Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிசம் என்றால் என்ன?......பகுதி-2

பாஸிசம் எவ்வாறு அதிகாரத்திற்கு வருகின்றது?

பாஸிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது, சாதாரண முறையில் ஒரு முதலாளித்தவ அரசு போய், அடுத்த முதலாளித்துவ அரசு வருவதைப் போலல்ல. முதலாளி வர்க்கத்தின்--வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து, அதாவது முதலாளித்துவ ஐனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சாவாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும்.

இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகக் காண வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறிழைத்து விடுவோம். அந்தத் தவறு பாஸிஸ்டுகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் ஆபத்தை எதிர்த்துள்ள போராட்டத்தில் நகரத்திலும், கிராமப் புறங்களிலும் உள்ள மக்கள் விரிவான பகுதிகளை ஒன்று திரட்டுவதிலும், முதலாளி வர்க்கத்திற்கிடையே உள்ள முரண்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்தும், புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை தடுத்துவிடும்.

ஆனால் பாஸிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதில் இன்று முதலாளித்துவ ஐனநாயக நாடுகளில் மேலும் மேலும் அதிகமான அளவில் முன் நடவடிக்கை எடுத்து முதலாளி வர்க்கம் பிற்போக்கான பல காரியங்களை – உழைக்கும் மக்களுடைய ஐனநாயக உரிமைகளை அழிப்பது, பாராளுமன்றத்தின் உரிமைகளைப் பொய்யாக்குவதும்,  வெட்டிக் குறைப்பதும், புரட்சிகரமான இயக்கத்தின் மீது அடக்குமுறையை அதிகப்படுத்துவது முதலிய நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதைப் பற்றிய முக்கியத்துவத்தைப் குறைத்து,  மதிப்பிடுவது அபாயகரமானதாகும்.

பாஸிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது, நிதி மூலதனத்தின் குழுக்களோ, அதன் வேறு கூட்டமோ ஒரு குறிப்பிட்ட திகதியில் பாஸிச சர்வாதிகாரத்தை நிறுவத் தீர்மானித்துள்ள போதிலும், அதன் வடிவம் அவ்வளவு சுலபமானதும், சிக்கல் இல்லாததும் என்று கருத முடியாது. உண்மையில் பாஸிசம் சாதாரணமாக பழைய
முதலாளித்துவக் கட்சிகளுக்கெதிராக பரஸ்பரம் கடுமையான, சில சமயங்களில் மிகவும் கடுமையான போரட்டத்தின் நடுவில் அதிகாரத்திற்கு வருகிறது. சில சமயங்களில் பழைய முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எதிர்த்தும், பாஸிஸட் முகாமிற்குள்ளேயே, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிர்த்தும் போராடியும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது.

இந்தப் போராட்டம் சில சமயங்களில் ஆயத மோதல்களுக்கும் இட்டுச் செல்கின்றது. ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் இதர நாடுகளில் இத்தகைய ஆயத மோதல்களை காண முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மற்றொரு உண்மையையும் மறுக்க முடியாது. பாஸிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாக, முதலாளித்துவ அரசுகள் சாதாரணமாக பல்வேறு ஆரம்பக் கட்டங்களையும் கடந்து செல்கின்றது. அதைத் தொடர்ந்து பலவிதமான பிற்போக்கு நடவடிக்கைகளையும் நிறுவுகிறது. அந்தப் பிற்போக்குக் காரியங்கள் பாஸிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு நேரடியாக உதவி, வசதி செய்து கொடுக்கின்றது.

முதலாளி வர்க்கத்தினுடைய பிற்போக்கு நடவடிக்கைகளையும், பாஸிசத்தின் வளர்ச்சியையும்; அவற்றின் தயாரிப்புக் கட்டங்களில் யார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ, அவர்கள் பாஸிசத்தின் வெற்றியைத் தடுக்கும் நிலையில் இருக்கவில்லை. அதற்கு நேர்மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கின்றார்கள்.

சமூக ஐனநாயக கட்சித் தலைவர்கள் பாஸிசத்தின் உண்மையான வர்க்கத் தன்மையை மக்களுக்கு மூடி மறைத்து, மேல்பூச்சுப் பூசி முதலாளி வர்க்கத்தினுடைய—நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும்படி மக்களை அழைப்பதில்லை. இதன்பொருட்டு மக்கள் மிகப்பெரிய "வரலாற்றுப் பொறுப்பை" சுமந்தாக வேண்டும். காரணம் பாஸிஸ்ட் தாக்குதல்களின் தீர்க்கமான சமயங்களில் ஜேர்மனியிலும் வேறு பல இதர பாஸிஸ்ட் நாடுகளிலும் உழைக்கும் மக்களின்  பெரும் பகுதியினருக்கு, ரத்தவெறி பிடித்த—நிதி மூலதனத்தின் பூதமான பாஸிசத்தை அடையாளம் காட்டத் தவறிவிட்டார்கள். இதனால் இந்த மக்கள் போராடத் தயாராக இல்லாமலும் இருந்தார்கள்.

பாஸிசத்திற்கு மக்களிடமிருக்கும் செல்வாக்கிற்கான காரணம் என்ன?

