Fri12082023

Last updateSun, 19 Apr 2020 8am

விரியன் பாம்புகளாக மாறிய புலிகளும், மனிதவுரிமை பேசும் புலிப்பினாமிகளும்

இதை வாசிக்கும் தேசிய செம்மல்கள், மார்சிச குஞ்சுகள் மற்றும் வரும்கால தமிழினத்தின் தானைத்தலைவர்களான உங்களில் சிலர் பின்னால வரபோற என்னோட சில கருத்துகள வாசித்துபோட்டு, எனக்கு இலங்கை அரசின் கைக்கூலி, CIA, MI6, RAW, NIP, தமிழினத்துரோகி என பட்டம் தரலாம். அதற்குமுன் அதனால், இத்தால் அனைவருமறிய தெரிவிப்பது என்னவென்றால், யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் தலைவரை தாக்கியதை வண்ணமாக கண்டிக்கிறேன். தாக்குதலுக்கு பின்னல் இருந்த தமிழ் இன துரோகிகள் அது EPDP யாக இருந்தாலென்ன, புலியுடன் நின்று மே 16 வரை போரிட்டு,  இன்று யாழ்ப்பாணத்தில் அரச உளவுத்துறையின் அதிகாரிகளாக செயற்படும் புலிகளாக இருந்தாலென்ன, பிரபாகரனின் மறைவுவரை அவரின் பாதுகாப்பு அதிகாரிகளாக செயற்பட்டு, இன்று இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண தலைமைச் செயலக ஆலோசகர்களாக செயற்படுபவர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் கார்த்திகேசு மகன் கலியுகவரதனான நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்பா ….. முச்சு வாங்குது .

 

சரி விசயத்துக்கு வருவோம். அதற்கு முன் மேற்படி தாக்குதல் பற்றி புலிப்பினாமிகளின் ஊடகமொன்றின் கருத்தை வாசிப்போம் :

 

”..கந்தர்மடம் பகுதியில் வைத்து கடந்த 16ம் நாள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் படுகாயமடைந்தார்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதூரை வதிவிடமாகக் கொண்ட இவரை தனிநாடு தேவையா என்று கேட்டுக் கேட்டு அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர்.

 

சிறிலங்கா அரச புலனாய்வுப்பிரவினரே இதற்குப் பொறுப்பு என்று மாணவர் ஒன்றியத் தலைவர் சு.தவபாலசிங்கம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, மனித உரிமையாளரும் மாணவர் ஒன்றிய தலைவருமான சு.தவபாலசிங்கத்தை சட்டத்துக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகவே தாம் கருதுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னமும் சிறிலங்கா அரசின் சட்டத்தை நடைமுறைபடுத்தும் எந்தவொரு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

 

அத்துடன் இது தொடர்பாக ஐ.நாவின் சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருக்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஆசிய மனிதஉரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ”

 

இந்த செய்தி புலிகளின் பினாமி ஊடகமான புதினப்பலகையில் வெளிவந்துள்ளது.  இதே கும்பல் புலிகளில் அழிவின் முன் புதினம் என்ற பெயரில் இணையம் நடத்தியவர்கள். அதற்கு முன் யாழ்பாணத்திலும் வன்னியிலும் புலிகளின் ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றியவர்கள். அக்காலத்தில் புலிகளின் அனைத்து மனித உரிமை மீறல்களையும், கொலைகளையும், கொள்ளைகளையும், நயவஞ்சக அரசியல் துரோகங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நியாயப்படுத்தியவர்கள். ஆனால் இன்று தமது ஆதரவாளர்களுக்கும், புலிகளுக்கு இறுதி நாட்களில் நடந்த மனித மீறல்களுக்கும், மற்றும் இன்று இலங்கையில் தமது நலனுக்கு சார்பாக இயங்க கூடியவர்கள் என இவர்களால் கணகிடப்படுபவர்களுக்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கண்டனம் தெரிவித்து நியாயம் கிடைக்க உலகத்தில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புகளையும் சாட்சிக்கு கூப்பிட்டுகிறார்கள்.

