Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் !!!!!!!!!

யாழ்ப்பாணம் "கொதிநிலையில்" உள்ளது. காரணம் காட்டுபுலம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை. 25 வருடங்களுக்கு மேலாக பல நூறு பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவர்களைப் படுகொலை செய்த கட்சியின் தலைவர் தொடக்கம்,- தமது வீடு, வேலைத்தலம், பஸ், ரெயின், கோவில் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்கொடுமை புரியும் பெரும்பான்மையான யாழ்ப்பாணத்து ஆண்கள் இங்கு "கொதிநிலையில்" உள்ளனர். இவர்கள் ஒருபக்கம் "போராட", மறுபக்கம் தேசியம் பேசும் ஆண்களும், பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்வோரும், பாலியல் இலஞ்சம் கோரும் அரச பணியாளர் மற்றும் அரசியல்வாதிகளும், உயர்கல்வி நிலையங்கள், கடற்கரை ஓரம், பற்றை பறுகுகளில் பெண்களை ஏமாற்றிக் கைவிடுவோரும் கூட காட்டுப்புலக் கொடுமைக்காக கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீதி கேட்கிறார்களாம் !!!!!!!!!

சில "சர்வ சாதாரணமான" அனுபவங்கள் 

வித்தியாவுக்கு நடந்த கொடுமைக்காக மேற்கூறியவர்களில் பலர் போராடியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அப்போராட்டத்தில் பங்குகொண்ட நபர்கள், சில மணித்தியாலங்கள் கூட தமது பெண்கள் மீதான பாலியல்- மற்றும் சுரண்டல்களை நிறுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கான போராட்டம் நடந்தபோது, அப்போராட்டத்துக்கு பல பிரதேசங்களில் இருந்து போராட்டத்தில் பங்குகொள்ள வந்த பெண்களை - போராட்டம் முடிந்தபின், போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்து ஆண்கள் சமூகம் எப்படி நடத்தியது என்று அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் அறிவார்கள்!!! போராட்டம் முடிந்து பஸ்சில் பயணம் செய்த பெண்களை, காமவெறி பிடித்து உரசியதும், பெண்களின் உறுப்புகளில் அத்துமீறி கைவைத்ததும் நடந்தேறியது. 

அப்போராட்டத்தின் பின் நான் பயணித்த பேருந்தின் நடத்துனர், பஸ்ஸின் பின்பகுதிக்குப் போகுமாறு குழுவாக நின்ற சில இளம் பெண்களுக்கு கட்டளையிட்டார். அவரின் கட்டளையை கேட்டும் கேட்காதது போல அசையாது நின்றார்கள் பெண்கள். நடத்துனர் மறுபடியும் பின்னால் போகுமாறு கத்தினான். அப்போ, பெண்களில் ஒருத்தி "பின்னால இடமில்லை - அங்க பொடியள் நிக்கிறான்கள்" என பதிலளித்தார். அப் பதிலைக் கேட்ட நடத்துனர் "கொஞ்சம் பின்னால போனா உங்கட சாமான் ஒண்டும் தேஞ்சு போகாது, பின்னால போறியளா, இல்லாட்டி பஸ்ஸை விட்டு இறங்கிறீங்களா??? !" என்று கூச்சல்  போட்டான். பெண்கள் அடங்கிப்போனார்கள். இந்நிகழ்வை அந்த பஸ்ஸில் இருந்த- வித்தியாவுக்கு"போராடிய" எல்லாப் "போராளிகளும்" பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

இது நடந்து சில நாட்களில் பின், முன்னிரவு 9 மணி போல நானும் என் நண்பர் ஒருவரும் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேம். அந்த பஸ்ஸில் இருக்க இடமில்லை என்றதனால் நின்று கொண்டிருந்தோம். எமக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு இளம்பெண்ணும், அவளுக்கு அருகில் ஒரு ஆணும் இருந்துகொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் முகத்தில் அசூசையான உணர்வு தெரிந்ததுடன், அவள் நெளிந்து கொண்டிருந்தாள். அந்த ஆண், பெண்ணின் தொடையில் கைவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதே அவளின் நெளிவுக்கு காரணமென விளங்கியது எமக்கு. என்னுடன் பயணம் செய்த நண்பனும் நானும் உடனே தலையிட்டு, அந்த பெண்ணை இருக்கையிலிருந்து எழும்பச்  சொல்லிவிட்டு, துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆணை கண்டித்தோம். அவனே, ஏதோ நாங்கள் இருவரும் குற்றம் செய்தது போல, எங்கள் இருவரையும் தூஷணத்தால் வைதான். அவ்விடத்துக்கு வந்த நடத்துனர், எங்கள் இருவரையும் பஸ்ஸை விட்டு இறங்குமாறு பணித்தான். எனது நண்பர் நடத்துனருக்கு நடந்ததை விளங்கப்படுத்த முயன்றான். நடத்துனர் கேட்பதாயில்லை. "இதெல்லாம் பார்த்தா நாங்க பஸ் ஓட ஏலாது. இங்க இதெல்லாம் சர்வ சாதாரணம். பொம்பிளைய கிரிசுகெடுத்தாதேயுங்கோ,,,, நீங்க எங்கோ வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறீங்க போல. இதுதான் கடைசி பஸ். பொத்திக் கொண்டு வாறதெண்டால் வாருங்கோ. இல்லாட்டி இரண்டுபேரும் இறங்குங்கோ...... ...... அண்ணே பஸ்ஸை நிப்பாட்டுங்கோ " என்று கூக்குரலிட்டார் நடத்துனர்.  நடத்துனருடன் சேர்ந்து பெண்ணை துன்புறுத்தியவன், ஓட்டுநர், மற்றும் சிலரும் எம் இருவரையும் இருளில் தள்ளினார்கள்.   .......          