பாஸிசம் மக்களை கவர முடிந்ததிற்கு காரணம், அது மக்களுடைய ஆக அவசர அவசியமான தேவைகளையும் கோரிக்கைகளையும் பற்றி ஆவேசமாக வாய்ச்சவடால் அடித்துப் பேசி விடுகிறது. பாஸிசம் மக்களுடைய உள்ளங்களிலேயே ஊறிப்போயிருக்கின்ற வெறுப்புக்களையும், தப்பெண்ணங்களையும் கிளறித் தூண்டிக் கிளப்பி விடுவது மட்டுமல்ல, மக்களுடைய நல்லுணர்வுகளையும், நியாய உணர்வுகளையும் சில சமயங்களில் புரட்சிகரமான பாரம்பரியங்களைக் கூட பயன்படுத்திக் கொள்கிறது. பெரும் முதலாளி வர்க்கத்தினுடைய, கைக்கூலிகளான சோஸலிசத்தின் ஐன்ம விரோதிகளான பாஸிஸட்டுகளும் மக்கள் மத்தியில் தாங்களும் "சோஸலிஸடடுக்கள்" என்றும்,  தாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை ஒரு பெரிய "புரட்சி" என்றும், ஏன் தங்களை கூறிக் கொள்கின்றார்கள். காரணம் உலகின் உழைக்கும் மக்களின் உள்ளங்களில் உயிர்த் துடிப்புடன் இட்பெற்றுள்ள புரட்சியின் பால் அவர்களுக்குள்ள நம்பிக்கை, சோஸலிசத்தின் பால் அவர்களுக்குள்ளான ஆர்வம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள்.

பாஸிசம் தீவிரமான கடைகோடி ஏகாதிபத்தியவாதிகளின் நலவுரிமைக்காகச் செயற்படுகின்றது. ஆனால் அது ஒரு புறக்கணிக்கப்பட்ட கேவலமாக நடாத்தப்பட்ட ஒரு தேசத்தின் கவுரத்தைக் காப்பாற்ற முன்நிற்பதைப் போல தன்னைக் காட்டிக் கொள்கின்றது. அழி செயலால் அவமதிக்கப்பட்ட தேசிய உணர்வுகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. ஜேர்மன் பாஸிசம் அவ்வாறுதான் செய்தது…..

பாஸிசத்தின் குறிக்கோள் மக்களை எந்தவிதமான தங்கு தடையுமின்றி, ஆகக் கடுடையாகச் சுரண்டுவதாகும். ஆனால் அது பேசுவதெல்லாம் தேர்ச்சிமிக்க முதவாளித்துவ எதிர்ப்பு வாய்வீச்சாகும். கொள்ளைத்தனமான முதலாளி வர்க்கம் வங்கிகள், முதலாளித்துக் கூட்டுக் கம்பனிகள், நிதிமூலதனத் திமிங்கலங்கள் ஆகியவை மீது உழைக்கும் மக்களுக்குள்ள மட்டற்ற பொறுப்பை பயன்படுத்திக் கொண்டு, அரசியல் பக்குவம் குறைவாக உள்ள மக்களுக்கும் ஆசை வார்த்தை காட்டி கோஸங்களை முன்வைக்கும். "தனிநபர்களின் நலன்களைக் காட்டிலும், பொது நலன்கள் உயர்ந்தவை, முக்கியமானவை" என்னும் ஏமாற்றுக் கோஸத்தை முன்வைக்கும்.

இத்தாலியில் "நமது அரசு முதலாளித்துவ அரசல்ல, ஆனால் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டரசாகும்" என்று கூறினர். ஐப்பானில் "சுரண்டல் அற்ற ஐப்பான்" என்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் "செல்வத்தைப் பங்கு போட்டுக் கொள்வது" என்றும் இவ்வாறாக வாய்ப்பந்தல் அளக்கின்றனர்.

பாஸிசம் மக்களைப் படுமோசான பெரும் ஊழல் மிக்க பேராசை, லஞ்சவெறி பிடித்த நபர்களின் வாய்த்தீனியாக தள்ளி விடுகிறது. ஆனால் மக்களுக்கு முன்னால், "ஒரு நேர்மையான ஊழல் அற்ற அரசு" என்னும் கோரிக்கையுடன் முன்வருகிறது.


முதலாளித்துவ-ஐனநாயக அரசுகள் மீது மக்களுக்குள்ளான பிரமை தெளிவாக நீங்கியுள்ளதை ஊகம் செய்து மனக்கோட்டை கட்டிக்கொண்டு, பாஸிசம் வஞசகத்தனமான ஊழலை எதிர்த்துப் பேசுகின்றது.

மக்கள் ஏமாற்றமடைந்து பழைய முதலாளித்துவக் கட்சிகளை கை கழுவி,அதை விட்டு வெளியே வரும்போது, பாஸிசம் முதலாளித்துவ வர்க்கத்தில் ஆகப் பிற்போக்கான வட்டாரங்களின் நலவுரிமைக்காக, அம்மக்களை இடைமறிக்கின்றது. ஆனால் முதவாளித்துவ அரசுகளை மிகக்கடுமையாக ஆவேசமாக தாக்குவதன் மூலம், பழைய  முதலாளித்துவக் கட்சிகள் பால் மிகவும் கடுமையாக எந்தவித சமசரஸமுமின்றியும் நடந்து கொள்வதன் மூலமும் மக்களின் மத்தியில் ஓர் நல்ல எண்ணததையும் உருவாக்கி விடுகின்றது.

சிடுசிடுப்பான வெறுப்புணர்ச்சியிலும், வஞ்சகத்தில் பல்வேறு வகையான முதலாளித்துவக் கருத்தாக்கங்களையும் மிஞ்சி நின்று பாஸிசம் அந்தந்த நாட்டின் "தேசிய சிறப்பியல்புகளுக்குத் தக்கபடியும், இன்னும் ஒரே நாட்டில் பல்வேறு சமூகப் பிரிவுகளின் தனித் தனமைகளுக்குத் தக்கபடியும் தன் வாய்ச் சவடால்களையும் அமைத்துக் கொள்கின்றது.

…தொடரும்

1.பாஸிசம் என்றால் என்ன?