Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வி விற்பனை பண்டமல்ல!

குறிப்பு:  பொருளாதார அபிவிருத்தி அடையாத வறிய நாடுகள் உலக நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனையும் அதற்கான கந்து வட்டியையும் கட்ட முடியாது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிடம் கடனை திரும்ப பெறும் முகமாக பல பரிந்துரைகளை அமுலாக்கும்படி நிதி நிறுவனங்கள் நெருக்குதலை கொடுத்த வண்ணமுள்ளன. அதாவது சமுக நலத் திட்டங்களிற்கான உதவியை குறைத்தல், ஓய்வூதிய வயதை அதிகரித்தல், சுகாதாரம் மற்றும் கல்விக்கான  நிதி ஒதுக்கீட்டை  குறைத்தல் என பலவகை நெருக்குதல்கள். உலக நிதி நிறுவனங்களின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில்  இலவச கல்வியினை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை மக்களிற்கு விழிப்பூட்டும் முகமாக ஜனாதிபதி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு நாடு முழுவதும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனம் பொருந்திய ஜனாதிபதி அவர்களுக்கு!

பாடசாலைகளில் கல்விக்கட்டண அறவீட்டினை நிறுத்துதற்கான விண்ணப்பம்

சமூகமொன்றின் இருப்புக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு தனிநபரிடத்தில் ஆளுமையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது ஒரு சமுதாயத்தின் உணர்வு மட்டத்தினையும் உருவாக்கியளிப்பதில் தரமான கல்வி முக்கியமானதொன்றாகும். நாளைய தலைமுறைக்கு நாகரீகத்தினையும் மற்றும் அதனது எல்லா வளங்களையும் வளர்ந்த தலைமுறை கையளிப்பது என்பது கல்வி ஊடாகவே. ஆகவே, ஒரு ஜனநாயகமும், நீதியும் நியாயமுமான சமுதாயத்தை கட்டியமைக்க வேண்டுமாகில். கல்வியின் ஊடாக அனைத்துக் குழந்தைகளின் அறிவு, உளப்பாங்கு, மற்றும் திறன்களை வளர்த்தெடுப்பதற்கு முறையான கவனம் செலுத்தியாக வேண்டும்.

வருங்காலச் சந்ததியினரை வடிவமைத்துத் தருகின்ற கல்வி என்பது நீதியானதாயும் நியாயமானதாயும் ஜனநாயக பூர்வமானதாகவும் இருக்கவேண்டும் என்பது முரணற்ற ஒரு கருத்தாகும். எனவே தான், ஐக்கிய நாடுகள் சபை தனது சரத்துக்களில் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் இனம், சாதி, மதம், பால், பொருளாதாரம் என்ற எந்தப் பாகுபாடுகளுமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதை சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த உரிமையினை நாங்கள் திடமாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எனினும், இன்றைய கல்வியில் இந்தக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதையிட்டு நிறையவே கேள்விகள் எழுகின்றன. முற்றுமுழுதான கல்விமுறைமை தொடர்பாக பிரச்சனைகள் உருவாகியுள்ளபோதிலும், அவற்றுள் ஒன்றான பாடசாலைக் கல்வி குறித்தவற்றைக் கவனப்படுத்த விரும்புகிறோம்.

பாடசாலைக் கல்விக்குள்ளுள் வளர்ந்துவரும் பாரபட்சம் அல்லது ஏற்றத்தாழ்வே பிரச்சனைகளில் பிரதானமானதொன்றாகும். அதாவது, அத்தியாவசியமான வசதிகளை பாரபட்சமின்றி அனைத்துப் பாடசாலைகளுக்கும் வழங்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மட்டுமே அபிவிருத்தியாக்கப்படுகின்றன. இந்தப் பாரபட்சமான அபிவிருத்தியே கல்வியில் சமத்துவமின்றிய நிலவரங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது.

