Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்

இலங்கையில் 1978 வரை “அவசரகாலச் சட்டம்” என்று ஒன்று இருந்தது. அந்தச் சட்டம் அமுலில் இருந்த காலங்களில் எல்லாம் அரசாங்கங்களின் அடாவடித்தனங்கள்-அடக்குமுறைகள்-மனித உரிமை மீறல்கள்-படுகொலைகள் யாவும் இடம் பெற்றுள்ளன. 

இலங்கையின் இனக் கலவரங்கள்-தென்னிலங்கை இளைஞர்களின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியினை அடக்க இடம் பெற்ற படுகொலைகள்(‘கதிர்காமம் அழகி’ பிரேமாவதி மன்னம்பெரிய கொலை உட்பட)-வழக்கு விசாரணையற்ற சிறைவாசங்கள்-சித்திரவதைகள் யாவும் இந்த “அவசரகாலச் சட்டத்தின்” பெயரிலே நடாத்தி முடிக்கப்பட்டன.

ஏப்ரல் 1971ல் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்ட 22 வயது யுவதியான பிரேமாவதி மன்னம்பெரிய அவரது தாய் தந்தை முன்னிலையில் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் பலாத்காரம் சித்திரவதை ஆகியவைக்கு உட்படுத்தப்பட்டு பட்டப் பகலில் பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து அடிவதைகளுக்கு ஆளாகியபடி இராணுவத்தினரால் 17 ஏப்ரல் 1971ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக இந்தப் படுகொலையைத் தனது பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியே 1977 பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். பாராளுமன்றத்தில் தனக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மாற்றி எழுதினார். நாட்டின் குடிமக்களின் உழைப்பைச் சுரண்டி அதன் வளங்களை கொள்ளையடிக்கும் பொறிமுறையான திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.

“தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உண்டு. ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைப்பேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்தார். அதேநேரத்தில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் தளபதி திரு அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். அதனை சகித்துக் கொள்ளமுடியாத ஜே.ஆரின் சிங்களத் தேசியம் 77ல் ஒரு இனக் கலவரத்தை நடாத்தி முடித்து தனது இன வெறியை தணித்துக் கொண்டது. இனக் கலவரத்தின் கொடூரங்களால் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய வெறுப்பையும், கோபத்தையும் பயன்படுத்தி தமிழ்த் தேசியம் வன்முறை அரசியலை முன்நகர்த்திய போது ஜே.ஆர். ஜெயவர்த்தன 19.05.1978ல் “புலிகள் அமைப்புக்கும் அதனைப் போன்ற ஏனைய அமைப்புக்களுக்குமான தடைச் சட்டத்தை” அமுலுக்குக் கொண்டு வந்தார். இச் சட்டமே புதிய வடிவம் பெற்று 1979ல் “பயங்கரவாத தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.

 

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே இந்த சட்டமூலம் என சிங்கள மக்களை நம்ப வைத்த ஜே.ஆருக்கு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக மறுபடி கிளர்ந்து எழக்கூடிய சிங்கள இளைஞர்களின் இடதுசாரிய சக்திகளை அடக்கவும் அச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கமும் இருந்தது. அதன் பிரகாரம் பின்னாட்களில்(1988-89) அதே “பயங்கரவாத தடைச் சட்டம்” தான் சிங்கள மக்கள் மீதும் பாய்ந்தது. அச் சமயத்தில் கொழும்பில் தமிழ்த் தேசியம் சிங்கள தேசியத்துடன் கை குலுக்கி உறவு கொண்டாடிக் கொண்டிருந்தது.

இந்தப் “பயங்கரவாத தடைச் சட்டத்தினால்” நாடு பூராவும் பரவலாக வாழும் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள், உறவுகள் நீதி கோரி தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றன. பலர் நீதிமன்றங்களில் வழக்காடியும் வருகின்றனர்.

