Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் வர்க்கப் போராட்டமும் - வர்க்கக் கட்சியும்: அந்தோனிப்பிள்ளை

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் (30/04/2017) தோழர் அந்தோனிப்பிள்ளை ஆற்றிய உரை

வர்க்கம் என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது “கார்ல் மார்க்ஸ்” என்ற அறிஞரும் “கம்யூனிஸம்” என்ற சொல்லுமாகும். ஆனால் வர்க்கம் என்பது மனிதகுல வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் “வர்க்கம்” என்பதனை தெளிவாகப் புரியும்படி விளக்கி அதற்கான வரைவிலக்கணத்தை எழுத்தில் பதித்தவர்தான் தத்துவ வித்தகர்-பொதுவுடைமைத் தந்தை திரு கார்ல் மாக்ஸ் ஆகும்.

மனித வரலாற்றில் கூட்டு வாழ்க்கை முறை குலைந்த நாள் முதற் கொண்டே “வர்க்கம்” தோன்றி விட்டது. இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைமை காலத்திற்கு காலம் இந்த “வர்க்கம்” போராடி வந்ததின் விளைவாகும். 

அதனைத்தான் “ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே” என வலியுறுத்தியுள்ளார் கார்ல் மார்க்ஸ்.

“முடியாட்சி” மாற்றப்பட்டு உருவான “அடிமைகளைச் சொத்தாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ முறைமை” இதனை ஒழித்து “அடிமைகளை விடுவித்து தோற்றம் பெற்ற முதலாளித்துவம் அடங்கிய குடியாட்சி சனநாயகம” ஆகிய மாற்றங்கள் யாவுமே வர்க்கம் மேற்கொண்ட போராட்டங்களாலேயே சாத்தியமாக்கப்பட்டன. 

மக்களைக் கொண்டு மக்களுக்காக மக்களால் நடைமுறைப்படுத்தப்படுவதாக காட்டப்படுகிற சனநாயகம் மக்களை ஏமாற்றுகிறது என்பதனையும் உண்மையான சனநாயகம் வேண்டி போராட வேண்டிய வரலாற்றுக் கடமை பாட்டாளிகள் வர்க்கத்திற்குத்தான் உண்டு என்பதனையும் கார்ல் மார்க்ஸ் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தறிந்து கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர் “வர்க்கம்” என்பதனை இயங்கியல் ரீதியில் வரையறைவு செய்யும் போது “சுரண்டும் வர்க்கம் (ஆளும் - அடக்கும் வர்க்கம்), சுரண்டப்படும் வர்க்கம் (ஆளப்படும் - அடக்கப்படும் வர்க்கம்) இரண்டுக்குமிடையேயான போராட்டமே வர்க்கப் போராட்டம் என்று நிரூபித்திருந்தார்.

மேற் குறிப்பிட்டுள்ள வகையில் நோக்கும் போது “இலங்கையில் வர்க்கம், வர்க்கப் போராட்டம் காணப்படுகிறதா? என்னும் கேள்விக்கு ஆம்-இல்லை என்ற இரண்டும் பதில்களாக அமைகின்றன. இதனை இலங்கையில் நிலவும் இடதுசாரிய வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சிமுறைமை யாவுமே இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவே இயங்கியது. நாட்டின் சுயதேவைப் பொருளாதார அபிவிருத்தியை அழிக்கும் சுரண்டல் பொருளாதார நடைமுறைகளையும் அதற்கிசைவான கல்வித் திட்டங்களையும் இவற்றை ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்கி விட்டிருந்தார்கள். 

இவர்களின் ஆட்சி முறைமையின் பின் விளைவுகளின் முதற் வெளிப்பாடாக 1915ல் சிங்கள-முஸ்லீம் இனக் கலவரம் இடம் பெற்றது. 

1919களில் இலங்கையில் காலனித்துவ அரசுடன் உறவுகளைப் பேணி வந்த ஆங்கிலப் புலமை பெற்ற செல்வந்தர்கள் “இலங்கைத் தேசிய காங்கிரஸ்” என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். அதன் தலைவராக சேர் பொன் அருணாசலம் இருந்தார். (மேற்குமாகாணத்தில் தமிழர் பிரநிதித்துவம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1920ல் இவர் தானாகவே பதவி விலகினார்.) இவர் சர்வதேச விவகாரங்களில் முற்போக்கான சிந்தனையும் தொழிலாளர் நலன்களில் அக்கறையும் கொண்டிருந்தவர் ஆவர்.

