Sun10022022

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்

கடந்த 7ம் - 8ம் திகதிகளில் தலைநகர் கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில் “இலங்கை பொருளாதார மன்றம் 2016” என்னும் தலைப்பில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. உள்நாட்டு ஊடகங்கள் இதற்கு பெரிய முக்கியத்துவம் அளித்திருக்கவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் இந்நிகழ்விற்கு அதிமுக்கித்துவம் அளித்திருந்தன. இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பன்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், 600 வரையான உள்நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச முதலீட்டாளர், திறந்த சமுதாயம் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் சோரஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டீகிளிட்ஸ் மற்றும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரும் பிரித்தானிய அரசியல்வாதியுமான நிர்ஜ் தேவா போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வினை வழிநடத்திய முக்கிமானவர்கள் ஆவார்.

நிகழ்வை  தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் இலங்கையினை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் முன்னெடுத்து சென்று இந்து சமுத்திரத்தில் துபாய்க்கும், சிங்கப்பூரிற்கும் இடையில் இலங்கையை ஒரு மெகா பொருளாதார நகரமாக உருவாக்க வேண்டும்; அதனை செய்யப்போகிறோம் என்றார். மேலும் இலங்கை தெற்காசியாவில் திறந்த பொருளாதாரத்தை தளுவியுள்ள முதல் நாடு எனவும் தமிழ் நாட்டுடனும், குஜராத் போன்ற இந்திய மாநிலங்களுடனும் பொருளாதார இணைப்புகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் இந்த நிகழ்வு குறித்து அறியக்கிடைக்கின்ற தகவல்களின் படி இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கத்திய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் பொருளாதார நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு இலங்கையில் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி என்ற கோதாவில் நவதாராளவாத பொருளாதார திட்டத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எவ்வாறு தீவிரமாக முன்னெடுத்து செல்வதற்க்காக அரசியல் மாற்றங்கள், தேசிய இனப்பிரச்சனை, அரசியல் கைதிகளின் விடுதலை என பல விடயங்கள் குறித்து இந்த கருந்தரங்கிற்கு அப்பால் தொடர்ச்சியாக பல மூடிய அறைக் கூட்டங்களை மேற்கத்திய முதலீட்டாளர்கள், பொருளாதார நிபுணர்கள், பிரதமர் ரணில் மற்றும் உள்நாட்டு நிபுணர்களுக்கிடையே நிகழ்ந்துள்ளது தெரியவருகின்றது.

மேலும் நிபுணர்கள் கொழும்பிலுள்ள நைக்கி மற்றும் விக்ரோரியா சீக்ரட்ஸ் ஆகிய நிறுவனங்களிற்கு உடைகள் தயாரிக்கும் வெளிநாட்டினருக்கு சொந்தமான இரண்டு ஆடைத் தொழிற்சாலைக்கும், ஒரு ரயர் தொழிற்சாலைக்கும் அழைத்துச்செல்லப்பட்டு அவற்றினை விஸ்த்தரிப்பதற்க்கான ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்க்காக சில பரிந்துரைகளை வழங்கி உள்ளதுடன் அவற்றை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கின்றது.

பரிந்துரைகளாக அறியப்படுபவை

தேயிலை, றப்பர் போன்ற விவசாயத்துறைகள் முன்னரைப்போன்று அதிக அந்நிய வருவாயை ஈட்டித்தரும் துறையாக இன்று காணப்படவில்லை. இத்துறையில் அதிக அளவிளான மனித உழைப்பு சக்தி வீணடித்து கிடக்கின்றது. மனித உழைப்பு சக்தியை வேறு துறைக்கு பயன்படுத்து குறித்து செயற்திட்டங்களை மேற்கொள்வதுடன், இந்த விவசாயத்துறையில் ஒரு நிர்வாக கட்டுமான மற்றும் அமைப்பு மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் உடனடியாக ஏற்ப்படுத்த வேண்டும

இலங்கையில் வருமானத்திற்கு ஏற்றவகையில் நகரமயமாக்கல் நடக்காத சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கிராமங்களை நகரமயமாக்கல் குறித்து உடனடியாக வேலைத்திட்டத்தை உருவாக்கல்

சுற்றுலா, கணணி அறிவு, புதிய தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகியவை வளர்த்தெடுக்கப்பட்டு சகல பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கும் இன வேறுபாடுகளை கடந்து வேலைகள் வழங்கும் பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

கொழும்பை அண்டியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளை, நிறுவனங்களை நாடு முழுவதும் பரவல் படுத்தும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டங்களை வகுத்து செயற்லாற்றுதல்.

