Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

பட்டு வேட்டிக்குள் பாவங்களை மறைக்கலாம்…!

கொள்ளையடிக்க விரும்புபவர்கள் கொள்ளையடிக்கலாம். கொலை செய்ய விரும்புபவர்கள் கொலை செய்யலாம். பெண்களை கற்பழிக்க விரும்புபவர்கள் கற்பழிக்கலாம். நீங்கள் இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் எந்தத் தடயங்களும் இல்லாமல் செய்தால் பாவங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வாரத்திற்கொரு முறை விரதமிருந்து கோவிலுக்கு சென்று வந்தால் போதும் எல்லாப் பாவங்களும் தீர்ந்துவிடும்.

 

பணம், அந்தஸ்த்து, அதிகாரம் உங்கள் கையில் இருந்தால், கருவறைக்குள் சென்று தனித்து நின்று கடவுளோடு பேசலாம். பொருளாதார நெருக்கடி எங்களுக்கு மட்டுமில்லை கடவுளுக்கும் தான்.., வசதியுள்ளவரை கடவுள் முதலில் கவனித்து விடுகிறார். வசதிபடைத்த நாடுகளில் இருக்கிற அல்லது புகழ் பெற்ற கோவில்களில் இருக்கிற கடவுளுக்கு சக்தியும் அதிகம்.

வன்னி மக்களும் எத்தனை கோவிலுக்கு போய் வந்தினம். எப்படியெல்லாம் விரதம் பிடிச்சனம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களே கையெடுத்துக் கும்பிடுகிற தேசியத் தலைவரையே வன்னிக் கடவுளால் காப்பாற்ற முடியாமல் போயிற்று..! பாவம் வன்னிக் கடவுள். அவரைக் குறை சொல்லக் கூடாது. பணபலம் கொண்ட திருப்பதியானோடு போட்டி போட அவரால் முடியுமா?.  இத்தனை அழிவுகளையும் அவரால் பார்த்துக் கொண்டிருக்க மட்டும் தான் முடிந்தது.  கொடிய நோய்களையே  இலகுவாக தீர்த்து வைக்கின்ற புலம்பெயர் நாடுகளிலுள்ள பிள்ளையார், அம்மனுக்கு இருக்கிற சக்தி கூட வன்னிக் கடவுளுக்கு இல்லாமல் போயிற்று. எல்லாம் பொருளாதார நெருக்கடி தான்..!

ஆனால் எங்கடை ஜனாதிபதி புத்திசாலி. ஆயிரக் கணக்கிலே அப்பாவி மக்களை கொன்று குவித்தார். சரணடைந்து தஞ்சம் கேட்டவர்களை எல்லாம் கொலை செய்தார். எத்தனை தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கற்பழித்து…, மன்னிக்கோனும். ஜனாதிபதி ஐயா அந்தளவு கேவலமானவரில்லை. செய்ததெல்லாம் இராணுவம் தான். சுகத்தை மட்டும் தான் ஐயா அனுபவிக்கிறார். எல்லாம் திருப்பதியானுடைய அருள்.

ஆனால் மகிந்தா ஐயாவிற்கும் கவலைகள் உண்டு. எல்லா மக்களையும் சுதந்திரமாக வாழவைத்து விட்டன். ஆனால் நான் மட்டும் சுதந்திரமாக திரிய முடியவில்லை என்ற கவலை. திருப்பதிக்கு சென்றால் திருமாவளவன் கத்துறான். லண்டனுக்கு சென்றால் போர்க் குற்றவாளி என்று சுத்தி வளைக்கிறாங்கள். இதை எல்லாம் யாரிட்ட முறையிட முடியும், திருப்பதியானை விட்டால்..?

‘ நீயே யோசிசுப்பார், புலிகள் பிள்ளையளைக் கடத்திறாங்க.., எல்லாரையும் கொல்லுறாங்க.., காசைப் பறிக்கிறாங்க…
என்று சொல்லி இவங்க தானே கத்தினவங்க. இவங்கட கதையைக் கேட்டு நான் புலிகளை கொன்ற பிறகு இப்ப என்னை போர்க் குற்றவாளி என்கிறாங்க. அப்படி என்ன தான் நான் செய்திட்டன். புலியளை கொல்லேக்கை ஒரு இருபது முப்பதாயிரம் சனம் செத்துப் போச்சு… ஐஞ்சாறு பெட்டையளோடை என்ரை ஆமிக்காரர் கொஞ்சம் கண்டபடி நடந்திட்டாங்க. அவங்களும் இந்த சனங்களுக்காகத் தானே மனிசிமாரையும் விட்டிட்டு காட்டிலை இருந்து கஸ்ரப்பட்டவங்க, ஒரு இரண்டு பேரை அனுபவிச்சா என்ன தமிழினம் அழிஞ்சா போயிடும்..? சரணடைந்த போராளியளைக் கொண்டிட்டன் என்று கத்திறாங்க, அவங்கள் தான் தங்களுக்கு சயனைட் குடிக்க பயமாயிருக்கு, நீங்களே கொண்டிடுங்க என்டாங்க. நடேசனுக்கு அரசியல் துறைப் பொறுப்பும் புலித்தேவனுக்கு சமாதான செயலகப் பொறுப்பாளர் பதவியும் என்னட்டை இருக்கே..? இருந்ததை கருணாட்டையும், பிள்ளையானிட்டையும் கொடுத்திட்டன். டக்கிளஸ் யாழ்ப்பாணத்தை புடுங்கீட்டான். பத்தாக் குறைக்கு கேபி கழுத்தறுக்கிறான். இலங்கை என்ன உங்கடை இந்தியா மாதிரியே..? ஒரு சின்ன நாட்டை வைச்சுக் கொண்டு எத்தினை பேருக்கு பதவியைக் கொடுக்கிறது..? அதுக்குள்ளை வேறை தேசியத் தலைவர்..! என்ரை தலைவர் பதவியே ஆட்டம் போட்டொண்டு இருக்கு. இதில தேசியத் தலைவரை வைத்துக் கொண்டு நான் என்ன பண்ணிறது. அதுக்காக நான் ஒருத்தரையும் கொல்லச் சொல்லேல்லை. என்னாவது பண்ணுங்கோ எண்டு தான் சொன்னனான். அவங்கள் சண்டைக் களைப்பிலை கட்டை அடிச்சிட்டு நிண்டவங்க. போதை மயக்கத்திலை கொஞ்சம் தாறுமாறாய் பண்ணீட்டாங்க. எல்லாத் தலையிடியும் எனக்கு தான்.

இந்தியக் கிழவனையும் நம்பேலாது, சைனாக் கிழவனையும் நம்பேலாது..! மனிசரிலை இருக்கிற நம்பிக்கை போயிற்றுது. நீதான் எப்படியாவது என்னை காப்பாத்த வேணு…” கையிலை பூசாரி வைத்த லட்டு மகிந்தாவை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு லட்டை வாயிலே போட்டு விட்டு பட்டுச் சால்வையால் உடம்பை போர்த்திக் கொண்ட மகிந்தாவை திருப்பதியானும் தனக்கு நல்ல வருமானம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் புன்சிரிப்போடு அனுப்பி வைத்தார். பாவங்களெல்லாம் பட்டு வேட்டிக்குள்ளேயே மறைஞ்சு போச்சு…!

தேவன்

15/04/2011