Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிற்போக்கான சமுதாய வழக்கங்களினால் நலமடிக்கப்படும் மனிதர்கள்…

இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிகழ்வுகள் பல நாடுகளில் நடைபெறுகின்றது. அது நாளை எங்கே எப்படி வெடித்தெழும் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மக்கள் எழுச்சியினை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நலனுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறம்.., ஆனால் அதிகார வர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு மக்களை பார்த்து சற்று பயப்பட ஆரம்பித்துள்ளது.

 

உலக முதலாளித்துவம் கோடிக் கணக்கில் பணத்தை தமக்குள் பதுக்கிக் கொள்ள, மக்கள் தங்கள் உரிமைகளையும், தாங்கள் அனுபவிக்க வேண்டிய பொருளாதாரத்தினை இந்த சுரண்டல்வாதிகளிடம் பறி கொடுத்து விட்டு நாளாந்த வாழ்க்கையினை ஓட்ட முடியாது, செக்கில் கட்டப்பட்ட மாடாட்டம் தினந்தினம்  உழைத்துழைத்து தன்னை வருத்தி தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மாடாக உழைத்தும் எதையும் அனுபவிக்க முடியாமல் இறுதியில் மனம் சோர்ந்து – உடல் சோர்ந்து விடுகிறான். ஆனால் இந்த சோர்ந்த மனிதனிடம் தான் இந்த உலக அதிகார வர்க்கத்தினை ஆட்டிப் படைக்கும் சக்தி இருக்கிறது. இது இந்த அதிகார வர்க்கத்திற்கு நன்கே தெரியும். அதனால் தான் மக்களை ஒன்று சேரவிடாது பல வழிகளில் கூறு போடுகிறார்கள். இதற்காக இந்த அதிகார வர்க்கம் பல யுக்திகளை அன்றிலிருந்தே செயற்படுத்தி வருகிறது. மக்களின், குறிப்பாக இளம் சந்ததியினரின் அறிவையும், சிந்தனையினையும் பரந்த அளவிற்கு போகவிடாமல் மட்டுப்படுத்தி வைத்திருக்க பல வழிகளில் முயன்று வருகின்றார்கள். இங்கு அவர்கள் பயன்படுத்துவது மதச்சிந்தனைகள், பாலியல் உணர்வினை தூண்டும் வழிமுறைகள், குடி – போதைவஸ்த்து.., இப்படி பலவற்றை கூறலாம்.

மனிதனின் அறிவையும் சிந்தனையினையும் தடுத்து நிறுத்தி, ஒருவனுடைய மனதை திசை திருப்புவதில் பாலியல் மிக முக்கியமான ஒன்று. புகைப் பிடித்தல், குடி போன்ற பழக்கமில்லாத மனிதனுக்கும் பாலியல் உணர்வு பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது. மனிதனுடைய பாலியல் உணர்வினை தூண்டி விடுவதற்கு ஏற்றாற் போல் கவர்ச்சிப் படங்கள், தொலைகாட்சி நிழ்ச்சிகள், கணனி விளம்பரங்கள் – பாலியற் காட்சிகள், திரைப் படங்கள்.., இப்படி நிறையவே இன்றைய நாளாந்த வாழ்க்கையோடு இணைக்கப்பட்டு விட்டது. இப்படி ஒரு சூழலிலே மனிதன் தன் உணர்வினை கட்டுப்படுத்தி, தன்னை பாதுகாத்து மற்றவர்களை பாதிக்காது வாழ மிகவும் போராடுகிறான். இதில் முக்கியமாக இளம் சமூகத்தினருக்கு இது மிகவும் பிரச்சனையான விடையம். அதிலும் தமிழனாக பிறந்தவர்களுக்கு இது தண்டனையாகவே மாறிவிடுகிறது.

