Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

முகம் மாற்றத்திற்கு பதிலாக முறைமாற்றம்! துமிந்த நாகமுவ

அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பற்றிப்பேசப்படுகின்றது. ஒரு சாரார் அதை நீக்க வேண்டும் என்றும், இன்னொரு சாரார் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.ஆனால் இடதுசாரிய முன்னணியாகிய எங்களுக்கு இது சம்பந்தமாக கருத்துக் கிடையாது. நாங்கள் இந்த முறைமையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றோம்.

இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் துமிந்த நாகமுவ கடந்த (09)ம் திகதி நுகேகொடயில் நடைபெற்ற இடதுசாரிய முன்னணியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில்...

முகமாற்றத்திற்கு பதிலாக முறை மாற்றம் இடதுசாரிகளின் சக்தியை அதிகரிக்க வேண்டும். இந்த இலக்குடனேயே நாங்கள் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த முறையில் உள்ள பிரச்சினைகளை மக்களுக்கு சொல்லவும் இதற்கான தீர்வு சோசலிசத்தில்தான் உள்ளது என்று கூறவுமே இடதுசாரிய முன்னணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் துமிந்த நாகமுவ...

இப்பொழுது அரசியல் 20க்கு 20 கிரிக்கெட் மெச் போல் ஆகி விட்டது. அந்தக் கட்சியில் இருந்து இந்தக் கட்சிக்கும், இந்தக் கட்சியில் இருந்து அந்தக் கட்சிக்கும் தாவிக் கொண்டிருக்கின்றார்கள். திஸ்த அத்தநாயக்க அந்தப் பக்கம் போக கிருனிகா மற்றம் பக்கம் போகிறார். பொதுமக்கள் இவர்களின் விளையாட்டை பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டிருக்ககின்றார்கள். இவைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இடதுசாரிய அமைப்பை பலப்படுத்தி மக்கள் மத்தியில் இடதுசாரிய கருத்துக்களை கொண்டு ​சேர்க்கும் ஒரு வேலைத்திட்டமாவே நாங்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை பார்க்கின்றோம்.

ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வாய் கிளிய பேசிய அரசாங்கம் கடந்த 2006ம் ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டது. வெள்ளைத்தாள் ஒன்றில் ஒப்பமிட்டதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டிற்குள் வர அரசாங்கம் அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

1977ம் ஆண்டு புதிய லிபரல்வாதம் ஆரம்பமாகியது முதல் அனைத்தும் விற்றலுக்கும் வாங்குதலுக்குமானது என்று சந்தை திறந்து விடப்பட்டது. இதை செய்த முக்கிய பாத்திரம் வகித்த அமெரிக்கா 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி. அவர்களால் அறிமுகப் படுத்திய பொருளாதார திட்டமே அவர்களுக்கு வினையாக அமைந்து விட்டது.

கடந்த வாரம் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் இங்கு வந்திருந்தார். அவரது​ வருகைக்கான நோக்கம் இலங்கையில் இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கி அவர்கள் இன்பம் அனுபவிப்பதற்கேயாகும். அமெரிக்காவின் நிலைப்பாடும் இதுதான். ஆனால் இவர்கள் கூறுவது மக்கள் மீது கொண்ட அன்பினால் நாங்கள் வந்துள்ளோம் என்று அது சுத்தப்பொய். அவர்களின் வியாபாரத்தை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கே அவர்களது வருகை இடம்பெற்றது.

தற்போது அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்கள் மத்தியில் அதனது காட்டு மிராண்டித்தனத்தை ஏவி விட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாகி இருக்கு சிறுபான்மை மக்கள் மேலும், மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

அரசாங்கத்தை துறத்த வேண்டும் என்று கூறும் ஜனாநாயவாதிகள் தற்போது இருக்கும் அரசாங்கத்தை துரத்தி விட்டு அதற்குப் பதிலாக புதிய ஒரு முகத்தை அறிமுப்படுத்தப் போகின்றனர். அவரும் இதே பாதையில்தான் பயணிப்பார். நாம் கூறுவது முகமாற்றம் அல்ல, அதற்குப் பதிலாக முறை மாற்றம். அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இடதுசாரிய சத்தியை பலப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆட்சி முறை மாற்றத்திலே உள்ளது என்றார்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் கிருபாகரன் கருத்து தெரிவிக்கையில்...

எமது நாடு சுதந்திரம் அடைந்தது தொடக்கம் நாம் பலவாறான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றோம். உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினை அப்படியே தொடர்கிறது. தொழிலாளர்களினதும், மாணவர்களினதும், பெண்களினதும் பிரச்சினை நினைத்துப் பாரக்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

இப்படி பிரச்சினைகள் இருக்கும் எமது நாட்டில் தேர்தலுக்கு பஞ்சமே இல்லை. எப்படியாவது தேர்தலை நடத்தி இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி அதனது ஆட்சியை நீடித்துக் கொண்டிருக்கின்றது.

