Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உலகில் பிரபலமான பெண்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து

முதலாளித்துவ சமூக உச்சத்தில் இருக்கின்ற பெண்கள் மேலான பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்கள், அங்குமிங்குமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இதில் ஈடுபட்டவர்கள் முதலாளித்துவ அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.

இந்த சமூகப் பின்னணியில் குற்றங்கள் நடந்தவுடன், அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டு தண்டிக்க முடியாத பெண்களாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்திருக்கின்றார்கள்.  இது எமக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது? முதலாளித்துவம் குறித்தும், அதன் புனித நீதி குறித்த பொய்மையை அம்பலமாக்கி இருக்கின்றது.

முதலாளித்துவ சமூக அமைப்பின் உச்சத்தில் உள்ள பெண்களைக் காட்டி, அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், பெண் விடுதலையைப் பெற்றவர்களாகவும் முன்னிறுத்துகின்ற பொதுப் பின்னணியிலேயே, பாலியல் குற்றங்களும் அவற்றை இந்தப் பெண்களால் தண்டிக்க முடியாத அவலமும் வெளிவந்திருக்கின்றது.

முதலாளித்துவ ஜனநாயகம் குறித்த கற்பனைகளை எல்லாவற்றையும் இது போட்டு உடைத்து இருக்கின்றது. அதேநேரம் ஆணாதிக்க முதலாளித்துவ சமூக உச்சத்திற்கு பெண்கள் முன்னேறுவதற்கு, பாலியல் ரீதியாக ஏதோ ஒரு வகையில் இணங்கியாக வேண்டிய, பொது எல்லையில் தான் பெண் வாழவைக்கப்பட்டு இருக்கின்றாள் என்பதை அம்பலமாக்கி இருக்கின்றது.

 

முதலாளித்துவ வாழ்க்கை முறையில் உழைப்பை விற்று வாழ்வதையே வாழ்வாகக் கொண்ட மனிதன், முதலாளித்துவ உற்பத்திமுறையில் அடிமையாக தன்மானத்தை இழந்து வாழ்கின்றான். இந்த வகையில் தன் உழைப்பை விற்று வாழ்கின்ற பொதுப் பின்னணியில், அதிலும் ஒரு பெண் பாலியல் ரீதியாக  இணங்கியாக வேண்டும் என்பதே, முதலாளித்துவ முறைமையாகவே இருக்கின்றது என்பதே இன்றைய உண்மையாகும்.

மனித உறவுகள் பண்ட உறவாக மாறிவிட்டது. நுகர்வே மனித நடத்தை முறையாகிவிட்டது. பெண் என்பவள் பாலியல் பண்டமாக்கப்பட்டுள்ளாள். மனிதம், மனித உணர்வுகள்.. என்று எதையும் முதலாளித்துவ முறைமையில் இருக்க கூடாத ஒன்று. அனைத்தையும் சட்டம் மூலம் நிர்ணயித்துவிடுகின்ற பின்னணியில், சட்டம் என்பது ஒடுக்கும் வர்க்கம் சார்ந்து, சமூகத்தை ஒடுக்கும் அரச இயந்திரம். அரசையும், அதைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதிநிதிகளுக்கு, சட்டம் என்பது வளைந்து கொடுக்கும் மூடுதிரை தான்.

இந்த பின்னணியில் அதிகாரத்தையும், பணத்தையும், சமூக அந்தஸ்தையும் கொண்டு, பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது அதிகரித்து வருகின்றது. முதலாளித்துவம் சமூக அறங்களை அழித்துவிட்ட நிலையில், வன்முறை மூலமான பாலியல் சுரண்டல் முறைமைகள் உலகெங்கும் அம்பலமாகி வருக்கின்றது. ஆளும் வர்க்க ஆணாதிக்க அதிகாரத்தின் முன், பெண்கள் பலியிடப்படுவதே ஜனநாயகமாக மாறி இருக்கின்றது. சமூக அந்தஸ்து கொண்ட அதிகாரங்கள் முன், பாலியல் குற்றங்கள் இயல்பானதாகவும், அதை சகித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை முறையாக மாறிவருகின்றது.

இன்று இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் முதலாளித்துவ சமூகத்தின், அடிமட்டத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. உலகத்தில் புகழ் பெற்றவர்கள். செல்வங்களையும் அதிகாரங்களையும் கொண்ட பெண்களும் அடங்கும். அனைத்தையும் பண்டமாக்கி நுகர வைக்கும் நுகர்வாக்கச் சமூகத்தின், உள்ளார்ந்த முதலாளித்துவ விதியே இதுதான்.

இங்கு இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், வன்முறை மூலம் அடையும் பாலியல் வன்முறையையும் குற்றமாகக் கருதி தண்டிக்கப்படுவதில்லை. மாறாக இவை இயல்பான சமூக வாழ்வியல் கூறாக அங்கீகரிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம், சட்டம், நீதித்துறை, பொலிஸ்.. அனைத்தும் ஆணாதிக்க அதிகாரத்துக்கும், பணத்துக்கும் கட்டுப்பட்டது. இவை அனைத்தும் ஆணாதிக்க சமூக அமைப்புக்கு வெளியில்  உருவாவதல்ல. இதனாலேயே சமூக உயரத்தில் இருந்த பெண்கள் மீதான குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டு வருவது, இன்று வெளிப்படையான உண்மையாகி அவைகளில் சில அம்பலமாகி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்களோ, இதை முறையிட முடியாத அளவுக்கு, முதலாளித்துவ சமூக ஒடுக்குமுறை பலமான ஆணாதிக்க சமூக கட்டமைப்பிலானதாக இருக்கின்றது.

