Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எளிய மனிதர்களிற்கு மிக அரிதாகவே வெற்றிகள் கிட்டுகின்றன

புலம்பெயர் நாடுகளில் இடதுசாரி, முற்போக்கு வட்டாரங்களில் தோழர் வேலு என்ற மென்மையாக, நகைச்சுவையாகப் பேசும் தோழரை தெரியாதவர்கள் எவருமில்லை. இந்தியாவில், தமிழ் நாட்டில் மார்க்கசிய - லெனினிய அமைப்பில் இணைத்து மக்கள் அரசியல், தொழிற்சங்கங்கள் என்பவற்றில் தமது தீவிரமான தொடர்ந்த செயற்பாடுகளின் மூலம் உழைக்கும், ஏழை மக்களுடன் சேர்ந்து போராடினார். மக்கள் விரோத தமிழ்நாட்டு மாநில அரசு அவரின் முற்போக்கு அரசியலை முடக்க தமது வழக்கமான பணியான பொய் வழக்கை போட்டு தடா சட்டத்தில் கைது செய்தார்கள்.

வெடிமருந்துகள் வைத்திருந்தமை, பயங்கரவாதம் என்னும் பிரிவுகளின் கீழ் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் அடிமைகளான “க்யூ” பிரிவு காவல்துறை ரவுடியினர், பொய்க் குற்றச்சாட்டுக்களை ஒத்துக் கொள்ளச்சொல்லி சித்திரவதைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். சிறையிலும் அவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடை பெற்ற வழக்கில், பொய் சாட்சிகள் அம்பலப்படுத்தப்பட்டனர். “க்யூ” பிரிவு காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கை அம்பலப்படுத்தப்பட்டது.  வழக்கில் மனித உரிமை வழக்கறிஞர்களின் அயராத உழைப்பினால் தோழர் வேலு மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையற்ற  தன்மைகளின் அடிப்படையில் நீதிபதி பிணையில் செல்ல அனுமதித்தார். பிணையில் வெளி வந்தாலும் இந்திய அரசு என்னும் வன்முறை அரச பயங்கரவாதத்தின் கொலை நிழல் அவரை பின் தொடர்ந்தது. அவருடையதைப் போன்ற பொய் குற்றச்சாட்டு வழக்குகளில் அவருடைய தோழர்களில் பலர் கைது செயப்பட்டனர் . போலி மோதல் பெயரில் இயக்கத் தோழர் ரவீந்தரன் கொலை செய்யப்பட்டார். தோழர் வேலுவிற்கு  பிணை  கிடைத்து  பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய போதும் வழக்கில் தீர்ப்பு வழங்காமல் இருந்ததாலும், தொடர் அடக்கு முறையினாலும், இந்தியாவை  விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய அரசின் கொலைக்கரங்களில் இருந்து தப்பி பிரித்தானியாவிற்கு அகதியாக வந்து சேர்ந்தார்.

அவருடைய அரசியல் கொள்கைகளிற்காகவும், மக்களின் செயற்பாடுகளிற்காகவும் இந்திய அரசினால் அவர் மீது ஏவப்பட்ட பொய் வழக்குகளையும், வதைகளையும் அதனால் அவருக்கு ஏற்பட்ட உயிராபத்துக்களையும் குறிப்பிட்டு அவர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரினார். அவருடைய அகதி விண்ணப்பத்தை நெறிப்படுத்தவும், ஆவணங்களை மொழிபெயர்க்கவும், வழக்கை நடத்தவும் சகோதரர் ராகவன் அவருக்கு மிகுந்த உதவியாக இருந்ததாக தோழர் வேலு அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

தோழர் வேலுவின் அரசியல் தஞ்சம் பிரித்தானிய அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். தோழர் வேலுவும் குடும்பமும் பிரித்தானிய குடியுரிமை பெற்றார்கள். அவரின் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகள் பிரித்தானியாவின் முற்போக்குசக்திகள், பிரித்தானிய இந்திய தொழிலாளர் சங்கம்,  தெற்காசிய பெண்கள் அமைப்பு என்பவர்களின் தோழமையோடு தொடர்ந்தன.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய அரசு அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நாடு கடத்தும் படி பிரித்தானிய அரசிடம் கோரியது. சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலிற்கும் (INTERPOL) அறிவித்தது. இன்டர்போல் தனது இணையத்தளத்தில் அவரது படம், விபரங்களைக் குறிப்பிட்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. பிரித்தானிய அரசு அவரை (Extradition) வழக்கில் கைது செய்தது. தோழர் வேலுவின் மீதான இந்திய அரசின் பொய் வழக்குகளையும், சித்திரவதைகளையும் ஏற்றுக் கொண்டு அவரை அகதியாக அங்கீகரித்த அதே பிரித்தானிய அரசு அவர் பிரித்தானிய குடிமகனான பின்பு அதே வழக்குகளைச் சொல்லி இந்தியா நாடு கடத்தக் கேட்டபோது கைது செய்தது.

