Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசே, நயவஞ்சக அரசியல் ரீதியான கைதுகளை உடன் நிறுத்து!

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரச்சாரச் செயலரும், செயற்பாட்டாளருமான தோழர் புபுது ஜெயகொடவும் தோழர் சுஜித் குருவித்தவும் இன்று மே 25 ம் திகதி மருதானைப் பொலிசாரினால் அபாண்டமான சதி நோக்கு கொண்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டு, குற்றமாகச் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னராக மே 23 ம் திகதி முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொடவை கைது செய்வதற்கு குடிபோதையில் பொலிஸ்குழுவொன்று முயற்சி செய்திருந்தது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுஜித் குருவிட்ட என்பவரது வீடு ராஜகிரிய, கலபளுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. நேற்றைய முன்தினம் மாலை அந்த வீட்டுக்கு மருதானை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று குடிபோதையில் சென்றுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களான புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட ஏழுபேரை கைது செய்வதற்காக தாங்கள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கையில் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் வைத்திருந்துள்ளனர்.

இதன்போது கைது செய்வதற்கான நீதிமன்ற பிடியாணை அல்லது அதற்கு ஏதுவான பொலிஸ் முறைப்பாடு ஏதேனும் இருந்தால் காட்டுமாறு புபுது ஜாகொட பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவ்வாறான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட பொலிசார், கொழும்பு, பொரளையில் அமைந்திருக்கும் குடிவரவுத்திணைக்கள கண்ணாடிகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டு அவர்கள் மீது பதியப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் கைது செய்வதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில் பொலிசார் வெறும் கையுடன் திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.

இதன்போது புபுது ஜாகொட உள்ளிட்டோரை இன்று மே 25 காலை மருதானை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்கு வருகை தருமாறு பொலிசார் அறிவித்து சென்றிருந்தனர். தம்மைக் கைது செய்ய வந்திருந்த 11 பேரில் ஏழுபேர் பொலிஸ் சீருடையிலும், ஏனைய நான்கு பேர் சிவில் உடையில் குடிபோதையிலும் இருந்ததாக புபுது ஜாகொட நேற்று இதுபற்றி தெரிவித்திருந்தார்.

இன்று மே 25 ம் திகதி புபுது ஜாகொடவும், சுஜித் குருவிட்டவும் மருதானை பொலிஸ் நிலையயத்துக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்த வேளை அவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த காலம் தொட்டே முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மீதான அடக்குமுறைகளை பல்வேறு வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் கட்சியின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் முதலில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சொல்லி நீதிமன்ற தீர்ப்பு என்ற பொய் நாடகம் மூலம் தோழர் குணரத்தினத்தினை சிறையிலடைத்தது. தொடர்ந்து வந்த போராட்டங்களை நசுக்க தனது படையணிகளைப் பாவித்தது.

கட்சி உறுப்பினர்களை புலானய்வுப் பிரிவினர் பின் தொடர்கின்றனர். போராடுகின்ற ஒரே கட்சி என்ற வகையில் அதன் குரல்வளையை நெரிக்கும் பல நடவடிக்கைகளில், ஒரு நடவடிக்கையாக தான் தீட்டி வைத்திருக்கும் சதித்திட்டங்களின் நடவடிக்கைளில் ஒன்றாக தோழர் புபுடு ஜெயகொடவையும், சுஜித் குருவிட்டவையும் இன்று கைது செய்திருக்கின்றது.

நாட்டையும், நாட்டு மக்களையும் கொள்ளையடித்து நாசம் செய்கின்ற இந்த நல்லாட்சி அரசாங்கத்தினது நவதாரளாவாத பொருளாதார கொள்ளைகளை அம்பலப்படுத்தி செய்யப்படுகின்ற போராட்டங்களை பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரேயொரு அரசியல் சக்தியாக இருக்கின்ற முன்னிலை சோஷலிஸக் கட்சியின் இருப்பின் மீது ரணில் மைத்திரி கூட்டுக்கு இருக்கின்ற வெறுப்பு தான் இந்த ஒடுக்குமுறைக்கான உண்மைக் காரணம். கட்சியின் முன்னணித் தோழர்களை குறிவைத்து நடாத்தப்படும் வேட்டையில் தோழர் குமார் குணரத்தினம் அநுராதபுரச் சிறையில். தோழர் புபுது ஜெயகொடவும், தோழர் சுஜித் குருவிட்டவும் இன்று கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

கல்வியை வியாபாரமாக்குவது, அரச நிறுவனங்களை தனியாருக்கும் வெளியாருக்கும் விற்று கொள்ளை கொண்டு போவது, மக்கள் மீது தாங்கொணாத வரிவிதிப்பு, நவதாரளாவாத பொருளாதாரத்துக்கு நாட்டையே விற்பது, விவசாயிகள், மீன்பிடி தொழிலாளர்களிடமிருந்து மானியங்களைப் பிடுங்குவது, நாட்டின் சட்டதிட்டங்களை நவதாராள முதலீட்டு முதலைகளுக்கு ஏற்றவாறு மாற்றி உள்நாட்டில் கொள்ளைச் சுரண்டலுக்கு ஏதுவாக மக்களை ஒடுக்கும் பணியே இந்த ரணில் மைத்திரி அரசின் கைங்கரியமாகும்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள், மாணவர் போராட்டங்களை முடக்க மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளது இதற்;காக போலி குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீதும் சுமத்தும் நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகிந்தா அலிபாபாவையும் அவரது திருடர்களையும் துரத்தி இந்த நாட்டிற்கு நல்லாட்சி வழங்குவதாக உறுதி அளித்து தேர்தலை வென்ற நல்லாட்சி அரசு, அலிபாபாவின் திருடர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் இதுவும் அலிபாபாவின் ஆட்சிதான் என்பது வெளிப்படையாகி விட்டது.

நவதாராள பொருளாதாரம் என்ற பெயரில் மீண்டும் அந்நியர்கள் இலங்கை மக்களின் உழைப்பு - சேமிப்பு முதல் நாட்டின் வளங்களை கொள்ளையிட தாராளமாக கதவை அகல திறந்து விட்டுள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம். நவதாராளவாத பொருளாதாரத்தை முன்தள்ளும் மேற்குலகம் இலங்கையில் தமது திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், போலி இடதுசாரிய கட்சிகள் என அனைத்தையும் ஓரணிக்குள் சலுகைகள், பெரும் பண கொடுப்புக்கள், மிரட்டல்கள் மூலமாக கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அரசு பல்தேசிய கம்பனிகள், நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களிற்கு சார்பாக பல சட்டங்கள், திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனை மக்கள் சார்பாக நின்று எதிர்க்க வேண்டிய எதிர்கட்சி பாராளுமனறத்தில் தூங்கி வழிகின்றது.

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத போதும் முன்னிலை சோசலிசக் கட்சியும் மற்றும் சில இடதுசாரி கட்சிகளும் தான் மக்கள் சார்பாக முன்னின்று இந்த அநியாயங்களிற்க்காக குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றன.

நாடு முழுவதும் நடைபெறுகின்ற நிலப்பறிப்புக்கு எதிராகவும்; அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்; மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளிற்காகவும்; இலவச மருத்துவம் - கல்வி உரிமைக்காகவும்; அரசு கொண்டு வரும் மக்கள் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும்; மக்களை அணிதிரட்டி, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

முன்னிலை சோசலிச கட்சியின் மக்கள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கைகள் மைத்திரி - ரணில் அரசின் நாட்டை கொள்ளையிடும் செயற்பாட்டிற்கு இடையூறாக இருப்பதனால்; தலைவர்களை கைது செய்வதன் மூலம் போராட்டங்களை நிறுத்தி, நவதாராளவாத கொள்ளையினை தொடர அந்நிய ஏகாதிபத்தியங்களிற்கு இந்த நாட்டை தங்கு தடையின்றி வழி திறந்து விடலாம் என்னும் நோக்கில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நவதாராளவாத மேற்குலக கைக்கூலி நயவஞ்சக அரசே,

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
அரசே நயவஞ்சக அரசியல் ரீதியான கைதுகளை உடன் நிறுத்து!!
தோழர் குமார் குணரத்தினத்தை விடுதலை செய்!
முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மீதான உனது நயவஞ்சக அடக்குமுறைகளை நிறுத்து!
தோழர் புபுது ஜெயகொடவையும் சுஜித் குருவித்தவையும் விடுதலை செய்!!
நாட்டினை நவதாராளவாதத்துக்குள் தள்ளி வீழ்த்துவதை நிறுத்து!!
 

- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

25-05-2016