பல வருடங்களாக வழக்கு விசாரணையின்றி இன்று சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் இச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை நீக்கி விட்டாலே இவர்கள் யாவருக்கும் தானாகவே விடுதலை கிடைத்துவிடும். இதனை தென்னிலங்கை முற்போக்கு சிந்தனையாளர்கள், மனிதாபிமானிகள், கல்வியாளர்கள் பலர் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகின்றனர். இதனை தமிழ்த் தேசியப் பாதுகாவலர்கள் எனத் தங்களை விளம்பரப்படுத்துவோர் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் இச்சட்டத்தினால் பலன் அடைந்தவர்களும் பலன் அனுபவிப்பவர்களும் இந்த தேசியவாதிகளே. 

“பயங்கரவாத தடைச் சட்டத்தின்” கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதை காரணமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருடக்கணக்கில் சிறையில் வாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அண்மைக் காலங்களில் ஒரு சில நேர்மையான நீதிபதிகளால்(ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது எனக் கூறி) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தேசியவாதம் என்பது ஆளும் ஆதிக்க சக்திகள் தாங்கள் தங்கள் நாட்டின் அதிகாரக் கதிரையைக் கைப்பற்றிக் கொள்ளும் இலக்குடன் சனநாயகத் தேர்தல் என்கிற வடிவத்தில் மக்களை ஏமாற்றப் பாவிக்கும் ஒரு தந்திரப் பொறிமுறையாகும். அந்த நடைமுறையின் போது “அவையள்” அல்லது “மற்றவையள்” மீதான வெறுப்பு மட்டுமே பிரதான பிரச்சார சாரமாக - உத்தியாக - அடிப்படையாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. தான் சார்ந்த சொந்த இன மக்கள் மீதான தனது சகல விதமான(மத-சாதி-பால்-பிரதேச-வர்க்க ரீதியான) ஒடுக்குமுறைகளையும் மறைப்பதற்காக மொழியையும் - மதத்தையும் பாவித்து அடுத்த இனவாத சக்திகளின் ஒடுக்குமுறைகளை மட்டும் முன்னிறுத்தி மக்களிடையே வெறுப்புணர்வும், பழிக்குப் பழி மனப்பாங்கும் வளர்த்தெடுக்கப்படுகிறது. வன்முறைகள் - மரணங்கள் - கைதுகள் - சிறைகள் யாவும் தேசியவாத வெறியூட்டலுக்கு மூலப் பொருட்களாக விளங்குகின்றன. சாதாரண மக்களின் அழிவுகளும் - அவலங்களும் இந்த தேசியவாதிகளின் அதிகாரப் பசிக்குத் தீனியாக விளங்குகின்றன. இந்த வகையில் “பயங்கரவாத தடைச் சட்டம்” இலங்கையில் தேசியவாதிகளுக்குத் துணை போகிற சட்டமாகவே செயற்படுகிறது.

இலங்கையில் ஒடுக்கும் வர்க்க தேசியவாத வெறிக் கூட்டத்தினர் தங்களுக்குள் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் எதிர்நிலையில் நின்று நின்று செயற்படுகின்றனர். அத்துடன் ஒடுக்கப்படும் மக்கள் உண்மைகளை உணர்ந்து விழிப்புணர்ச்சி பெற்று பேதங்களை ஒழித்து அனைவரும் ஒன்றிணைவதைத் தடுக்கும் வகையில் “தேசியக் காவிகளால்" இந்தப் “பயங்கரவாத தடைச் சட்டம்” மிக நுணுக்கமாக இந்நாள் வரை இலங்கை அரசியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1970களில் இளைஞர்கள் வன்முறை வழிகளை நாடியபோது அவர்களை “நாங்கள் பின்னால் இருக்கிறோம்” எனக் கூறி உதவி உற்சாகப்படுத்திய தேசியவாதிகள் மீது இன்று வரை இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் பாயவில்லை. 1970-1980க்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ இளைஞர்கள் சிறைப்பட்டார்கள். சித்திரவதைக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். 

