம் கூறினேன். அதன்போதெல்லாம் அரசாங்கம் என்று சொல்ல வேண்டாம். அரசுக்கு தொடர்பு இல்லை. நீங்கள் வெளியில் சென்று இதற்கு கோட்டாபயவை தொடர்புபடுத்தி தகவல் வெளியிடுவீர்கள் என எமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தொடர்பில்லை என்று கூறினர். தொடர்ந்தும் அதனை வலிறுத்தினர். அரச அதிகாரம் இல்லாமல் ரி-56 ரக துப்பாக்கிக் கொண்டு இவ்வாறான செயல்களில் உங்களால் ஈடுபட முடியுமா என நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.


தொடர்ந்து வடக்கு விடயம் குறித்தும் லலித், குகன் குறித்தும் அவர்கள் புலிகளுடன் தொடர்பு படவில்லை என நினைக்கிறீர்களா என கேட்டனர். ஒருபொழுதும் இல்லை என நான் கூறினேன். இவ்வாறு தொடர்பு இல்லை என சொல்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டவைகளுக்கு நாம் தெளிவுபடுத்தினோம். நான் வர தயாராகுவதற்கு முன்னர் என்னை சந்தித்த அதிகாரி. அனைத்து விடயங்களும் தெளிவு என்றார். புலிகளுடன் தொடர்பு இல்லை என்பதும் தெளிவு என்றார். எம்மை கைது செய்த பின்னர் கிடைத்த தகவல்களின்படி அதனை தெரிந்து கொண்டதாகக்கூறினர். புலிகளுடன் தொடர்பு, ஆயுத குழுவுடன் தொடர்பு தமிழ் டயஸ்போராக்கள் பணம் வழங்குகிறார்கள் என்ற நினைப்பில் அவர்கள் இருந்தனர். இப்போது அவை இல்லை என அறிந்து கொண்டே விடுவித்தனர். கண்ணை கட்டுவதற்கு முன்னர் நீல நிற உடை அணிந்த இருவர், மற்றையவர்கள் சிவில் உடையில் இருந்தனர். அதன்பின்னர் வந்து இறங்கும்வரை எனக்கு இருட்டாகவே இருந்தது. இராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். சில சமயங்களில் பொலிஸார் உபயோகிக்கும் வசனங்களை பயன்படுத்தினர்."