தகவல் பெறவல்ல இடங்கள்

மேற்கூறிய எனது அனுபவங்கள் பஸ் நடத்துனர் கூறியது போல "சர்வ சாதாரணம்". யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்ககளில் சில ஆயிரம் பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வொரு கிழமையும் காணமுடியும். பெரும்பான்மையான காரணம், இப் பெண்களும் குழந்தைகளும் ஆண்களால் கைவிடப்பட்டவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருடனும் கதைத்தீர்களானால் பாலியல் வன்கொடுமை உட்பட, அவர்கள் அனுபவித்த வன்முறையின் பல வடிவங்களை உங்களுக்கு விபரிப்பார்கள்.

யாழ்.கொட்டடியில் அமைந்திருக்கும் சிறுவர் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு - "போலீஸ் " நிலையத்துக்கு சென்று, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி அங்கு பணியாற்றும் சிங்கள மொழியை தாய்மொழியாகக் கொண்ட பெண் போலீசார் ஒருவருடன் உரையாடினீர்களாயின், அவர் நம் தமிழ் ஆண்களின் வன்முறைக் கலாச்சாரம், பாலியற் பிறழ்வு, பாலியல் குற்றங்கள் பற்றி அழகிய தமிழில் விபரிப்பார்.

2009 போரின் முடிவுக்கு பின்னர் வடக்கின் பல கிராமங்களுக்கு அரசாங்கத்தினால் குடும்பநல உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாத இந்த உத்தியோகஸ்தர்கள், குடும்பங்களில் நடக்கும் நாளாந்த வன்முறைகள் பற்றி பெரிதாக ஒரு நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. ஆனால், இவர்களின் நியமனத்தால் ஒரு முக்கிய நன்மை உள்ளது. இவர்களை அணுகினால் பெண்கள்- மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றிய கிரமமான பதிவுகளை  - புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும். இப் புள்ளிவிபரங்களில் காணப்படும் பெண்கள்- மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றிய தகவல்கள் எவரையும் உலுக்க வல்லது. தமிழ் சமுதாயத்தின் மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட - இருட்டடிப்புச் செய்யப்பட்ட பக்கங்கள் அம்பலப்படுத்தவல்லது.

வித்தியாவுக்கான போராட்டமும் அரசியலும்

சில வருடங்களுக்கு முன் வித்தியாவுக்கான போராட்டம் நடந்தது. நான் மேற்கூறிய என் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் இன்று சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வித்தியாவுக்கான போராட்டம் எம் சமூகத்தையும் ஒரு மில்லிமீற்றர் கூட மாற்றவில்லை. எம் சமூகமானது, பெண்கள் பற்றிய  சிந்தனைப்போக்குகள், தமிழ் கலாச்சாரம் சார் அக ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் பற்றி எந்தவித சுய விசாரணையும் செய்யவில்லை. அதற்கு தயாராகவும் இல்லை.

சுயவிசாரணையும், சமுகத்தின் உள்ளக மாற்றமும், வித்தியாவின் கொலைக்கான சட்டரீதியான நியாயமும் கோரி போராட வேண்டிய சூழல், அன்று,  இலங்கை அரசுக்கு எதிரான போராட்டமாக திசைதிருப்பப்பட்டது. வித்தியாவின் படுகொலை இலங்கை அரசு தமிழ்மக்கள் மீது செய்த கொடுமையாக- அரசபடைகள் செய்த படுகொலையாகச் சித்தரிக்கப்பட்டது. வித்தியாவின் கொலை, தமிழ் தேசிய விடுதலையை பெற்றுத்தருவதற்கான அடுத்த கட்ட போராட்டத்துக்கான அடித்தளமாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

சக மாணவிகள் மீது வன்முறைகளை நாளாந்தம் பிரயோகிக்கும் யாழ். மாணவர் சமூகம் - பல்கலைக்கழக மாணவர் சமூகம் ரணில்-மைத்ரி அரசுக்கு எதிரான போராட்டமாக வித்தியாவின் கொலைவழக்கை திசைதிருப்பியது. வித்தியாவின் கொலையும், பாலியல் வன்கொடுமையும் தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்க அரசின் போர்க்கால குற்றத்தின் தொடர்ச்சி எனப் புனையப்பட்டது. இதன் பின்னால் சில தமிழ் தேசியம் பேசும் அரசியல் வல்லூறுகள் செயற்பட்டார்கள்.

