Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியும் தமிழ் தேசியமும்…!

காலாகாலமாக மக்களை கூறுபோட்டு மக்களைப் பிரித்து வைத்து, எமது தமிழ் சமூகத்தினை சீரழித்து வருகிறது சாதி என்ற பேய். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல வழிகளில் சுரண்டப்பட்டு, ஓடுக்கப்பட்டு சித்திரவதையினை அனுபவிக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையினை துன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது இந்த சாதிப் பிளவு. கூடுதலாக கிராமப் புறங்களில் வாழும் மக்களே சாதி ஒடுக்கு முறையினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஊர்களுக்கிடையிலே பிரச்சனைகள், குழுமோதல்கள் என்று பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த மக்களின் வாழ்க்கையுள்ளது.

 

அன்று கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்த சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்ற சில நடவடிக்கையினால் ஒருசில கிராமத்திலே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவர்களுடைய போராட்டம் தொடரமுடியாது போனதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். அந்த காலகட்டத்தில் தான் தமிழ் இயக்கங்கள் ஆரம்பித்தன. சிங்கள இனவாத அரசினை மட்டும் எதிரியாக மையப்படுத்தி அரசியலினை முன்னெடுத்த, இவர்கள் வேறு எந்தப் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் தேசியத்தினை முன்னெடுத்த இயக்கங்களில் போராளிகள், உறுப்பினர்களுக்கிடையில் சாதி முரண்பாடுகள் பல வழிகளில் மேலோங்கியிருந்தது. பரந்தளவில் மக்கள் ஆதரவினை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இயக்கங்களிற்குள்ளும் பல போராளிகள் சில முக்கிய பொறுப்புக்களில் இருந்து ஓரந்தள்ளப்பட்டதும், சிலர் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி தண்டனை வழங்கிய நிகழ்வுகளும் பல கட்டங்களில் நடந்துள்ளது. பலருடைய கருத்துக்கள், அவன் தாழ்ந்த சாதி என்ற காரணத்தினால் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் போராளிகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அங்கிருந்த மற்றைய உறுப்பினர்களால் தற்காலிகமாக தீர்த்து வைக்கப்பட்டு மேல் மட்டத்திற்கு மறைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பல நடத்திருக்கின்றன.

புலிகள் சாதிப் பிரச்சனையினை பேசவே பயப்பிட்டார்கள். தமிழீழம் சாதிப் பிரச்சனையினை தீர்த்துவிடும் என்ற தவறான சிந்தனையினையும் போராளிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வளர்த்திருந்தார்கள். கலப்புத் திருமணங்கள் செய்து வைத்தும், மக்களுக்கிடையல் ஏற்பட்ட சிலசாதி முரண்பாடுகளை துப்பாக்கியினால் தீர்த்து வைத்தும் திரைப்படப் பாணியிலே மக்களை கவர முற்பட்டார்கள். அரசியல் ரீதியாகவோ, கருத்து ரீதியாகவோ அவர்கள் மக்களை அணுகியது கிடையாது.

எங்கள் போராட்டத்திற்கான தேவைகளை அதற்கான முன்னெடுப்புக்களை கருத்து ரீதியாக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எந்த முயற்சிகளும் பயனற்றுத்தான் போகும். புலிகள் நாங்கள் தமிழர்கள் என்ற தமிழ் தேசியத்திற்குள் சாதிப் பிரச்சனை மறைத்து வைத்தே தங்கள் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். புலியை ஆதரித்த தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தனையில் தமிழீழம் சாதிப் பிரச்சனையினை தீர்ந்துவிடும் என்ற தவறான எதிர்பார்ப்புத் தான், அந்த அப்பாவி மக்கள் மனதினில் வேறூன்றியிருந்தது.
போராட்ட காலகட்டத்தின் இடம் பெயர்வுகளின் போது தங்கள் உயிரினைப் பாதுகாக்க வேண்டிய தேவை எல்லா மக்களோடும் இருந்தது. பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் அவசியமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் சாதி முரண்பாட்டினை மறக்க வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலை மாற்றப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடும் போது அந்த முரண்பாடு மீண்டும் தலையெடுக்கும்.


சாதி என்பது மக்கள் மனதோடு வேறூண்றிப் போன ஆளமான உணர்வு. இது சிந்தனை ரீதியாக, கருத்தியல் ரீதியாக மாற்றப்பட வேண்டியதொரு பிரச்சனை. தனிப்பட்ட ஓவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையினை நோக்கும் போது, இளம் பருவத்தில் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவார்கள் கூட காலப்போக்கில் பிள்ளைகள் வளர்ந்து வந்ததும் அவர்களின் திருமணத்தினை தன்ரை சாதியில் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமெடுக்கிறார்கள். குறைந்தசாதி உயர்ந்தசாதி என்ற மனநிலை இவர்களிடம் வந்துவிடுகிறது. இதற்காக தனிமனிதனை குற்றம் கூறுவதிலோ, ஆத்திரப்படுவதிலோ பயனில்லை. சாதி ஆளமாக மனதோடு பதிந்து போனதென்று. அடி மனதோடு வேறூண்றி இருக்கும் இந்த உணர்வு மாற்றப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து சமூக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தனித் தேசியவாதத்தால் இதனை மாற்றிவிட முடியாது.


ஒரு கட்சியோ அல்லது அமைப்போ ஒரு சமூகத்தின் சகல கூறுகளையும் அதன் தளத்திலே ஆராய்ந்து அதற்கான வேலைத் திட்டத்தினை அமைக்க வேண்டும். சாதியத்தினை ஒதுக்கி வைத்துவிட்டு,

நாங்கள் எல்லாம் தமிழர்கள்…

நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்…

இப்படி வசனங்களைப் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் அழிவையும், இழப்பையும் தான் ஏற்படுத்தும்.


இதனை இனம்கண்டு செயற்பட வேண்டியது மக்களாகி எங்களுடை கடமை. நாங்கள் இன்னும் தலையாட்டிகளாக இருந்து கொண்டு தவறான அரசியலுக்கு துணை போவோமாயின் நாம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டியதுதான். இன்னொரு முதளாளித்துவ நாட்டையோ, ஏகாதிபத்திய நாட்டையோ சார்ந்து நிற்கும் தமிழ் தேசியவாத அமைப்புக்கள் எப்போதும் பிற்போக்குத் தன்மை கொண்டதாகவே இருக்க முடியும். இன்னொரு சுரண்டல் முறை கொண்டதாகவே இருக்கும். கடந்தகால தமிழ்த்தேசிய இயக்கங்களை பார்க்கும் போது, தனித்து புலிகளை மட்டும் இதில் அடக்கிவிட முடியாது. உயர்சாதிக் கருத்தியல் கொண்ட பிளொட் இயக்கம், ஏனைய பல இயக்கங்கள், தமிழ் கட்சிகள் எல்லாம் இதே நிலைப்பாட்டினைக் கொண்டவை தான்.
சமூகத்தின் சகல நிலைகளிலும் ஒடுக்கப்படும் மக்களாகிய நாங்கள் தான் எங்கள் விடிவிற்கான சரியான அரசியலினை தெரிந்து அதனை முன்னெடுக்க வேண்டும். வெறும் உணர்ச்சி பூர்வமாக அரசியலைப் பார்க்காது, அறிவு ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை இன்று எங்களோடு உள்ளது.