 

இந்தபினாமிகள் தமக்கு பிடித்தவர்களுக்கு மனித உரிமை மீறல் நடந்தால் அல்லது தமது ஆதரவாளர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற விரும்பினால் அவர்களை மனித நேய பணியாளர்கள், மனித உரிமை போராளிகள், மனித உரிமை காவலர்கள், மனித உரிமையாளர்கள், பெண்நுரிமைப் போராளிகள் என பட்டயம் சூட்டி பிரசாரம் செய்வார்கள். உதாரணமாக பிரான்சில் சிலவருடங்களுக்கு முன் புலிகள் அமைப்பை சேர்ந்த சில காமுக கலுச்சடைகளையும், புலிகளின் பெயரால் மக்களிடம் பணம் பறித்த திருடர்களையும் பாரிஸ் பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த களுசடைகளை மனிதநேய பணியாளர்கள் என அழைத்து பிரசாரம் செய்தார்கள் புலிகளின் ஊடக பினாமிகள்.

 

இன்று வரிக்கு வரி ஆசிய மனித உரிமை நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பிரசாரம் செய்யும் இவர்களுக்கும், புலிபினாமிகளுக்கு தேசிய பரிவட்டம் கட்டும் சில போலி இடதுசாரிகளுக்கும் சில விடயங்களை இந்நேரத்தில் நினைவு படுத்துவது நல்லதென நினைகிறேன் .

 

அதாவது, இன்று நீங்கள் சாட்சிக்கு கூப்பிடும் ஆசிய மனித உரிமை அமைப்பு,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம், சர்வதேச மன்னிப்புசபை, கத்தோலிக்க திருச்சபையின் மனித உரிமை மாமன்றம், சர்வதேச எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்களின் மனித உரிமைக்கான அமைப்பு, சர்வதேச பெண்கள் உரிமை மற்றும் பெண்கள் மீதன வன்முறைக்கெதிரான சபை போன்ற பல நூறு அமைப்புகள், புலிகள் அன்று செல்வியை கடத்தியபோது,  ரஜினி திரணகமவை, விமலேஸ்வரன் போன்ற பல ஆயிரம் சமூக போரளிகளை, பொதுமக்களை கொலை செய்தபோது அவர்களுக்காக குரல் கொடுத்தன. அவர்களின் குரலுக்கு செவி மடுத்தீர்களா அப்போது!? “தமிழ் ஈழ போராட்டம் படுவேகமாக முன்னெடுக்கும் போது மனித உரிமை பற்றி கதைப்பது போராட்டத்தை சிதைக்கும் ” என்று சொன்னீர்கள்  அப்போ. (இப்படியான கருத்தை சொன்னவர்கள் கூட யாழ் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களான புத்திசீவி வேடம் போட்ட புலிகளான சர்வேந்திரா,  IBC ரேடியோ அதிபராகவிருந்த சிவரஞ்சித் போன்றவர்களே. )

 

இப்போ தமிழீழ கனவு பிஞ்சுபோய் பழைய பாவங்களெல்லாம் உங்கள் முன் அம்மணமாக ஆட்டம் போடுகிறது.  புலிகளின் பயிற்றப்பட்ட கொலையாளிகளும், பிஸ்டல் குழுவும், புலனாய்வு உறுபினர்களும், சித்திரவதை நிபுணர்களும் இன்று இலங்கை அரசுடன் சேர்ந்து விரியன் பாம்பு குட்டிகளாக முன்னாள் போராளிகளையும் சாதாரண மக்களையும் பழிவாங்குகிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். “தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று  புடைக்குமாம்” என்றது போல, இப்போ நீங்கள்  உருவாக்கிய விரியன் பாம்புகளிடமிருந்து தப்ப சர்வதேசத்தை கூப்பிடுகிறீர்கள் . இப்போது கூட நீங்கள் செய்த கொலைகளுக்கும், கடத்தல்களுக்கும், பாலியல் வன்முறைக்கும் மக்கள் முன் பகிரங்க மன்னிப்பு கேட்டு  சுயவிமர்சனம் செய்ய நீங்கள் தயாரில்லை. மக்களை அணிதிரட்டி மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட தயாரில்லை. இப்போதும் நீங்கள் எதிர்பார்ப்பது ஏகாதிபத்தியத்தின் ஆதரவைத்தான். மக்களின் சாட்சிகள் அல்லாமல் சர்வதேச நிறுவனங்களின் சாட்சிகளைதான்.

மக்களை நம்பாது முள்ளிவாய்களுக்கு சென்று அமெரிக்காவின் கப்பலை எதிர்பார்த்து கவிழ்த்து போன நீங்கள், இன்றுவரை எதுவும் கற்றுக் கொள்ளவில்லை.  கற்றுகொள்ள போவதுமில்லை.

 

கார்த்திகேசு கலியுகவரதன்

20.10.2011