Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களின் பிரச்சினையை புதிய கொள்கையுடன் அணுகுவோம் - முன்னிலை சோசலிச கட்சி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இலிருந்து பிரிந்து சென்ற அணியினர் தாம் முன்னிலை சோசலிச கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக நேற்று(29.03.12) அறிவித்தனர்.

தேசிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அல்லது மக்களின் இதயத்தை வெல்லக்கூடிய அரசியல் கட்சி எதுவும் இல்லாத காரணத்தினால் தான் புதிய கட்சியை அமைத்ததாக கட்சியின் ஏற்பாட்டாளரான சேனாதீர குணதிலக்க இன்று நடைபெற்ற கட்சியின் முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.

தமிழ் மக்கள் உட்பட சகலருக்கும் ஏற்புடைய புதிய கொள்கையுடன் கூடிய புதிய கட்சியை அமைக்க மிகவும் பொருத்தமான தருணம் இதுவாகும் என குணதிலக்க, மற்றும் புபுடு ஜெயகொட தெரிவித்தனர் .

கட்சியின் முதலாவது மாநாடு ஏப்ரல் 9இல் நடைபெறும். அப்போது கட்சியின் தலைமை மற்றும் வேறு பதவிகள் பற்றி தெரியப்படுத்தப்படும். இந்த கட்சி தேர்தல்கள் திணைக்களத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விரைவில் இது நடக்கும் என அவர் தெரிவித்தார்.

கட்சியின் விஞ்ஞாபனத்தில் ரோகண விஜயவீரவின் கொள்கைகள் சேர்க்கப்படும். ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் ஸ்தம்பித்து போனதால் தாம் புதிய கட்சியை ஆரம்பித்ததாக அவர் கூறினார்.

இன்று போலி அரசியலே நடைபெறுகிறது. நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் சிந்தனை அவசரமாக தேவைப்படுகின்றது. உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியது முக்கிய தேவையாகியுள்ளது.

தமது கருத்துக்களை கூற விரும்பும் மக்களுக்கு ஓர் அரங்கம் தேவையாகவுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அண்மைய அமர்வும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மக்கள் தொடர்பான பிரச்சினைகளே. இவை அரசாங்கம் அல்லது வேறு வெளிக்குழுக்கள் பற்றியவை அல்ல.

இலங்கையில் இருக்கின்ற அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கு கட்சியின் மாநாட்டுக்கான அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமது கட்சி புலம்பெயர்ந்தோருடன் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

தேசிய பிரச்சினைகளை சரியாக கையாளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் கட்சி கூறுகின்றது. அதேவேளை தமிழ் மக்களை பொறுத்த அளவின் அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்த உள்ளடக்கத்தை கொண்ட கட்சி திட்டத்தை முன்வைக்க வேண்டுமென, முன்னிலை சோசலிச கட்சியின் தலைமைக்கு தமிழ் முற்போக்கு சக்திகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலமே தமிழினவாத பிரிவினை சக்திகளையும், சிங்கள பேரினவாத பாசிசத்தையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும் என மேற்படி மக்கள் நலம்சார் சக்திகள் தெரிவித்தனர்.  

--கார்த்திகேசு கலியுகவரதன்  30/03/2012