இப்போது எம்முன் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று முன்வந்துள்ளது. அதற்கு நீலம், பச்சை மற்றும் வேறு வர்ணங்களும் களத்தில் குதித்துள்ளன. இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.

எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ச்சியாக அரசியல் செய்து வரும் நாங்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய முன்னணியில் போட்டி இடுகின்றோம்.

நாங்கள் உங்களுடன் உரையாட வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது. இதை நாம் இதற்கு முன்னரும் பேசினோம். இப்பொழுது இந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் பேசுவோம். இது ஆரம்பம் மட்டுமே. பொதுமக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். உங்களது வாக்குகள் எமது ஆரம்பத்தை பலப்படுத்தும். சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு இடதுசாரியத்திடமே உள்ளது என்று கூறினார்.

அடுத்ததாக உரையாற்றிய பேராசிரியர் சுமனசிரி லியனகே கருத்து தெரிவிக்கையில்...

இந்தக் காலங்களில் நிறையப் பேர் சிந்திக்கின்றார்கள அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்று. ஆனால் இப்படியான சிந்தனை 1994, 2002, 2005 போன்ற வருடங்களிலும் மக்கள் சிந்தித்தார்கள். ஆனால் அந்தக் காலங்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். தொழிலாளர்களதும், மாணவர்களதும் மற்றும் ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருந்தன. ஆக மக்களின் பிரச்சினை அப்படியே இருந்தது ஆட்களும் ஆட்சியும் மாறியது.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை இல்லாமல் செய்தது யார் இந்த ஆட்சியாளர்கள்தான். அவர்கள் இப்போது வேறுவிதமாக ஜனநாயகம் பேசிக் கொண்டு வருகிறார்கள். அன்று மக்களுக்கு சதி செய்தவர்கள் தான் இவர்கள் .

என்னோடு சேர்ந்து கடமையாற்றும் பேராசிரியர்கள் அன்றும். இன்றும் நாரிப்போன இந்த அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல முழுச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் இவைகளை தோற்கடிக்க வேண்டும். இடதுசாரிய முன்னணியின் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இந்த ஆரம்பத்தை சரியாக பயன்படுத்தி மக்களை தெளிவு படுத்துவோம் என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து சோசலிச கட்சியின் லீனஸ் ஜயதிலக கருத்து தெரிவிக்கையில்...

நாடாளுமன்ற ஜனநாயகவாதம் தோற்றுப் போய் விட்டது. அதனால்தான் எங்களுக்கு நீண்ட கால தேவையாக இருக்கின்ற இடதுசாரியத்தை கட்டி எழுப்ப வேண்டும். 1964ம் ஆண்டு இடதுசாரியத்தின் சக்தி அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைமை மாறி உள்ளது. அதை நாங்கள் மீழ உருவாக்கம் செய்ய வேண்டும்.

வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய செயற்பாட்டிற்கான ஒரு வேலைத்திட்டமாகவே இதை நான் பார்க்கின்றேன். அதற்காக பொதுமக்கள் அனைவரையும் நாம் சந்தித்து இந்தக் கலந்துரையாடலை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி அதிகாரமோ வேறு மாற்று அதிகாரமோ மக்களுக்கு தேவை இல்லை. நாங்கள் துமிந்த நாகமுவவை இடதுசாரிய முன்னணி சார்பாக தேர்தலில் நிறுத்தியுள்ளோம். இம்முறை நாங்கள் இளைஞர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளோம். இடதுசாரியத்திற்கு உரமூட்டுவதற்காக உங்களது வாக்குகளை அளிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எனது உரையை முடிக்கிறேன்.

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் கேமமாலினி அபேரத்ன கூறுகையில்...

இன்று இலங்கையிலும், உலகின் பல பாகங்களிலும் பெண்கள் ஒவ்வொரு வினாடியும் துன்பத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நுகேகொட பிரதேசத்திலும் பல சகோதரிகள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து காணப்படுகின்றது.

ஆட்சியாளர்கள் போகப் பொருளாக பெண்களை பார்க்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை. இதுதான் இந்த முதலாளித்துவத்தின இழிவான நிலைமை. இவற்றை மாற்றி நாம் அனைவரும் சந்தோசமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்காக இடதுசாரிய கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று இடதுசாரியத்தை பலப்படுத்தி இந்த ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும் என்றார்.