இக்கால கட்டத்தில் தொழிலாளர் நலன்கள் சம்பந்தமான உரையாடல்களும் கோரிக்கைகளும் ஆரம்பிம்பிக்கப்படத் தொடங்கின. அதன் விளைவாக “இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கம் (1919) சேர் பொன் அருணாசலம் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

1920ல் இடம்பெற்ற இலங்கைப் புகையிரதத் தொழிலாளர் வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தேசியவாதியும் அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கொண்டிருந்தவருமான ஏ.ஈ.குணசிங்கா 1922ல் “இலங்கைத் தொழிற் சங்கம்” ஆரம்பித்தார். இதன் தலைமையில் 1923ல் ஒரு பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1927ல் நடைபெற்ற துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் 1928ல் “அகில இலங்கைத் தொழிற் சங்க காங்கிரஸ்” உருவாக்கப்பட்டது. அதே ஆண்டிலேயே ஏ.ஈ.குணசிங்க “இலங்கைத் தொழிற் கட்சி” தொடங்கினார். அந்நாட்களில் சர்வசன வாக்குரிமையையும் இந்தியத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையையும் “இலங்கைத் தேசிய காங்கிரஸ்” எதிர்த்து நிற்க ஏ.ஈ.குணசிங்க அவற்றை ஆதரித்திருந்தார். 1929ல் இடம்பெற்ற கொழும்பு டிராம் வண்டித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் 5 பேர் கொல்லப்பட்டு 5 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்தனர்.

இதே காலப்பகுதியில் லெனின் தலைமையிலான சோவியத் புரட்சி 1917ல் நடைபெற்றது. ஆங்கிலக் கல்வி பயின்ற மாணவர்கள் கொழும்பு-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர் பிரபுத்துவக் குடும்பங்களிலிருந்து மேற்படிப்புக்காக இலங்கையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர். அதே போன்று தெங்கு ரப்பர் உற்பத்தி - சாராயக் குத்தகை - சிறு வியாபாரம் ஆகியவற்றின் வருமானங்கள் ஊடாக புதிதாக உருவான உயர் மத்திய தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த பௌத்த சிங்களப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி பயின்ற மாணவர்களும் சென்றார்கள். இவர்கள் சிந்தனையில் 1915ன் இனக் கலவரத்தின் பாதிப்பு - தாய்மொழி, தாய்நாடு - சொந்த கலாச்சாரம் பற்றிய கரிசனைகள் துளிர்விடத் தொடங்கியிருந்தன.

அதே கால கட்டத்தில் (1920களில்) யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியிலிருந்து ஹன்டி பேரின்பநாயகம் என்ற மாணவனின் முன்னெடுப்பில் இன மத சாதி பால் பிராந்திய பாகுபாடுகள் அற்ற ஒரு சமத்துவமான இலங்கை மக்களின் பூரண சுதந்திரத்திற்காக வேண்டி மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றதன் பயனாக “யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்” (1924ல்) என்ற அமைப்பு தோன்றி பின்னர் அது “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” (1930ல்) என மாற்றம் பெற்றது. அவர்கள் தென்னிலங்கையில் இருந்து பல அரசியல் பிரமுகர்களை தங்கள் வருடாந்த மாநாட்டுகளுக்கு வரவழைத்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்களின் செயற்பாடுகள் ஏகாதியபத்திய ஊடுருவல் - முதலாளித்துவ சக்திகள் தொழிலாளர் வர்க்கத்தினரை அடிமைப்படுத்தி சுரண்டுகின்ற போக்கு – அரசியல் அதிகாரத்தின் அடக்கி ஒடுக்கும் தன்மை – முதியோர் ஊதியம் - வேலையில்லாத் திண்டாட்டம் - தேசியக் காப்புறுதி – சுய தன்னிறவுப் பொருளாதாரம் - தொழிலாளர் பாதுகாப்பு – காலனித்துவ சுரண்டல் - அரசியலில் பெண்களின் பங்கு – அந்நியரின் அரசியலமைப்பை நிராகரித்தல் - சமத்துவ சமுதாயம் ஆகியவைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஏகாதிபத்திய முகவர்கள் உள்நாட்டு கைத்தொழில்கள் மற்றும் வணிகத்துறை நிறுவனங்களை அழிப்பது பற்றியும் அவர்கள் தங்களது சக்தி வாய்ந்த சொந்த நிறுவனங்கள் மூலம் தேசிய அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்வதற்கான நுழைவாயில்களை அடைத்து விடுவது பற்றியும் நவீன கலாச்சாரத்தை தோளிற் சுமந்து வரும் போதகர்கள் நாட்டுக்குள் நுமைந்து சுரண்டல் காரியங்களில் ஈடுபடுவது பற்றியும் இந்த இளைஞர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர். பொலநறுவை மற்றும் அனுராதபுரத்தில் மிகவும் அற்புதமான கலை ஓவியங்களைப் படைத்தவர்களின் பிள்ளைகள் இன்று தமது கலாச்சார ஆத்மீக அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு கிராமங்களிலுள்ள தமது குடிசைச் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் “டன்லப் ரயர்” விளம்பரங்களில் தஞ்சம் புகுந்து கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். கண்டியில் ஒதுக்கப்பட்டு கவனிப்பாரற்று வாழும் “றொடிய” மக்கள் நலன்களுக்காக ஒரு சங்கம் அமைக்கப்படல் வேண்டும் என ஒரு மாநாட்டில் (1928ல்) தீர்மானத்தைக கூட நிறைவேற்றியிருந்தனர். டொனமூர் ஆணைக்குழுவின் அரசியல் யாப்பை நிரகரித்து 1931ல் பொதுத் தேர்தலைப் பகிஷ்கரித்துமிருந்தனர்.