1979 யூலை 11ல் வடமாகாணத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு யூலை 13 இரவில் கைதான ஆறு இளைஞர்களில் இன்பம்(விஸ்வஜோதி இரத்தினம்-நவாலி) செல்வம்(செல்வரத்தினம்-நவாலி) ஆகியோர் கொல்லப்பட்டதுடன் (உடல்கள் பண்ணை பாலத்தருகில் வீசப்பட்டிருந்தன) ஏனைய நான்கு இளைஞர்கள் (ஆர்.பாலேந்திரா-நவாலி, சகோதரர்கள் எஸ்.பரமேஸ்வரன்-எஸ்.ராஜேஸ்வரன்-நல்லூர், மற்றும் ராஜகிளி ) இன்று வரை காணாமல் போனவர்கள் ஆக்கப்பட்டார்கள். ஆனாலும் தேசியவாதம் இதனை சாதாரணமானது போல் கடந்து சென்று தனது அதிகாரப் பதவி அரசியலை தொடரவே செய்தது.

1979ன் இறுதி ஆறு மாதங்களாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் “பயங்கரவாத தடைச் சட்டம்” புரிந்த கொடுமைகளை கண்டுகொண்ட பின்னர்தான் இலங்கையின் அதிதீவிர தனிப் பெரும் சிங்களப் பேரினவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியவராக தனது அரசியலை முன்னெடுத்து வந்து நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியாக ஆட்சிக் கட்டில் அமர்ந்து சர்வாதிகார ஆட்சி நடாத்தி இன வேறுபாடின்றித் தொழிலாளர்களை நசுக்கித் தமிழ் இளைஞர்களை கொலை செய்து கொண்டிருந்த ஜே.ஆர்.(யு.என்.பி.) அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியம் பேச்சுவார்த்தை நடாத்தி “மாவட்ட சபை” தேர்தலுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டது.

“தேர்தலில் பங்குபற்ற வேண்டாம் இல்லையேல் விளைவு பயங்கரம்” என்ற அந்நாளைய ஆயுத அரசியலின் அச்சுறுத்தலையும் மீறிய அதேவேளை, சிங்களப் பேரினத் தேசியவாதத்தால் தொடர்ந்து இரண்டு நாட்களாக (1981 மே 31-யூன் 1) யாழ்நகரம் தீயிடப்பட்டு எரிந்து சாம்பல் மேடாகிய நிலையிலும் கூட தமிழ்த் தேசியவாதம் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின் நிற்கவும் இல்லை. நல்லூரில் நந்திக் கொடி பறக்க விட்டு மாவட்ட சபையை நடாத்தவும் தவறவில்லை. இதே காலப் பகுதியில் தென்னிலங்கையிலும் ரத்தினபுரி, காவத்தை, பலாங்கொட ஆகிய இடங்களில் மலையக மக்கள் இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்டார்கள்.

பாராளுமன்ற நடவடிக்கை ஊடாக இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஜே.ஆர். 1982ல் இலங்கையின் ஜனாதிபதிக்கான முதலாவது தேர்தலை நடாத்திய போது தமிழ்த் தேசியம் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிப்பில் நடுநிலை வகித்து அவரது வெற்றிக்கு சாதகமான ஒரு அரசியல் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.

வன்முறைகள் தொடர்ந்தன. "பயங்கரவாத தடைச் சட்டம்" மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தது. சந்தேகம் என்ற பெயரில் நிரபராதிகளான தமிழ் இளைஞர்கள் இராணுவ முகாம்களில் சித்திரவதைச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

1982ல் கனககுலசிங்கம்(வடலியடைப்பு) என்ற இளைஞன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சித்திரவதையினால் கொல்லப்பட்டார். கலவரங்களால் இடம்பெயர்ந்த மலையக மக்களுக்கு வாழ்வாதாரப் பணிகளை அளித்துக் கொண்டிருந்த “காந்தீயம்” தடை செய்யப்பட்டு அதன் பொறுப்பாளர்களான டேவிட் ஐயா, டொக்டர் ராஜசுந்தரம் உட்பட பலர் கைதானார்கள். 