முறையீடு என்பது வாழ்வியல் முறைமையை ஏற்படுத்தி தந்த முதலாளித்துவ ஆணாதிக்க முறைமையைப் பகைத்துக் கொண்டு, வாழ்வை இழந்தாக வேண்டும்;. முதலாளித்துவ முறையின் இந்த நடைமுறையை மீற முடியாது. முதலாளித்துவம் பெண்ணைத் தாங்கள் விரும்பியவாறு பண்டமாக்கிக் கொண்டு நுகர முடியும். பெண் இதற்கு இணங்கிப் போக வேண்டும்;. இதை மீறினால், சமூகத்தில இருந்தும் கீழ் இறக்கி வைக்கப்படுவாள். இங்கு பாலியல் விளம்பரமாகட்டும், இணங்க வைக்கும் பாலியல் வன்முறை மூலமான நுகர்வாகட்டும், இரண்டும் ஒரே தளத்தில் நடக்கின்றது.

இன்று பிரபலமான பெண்கள் தங்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து குற்றஞ்சாட்டி இருக்கும் இன்றைய சூழல் என்பது தற்செயலானதும், அசாதாரணமானதும் ஆகும். முதலாளித்துவத்தின் உச்சத்தை எட்டிய பெண்கள், தங்கள் ஓய்வுக்கான பயண எல்லையில் இதை வெளிக் கொண்டு வந்திருக்கின்றனர். பாலியல் குற்றங்களின் முழுமையான சமூக பரிணாமங்கள் முழுமையாக வெளிவராத பின்னணியில், சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் மீதான பாலியல் வன்முறை வெளிவர முடியாத அளவுக்கு, முதலாளித்துவ சமூக அமைப்புமுறை என்பது ஒடுக்குமுறை கொண்டதாகவே காணப்படுகின்றது.

முதலாளித்துவம் எதை பெண்ணுரிமையாக, பெண்விடுதலையாக முன்வைத்து, சமூகத்தின் உச்சத்திற்கு கொண்டு வந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை, முதலாளித்துவ  உற்பத்தி முறைமைக்குள் நடந்து இருக்கின்றது. அதாவது பெண்களை சமூகத்தின் உச்சத்தில் கொண்டு வந்த தொழிலைத் தொடர்ந்து தக்கவைக்கும் முதலாளித்துவ முறைமைக்குளேயே, இந்த பாலியல் வன்முறை நடந்து இருக்கின்றது. ஒரு நடிகையாக தொடர்வதற்கு, மொடலாக நீடிப்பதற்கு, அரசியல்வாதியாக இருப்பதற்கு, உயர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு.. பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்ளுமாறு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்;. இதே போன்று தங்கள் வாழ்க்கை முறையை தற்காத்துக் கொள்ள, பாலியலுக்கும் இணங்கி கொள்ளும் வண்ணம், முதலாளித்துவ சமூகத்தில் பாலியல்  இணக்கம் இயல்பாகி விடுகின்ற பொதுப் பின்னணியில், அதற்கு ஒத்துக்கொள்ளாத போது வன்முறை மூலம் அடையப்படுகின்றது.

முதலாளித்துவச் சிந்தனை முறை என்பது, ஆணாதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. இங்கு பெண் நுகரப்பட வேண்டியவள். இன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள, அவளாகவே முன் வந்து நுகர்வுக்கு ஒத்துக் கொள்ளவேண்டும்.

சமூகத்தில் உச்சத்திலுள்ள ஆணை பாலியல் ரீதியாக திருப்தி செய்வதும், பாலியல் ரீதியாக இணங்கிப் போவதுமே பெண்ணின் முன்னேற்றத்திற்கான படிக்கற்கள். இது முதலாளித்துவ போதனை மற்றும் நடைமுறை. முதலாளித்துவத்தில் தனக்கான வாய்ப்பையும், வசதியையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் பெண், இதைக் கண்டிப்பாக பின்பற்றி கடைப்பிடித்தாக வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு பெண்ணின் ஒழுக்கமாக முதலாளித்துவக் கல்விமுறை போதிக்கின்றது. தன் வேலையைப் பாதுகாக்க ஆண் கடைப்பிடிக்க வேண்டிய பல வழிமுறைகள் இருப்பது போல், பெண் பாலியல் ரீதியாக இணங்கிக் கொள்வது மேலதிகமான தகுதியாக முதலாளித்துவம் போதிக்கின்றது.

அதாவது வேலையை பெற ஒருவன் தன்னை நற்சான்றிதழ் மூலம் தகுதிப்படுத்திக் கொள்ளும் போது, முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.  இதன் போது பெண் பாலியல் பண்டமாக தன்னை உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப வாழ வேண்டும்.

இணங்க வைக்கும் முதலாளித்துவ முறைமையிலான இந்த வன்முறையைச் சட்டமும் நீதியும் கண்டு கொள்வதில்லை. சட்டமும், நீதியும் முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பதால், சாதாரண மக்களின் குற்றங்கள் போல், முதலாளித்துவதின் உச்சத்தில் இருக்கும் ஆண்களுக்கு விதிவிலக்காகி விடுகின்றது. பெண் குற்றத்தை நிறுவுவது என்பது தன்னை தானே குற்றவாளியாக்கி, சமூகத்தில் தாழ்ந்து விடுவதே பெண்ணின் இன்றைய நிலையாகும்.