இதே சம காலப் பகுதியில்தான் லண்டனில் மேற் படிப்பை முடித்துக் கொண்ட கல்விமான்கள் (டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க பிலிப் குணவர்த்தன கொல்வின் ஆர்.டி.சில்வா லெஸ்லி குணவர்த்தன என்.எம்.பெரேரா பீற்றர் கெனமன் பொன் கந்தையா அ.வைத்தியலிங்கம் போன்றோர்) பலர் தீவிர மார்க்சிச கம்யூனிஸ்ட் கருத்துக்களை உள்வாங்கியவர்களாக இலங்கை திரும்பியிருந்தனர். 

இவர்கள் நாடு திரும்பிய வேளை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்துக்களும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய குரல்களும் அதனடிப்படையில் அமைந்த செயற்பாடுகளும் நாட்டில் தோற்றம் பெற்றிருந்தன. அவற்றில் முக்கியமானது “சூரியமல்” (1931ல்) இயக்கமாகும். இது “சுதந்திரம்-சமாதானம்” என்ற அடிப்படையில் சுதேசிய மக்களின் நலன் கருதி செயற்பட்டது. கண்டியில் ஏனைய மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வாழ்ந்த “ரொடிய” மக்களின் முன்னேற்றத்திற்காக நிதி சேகரிப்பு-பிரச்சார நடவடிக்கைகளில் “சூரிமல்” இயக்கம் ஈடுபட்டிருந்தது.

1934-35 காலப் பகுதியில் நாட்டில் ஒரு லட்சம் மக்களைக் கொன்றும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்களைப் பாதித்தும் பரவியிருந்த ‘மலேரியா நோய்’ தடுப்புப் பணிகளில் துணிச்சலுடன் இந்த இயக்கம் ஈடுபட்டமை வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

1935ல் வெள்ளவத்தை நெசவாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது ஆரம்பத்தில் முற்போக்காளராக செயற்பட்டு “இலங்கைத் தொழிற் கட்சி” ஆரம்பித்தவரான ஏ.ஈ.குணசிங்க முதலாளித்துவ இனவாதப் பாதையில் செல்ல, அதே ஆண்டு டிசெம்பர் 18ல் கொல்வின் தலைமையில் “லங்கா சமசமாஜக் கட்சி” இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியாக தோற்றம் பெற்றது. ‘தேசிய சுதந்திரத்தை வென்றெடுத்தல்-பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் களைதல்-வர்க்கம் சாதி இனம் மதம் என்ற வகையிலான ஒடுக்குமுறைகளை ஒழித்தல்-உற்பத்தி சாதனங்களை தேச உடைமையாக்குதல்-பங்கீடு விநியோகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தல்’ என்பவை இக் கட்சியின் பிரதான இலக்குகளாக அமைந்திருந்தன. 1936ன் சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி இரு உறுப்பினர்களை (பிலிப் குணவர்த்தன - அவிசாவல & என்.எம்.பெரேரா - ரூபான்வில) பெற்றுக் கொண்டது. இக் கட்சியின் ஆதரவில் பி.ஜே.பெர்னாண்டோவை ஆசிரியராகக் கொண்டு சிங்களத்தில் ‘சமசமாஜ‘ என்றும் கே.ராமநாதனை ஆசிரியராகக் கொண்டு தமிழில் ‘சமதர்மம்’ எனவும் பத்திரிகைகள் வெளிவந்தன. இளம் கம்யூனிஸ்ட்டாக விளங்கிய அவுஸ்திரேலியரான தோட்டத் துரையான மார்க் அந்தோனி லிஸ்டர் பிரேஸ்கேர்டில் நாடுகடத்தப் பட்டபோது இக்கட்சியினர் மேற் கொண்ட போராட்டம் அவருடைய நாடு கடத்தலை வாபஸ் பெற வைத்தது.