தமிழ்த் தேசியம் வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற 1983 யூலைக் கலவரம் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உயிர் மூச்சாகவும் ஊட்டச் சத்தாகவும் அமைந்தது. சிங்களத் தேசியவாதிகளுக்கு இன அழிப்பு நடவடிக்கைகளை மேலும் திட்டமிட்டு முடுக்கி விட ஏதுவாக இருந்தது.

1983யூலைக் கலவரத்தின் போது இடம்பெற்ற 53 தமிழ் அரசியல் கைதிகளின் வெலிக்கடைச் சிறைப் படுகொலை இனவாத அலைகளை கிளப்பி தேசியவாத அரசியலைத் திடீரென பொங்கி எழ வைத்தது. தேசியவாதம் தமிழ்ப் பேசும் மக்களுக்கான விடுதலையை சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதப் போராக முன்னெடுக்க இந்த 53 போராளிகளின் சிறைப் படுகொலையை பயன்படுத்திக் கொண்டது. “வளர்த்த கடா மார்பில் பாயும்” என்று உணர்ந்ததும் தானே நியாயப்படுத்தி ஊட்டி வளர்த்து உலகப் பிரசித்தி பெற வைத்த ஆயதப் போரை 2009ல் முள்ளிவாய்க்காலில் வைத்து முடிவுக்குக் கொண்டு வந்தது.

வன்னிப் பேரழிவில் தேசியவாத அரசியல் பாரம்பரிய வாரிசுகள் எவரும் பாதிக்கப்படவில்லை. பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்பட்டு பல ஆயிரம் இளைஞர் சிறை பிடிக்கப்பட்டு மூன்றரை லட்சம் மக்கள் திறந்த வெளிச் சிறையில் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட நிலையிலும் கூட இந்தப்      “பயங்கரவாதத் தடைச் சட்டம்” தேசியவாதிகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த போது சிங்களத் தேசியம் “பயங்கரவாதம்” ஒழிக்கப்பட்டு விட்டது என்றது. தமிழ் தேசியம் யுத்தத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் “பயங்கரவாதத்தை” ஒழித்துக் கட்டிய இராணுவத் தளபதிக்கே (சரத் பொன்சேக) தமிழ்த் தேசியம் ஆதரவு அளித்தது.

2015 தேர்தலிலும் இலங்கையின் தேசியங்கள் நாட்டின் குடிமக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை. தங்கள் அதிகாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே அணிவகுத்து நின்றார்கள். “பயங்கரவாத தடைச் சட்டம்” தேசியவாதிகளின் வெறும் வாய்ப் பேச்சாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்களை மிரட்டி பயமுறுத்தி வைத்தபடி அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இச்சட்டம் தேசியவாதிகளுக்கு கட்டாயத் தேவையாக உள்ளது.

இலங்கையில் இனத் தேசியங்கள் இன்று சமய-சாதித்-பிராந்திய தேசியங்களாக பிளவுபட்டுள்ளன. மக்கள் தங்கள் பேதங்கள் கடந்து இணைந்து சம உரிமையுடன் வாழ்வதற்கான ஒரு போராட்ட சக்தியாக அணி திரள்வதை முறியடிப்பதற்காக தேசியப் போர்வையில் சாதாரண முரண்பாடுகள் திட்டமிடப்பட்டு வன்முறை வரை தூண்டப்படுகிறது. தேசியவாதிகளால் சமயத் தீவிரவாத சிந்தனைகள்-செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன

சிங்கள தேசியவாதிகளால் சர்வதேச சமூகத்திற்கு நாட்டில் “பயங்கரவாத தடைச் சட்டம்” நீக்கப்படமுடியாத சூழல் உள்ளதாக காட்ட வேண்டிய தேவையுள்ளது. அதற்கு வசதியாக நாட்டில் தமிழ்த் தேசியவாதிகளின் வீர உரைகளும் அதிரடி நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு “பயங்கரவாத தடைச் சட்டம்” தேவை என்பதை வலியுறுத்தும் ஒரு பதட்டமான சூழலை தொடர்வதற்கு இந்தச் தேசியங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுகின்றன.