மேலும் இத்திட்டங்களை அமூல்படுத்த நாட்டில் அறவிடப்படும் வரி வீதத்தை கூட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுடன்; நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை அகற்றல், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணல், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியவையும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலுள்ள திட்டங்களையும், ஆலோசனைகளையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ நாட்டின் நன்மைக்கான கரிசனைகள் என்று எல்லோரும் கருத இடமுண்டு. இது உண்மை அல்ல.

காலனியத்தை முன்னெடுத்த காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், புகையிரத பாதைகளை அமைத்து தேயிலை, கோப்பியை பயிரிட்டு எல்லோருக்கும் கல்வியை வழங்கி, வேலை கொடுத்து, நாட்டை அபிவிருத்தி செய்வது போல பாவனையில் பல நூற்றாண்டாக ஆட்சி செய்து வளங்களையும், செல்வங்களையும் கொள்ளை இட்டதுடன் மனித உழைப்பை உறுஞ்சி எடுத்து பெரும் கொள்ளையிட்டதன் பின்னர்; இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏற்ப்பட்ட நெருக்கடி, உள்நாட்டு சுதேதிகளின் போராட்டம் காரணமான நாட்டை விட்டு வெளியேறிய போது இனப்பிரச்சனை தோன்றுவதற்க்கான அடித்தளத்தை இட்டு விட்டே வெளியேறியது.

இன்று மீளவும் உலகத்தை கொள்ளையிட நவதாராளவாத பொருளாதார கொள்கையுடன், எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்படும் உள்ளுர் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பொருளாதார உதவி, அபிவிருத்தி என்ற பெயரில் செல்வங்கள், வளங்கள், மனித உழைப்பினை கொள்ளயிட பல்வேறு திட்டங்கள் ஆலோசனைகளை முன்வைத்து நாக்கை தொங்க விட்ட வண்ணம் வலம் வருகின்றனர்.

இலங்கையில் நவதாராளமயமாக்கலின் முதல் படியாக 1978ல் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது மிகவும் மந்தமாக முன்னெடுக்கப்பட்டதுடன், இன முரண்பாடு காரணமாக எழுந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக எதிர்பார்த்த வெற்றியினை பெற்றிருக்கவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா போன்ற பிரதேசங்களில் சுதந்திர வர்த்தகவலயங்கள் அமைக்கப்பட்டு தென்பகுதியில் வேலையற்றிருந்த இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கியது. அவர்கள் கொத்தடிமைகள் போன்றே அங்கு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

2000ம் ஆண்டிற்கு பின்னர் நவதாராளவாத கொள்ளை ஒன்றே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏகாதிபத்தியங்களை பாதுகாக்கும் ஒன்றாக மாறிவிட்டது. தென்கிழக்காசியாவில் குறிப்பாக இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் இதற்கு தடையாக அமைந்த போது, வல்லரசுகள் ஒன்றாக இணைந்து புலிகளையும் அப்பாவி சிவிலியன்களையும் கொத்து குண்டுகளை போட்டு கொன்றொழித்தன.

ராஜபக்சா ஆட்சியில் மீள நவதாராளவாத பொருளாதாரம் முழு இலங்கையும் முன்னெடுக்கப்பட்டது. ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரமும், அதிகார துஸ்பிரயோகமும், ஊழலும், சீன சார்பு நிலையும் நவதாராளவாதத்திற்கு கொள்ளை திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தன. இதற்கு காரணமாக இருந்தது சகல அதிகாரமும் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தான் என இனம் காணப்பட்டது. மகிந்த ராஜபக்சவினை பதவியில் இருந்து இறக்குவதுடன், அதிகாரம் பகிந்தளிக்கும் முறை மாற்றமும் ஏகாதிபத்தியங்களினதும் பல்தேசியக் கம்பனிகளினதும் தேவையாக இருந்தது. இதற்க்காக பாரிய தொகை பணம் ஆறாக பாய்ந்தது. பல அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் இன்று தேசிய அரசு, அரசிற்கு ஒத்துழைப்பு என்ற போர்வையில் மக்கள் நலன்களை மறுத்து செயற்படுவதனை காண்கின்றோம்.

இலங்கையில் அண்மைக்கால நவதாராளவாத செயற்பாடுகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதியும், அதற்க்கான சகல வசதிகளையும் குறைந்த கட்டணத்தில் ஏற்படுத்தி கொடுத்தது.