இவற்றைத் தொடர்ந்து “இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம்” ஆரம்பிக்கப்பட்டது. சமசமாஜக் கட்சி தலைமையில் முல்லோயாத் தோட்டத்தில் இடம் பெற்ற வேலை நிறுத்தத்தின் போது கோவிந்தன் என்ற இளைஞன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான். 1939-40 பகுதியில் கட்சிக்குள் லெனினிய சிந்தனை - ட்ரொஸ்கிய சிந்தனை என்ற முரண்பாடு தோன்றியதால் லெனினிய சிந்தனையாளர்கள் அதிலிருந்து வெளியேறி ‘ஐக்கிய சோசலிசக் கட்சி’யையும் அதன் பின்னணியில் “இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனம்” என்ற அமைப்பையும் உருவாக்கினர். 1942ல் இக் கட்சி தடைசெய்யப்பட 1943ல் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவைத் தலைவராகவும் பீற்றர் கெனமனைப் பொதுச் செயலாளராகவும் கொண்டு “இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி” தொடங்கப்பட்டது.

2வது உலக மகா யுத்தம் (1945ல்) முடிவுற்ற பின்னணியில் இலங்கைத் தலைநகரில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் இடம் பெற்றன. இடதுசாரிக் கட்சிகள் “வேலைநிறுத்த நடவடிக்கைக்கான கூட்டு செயற்குழு” என்ற பதாகையின் கீழ் இணைந்து 1947 யூன் 3ல் நடாத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கொலன்னாவையில் வைத்து “அரசாங்க எழுதுவினைஞர் சங்க” உறுப்பினரான வி.கந்தாசாமி பொலிசார் துப்பாக்கிக்குப் பலியானார்.

ஆங்கிலேயரின் சோல்பரி ஆணைக்குழுவின் மேற்பார்வையில் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின் கீழ் நடாத்தப்பட்ட 1947ன் பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 20 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் இடதுசாரிகள் பிரதான எதிர்கட்சியினராக விளங்கினர். 1951ல் ஐ.தே.கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.

1952 பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி ஆட்சியமைத்தது. இத் தேர்தலில் சி.சு.கட்சியுடன்  இடதுசாரிகள் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் போட்டியிட்டனர். இடதுசாரிகளுக்கு 13 உறுப்பினர்கள் கிடைத்தது. 1953 ஆகஸ்ட் 12ல் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அனைத்து எதிர்க்கட்சிகளையும் (தமிழரசுக் கட்சி உட்பட) இணைத்து இடதுசாரிகள் நடாத்தியதில் எட்வின் என்ற இளைஞன் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த இடதுசாரிகளின் போராட்டங்களையும் அவர்களது அரசியல் போக்குகளையும் மக்களின் அபிலாசைகளையும் நன்கு புரிந்து கொண்ட பண்டாரநாயக்க கிராமப்புற மக்கள் மத்தியில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர், மாணவர்கள், ஆயள்வேத வைத்தியர்கள், இளம் பௌத்த பிக்குகள் (பஞ்ச மகா பலவேகய) என்ற அணிகளை சிங்களத் தேசிய இனவாத பதாகையின் கீழ் ஒன்று திரட்டியதன் பயனாகவும் இடதுசாரிகளுடன் மேற்கொண்ட  கூட்டு ஒப்பந்தம் (மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பொதுப் பதாகையின் கீழ்) காரணமாகவும் 1956 பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கம் அமைத்துப் பிரதமரானார்.  இடதுசாரிகளுக்கு 17 உறுப்பினர்கள் கிடைத்தன. அதில் முதற் தடவையாக (கடைசியாகவும்) பருத்தித்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன் கந்தையா தெரிவானார். 