இன்றைய இலங்கையில் இனத் தேசியங்கள் பல்வேறு தேசியங்களாக பரிணாமம் அடைந்துள்ளன. மேலைநாட்டு சிங்களத் தேசியம், கீழைநாட்டு சிங்களத் தேசியம், பௌத்த சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம், முஸ்லீம் மக்கள் தேசியம், மலையக மக்கள் தேசியம் என அணிதிரள்கின்றன. எதிர்வரும் காலங்களில் கிழக்குத் தமிழர் தேசியம் வடக்குத் தமிழர் தேசியம் என்பன உருவாகக்கூடிய போக்குகள் இன்று காணப்படுகின்றன. குடிமக்கள் இவற்றை ஆதரித்து ஊக்குவித்தால் மிக விரைவில் "யாழ்ப்பாண சைவத் தமிழர் தேசியம்" தோன்றுவது தவிர்க்க முடியாது.(உ ம்:- சமய பக்தர்கள் ஊர் நிறைந்திருக்கையில் சீருடையணிந்த பௌத்த சிங்கள தேசிய இராணுவத்தை வைத்து தேர் இழுத்தமை பற்றி மூச்சுச் காட்டாத தமிழ்த் தேசியக் காவலர்கள் விஸ்வமடுவில் இராணுவத் தளபதி ஒருவர் மக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதற்குப் பொங்கி வடிக்கின்றனர்)

உலகமயமாக்கல் திட்டம் இன்று நாடுகளின் எல்லைகளையும் நாட்டு மக்களின் இறைமைகளையும் இல்லாமல் செய்து வருகிறது அதற்கு சமாந்தரமாக செயற்படும் இன்றைய உலக புதிய தாராளவாத பொருளாதாரத்திற்கு சனநாயகம்-அரசு-அரசாங்கம் என்பதெல்லாம் அந்தந்த நாட்டு மக்களுக்கான பசப்பு வார்த்தைகளே. சர்வதேச வியாபாரக் கூட்டு நிறுவனங்களுக்குத் தேவை இலங்கையில் தங்கள் விருப்பங்களை நடைமுறைபடுத்தக் கூடியதான ஒரு அரசியல்(காலநிலை) சூழலே. அதனை தரக்கூடிவர் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும்(சண்டியன்-சட்டத்தை மீறியவன்-சமூக விரோதி-சமய தீவிரவாதி-இனவெறியன்-கொலைகாரன்-கொள்ளையடிப்பவன்) அவரை ஆட்சிபீடத்தில் ஏற்றுவதற்கு ஏகாதிபத்தியம் சற்றும் தயங்காது என்பதை சமகால உலக வரலாறு காட்டுகிறது.

1வது உலகப் போர். 

2வது உலகப் போர். 

பின்னர் பனிப்போர். இன்று நடப்பது

பயங்கரவாதப் போர்.

இந்த ‘போர்களை’ உருவாக்கியது உலக ஏகாதிபத்திய சக்திகளே. அவர்களிடம் போய் அச்சட்டத்தை எடுக்க உதவும்படி கேட்பதால் எதுவும் நடக்காது. மாறாக குடிமக்கள் நாம் தேசியவாதிகளின் போலித்தனங்களையும் ஏமாற்றுத்தனங்களையும் புரிந்து கொண்டு எங்களுக்குள் ஒரு உரையாடலையும் அதனூடாக ஒரு புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் நாட்டின் பயங்கரவாத அரசியல்வாதிகளின் ஆட்சியையும் அரச கட்டமைப்பையும் மாற்ற முடியும். அதனூடாகவே “பயங்கரவாத தடைச் சட்டத்தை” இல்லாதொழிக்கவும் முடியும்.