Wed01222020

Last updateTue, 10 Dec 2019 10am

முள்ளிவாய்க்காலும் அபகரிக்கப்படப்போகிறது!

பெரும் போர் முடிந்து அழிவுகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று மெல்ல மெல்ல நிசப்தத்திலிருந்து மீளத்தொடங்கியிருக்கிறது. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதி புழுதியால் நிறைந்து கிடக்கிறது. இடைவிடாமல் செல்லும் கனரக வாகனங்கள் ஒருபுறம், தென்பகுதியிலிருந்து முள்ளி வாய்க்காலைப் பார்க்கச் செல்வோர் ஒருபுறம், புதுக்குடியிருப்புச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்க்கச் செல்வோரென ஏ35 வீதி தினமும் பரபரப்பாக இருக்கிறது.

ஆளரவமற்று உடைந்து சிதைந்து கிடக்கும் வீடுகள், எரித்தும் வெட்டப்பட்டும் தலையற்றுக் கிடக்கும்பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள், எரித்தும் நொறுக்கியும் குவிக்கப்பட்டு குவியல்களாய்க் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் தூர்ந்துபோய்க்கிடக்கும் பங்கர்கள், பத்து மீற்றர் இடைவெளியில் நிற்கும் படையினர் என மரணங்களால் மலிந்த நிலம் மனிதப்பேரவலத்தின் நினைவுகளை தற்பொழுதும் நினைவூட்டியவாறு காட்சியளிக்கிறது.

முள்ளிவாய்க்கால் கரையோரத்தை உள்ளடக்கிய 22 கிலோ மீற்றர் கடற்கரைப் பிரதேசத்தை இயற்கை சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய முயற்சிகளை தற்பொழுது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாயாறு தொடங்கி அளம்பில் வரையான 22 கிலோ மீற்றர் கரையோரப் பகுதியே சுற்றுலா வலயமாகப் போகிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அளவீடு செய்யும் பணிகளை அரச நிலஅளவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்திலேயே இந்தக் கரையோரப் பகுதியை இயற்கை சுற்றுலா மையமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கரையோரத்தில் காணிகளைக் கொண்டுள்ள தனியார் விரும்பினால் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வர்த்தக அல்லது முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிப்பதென அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது. சுற்றுலா வலயமாக அறிவிக்கப்படவுள்ள இந்தப் பகுதியிலேயே அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகளும் உள்ளடங்குகின்றன. வன்னியில் மனிதப் பேரவலத்தை உருவாக்கிய இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதிகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். பலர் இந்தப் பிரதேசத்திலேயே உயிரிழந்தும் இருந்தனர்.

குறுதியாறு ஓடிய நிலத்தில் இன்னமும் கலையாது கிடக்கும் அழிவின் அடையாளங்களும் இப்பொழுது கூட சுவாசத்தில் கலக்கும் மரணநெடியும் மனிதப் பேரவலத்தை நினைவூட்டி நிற்கின்றது. எமது உறவுகள் வாழ்ந்த நிலம் இது. அழிவுகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் இப்புனித பூமியை இன்று சுற்றுலா வலயமாக்கும் அரசின் திட்டம் மனதின் வலிகளை மீண்டும் கிளறி வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அழிவுகளைச் சந்தித்து துவண்டுபோன வன்னி நிலம் இன்று ஆக்கிரமிப்பின் அதிகார கரங்களுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. வடக்கில் தாம் தற்போது நிலைகொண்டுள்ள இடங்களிலுள்ள காணிகளைக் கையகப்படுத்தி வரும் படையினர், இறுதிப் போர் நடைபெற்ற முள்ளி வாய்க்காலில் மட்டும் 17.5 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான அனுமதியை வழங்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான எமது உறவுகள் அடைக்கப்பட்டிருந்த இடமே முள்ளிவாய்க்கால். இன்று சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் அனேகமானவை இந்தப் பகுதியிலேயே இடம்பெற்றிருக்கின்றன.

இந்தப் பகுதியிலேயே போரின் இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான உறவுகள் பலியாக்கப்பட்டனர். இங்கு பெரும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சந்தேகம் வெளியிட்டு வரும் நிலையிலே 17.5ஏக்கர் நிலத்தை படையினர் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி நிற்கின்றது.