திரு பண்டாரநாயக்கா தனது 3 வருட பதவிக் காலத்திற்குள் (10-04-56 முதல் 26-09-59 கொல்லப்படும்) வரை வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை,  வேலைநிறுத்த உரிமை,  தொழிற் சங்க அங்கீகாரம், கொழும்புத் துறைமுகம் - பஸ் போக்குவரத்தும் தேசியமயப்படுத்தல், திருகோணமலை கடற்படைத் தளத்தை பிரிட்டிஸாரிடமிருந்து மீட்டல்,  சமூகக் குறைபாடுகள் சட்டம், மே தின விடுமுறை ஆகிய இடதுசாரியத்தின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றியதன் ஊடாகத் தனது கட்சிக்கு ஒரு வகையில் இடதுசாரிய முகத்தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். இதுவே ஆங்கிலப் புலமையிலும் புத்தகவாதத்திலும் ஏனைய வரலாறுகளைப் புரிந்து கொள்ளாது அவற்றை அப்படியே இலங்கையில் மறுபிரதி செய்வதிலும் முழு முனைப்புக் காட்டித் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டிருந்த இலங்கையின் இடதுசாரிகளுக்கு காலப் போக்கில் பின்னாட்களில் எமனாக வந்து அமைந்தது.   

1963களில் மாஸ்கோ-சீனா போக்கு தத்துவ வாதங்களுக்குள் தம்மைச் சிறையிட்டுக் கொண்டதால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. சீனசார்பு எடுத்தவர்கள் 1964ல் “இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என தங்களை அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள் காலப் போக்கில் ஏற்பட்ட தீவிர இனவாத தாக்கங்கள் (மலையக மக்கள் தொடர்பாக) 1965ல் இக்கட்சியை மறுபடி பிளவுபட வைத்தது. கட்சியின் பொதுச் செயலாளராக நா.சண்முகநாதன் செயற்படத் தொடங்கினார். 

1965ல் “டட்லி-செல்வா" ஒப்பந்தத்தை சி.சு.சட்சியுடன் சேர்ந்து எதிர்த்துக் கொண்டதன் ஊடாக இடதுசாரிகள் தங்களை இனவாதிகளாக இனம் காட்டத் தொடங்கினர். 1966 ஐ.தே.கட்சி அரசாங்கம் “நியாயமான தமிழ் மொழிப் பிரயோகச் சட்டம்” கொண்டு வந்த போது இடதுசாரிகள் சி.சு.கட்சியுடன் இணைந்து சனவரி 8ல் நடாத்திய வேலை நிறுத்த-ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஒரு புத்த பிக்கு கொல்லப்பட்டார்.

திரு சண்முகநாதன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோ)யில்  செயற்பட்டுக் கொண்டிருந்த ரோகண விஜயவீரா சண்முகநாதனுடன்  ஏற்பட்ட முரண்பாடுகள் (மலையக மக்கள் தொடர்பாக) காரணமாக 1966ல் சில இளைஞர்களுடன் வெளியேறி 1967ல் “ஜே.வி.பி." எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியைத் தொடங்கினார்.

திரு சண்முகநாதன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோ) வட கிழக்கு மலையகம் எங்கும் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்சி ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தது. 

அவற்றில் குறிப்பாக 1966-68 காலப்குதியில் வடபகுதியில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் ஆயுதம் ஏந்தி மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டு 10க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்படும் நிலைக்கு கொண்டு சென்றது.

1968ல் இவர்கள் இலங்கை விவசாயிகளின் தேசிய மாநாட்டை அநுராதபுரத்தில் நடாத்தினார்கள். 68-69களில் மலையகத்தைச் சார்ந்த  மே பீல்ட் (ஹற்றன்), மடக்கொம்பர (வட்டகொட, தலவாக்கொல), கீனகல (பதுளை) ஆகிய தோட்டங்களில் இக்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் போராட்டங்களின் போது கீனகல தோட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி என்ற இரு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக் கணக்கான இளைஞர்களைப் பலியாக்கி  1971 ஏப்ரலில் ஜே.வி.பி. இயக்கத்தினர் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட (ஏப்ரல்) கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதனை அடுத்துக் கைது செய்யப்பட்ட திரு சண்முகநாதன் 10 மாத சிறைவாசத்தின் பின்னர் விடுதலையாகிய பின்னணியில் 1972ல் அவரது கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு உறுப்பினாகள் பலர்  கட்சியை விட்டு வெளியேறினர். கம்யூனிஸ்ட் கட்சி(மாவோ) தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தது. 1970-77 காலப் பகுதிகளில் மலையகத்தில் நிலப்பறிப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் சிவனு லட்சுமணன் என்ற இளைஞன் கொல்லப்பட்டார். இதே காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற போராட்டம் ஒன்றில் வீரசூரிய என்ற மாணவனும் கொல்லப்பட்டான்.

1978ல் திரு சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி(மாவோ)யில் மீண்டும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர் “கம்யூனிஸ்ட் கட்சி (இடது)” என்ற பெயரில் இயங்க ஆரம்பித்து 1991ல் “புதிய ஜனநாயகக் கட்சி” ஆக பெயர் மாற்றிக் கொண்டனர். இன்னொரு பகுதியினர் “தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி” என இயங்கத் தொடங்கி பிற்பாடு திரு விஸ்வானந்ததேவன் தலைமையிலான “தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி” ஆகச் செயற்பட்டனர்.

மேற் சுட்டிக் காட்டப்பட்ட இடதுசாரித்துவ வரலாறு மக்களின் (கோரிக்கைகள்) பிரச்சனைகள் - அவற்றின் தீர்வுக்கான கொள்கைகள் - அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு கட்சி என்ற வரலாற்று உண்மைக்கு எதிரான திசையில் கட்சி-கட்சிக்கான கொள்கை-அதற்கு ஆதரவான மக்கள் என்று சென்றதன் வரலாறாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணம் இலங்கையின் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பேச ஆரம்பித்தவர்கள்-தொழிலாளர் போராட்டங்களை வடிவமைத்தவர்கள்-வழிகாட்டியவர்கள் யாவரும் இலங்கையின் வர்க்கப் போராட்ட சக்திகளைப் பொறுத்தவரை “வெளியாட்களே”. இவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தில் இருந்து கொண்டு ஒடுக்கப்படும் வர்க்கத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அந்த மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்களே ஒழிய ஒடுக்கப்படும் வர்க்கத்திற்குள் இருந்து கொண்டு  அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்காக உழைத்த பாட்டாளிப் பங்காளிகள் (தோழர்கள்அல்ல. 

ஆனால் 1980களில் வர்க்கப் போராட்டம் பற்றியும் அதற்கான முன்னணி சக்திகளையும் அடையாளம் கண்டு அதனடிப்படையில் சிந்திக்கத் தலைப்பட்டவர்களை-சிந்தித்துச் செயற்பட்டவர்களை-சிந்திக்கத் தூண்டியவர்களை 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தின் புதிய தாராளவாத பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுமுகமாக இலங்கையின் ஆளும் மேலாதிக்க அடக்குமுறை அரசியல் தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு “இனயுத்தத்தை” ஏற்படுத்தியதன் ஊடாக முற்றாக அழித்தொழித்து விட்டிருந்தது.

வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் நாட்டின் பிரச்சனைகளை அணுகுவோர் அந்தப் பொருளாதாரத்துக்கான அரசியல் அடிப்படைத் தளத்தைப் பற்றி சிந்திக்க மறப்பர். அதேபோல் பொருளியல் தவிர்த்து வெறும் அரசியல் சாசன உரிமை கோருவோர் அந்த அரசியல் சாசனத்தின் உறுதித் தளத்திற்கான பொருளாதார அடிப்படையை கவனத்தில் கொள்ளார்.

இலங்கையில் “ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே” என்பதற்கமைய வர்க்கப் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறதே ஒழிய “ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையேயான போராட்டமே வர்க்கப் போராட்டம்” என்ற வரைவின் படி வர்க்கத்திற்கான போராட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று கூறக்கூடிய நிலைதான் இன்று இலங்கையில் காணப்படுகிறது. 

எமது இடதுசாரி வழிகாட்டிகள் கருத்தைப் படித்து மனப்பாடமாக்கி அவற்றை மேற்கோள் காட்டி கட்சியை நடாத்தினார்கள். ஆனால் கருத்தை மக்களுக்குப் புரியவைத்து அவர்களை போராட்ட முன்னணி சக்திகளாக வளர்த்தெடுக்கவில்லை. மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார், மாவோ சொன்னார் என்றார்கள். ஆனால் எங்கே? எந்த காலம்? எப்படியான சூழல்? எத்தகைய சந்தர்ப்பம்? என்பதனைக் கணக்கில் கொள்ளவில்லை. அவற்றைக் கவனத்தில் கொள்ளும் வர்க்க மனப்பாங்கும் கொண்டிருக்கவில்லை. மாஸ்கோவா? சீனாவா? மாவோவா? லெனினா? என்ற விவாதங்களில் மூழ்கி அழிந்தார்களே தவிர இலங்கையின் வர்க்க சக்திகள் மத்தியில் சென்று அவர்களுடன் கூட இருந்து பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு போராட்ட முன்னணி அரணைக் கட்டி வளர்க்கத் தவிறிவிட்டனர்.

