Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

நத்தார்விழா கொண்டாட்டமும் ஐரோப்பிய மக்களும்….!

நத்தார், புதுவருடம் வந்துவிட்டால் ஐரோப்பாவின் தெருக்கள் எல்லாம் விழாக்கோலம் பூண்டுவிடும். விதம்விதமான அலங்காரங்கள், பல வர்ணங்களில் மின்விளக்குகளின் சோடனைகள் என்று பார்ப்பவர்களை அந்த இடத்தில் சிலையாக நிற்க வைத்துவிடுகிறது. கண்ணை கவரும் இந்த அலங்காரங்கள் ஓரிரு நாட்கள் இல்லை ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்திருக்கும். இதற்காக பல இலட்சங்களை இந்த ஐரோப்பிய அரசுகள் செலவிடுகின்றன.

கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஐரோப்பாவில் மிகவும் இருள் சூழ்ந்த நாட்கள். மழை ஒருபுறம், பனி ஒருபுறம் போட்டி போட்டுக் கொண்டு மக்களை குளிரிலே உறைய வைத்துவிடுகிறது. காலையில் அலாரம் அடித்துவிட்டால் கொலை வெறி வந்து விடுகிறது அலாரம் மேல். இன்னும் சிலமணி நேரங்கள் போர்வைக்குள் ஒளித்து கொள்ள வேண்டும் போல் ஆசை. வெளியிலே கால் வைப்பதென்றால் தற்கொலை செய்ய முயற்சிப்பது போன்ற உணர்வு. கோடை காலத்தில் சொர்க்க பூமியான ஐரோப்பியாவிலே இப்படியொரு கொடூரமான நாட்களா?

 

உற்சாகமும் சுறுசுறுப்பும் ஐரோப்பிய மக்களுடன் கூடவே பிறந்தது. கடின உழைப்பு அவர்களின் இரத்தத்திலே ஊறிப்போனது. ஐரோப்பா மண்ணின் பொலிவும் வளர்ச்சியும் இந்த மக்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதே. அப்படிபட்ட இந்த மக்களின் உற்சாகத்திற்கு சவாலாகிவிடுகிறது இந்த ஐரோப்பிய குளிரும் அதனையும் மீறிய இருளும். இப்படிப்பட்ட மாரிகால இருளும் குளிரும் மக்களின் மனதை சோர்வடையவிடாது குதூகல உணர்வோடு வைத்திருப்பதே இந்த சோடனைகளும் வீதிகளின் அலங்கார மின்விளக்குகளுமாகும். இந்துக்களுக்கு தீபஒளி, கார்த்திகை விளக்கீடு போன்று ஐரோப்பிய மக்களுக்கு மிகவும் முக்கியமானது இந்த நத்தார் அலங்கார மின்விளக்குகள்.
வருசம் பூராகவும் உழைத்து உழைத்து தங்களை வருத்திக் கொண்டிருக்கும் இந்த ஐரோப்பிய மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது நத்தாரையும் புதுவருடத்தையும் தான். இந்த நத்தார்திருநாளில் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வதென்பது அவர்களுக்கு மிகவும் பிரியமான ஒன்று.
ஆனால் ஐரோப்பிய மக்களின் இந்த நியாயமான எதிர்பார்ப்பும் சந்தோஷமும் இன்று சற்று ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சி, தொழிற்சாலைகளின் இடமாற்றம், வேலையில்லாத நிலமை இந்த மக்களை பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக ஆக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்ப உறவினர்களுக்கு கூட எதையும் வாங்க முடியாதவர்களாக பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஸ்ன்டினேபியன் நாடுகளில் ஒன்று டென்மார்க். எல்லா மக்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நாடு டென்மார்க். வளர்ச்சியடைந்த பல உலகநாடுகள் கூட டென்மார்க்கில் மக்களின் சந்தோஷமான வாழ்க்கையினைப் பற்றி பல அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. டெனிஸ் மக்களும் பழகுவதற்கு இனிமையானவர்கள். வெளிநாட்டவர்கள், அகதிகளோடு பல உதவிகள் செய்வதும் அன்பாக பழகுவதும் டெனிஸ் மக்களது மிக உயரிய பண்புகளில் ஒன்று. டெனிஸ் மக்களைப் பொறுத்த வரையில் நத்தார் திருநாள் என்பது  அவர்களது எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிறைந்த மிகப் பெரிய கொண்டாட்ட  தினமாகும்.  பாடசாலைகள், தொழிற்சாலைகள், வியாபரஸ்தலங்கள்…., என்று சகல இடங்களிலும் சிறுபிள்ளைகள் முதல் வயோதிபர்கள் வரை கார்த்திகை மாதமே நத்தார் விழாவினை கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை ஆரம்பித்துவிடுவார்கள். மார்கழி 24 பிற்பகல் பிள்ளைகளை, உறவினர்களை, குடும்ப நண்பர்களை அழைத்து வகைவகையான உணவுகளை சமைத்து ஒன்றாக சாப்பிட்டு பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வது அந்த மக்களின் வழமையான ஒரு பழக்கம். கடுமையான குளிரிலும் பனியிலும், கடின உழைப்பிலும் தங்களை வருத்திக் கொண்டிருக்கும் அந்த மக்களில் பலர் இன்று, அவர்களின் நியாமான சந்தோஷத்தினை அனுபவிக்க முடியாமல் உள்ளார்கள். வேலையின்மை, போதிய வருமானம்
இன்மை இந்த அப்பாவி டெனிஸ் மக்களை இப்படிப்பட்ட அவதி நிலைக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது.