தனியார் வெளிநாட்டு மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்தது.

வெளிநாட்டு மருந்துவ நிறுவனங்களை அரச மருத்துவமனைகளுடன் சேர்ந்து இயங்க அனுமதி அளித்தது.

இந்திய பெருமுதலாளிகளிற்கு குறைந்த குத்தகைக்கு பல ஆயிரக்கணக்கான நிலங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்கியமை

சுற்றுலாத்துறையில் பல்தேசியக் கம்பனிகளுக்கு அனுமதி அளித்தமை.

மீன்பிடித்தலில் பல்தேசியக் கம்பனிகளுக்கு அனுமதி அளித்தமை.

சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்பவர்களின் சேமலாப நிதியத்தை ஏமாற்றியது

2016 இலிருந்து வேலைக்கு சேர்பவர்களிற்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகின்றமை

மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு நிலங்கள் பறிக்கப்படுவது

பன்னாட்டு கம்பனிகள் சுற்றுச் சூழல் பற்றி அக்கறையின்றி செயற்பட அனுமதி (ரசபத்துவ, சுன்னாகம்)
இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த "இலங்கை பொருளாதாரம் 2016" முன்னோட்டத்தின் பின்னர் "நம்பிக்கையூட்டும் முக்கிய சமூக பொருளாதார சீர்திருத்தம்" என்ற போர்வையில் மக்களை கொள்ளையிடும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன.

21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற மருத்துவ சேவைக்காக சுகாதார காப்பீட்டு திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். இது இலவச மருத்துவ சேவைக்கு ஆப்பு வைத்து பல்தேசிய கம்பனிகளை மருத்துவ சேவைக்குள் கால்பதிக்க செங்கம்பளம் விரிக்கும் வேலையாகும்.

2016ம் ஆண்டு பொருளாதார அபிவிருத்திக்கான ஆண்டாம். அதற்க்காக பல புதிய சட்டங்களை அமூலுக்கு கொண்டு வரவுள்ளனராம். இதன் மூலமாக பல முதலீட்டாளர்களை வரவழைத்து அபிவிருத்தி மையங்களை உருவாக்கவுள்ளனராம்.

மேற்கூறியவை இலங்கையில் நவதாரளமயவாத பொருளாதார கொள்கை மிக தீவிரமாக நடைமுறைக்கு வரவுள்ளதனை கட்டியம் கூறியுள்ளன.

இதற்க்கான முன் தயாரிப்புகள் கடந்த மாத வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு விட்டன. கருவாட்டிற்கும் பருப்பிற்கும் விலையை குறைத்து விட்டு; கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பாரிய அளவில் குறைக்கப்பட்டன. EPF- ETF நிதியத்தை இல்லாது செய்வதற்கான அறிவித்தல், தொழில் சட்டங்கள் முதலாளிகளுக்கு நன்மைபயக்கும் வண்ணம் மாற்றியமைத்தமை போன்றவற்றை குறிப்பிடலாம்.

சாதாரண மக்கள் மத்தியில்; இலங்கை அரசும், ஏகாதிபத்தியவாதிகளும் கூட்டுச் சேர்ந்து வழங்கும் நவதாராளக்கொள்ளை மேலோட்டமான பார்வைக்கு பொருளாதார நன்மை, அபிவிருத்தி போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தலாம். ஆனால் அரச மற்றும் தனியார் ஊழியர் முதல் விவசாயிகள், தொழிற்சாலை தொழிலாளர்கள் வரை அவர்களது அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்துக்கொள்வதுடன்; நீண்ட நேர வேலை கடின, உழைப்பு என ஒட்ட சுரண்டி உள்ள கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் இழந்து நடுவீதிக்கு கொண்டு வந்துவிடும்.

இந்த நாட்டையும், மக்களையும் நேசிப்பவர்கள்; இந்த அபாயம் குறித்து மக்களிற்கு உணர்த்துவதும், மக்களை அணிதிரட்டி பாரிய அளவில் உள்நாட்டு கொள்ளைக்கார ஆட்சியாளர்களர்கள் மற்றும் பல்தேசிய கம்பனிகள், வல்லாதிக்க அரசுகளுக்கு எதிரான போராட்டங்களையும், நவகாலனியத்திற்கு எதிரான சளைக்காத போராட்டங்களையும் நடத்தி மக்களின் விடுதலைக்காக போராட அர்ப்பணிப்புடன் தயாராக வேண்டிய காலம் இது.