Tue04132021

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த சிந்தனையா? மீள் சிந்தனையா?

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலின் பின்பாக, வெற்றியடைந்த தமிழ்-சிங்களத் தரப்பின் தலைவர்கள் மிக அந்நி-யோந்நியமாக, மக்கள் நலன் சார்ந்து அறிக்கைகள் விட்டுள்ளார்கள். இதனடிப்படையில் சொல்வதைத் செய்வார்களா?

"வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன".

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒர் பொறிமுறைமையை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ""

"தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றதயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரனும் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.

கடந்த அரைநூற்றாண்டிற்கு மேற்பட்ட பாராளுமன்ற தேர்தலகளின் வெற்றி தோல்விகளின் பின்பாக, காலத்திற்கு காலம் வெல்லப்படுகின்றவர்களால் சொல்லப்படுகின்ற அரசியல் உச்சாடானங்களாகத்தான் இவற்றையும் கொள்ள முடியும்.

சொல்கின்றவைகளை செய்யாமல் விடுவது, திட்டமிட்டு கிடப்பில் போடுவது அல்லது இல்லாதாக்குவது போன்ற வினையாற்றல்கள் சிங்களப் போரினவாதத் தரப்பிற்கு கைவந்த கலையாகும்.

இருந்தபோதிலும்…"வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக" சொல்லப்படுவதன் உள்ளார்ந்தம் தான் என்னவோ?

சிறுபான்மை-இன மக்களுக்கு எதிரான, பேரினவாத நோக்கிலான நிகழ்ச்சிநிரல் கொண்ட தொடர் இனவாத நடவடிக்கைகளை இன்னும் பலமடங்காக்குவதா?

அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகள்-தேவைகளை புரிந்து, அவைகளை நிறைவேற்றும் நோக்கிலான (அந்தரங்க சுத்தியுடன்) செயற்பாட்டு நடவடிக்கைகளா?

முள்ளிவாய்கால் அழிவுகளுக்கு பின்னாலான தங்களின் அரசியல் செயற்பாட்டு நடவடிக்கைள் சிறுபான்மை தேசிய இனங்களை இல்லாதாக்கும் நடவடிக்கைகள் ஆகத்தான் தொடர்கின்றன.

யுத்தத்தின் பின்னால் தமிழ் மக்கள் தோற்கடிக்கபட்ட இனமாகவும், அவர்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லையெனவும், அபிவிருத்தியே பிரதான பிரச்சினை எனவும் காட்டப்பட்டது.

இதுவே தங்களின் தேர்தல்கால பரப்புரையாகவும் பரப்பப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த வடக்கின் தேர்தலுக்கு ஊடாக, மக்கள் தங்களின் அபிவிருத்தி பரப்புரைகளை முறியடித்து, இனப்பிரச்சினையையும், அரசியல் தீர்வையும் முதன்மையாக்கியுள்ளனர்.

தமிழ்மக்களின் இம் முதன்மையான அபிலாசைகளை மீள்-சிந்தனையில் கொண்டு, ஆக்கப+ர்வமான நடைமுறைச் சாத்தியமான அரசியல் பொறிமுறை ஒன்றை அரச தரப்பு செய்யுமா?

தமிழர் தரப்பும் இதற்கான இசைவையும், ஒத்துழைப்பையும் தர முன்வருகின்ற நிலையில் இதைச் சாதிக்கவும் முடியுமல்லவா?

காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு, தாங்கள் சொல்கின்ற பொறிமுறைiயாவது ஏற்படுத்துங்களேன். அதற்கு தடையாக உள்ள சகலவற்றையும் இல்லாமல் செய்யும் சர்வவல்லமையும் நிறைவேற்று அதிகாரமும் உங்களிடம்தானே உண்டு.

சமகால இலங்கையின் இன-ஐக்கியத்திற்கும் மக்கள் சுபீட்சத்திற்கும் "மீள்சிந்தனையா? மகிந்த சிந்தனையா"? வலுச் சேர்க்கும் என்பதை நீங்களே சிந்தித்துச் செயற்படுங்கள்.

ஏனெனில் தங்களிடம்தானே படைத்தல்-காத்தல்-அழித்தல்-அருளல் செய்கின்ற சகல தரப்புகளும் உண்டு…