2013 இல் தோழர் வேலு கைது செய்யப்பட்டார். அவரின் மீதான வழக்கு ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது. நூறு தடவைகளிற்கு மேல் வழக்கு விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சகோதரர்கள் ராகவன், நிர்மலா ராஜசிங்கம் ஆகியோர் ஆவணங்களை மொழி பெயர்த்தல், இந்திய நீதிமன்றங்களின் மந்தமான நடைமுறைகளை, இந்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான கொடுமைகளை பிரித்தானிய வழக்கறிஞர்களிற்கு தெளிவுபடுத்துதல் என்று பேருதவிகள் புரிந்தனர்.

பிரித்தானிய இந்திய தொழிலாளர்சங்கம், தெற்காசிய பெண்கள் அமைப்பு, புலம்பெயர் அரசியல், இலக்கிய தோழர்கள், குடும்ப நண்பர்கள் எனப் பலரும் தோழர் வேலுவிற்கும், அவரது மனைவிக்கும், அவர்களது சின்ன மகளிற்கும் உதவியாகவும் ஆத்ம பலமாகவும் இருந்தனர். ஐந்து பிரிவுகளாக நடந்த வழக்கில் நான்கு பிரிவுகளில் தோழர் வேலுவிற்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. கடைசிப் பிரிவில் வழக்கு இந்த வருடம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தோழர் வேலு கைது செய்யப்பட்ட போது ஏழு வயதில் அவர்களது மகள் இருந்தாள். அப்போது அவளிற்கு அவர்கள் வழக்கைப் பற்றியோ, அவளது அன்புத் தகப்பன் நாடு கடத்தப்படலாமெனவோ அவர்கள் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தனர். ஆனால் மூன்று வருடங்கள் என்னும் நீண்ட, நெடுங்காலங்களில் தந்தையின் கவலையையும், தாயின் கண்ணீரையும் அவள் கண்டு கொண்டாள். கடைசித் தீர்ப்பு வரவிருந்த நாளில் காலையில் பாடசாலை போக முன்பு தூங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு "அன்பு அப்பா, தயவு செய்து என்னை விட்டு போய் விடாதே" என்று ஒரு கண்ணீர்க் கடிதம் அவளால் எழுதப்பட்டு தலையணைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தது.

மூன்று வருடங்களின் அலைச்சல்கள், மனவேதனைகள் என்பவற்றிற்கு முடிவு கட்டும் முகமாக நீண்ட சட்ட போரட்டத்தின் விளைவாக கடைசிப் பிரிவான ஐந்தாவது பிரிவில் தோழர் வேலுவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. தெற்காசியப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் அமிர்த் வில்சன் குறிப்பிட்டது போல "அரசுகளிற்கு எதிரான போராட்டங்களில் எளிய மனிதர்களிற்கு மிக அரிதாகவே வெற்றிகள் கிட்டுகின்றன. அவற்றில் இந்திய அரசிற்கு எதிரான இந்த வழக்கின் வெற்றி முன்மாதிரியாக அமைந்திருக்கிறது."

மல்லையா, லலித் மோடி போன்ற இந்திய மக்களின் பணத்தை கோடி, கோடியாக கொள்ளையடித்த குற்றவாளிகளை இந்திய அரசு வெளிநாடுகளிற்கு தப்ப விட்டது. கொள்ளையடித்த  மக்களின் பணத்தையே மீளப் பெறுவதற்கு எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இந்தக் கொள்ளையர்களை நாடு கடத்துமாறு எந்த வழக்குகளும் போடப்படவும் இல்லை. போபாலில் விசவாயு மூலம் மக்களைக் கொன்ற அமெரிக்கக் கொலைகாரனை நாட்டிலிருந்து தப்பிக்க வைத்து இறந்த ஏழை மக்களிற்கு நீதி கிடைக்காமல் செய்தார்கள். ஆனால் மக்களிற்காக போராடிய ஒரு மனிதன் மேல் பொய் வழக்கு போட்டார்கள். நாடு கடத்தச் சொல்லி வழக்குப் போடுகிறார்கள். இது தான் இந்திய அரசின் கோரமுகம். அகிம்சையைச் சொல்லிக் கொண்டு அநியாயம் செய்பவர்களின் முகத்திரையை  தோழர் வேலுவின் வழக்கு கிழித்திருக்கிறது என்பது இந்த வழக்கின் மிகப்பெரும் வெற்றி. தனியுடமை இல்லா உலகு வேண்டி போராடும் ஒரு பொதுவுடமைப் போராளியின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி.