Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவது பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகாது

நம் நாட்டில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகிறது. 30 வருட காலம் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்தம் இதற்கு முக்கிய காரணம். இப்பிரச்சினைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற கணித விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் குறித்த ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காது.  பிரச்சினையை மேலும் உக்கிரமடைய செய்யும் நடவடிக்கையாகும். இப் பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான விஞ்ஞானபூர்வமான தீர்வுகளை முன்வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காமை வருந்த தக்கது. இவ்வாறு இந்திய ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எமது நாட்டின் உயர்தர கணித, விஞ்ஞான கலைத்திட்டமானது இந்திய கலைத்திட்டத்திலிருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ஆசிரியர்கள் எமது நாட்டின் உயர்தர கணித விஞ்ஞான கலைத்திட்டத்திற்கமைய கற்பித்தலை மேற்கொள்வதில் பல குழப்ப நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிக அதிகமானதாகும். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படுவதாக கூறப்படும் ஆசிரியர்கள் எமது நாட்டில் உள்ள குறைந்த சம்பளத்திற்கு சேவையாற்ற வருவார்களா? அல்லது அவர்களுக்கு நம் நாட்டு ஆசிரியர்களை விட அதிகமான சம்பளம் வழங்கப்படுமா? நம் நாட்டு ஆசிரியர்களை விட அதிகமான சம்பளம் வழங்கப்படுமாயின் அது நம் நாட்டு ஆசிரியர்களுக்கும் இந்திய ஆசிரியர்களுக்கிடையேயான சம்பள முரண்பாட்டையும், அதனூடாக ஆசிரியர்களிடையே முரண்பாடுகளையும் உருவாக்ககூடியதாகும். இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

கல்வி அமைச்சு தமிழ் மொழிமூலம் கணித, விஞ்ஞான ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டப்போது குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. எனினும் அதற்கான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பிரதேசத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலை வழங்கும்படி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணிதம், விஞ்ஞான பட்டதாரிகளும் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில், தற்போது தமிழ் மொழிமூலம் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரிய வெற்றிடத்திற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது அறியப்படல் வேண்டும். கல்வி அமைச்சு அதனை முதலில் செய்ய வேண்டும். எனவே, கணிதம், விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ் மொழிமூல கணித விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சு உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து குறுங்கால மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும். அந்த வகையில் மேற்குறிப்பிட்டதற்கு மேலாக குறுங்கால தீர்வாக கணித விஞ்ஞான பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை உயர் தர கணித விஞ்ஞான பாடங்களை கற்பிக்கக் கூடிய கணித விஞ்ஞான துறைகளில் பட்டப் படிப்பை திறந்த பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதிகளை அதாவது விடுமுறையுடன் கற்கை கட்டணத்திற்கான மானியங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அல்லது உயர் தர கணித விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கான விசேட பயிற்சிகளை கல்வி அமைச்சு வழங்கலாம். 

கணித, விஞ்ஞான பட்டதாரிகள் ஆசிரியர் தொழிலுக்கு விண்ண்பிக்காமைக்கான காரணம் அவர்கள் வேறு துறைகளில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய நிலை இருக்கின்றமையினால் ஆகும். எனவே, நீண்ட கால தீர்வாக ஆசிரிய சேவையை ஒரு துறைசார்ந்த சேவையாக (Professional) ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற அவர்களின் சம்பளத்தை உயர்த்துதல் வேண்டும். அதேபோன்று கணித, விஞ்ஞான துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். அத்தோடு, கணித, விஞ்ஞான துறைகளில் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை எதிர்கால தேவைகளையும் கருத்திற் கொண்டு, கல்வியற்கல்லூரிகளுக்கு சேர்க்கப்படும் கணித, விஞ்ஞான ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்கள் உயர்தரத்திற்கு கற்பிக்கும் திறனை வழங்கக்கூடிய கலைத்திட்டத்தினூடாக பயிற்சி வழங்குதல் அவசியமாகும். 

இந்திய அரசாங்கம் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் கல்வி உரிமையில் உண்மையில் அக்கறையாக இருப்பார்கள் எனில், அவர்கள் செய்ய வேண்டியது அம்மக்களில் பட்டப்படிப்பு பெற தகுதியுடையவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பெற அனுமதிக்க வேண்டும். அதனையே கல்வி அமைச்சு கோர வேண்டும்.  

இவற்றை விடுத்து தீர்வு என்ற போர்வையில் எமது நாட்டில் கல்வி கற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கும் கல்வி அமைச்சின் நடவடிக்கை நிறுத்தப்படல் வேண்டும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக ஒட்டு வேலைகளை செய்து பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவதை கல்வி இராஜாங்க அமைச்சர் நிறுத்த வேண்டும் என்றார். அத்தோடு மலையக மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள நினைக்கும் மன நிலையில் இருந்து விடுபட்டு மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய முழு பொறுப்பும் இலங்கை அரசிற்கு உரியது என்ற அடிப்படையில் இருந்து அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

-மக்கள் ஆசிரியர் சங்கம்