இன்று உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் உலக நாடுகளின் மக்கள் அதிருப்திக்குட்பட்டுள்ளனர். மக்களின் வெறுப்பை சமாளிக்கும் வகையில் முற்போக்காக காட்டும் மாயத் தோற்றங்கள் கொண்ட புதிய அரசியல் வடிவங்களை புதிய உலகத் தாராளவாத பொருளாதாரத் தரகர்கள் அந்தந்த நாட்டு அரசியலில் உருவாக்கி வருகிறார்கள். அதற்கேற்ற விதங்களில் மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும்-மயக்கும் வகையிலான பிரச்சாரங்களையும் அரசியல் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதனால் மக்கள் மின்விளக்கு வெளிச்சத்தைக் கண்டு மகிழ்ந்து அதனைத் தேடி ஓடி மடியும் விட்டில் பூச்சிகளாகின்றனர். 

பொருளாதாரத்தின் அடிப்படை-அதன் மூல ஊற்று ஒரு மனிதனுடைய உயிரிலிருந்தே தொடங்குகிறது. அந்த மனித உழைப்பின் பெறுமானமாக கிடைக்கப் பெறும் வருமானம் அவன் வாழ்வதற்கான வாழ்வாதாரத்திற்குப்ப யன்படுத்தப்படாமல் ஒரு சிலரால் கொள்ளையடிக்கப்டுகிறது.

இத்தகைய சூழலில் நாட்டின் “சுரண்டப்படும் வர்க்கம்” அதாவது இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெதுவுமற்ற மக்கள் கூட்டத்தை அடையாளம் காணவேண்டும். நாட்டுப் பொருளாதாரத்தின் முதலும் முக்கியதுமான மூலாதார வளம் அந்த மக்களின் உழைப்பு என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி அவர்களுக்கு நடைமுறையில் அறிவூட்டி அவர்களை விழிப்புணர்ச்சி கொள்ளச் செய்யவேண்டும்.

அடிப்படை மாற்றத்தின் ஊடாகவே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒவ்வொரு கிராமத்திலும்-மூலை முடுக்குகளிலும் வாழ்பவர்கள் தத்தமது ஊரைப் புரிந்து கொண்டு அதன் பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் தீர ஆராய்ந்து புரிந்து கொண்டு அவற்றிற்குரிய விடைகளை கண்டடையும் போதுதான் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளமான - உந்து சக்தியான பாமர பாட்டாளி மக்களின் ஆதரவும் ஆதாரமும் பலமும் உருவாகும்.

இதனைச் செயற்படுத்துவதற்கு-முடுக்கிவிடுவதற்கு-வழிகாட்டுவதற்கு கட்டாயம் ஒரு கட்சிக் கட்டமைப்புத் தேவை. அது ஒரு வர்க்கக் கட்சியாக கட்டமைக்கப்படல் வேண்டும். கட்சி வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். அது காட்டும் பாதையை அமைப்பவர்கள் மக்களாக அமைய வேண்டும். மக்கள் மத்தியில் போராட்டப் பாதையை அமைக்கும் பணியை நெறிப்படுத்துவதற்கு உறுதியான கருத்துத் தெளிவுள்ள தீரமிக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்னணித் தோழர்கள் உருவாக்கப்படல் வேண்டும். கட்சியின் வழிகாட்டுதலும் முன்னணித் தோழர்களின் நெறிப்படுத்துதலும் இணையும் போதுதான் மக்கள் விடுதலை மலரும். இந்த போராட்ட நடைமுறையில் முன்னெடுத்துச் செல்பவர்கள் வழிநடத்துவதும் வழிவகுப்பவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் தவிர்க்க முடியாத இயங்கியல் நியதி.