பெரும்பாலும் தமிழர்கள் தங்கள் அடையாளத்தினை மறந்தவர்கள் இல்லை. கூடுதலாக தங்கள் பிள்ளைகளையும் தமிழன் என்ற அடையாளத்தோடு, பிள்ளைகளின் எதிர்காலத்தினை நல்ல வழியில் நெறிப்படுத்தும் வகையில் கல்வி, தொழில், பொருளாதாரம்.., என்று பிள்ளைகளைப் பற்றியே சிந்தித்து பிள்ளைகளுக்காவே வாழ்கிறார்கள். ஆனால் இதே மனிதன்தான் பல மடமைக்குள்ளும் மூழ்கி கிடக்கின்றான். பெற்றோர்களின் விருப்பங்களை மதித்து அவர்களின் எதிர்பார்ப்புப் படி தன்னை அமைத்துக் கொள்ளும் பிள்ளைக்கு பெற்றோர் பலர் சிறைத் தண்டனையினையே ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். சாதி, சமயம் என்ற பிரிவுகளால் அந்த இளம் பிள்ளைகளின் உணர்வுகளை சிறைப்படுத்தி வைத்துள்ளார்கள். அப்படியிருந்தும் பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு துணை எற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையில் தனக்குள் கனவுகளோடு பெற்றோர்களின் பிள்ளைகளாக பல இளம் நெஞ்சங்கள் காலத்தினை நகர்த்தி வருகின்றார்கள்.

பெற்றோர்களை குறை சொல்லவில்லை. அவர்களும் தேடுகிறார்கள், ஊருராய் தேடுகிறார்கள் – நாடு நாடாய் தேடுகிறார்கள். தன்ரை சாதிக்குள் தேடுகிறார்கள் – கல்வித்தரதோடு தேடுகிறார்கள் – நல்லபழக்கத்தோடு, அழகோடு தேடுகிறார்கள். படத்தை காட்டி பிள்ளைகளின் விருப்பத்தையும் அனுமதியினையும் பெற்று விடுகிறார்கள். அங்கு சீதனத்தினையும் ஏதோ ஒரு வழியில் சரி செய்து விடுகிறார்கள். விரைவில் திருமணம் என்று பிள்ளைகளும் கனவுகாண, எல்லாம் பொருந்தி வந்தும் பொருத்தம் பொருந்தவில்லை..! இது பெரியவர்களின் இரத்தத்தில் ஊறிப் போன பழக்கத்தில் ஒன்று தானே, அதனாலை அவர்களுக்கு இதனால் பாதிப்பில்லை. மீண்டும் சாதி, சமயம், கல்வி, ஒழுக்கம், சீதனத்தோடு தேடுதலை தொடர்கிறார்கள். ஆனால் இந்த தேடுதல் எவ்வளவு காலம் தொடரும், எப்போது முடியும் என்பது அவர்களுக்கும் தெரியாது, யாருக்குமே தெரியாது.

ஆனால், இந்த இளம் சந்ததியினரின் நிலமை..? பக்கத்திலே அழகான பெண்டாட்டி இருக்க, குரங்கு மாதிரி கூத்தியாள் தேடி அலைகிற மனிதர்கள் மத்தியில், உணர்வுகள், உணர்ச்சிகளோடு தினம் தினம் காயும் இந்த இளம் மனிதர்களை யாரும் புரிந்து கொள்வதில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் எனது கௌரவம், எனது சாதி, எனது சமயம், சீதனம் – பொருத்தம்.., இதை மீறி என்னால் வர முடியாது, இதைவிட்டு வெளியில் என்னால் சிந்திக்க முடியாது என்று அடம் பிடிக்கும் இந்த மடமை சூழ்ந்த மனிதர்கள் மத்தியில் எத்தனை பேர் நலமடிக்கப்பட்டவர்களாக திருமணமின்றி, தனிமையாக தங்கள் வாழ்கையினை ஓட்டுகின்றார்கள். இன்னும் சிலர் காலம் கடந்த திருமணத்தினால் குழந்தைப் பேறில்லாமல் இருக்கின்றார்கள். எங்களுடைய மூடநம்பிக்கை ஏமாற்றுபவனுக்கு ஆதாயமாக அமைவதோடு எத்தனை உயிர்களை துன்பப் படுத்துகின்றது. தவறை புரிந்து எங்களை மாற்றிக் கொண்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்கையாவது இப்படிப்பட்ட பாதிப்புகள் இல்லாததாக அமையும்.  

-தேவன்.

13/12/2011