வளமான ஒரு கல்வித் தரத்தினை பேணுவதற்கு, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6 சதவீதமானது கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், இலங்கையில் கல்விக்கான செலவீனங்களில், இடைவிடாத வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வருடங்களில் இந்த வெட்டுக்கள் மிகவேகமாக நடைபெற்றதுடன் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டின் அளவு 1.5 சதவீதத்துக்கு வீழ்ந்துள்ளது. இதன் விளைவாய், பாடசாலைகள் கடுமையான பொருளாதார பற்றாக்குறை நெருக்கடிகளை முகம் கொள்கின்றன. பாடசாலை அபிவிருத்தி நிர்வாகத்தின் மூலமாக பெற்றாரிடமிருந்து நிதியினைச் சேர்த்து அதன் மூலம் இந்தப் நிதிப்பற்றாக்குறையை நீக்குவதற்கு அரசாங்கம் சிபாரிசு செய்கின்றது. இது பாடசாலைகளின் குறைந்தபட்ச ஜனநாயகப் பண்புகளின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியுள்ளது. இன்று பாடசாலைகளின் அபிவிருத்தி என்பது பெற்றோர்கள் சுமக்க வேண்டிய சுமையாக ஏற்றப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், அரச மற்றும் தனியார்துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பாரிய கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள்.

அனுமதிக்கட்டணமாக, வசதிப்பணக் கட்டணமாக, பதிவுக் கட்டணமாக மட்டுமல்லாது நீர், மின்சாரம் போன்றவற்றுக்கும் கட்டணமாக பல கட்டணங்கள் அறவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கட்டடங்களுக்கு வெள்ளையடித்தல், பாடசாலைத் தோட்டத்தினை துப்பரவு செய்தல், இரவுவேளைகளில் காவல் கடமையில் ஈடுபடுதல் என்பன பெற்றாரின் உடலுழைப்பால் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளும் போது, அதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சட்டபூர்வமாயும், கூடுதல் சட்டபூர்வமாயும் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சில பிரசித்தமான பாடசாலைகள் இரண்டு, மூன்று இலட்ச ரூபாய் என்றளவு தொகைகளை பெற்றுக்கொள்கின்றன.

இப்படியான பணச்செலுத்துகை விபரத்தினை கீழ்காணும் பட்டியல் தருகின்றது.

இங்கு தரப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. ஆனால் நூற்றுக்கணக்கான இவ்வாறான பண வசூல்கள் வழக்கமாக நடந்தேறுகின்றன. பாடசாலைக்கு இந்தளவு பெருந்தொகைப் பணத்தை செலுத்துவதற்கு ஒரு சாதாரண பெற்றாரால் முடியாது. இந்தப்பாடசாலைகளில் அனுமதிக்கு சகல பிள்ளைகளுக்கும் சமத்துவமான உரிமை என்பதை இது மீறுவதாகாதா?

இதன் விளைவு என்னவெனில் இந்தக் பணத் தொகையினைக் கட்ட முடியாத மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்தவர்களாகிறார்கள். கற்பித்தலுக்கான வசதிகள் அமையப்பெற்ற பாடசாலைக்கே தமது பிள்ளைகளை அனுப்பிவைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரினதும் கனவாகும். ஆனால் இந்தப் பெரும்தொகையைக் கட்டவியலாத பெற்றோர்களின் கனவு நிறைவேறுவதில்லை. பிள்ளைகள் மாதக் கணக்கில் பாடசாலைக்கு சமூகமளிக்காது வீட்டில் இருந்துகொள்கின்ற கட்டாயத்துக்குள்ளாகுவது எனபதே இந்த நெருக்கடியின் விளைவினால் தான். பாடசாலை சமூகமளிக்காததற்கான காரணமாக, இந்தப் பெருந்தொகையை அவர்களால் செலுத்தமுடிவதில்லை என்ற காரணத்தினாலேயே தங்கள் படிப்பைக் கைவிட்டு அநேகமான வறிய பிள்ளைகள் வெளியேறிச் செல்கின்றனர். இன்னும் சிலபேர் தங்களுடைய கட்டணத்தைச் செலுத்துவதற்காக திருடினால் தான் முடியும் என்ற நிர்ப்பந்தத்துக்குள் இழுத்து செல்லப்படுகிறார்கள். கல்வி பெறுவது என்பது திருடுதலுக்கு நிர்ப்பந்திக்கிறது என்ற சூழல் துயரமானதில்லையா? கல்வித்துறையின் சீர்கேடு இந்த மட்டத்திற்கு இன்று வந்துள்ளது.