வர்க்கக் கட்சியின் கட்டுமானம் சுரண்டப்படும் மக்களை ஆதாரமாக-அடித்தளமாக-அத்திவாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும். கருத்துக்கள் மக்கள் மத்தியில் சிந்தனைக்கு விடப்பட்டு அவர்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகளின்  நடைமுறைத் தீர்வுகள் ஊடாக பரீட்சிக்கப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் வடிவமைக்கப்படல் வேண்டும். இந்த இயங்கியல் நடைமுறையை ஒழுங்கமைப்பதும் மேற்பார்வை செய்வதும் செழுமைப்படுத்துவதுமே கட்சியின் பணிகளாகும். வர்க்கக் கட்சி என்பது ஒரு நிறுவனமல்ல. அது ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறையாகும். மக்கள் தாங்கள் வாழும் முறைமையை-வாழ்கையைப் பாதுகாக்க அதனை உத்தரவாதப்படுத்த வீறுகொண்டு அணிதிரண்டு எழுச்சியுடன் முன்னோக்கி நகருவதற்கான சகல வசதிகளையும் வளங்களையும் ஏற்படுத்தித் தருவதே ஒரு வர்க்கக் கட்சியின் முதலும் முக்கியமானதும் முடிவானதுமான பணியாகும்.

கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும் என்பதனை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காட்டும் ஒரு பரீட்சார்த்தக் கூடமே வர்க்கக் கட்சி. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்கான வளங்களும் அதனைப் பாதுகாக்கக் கூடிய தளங்களுமாக மலையக மக்களும் மலையகமும் இருந்ததை அன்றைய அந்நிய காலனித்து எசமானர்களும் அவர்களது அடிவருடிகளான சுதேசிய முதலாளிகளும் புரிந்து கொண்டு செயற்பட்ட போது அன்று இடதுசாரிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்தியிருந்தவர்கள் வாய் வீச்சு அரசியலையே மேற்கொண்டிருந்தனர். பின்னர் இடதுசாரிக் கட்சிகள் மலையகத் தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணுகாமல் அவர்களை இனரீதியாக இனங்கண்டு கொண்டதன் காரணமாக அந்த மக்களை வர்க்கப் போராட்டத்திற்கு உட்படுத்தாமலேயே வைத்திருந்தனர். இந்த வகைப்பட்டோரைத்தான் லெனின் ஒரு கட்டத்தில் “இந்த மார்க்ஸிய வாதிகளெல்லாம் சமூகக் கிராதகர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இலங்கையில் நாடாளாவிய அடிப்படையில் வர்க்கப் போராட்டம் நடாத்த முனைவோர் தமிழர்-சிங்களவர்-மலையகத்தார்- இஸ்லாமியர்-ஆதிவாசிகள் என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு சாதி-சமய-பால்-பிராந்திய வேறுபாடின்றி வர்க்க ரீதியில் சுரண்டப்படும் மக்களின் உரிமைக்காக மட்டும் அல்லாமல் அவர்களின் சமூக உடைமைக்காகவும் போராட வேண்டும். அந்த வகையில் போராட்டத்தை முன்னெடுக்கும் போது மலைகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வர்க்கப் போராட்டத்தில் அதன் முள்ளந் தண்டாகவும் முதுகெலும்பாகவும் மட்டுமல்ல முன்னணியினராகவும் விளங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

இன்று இலங்கையில் கல்வி-சுகாதாரம்-விவசாயம்-மீன்பிடி-வர்த்தகம்-உற்பத்தி-தொழில் அபிவிருத்தி போன்ற துறைகள் யாவும் மக்களுக்கு எதிரானதாகவே திசை திருப்பப்பட்டுள்ளன. மாணவர்கள்-வர்த்தகர்கள்-கலைஞர்கள்-புத்திஜீவிகள்-நிபுணர்கள்-பெண்கள்-சிறுவர்கள்-இளைஞர்கள்-மாற்றுத் திறளாளிகள்-நிலமற்றோர்-வீடற்றோர்-கைதிகள்-கடத்தப்பட்டோர்-காணாமற்போனோர்-காணி பறிக்கப்பட்டோர்-ஊடகவியலாளர் என நாட்டின் குடிமக்கள் யாவருமே பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ளனர். 

எனவே இந்த மக்களின் பிரச்சனைகளை மானிட நேயத்துடனும் மக்கள் நேசத்துடனும் அணுகி அலசி ஆராய்ந்து அவர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களின் சுதந்திர-சுபீட்ச-சுய வாழ்வுக்குக்கான போராட்ட பாதையில் அவர்களை நெறிப்படுத்திச் செல்வதற்கான ஒரு வர்க்கக் கட்சியின் தேவையும் அத்தியாவசியமும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இன்று அதி உச்ச நிலையில் காணப்படுகிறது.

சொல்வது கட்சி – நடைமுறைப்படுத்துவது போராளிகள் - உறுதிப்படுத்துவது மக்களே!