அடிமட்டத்தில் வருமானம் குறைவானவர்களுக்கு நத்தார் கொண்டாட்டத்திற்கு சிறு உதவித் தொகையினை கொடுத்து உதவுவது டெனிஸ் அரசாங்கத்தில் வழமையான ஒரு செயற்பாடு. ஆனால் இந்த வருடம் பலர் உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். இதற்கு பொறுப்பாக இயங்கும் ‘கிறிஸ்ரீனா ற்ரூ றீஸ்” என்பவர் இதுவரையில் 10000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நத்தார் நெருங்க நெருங்க உதவி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வானொலியில் செய்தி வெளியிடப்படுகிறது.
நாத்தார் காலத்தில் ‘கிறிஸ்மஸ் தாத்தா” வீதிகளில், வியாபார நிலையங்களில், மற்றும் பொது இடங்களில் நின்று சிறிய பரிசுப் பொருட்கள், இனிப்புவகைகள் கொடுத்து குழந்தைகளை மகிழ்விப்பதுண்டு. இந்த வருடம் பல வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இந்த உதவியினை கிறிஸ்மஸ் தாத்தாவிற்கு வழங்க முன்வரவில்லை. இதற்கு பொறுப்பான நிறுவனம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் இன்று வறியவர்களின் விகிதம் அதிகரித்து வருகின்றது. வேலையின்மை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. உயர்கல்வியினை முடித்து கொண்டு ஓரிரு வருடங்கள் ஏதாவது வேலை செய்து பணம் சேமித்துக் கொண்டு பின்னர் தங்கள் பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் இன்று வேலை எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றார்கள். இது அவர்களை தவறான பாதைக்கு செல்ல வழி அமைத்துக் கொடுக்கிறது. மற்றும் வீடற்றவர்களின் எண்ணிக்கை இப்போது 5000 வரை அதிகரித்துள்ளதாக டென்மார்க் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஐந்தில் ஒரு பகுதியினர் வெளிநாட்டவர்கள். இவர்கள் பக்கத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்;. குளிர்காலம் என்பதால் இவர்களுக்கான தற்காலிக தங்குமிடத்தினை வேறு நிறுவனத்தினர் ஒழுங்கு செய்து கொடுத்து வருகின்றார்கள்.

இன்று பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள டென்மார்க் அரசு தன்னுடைய இயலாமையினால் செய்வதறியாது, மேலும்மேலும் பொதுமக்களுடைய சலுகைகளை நிறுத்தி புதிய சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் மக்களுடைய அன்றாட வாழ்க்கையினை பலவழிகளில் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றது. கல்வி, மருத்துவம் போன்ற மக்களுடைய அன்றாட தேவைகள் புதிய சட்டங்களினால் இறுக்கப்படுகின்றது. குடும்ப இணைப்புச் சட்டம் புள்ளி அடிப்படையிலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டும் பல புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த முதலாளித்துவ அரசினால் தினம்தினம் கொண்டு வரும் புதிய சட்டங்களாலும், பாரிய பொருளாதார வீழ்ச்சியாலும் டென்மார்க் மக்களுடைய எதிர்காலம் வறுமையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.