பெற்றோர்கள் பாடசாலைக்கு மட்டுமல்லாது அதன் மேலாய் ரியூசனுக்கும் செலவிட வேண்டியதாய் உள்ளது. இதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அது பாடசாலை முறைமையிலுள்ள தீவிர ஏற்றத்தாழ்வும் பரீட்சை முறைமையிலுள்ள தீவிர போட்டித்தன்மையும் ஆகும். போதியதாய் இன்றிய கல்விவாய்ப்புக்களும் கூட இந்த நிலைமையில் பாதிக்கின்றது. அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகள், பயிற்சி திட்டங்கள், போதியளவு ஆசிரியர்கள் வழங்கப்படுமாயின் இந்த ரியூசன் கலாச்சாரத்துக்கு இடம் இல்லாது போய்விடும். ஆசிரியத் தொழில் தொடர்பான விடயங்களும் கூட இங்கு தொடர்புபட்டதாயிருக்கின்றது. ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படாதவிடத்து, தங்களது ஆசிரியர் என்ற அந்தஸ்தினைப் பராமரிக்கும் நோக்கில் தங்களது சமூகப் பொருளாதார நிலவரத்தை மேம்படுத்துவதற்கு ரியூசன் ஒரு மாற்று வழி என்று பார்ப்பதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இவை எல்லாவற்றினதும் அறுதிவிளைவே பாடசாலையில் வசூலிக்கப்படும் இந்தப் பெருந்தொகைப் பணமாகும். கட்டண வசூலிப்பு சில மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் அதேவேளை செழுமையான ஆளுமையுடன் வளர்ந்து வருவதற்கு வாய்ப்பு எனும் வாழ்க்கையை மற்றவர்களிடத்திலிருந்து பிடுங்கிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு கடுமையான சமுதாயப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றது. பாடசாலைகளுக்கான நிதி வெட்டுக்கள் மற்றும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள கற்பித்தல் செயல்முறையில் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவு என்பனவற்றின் காரணமாய் அநேகமான ஒவ்வொரு பிள்ளையும் ரியூசன் கல்வியை நாட வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் தங்கள் பெரும்பகுதி நேரத்தை ரியூசன் வகுப்புகளிலேயே கழிக்கிறார்கள். கல்வி உளவியலின்படி கல்விக்கு செலவிடும் அதிகப்படியான நேரம் என்பது 6 மணித்தியாலங்களைத் தாண்டக் கூடாது. ஆனால் இந்த ரியூசன் காரணமாய், அது திகைத்துப் போகும் அளவில் 12 மணித்தியாலத்தை எட்டியுள்ளது. குழந்தைப்பருவம், இளமைப்பருவம், விளையாட்டு, கலைகள், கலாச்சாரம், மனித உறவுகள் என்பனவற்றை இழந்து போதல் இதன் விளைவாய் முடிகின்றது. குழந்தைகள் இயந்திர ரோபோ வாழ்வுக்குள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மாணவர்களை மட்டுமல்லாது பெற்றோர்களையும் இது பாதிக்கின்றது.

