Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5

இழுவைப் படகுகளின் பாதிப்புகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.

அவையாவன :

1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்

2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது

3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்

4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்

5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.

6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.

 

 

இதில் முதல் நான்குவகை பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரை பாதிக்கின்றது. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், இதன் அடிப்படையில் மனித குலத்தையே பாதிக்கும்.

இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பம். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மையைக் கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் இதற்கு நிகராக பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை மாற்று தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை விலக்கி நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம் கடலில் இயற்கையான பௌதீக தன்மைக்கு முரணாக தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.

இந்த இழுவைப்படகு தொழில்நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகண்ட முதற்பகுதியை மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டில் வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

கடலடித்தளதிலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவைமடியுடன் இணைக்கப்படும் இரும்புச்சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவை தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியில் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவைமடியை உருவாக்க முடியாது . கடலில் பவுதீகவியலுக்கேற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரேநிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் மிதந்தபடி இருக்கும். மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்த தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேற்கைரோப்பிய நாடுகள் இழுவைப்படகு பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர் அல்லது பாவனையை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.

 

 

படம் 1 . இழுவைப்படகு மீன்பிடிக்கு முன் உள்ள கடலடித்தளம்

இதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் சீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்பிடிக்கின்றனர். இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களிலிருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

 

 

படம் 2. அதே இடத்தில இழுவைப்படகு மீன்பிடித்த அரை மணி நேரத்தின் பின் எடுக்கப்பட்ட படம்

உதாரணம் 1 இந்திய இழுவைப்படகுகள் எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடிப்பதனால், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில் கடந்த ஆறுவருடங்களாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில் 2003 ம் வருட கணக்கெடுப்பின்படி மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் ஒவ்வொருவரும்; சராசரி 45 கிலோ கணவாய்களை பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயே மாதாந்தம் பிடித்துள்ளனர். அதுவும் இப்பிடிபாடு கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே பிடித்துள்ளனர். பெரும்பான்மையானோர், பிடிபாடு குறைந்ததால் தை மாதத்தின் பின் களங்கண்டி தொழிலை நிறுத்தி விட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் படுத்ததற்கு நேரடிக் காரணமாக தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளையே குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைகளைக் காடுகளிலும், சாட்டாமாறுப் புதர்களிலும் கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால் முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறை தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் இழுவைப்படகுகள் முட்டையிடும் கணவாய்களை வகை தொகையின்றி பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும், சாட்டாமாறுகளையும் அழிப்பதனால் கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர் கருத்து மட்டுமல்ல, இது செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மணலை மைந்தன்

தொடரும்