இது இவ்வாறிருக்க முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் தற்பொழுது நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். தமது சொந்த இடத்திற்குச் சென்று எப்பொழுது வாழ்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றத்துக்கென அழைத்து வரப்பட்ட போதும், இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற அனுமதிக்காமையானது தமது பிரதேசங்களை படையினர் ஆக்கிரமிக்கும் ஒரு திட்டமாக இருக்கலாம் என இவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோம்பாவில், திம்பிலி பகுதிகளில் கடந்த வருடத்தின் இறுதியில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இங்கு முள்ளிவாய்க்கால் மேற்கைச் சேர்ந்த 96 குடும்பங்கள் உட்பட இதுவரை 206 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டே இங்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் இன்றுவரை சொந்த இடங்களில் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மேற்கில் 19 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இதுவரையில் அவர்களுக்கு குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவையுமே செய்து கொடுக்கப்படவில்லை. மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தாம் சென்று வாழ்வதற்கு இந்த மக்கள் அனுமதி கோரியிருந்தும் அதற்கான அனுமதியை வழங்க படையினர் மறுத்துவிட்டனர். காலை முதல் மாலை 5 மணிவரையில் மக்கள் தமது இடங்களை பார்வையிடுவதற்கு மட்டும் படையினரால் அனுமதி வழ்ங்கப்பட்டுள்ளது.

மாலை 5.00 மணியின் பின்னர் மக்கள் யாரும் அங்கு நிற்கவோ நடமாடவோ அனுமதியில்லை. வெடிபொருட்கள் அபாயமே இதற்கு காரணம் என படையினர் கூறியிருந்தாலும் கைவிடப்பட்ட வீடுகளில் மீதமாகவுள்ள பகுதிகளும், பெறுமதியான மரங்களும் இரவுவேளையில் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதே உண்மை. இரவு வேளைகளிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காகவே மாலை 5.00மணியின் பின்னர் பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது.

இதேவேளை திம்பிலி பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லையென தெரியவருகிறது. சில மாதங்கள் வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகமும் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் கூட இம்முகாமிற்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திம்பிலி பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே கால் ஏக்கர் நிலம் வழங்கப்படும். நிரந்தரமான தொழில் வசதி செய்து கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் இன்றுவரையில் அந்த வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை என முகாமிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட இம் மக்கள் தற்போது கடலே இல்லாத பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லவேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர்நினைவிலும் எழுந்து நிற்கின்றது.

அழிவுகளாலும் இழப்புகளாலும் துவண்டுபோய்க்கிடக்கும் இம்மக்களின் ஒரே விருப்பம் தாம் வாழ்ந்த சொந்த நிலத்தில் மீண்டும் வாழ வேண்டுமென்பதே, ஆனால் அரசாங்கமோ ஆண்டாண்டுகாலம் இவர்கள் வாழ்ந்த நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று சம்பாதிக்க முயற்சிகளை யெடுத்து வருகின்றது.

அதன் ஒருகட்டம்தான் சுற்றுலா வலய நாடகம். அதைக் காரணம் காட்டி பெருமளவாக தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படப்போகின்றன. எமது வளம் இன்னும் சுரண்டப்படப் போகின்றது. அதுமட்டுமின்றி படையினரும் மிகப்பாரிய படைத்தளங்களையும்இ இராணுவ மையங்களையும் அமைப்பதற்காகவும் தாமும் தமது குடும்பத்தினரைக் கொண்டுவந்து குடியேற்றுவதற்காகவும் ஏக்கர் கணக்கிலான நிலங்களை அபகரிக்க முயன்று வருகின்றனர்.

இறுதி யுத்தம் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நிலத்தில் எமது உயிர்களை பெரும் விலையாகக் கொடுத்திருக்கிறோம். அவலங்களாலும் மரண ஓலங்களாலும் நிறைந்த நிலம் இது. சீறிவரும் எறிகணைகளை நெஞ்சிலே சுமந்து வித்தாய் வீழ்ந்த எம் உறவுகளின் குருதிகள் இன்னும் காயவில்லை. அவலச்சாவுகளால் இன்னும் இப்புனிதபூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது ஆத்மாக்களின் ஓலம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

கந்தகப் புகைகளின் நெடியும் காய்ந்துபோன குருதிகளின் நெடியும் எம் நாசிவழியாக உணர்வுகளைத் தூண்டிச் செல்கின்றன. இழந்தவைகள் போக எங்களை வாழவைத்த எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பின் கரங்களிலிருந்து மீட்க என்ன செய்யப் போகின்றோம் என்ற கேள்வி இன்று எம்முன்னே பிரம்மாண்டமாய் வியாபித்து விரிந்து நிற்கின்றது.

-நன்றி: லங்காவியூஸ்