பாடசாலையிலும், ரியூசன் வகுப்புக்களிலும் பெறப்பட்ட கல்விக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாளின் 8 மணிநேர வேலைநாள் ஊதியம் போதாதாகிவிடுகிறது. அதனால் பெற்றோர்கள் விடுமுறை நாட்களிலும், அதிகப்படியான வேலைநேரத்திலும் வேலை செய்யவேண்டியிருக்கிறது. குழந்தைகள் ரியூசனில் அமிழ்ந்துவிட பெற்றோரோ வேலையில் அமிழ்ந்துவிட பரஸ்பரம் தங்களுக்கிடையில் அவர்கள் செலவழிப்பதற்கு நேரம் இல்லாது போய்விடுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, அன்பு, மற்றும் வழிகாட்டுதல் என்பனவற்றை இழந்துபோகிறார்கள். இதன் மூலம் பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு சமூகத் தவறுகளுக்கு பலியாகிறார்கள்.

இது இன்று தீவிரமான சமுதாயப் பிரச்சனையாக வந்துள்ளது. இளம் தலைமுறையினரை  சமூகப்பிறழ்வு கொண்டவர்களாக உருவாக்கி ஒரு தலைமுறையை அழிவுக்குள் தள்ளுகிறது.

கல்விக்கான நிதி வெட்டுக்கள் தொடருமாயின், ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் செலுத்தும்படி பெற்றார்கள் கேட்டுக்கொள்ளப்படப் போகிறார்கள். இதன் இறுதிவிளைவு எதுவாயிருக்கும் எனில், பெரும்பான்மையான பிள்ளைகள் அவர்களது கல்வி வாய்ப்புக்கள் பிடுங்கப்பட்டவர்களாகிப் போவார்கள்.
கல்வி முறைமைக்குள் இருக்கின்ற சமத்துவமின்மை மற்றும் அநீதி பிள்ளைகளிடத்தில் வெறுப்பை வேரூன்ற வைக்கும். இது ஒரு ஜனநாயகபூர்வ, நீதியான, நியாயமான சமுதாயத்தை காணும் நம்பிக்கையை மங்கச் செய்யும்.

ஆகவே பாடசாலைக்கு கட்டணம் அறவிடுவதென்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியில் சமவாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதற்காய் அரச தலையீட்டுடன் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

கல்விக்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடு, வசதிகளை விரிவுபடுத்தல், கற்பித்தல் செயன்முறையை அதிகாரமயப்படுத்துதல் என்பனவும் அவ்வாறே செய்யப்படுதல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதன்மையாக, கட்டண அறவீடு பாடசாலைகளில் நிறுத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், ராஜபக்ஸ அரசினால் சட்டவிரோதமாக செய்யப்பட்டதான பாடசாலைகளிலிருந்தான கட்டண அறவிடுதல் என்பது உங்களுடைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபத்தின் மூலம் சட்டபூர்வமானதான ஆக்கப்பட்டுள்ளது. இது துயரமானது ஆகும்.

இங்கு பிரச்சனை இந்த விடயம் சட்டபூர்வமானதா இல்லையா என்பதில் இல்லை. ஆனால் மக்கள் கட்டணத்தினை செலுத்த முடியாத நிலையிலுள்ளார்கள் என்பதே. இங்கு மீளவும் நினைவுபடுத்தவேண்டியது என்னவெனில், உங்களது தேர்தல் விஞ்ஞாபனம் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் கல்விக்கட்டணத்தை இல்லாதொழித்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது என்பதே. மிகவும் எதிர்மறையாக கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, கல்விக்கான நிதி வெட்டப்பட்டது அத்துடன் கட்டணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்துக்கு காரணமாகியுள்ளது.

இறுதியாக, நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது - மிகவும் பெரும்பான்மையான குழந்தைகளால் கட்டணங்களை செலுத்த முடியாது என்பதையும் ஆகவே அவர்கள் கட்டணத்தை கட்டமாட்டார்கள். அத்தோடு கட்டண அறிவிடுதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு உங்களது அரசாங்கத்தை வற்புறுத்துவார்கள் என்பதையுமே.