ஆனால், மைத்ரி என்ற தந்திரமான அரசியல் நரி வித்தியாவின் தாயாரையும், சில "மாணவ" தலைவர்களையும் சந்தித்த பின் எல்லாம்- எல்லோருக்கும் மறந்து போனது....வித்தியா மீது  நடத்தப்பட்ட குற்றச் செயல்களுக்கான காரணங்களை நமது சமுகத்தின் அக வளமாகத் தேடாமல் விட்டதனால் எம் சமுகம் எந்தப் படிப்பினையையும் பெற்றுக் கொள்ளமுடியாமற் போனது.

காட்டுப்புல கிராமத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை சார்ந்தும் யாழில் போராட்டங்கள் தற்போது நடைபெறுகிறது. இப்போராடங்களும் வித்தியாவுக்கான போராட்டம் போலவே திசைதிருப்பல்களுக்கு உட்படுத்தப்டுகிறது.

வரப்போகும் வடமாகாண சபைத் தேர்தலில் தமது வோட்டு வங்கிகளை உயர்த்த இப்போராட்டம் அரசியற் சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது. தமது அரசியல்- மற்றும் பொதுவாழ்வில் பெண்களை வன்கொடுமையும், கொலையும், சுரண்டமும் செய்த அரசியல்வாதிகள் காட்டுப்புலச் சிறுமிக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இலங்கையின் சட்டத் துறையால் கையாளப்படவேண்டிய இந்த கொலை வழக்கில், ஏன் தலையிடவில்லை என, மஹிந்தவின் யாழ்.(முன்னாள்) அமைச்சரின் அடிவருடிகள் மத்திய மகளீர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா, வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் போன்ற பெண் அரசியல்வாதிகளை கேள்வி கேட்கின்றார்கள். இவ் இரு அரசியல்வாதிகளும் பெண்கள் என்பதனால் அரசியற் சேறு வாரி ஊற்றுகிறார்கள் மேற்படி அடிவருடிகள்.

அரசியலும் சமூகக் குற்றங்களும்

இவ்வாறான கொலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் அரசியல் காரணிகள் இல்லையென மறுப்பதற்கில்லை. ஒரு நாட்டு மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் கலாச்சார அம்சங்களில் வளர்ச்சி குறைப்படும்போது - அல்லது பிற்படுத்தப்படும்போது குற்றங்கள் பெருகுகின்றன. இந்த வகையில், காட்டுப்புலம் கிராமம் ஒதுக்கப்பட்ட -ஒடுக்கப்ட்ட மக்களின் இருப்பிடம். 80- களின் இறுதியில் இக்கிராம மக்களில் பெரும்பான்மையானவர்கள் தொழுநோய்க்கு ஆட்பட்டிருந்தார்கள். பிற்காலத்தில் ஏற்பட்ட போரின் வடுக்களும், பின்னடைவுகளும் இம்மக்களை இன்று படுகொடூரமான வறுமைக்கு வாழ வகை செய்துள்ளது.

இம் மக்களின் சமூக-பொருளாதாரம் விருத்தியடைய வகை செய்திருக்க வேண்டியவர்கள்: சந்திரிகா அரசு தொடங்கி மஹிந்த அரசின் மறைவுவரை அதிகாரத்தை வைத்திருந்த டக்ளஸ் மற்றும் இன்று வடமாகாண சபையைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளே !!!!!!

இன்று ஒன்றும் தெரியாதது போல இரு பெண் அரசியல்வாதிகளை சிறுமியின் கொலைக்கு நியாயம் கூற கோருவது ஆணாதிக்க கழிசடைத்தனத்தை விட வேறொன்றுமில்லை.

நிறைவாக,

இனியாவது எம் சமுகத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய உரத்த உரையாடல் நிகழ்த்தப்படல் வேண்டும். தமிழ் சமுகத்தின் பொருளாதார-கலாச்சார வாழ்வில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்கான போராட்ட சக்திகள் வளர்க்கப்படல் வேண்டும். எம்மை நாமே விமர்சிப்பதன் மூலம் எம் அக முரண்பாடுகளைக் களைந்து- இணைந்து போராடி நம் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் சமூகமாக நாம் உருவெடுக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இல்லையேல், வித்தியா,ரெஜினா போன்று இன்னும் பல சிறுமிகள் ஆணாதிக்க வெறிக்கு பலியாவதை நாம் தடுக்க முடியாது.