Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வாழ்க்கை எழுதிய கல்நூல் - யுகன்

சமர்ப்பணம்:
என்றும் எதற்கும் எந்த உணர்ச்சியையும் காட்டாத
காட்டவும் விரும்பாத
என சக சடங்களுக்கு

 

குறிப்பு.

புத்தகங்கள் மேல் எனக்கான காதல் அலாதியானது
சின்னதும், பெரிதுமாய்
மெலிதாயும், தடித்தும்
கறுத்தும், சிவத்தும் பல வண்ணங்களிலும்
கருத்தாயும், உண்மையாயும்
எல்லாமுமாய் என்னைக் கவர்ந்தவை புத்தகங்களே!

**********

தான் எழுதிய புத்தகம் ஒன்றை தேடியலையும்
வாழ்க்கையின் பயண
நாட்குறிப்பின் வாசிப்பில்....!

**********

கால் நனைக்கும் அலைகளுக்கும்
அகதிகளாய் என் கால்களிலே இடம்பெயரும் மணல் மக்களுக்கும்
இடையில் நான்,
தூக்க முடியாத சுமையாக அந்தச் சடங்களைச்
சுமந்து செல்கிறேன்,

எந்தன் அரிய பொக்கிஷமொன்றைத் தொலைத்துவிட்டு
என் கைககளிலும் தோளிலும்
எந்தச் சலனமும் இன்றி தொங்கி வருகின்றன அவை

****

முன்னொரு நாளில்
என் பிள்ளைகள் பற்றி
நான் எழுதிய அந்த நூலை இந்தச் சடங்கள்
பவ்வியமாக வாங்கிச் சென்றன...

அதற்குப் பூத்தூவின சில
வழிபட்டன சில
உரக்க வாசித்தன சில
எனது பெயரை நூலில் இருந்து நீக்கத்
திட்டமிட்டன சில
அதைச் செய்தும் முடித்தன சில

என் புத்தகதில்
புதிதாய்ப் பல பக்கங்களைச்
சேர்த்தன சில

என் பிள்ளைகளைப் பற்றிப் பேசிய உண்மையான பக்கங்களை
கிழித்தும் போட்டன சில

தங்களை ஆளும், ஆண்ட சடங்களின் பொய்யான வீரக் கதைகளை
புதிதாய் எழுதிச் சேர்த்து
இனிமேல் நாங்கள் ஆண்ட இனம் எனப்
பல புளுகுகள் செய்தன சில

இல்லாத ஊர்களின் பெயர்களைச் சேர்த்தன சில
இருந்த ஊர்களை இல்லாமலும் செய்தன சில
ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கும்
செவிந்தியனுக்கும், பலஸ்தீன மகனுக்கும்
எதுவும் சொந்தமில்லை என்றன சில

நாகரிகம் பேசிப் போதையூட்டி
என் பிள்ளைகளைக் காட்டுக்குள்
அடைத்தும் விட்டன சில
ஆபிரிக்காவில் கொள்ளையிட
என் மூத்த பிள்ளைகளிடை சண்டை மூட்டிப்
புதிய பக்கங்களை செய்தன சில

நிறங்களுக்கென்றும்
குணங்களுக்கென்றும்
தேசங்களுக்கென்றும்
தனித்தனியாய்
ஆயிரம் கதைகள் பின்னின சில

ஆண்டவர் பற்றி இருந்த கதைகளுக்குப்
பல வண்ணங்கள் பூசி
இனி எங்களுக்குப் பல ஆண்டவர்கள்
இருப்பதே நல்லதும் நன்மையையும் என்றும்
தங்களில் சிலதை ஆண்டவர் ஆக்கவும்
புனிதர்கள் ஆக்கவும்

எல்லா ஆண்டவர்களுக்கும், புனிதர்களுக்கும் புனித பக்கங்களைப்
புனைந்தன

புரட்சிகளுக்கெல்லாம் முடிவாகத் தோல்வியை வைத்து
கதைகள் செய்தன சில

என் பிள்ளைகள் போராடி வென்ற பதிவுகள் இருந்த இடத்தில்
சர்வாதிகாரப் புனைவுகள் செய்து
யாரும் படிக்க முடியாதபடி
கறுப்புச் சாயம் பூசின சில

கொடிய சடங்களை எதிர்த்து நின்ற போராளிப் பிள்ளைகளைப்
பயங்கரவாதிகள் என்று
அவர்களின் குருதியைக் கொண்டே
புதிய பக்கங்கள் எழுதச் செய்தன சில

தாங்களே சில முடிவில்லாக் கதைகளை புனைந்து
முடிக்க முடியாமையில்
வலியுடன்
பக்கங்களை
கிழித்துப் போட்டன சில

உண்மையில்லாமல்
எங்களின் சடங்கள் அப்படிச் செய்வதில்லை என்று
கால்மேல் கால்போட்டுப்
பெரிய கதிரைகளில் இருந்து வியாக்கியானம் பேசின சில அதிகாரச் சடங்கள்

என் பிள்ளைகளை
என்னிடம் இருந்து பிரித்து
கால அசுரனுக்குக் கட்டி வைத்தன இச் சடங்கள்
கல்யாணப் பரிசாக தாங்கள் புனைந்த கதைகளைக் கொண்ட
புதிய பெரிய புத்தகங்களை கொடுத்து விட்டன
சடங்கள் புனைந்த கதைகளோடும்
உண்மைகளோடும் என் புத்தகத்தை நானும்
என்னை என் பிள்ளைகளும் தொலைத்தே
விட்டோம்

சடங்கள் ஒன்றை மட்டும் மறந்து போயின
அடித்து மாற்றினாலும் வடுக்களுடன்
அவற்றின் உண்மைகள் இருக்கவே செய்யும்

எரித்த கட்டிடத்துக்கு பூச்சுப் பூசி மெழுகினால்
எரித்த கதைகளும்
எரிந்தவையும்
மறந்து போகுமோ!

என் பிள்ளைகளிடம் நிச்சயம் ஒருநாள்
அந்தக் கல்நூல் கிடைக்கவே செய்யும்
அன்று இந்தச் சடங்கள்
தங்கள் புனைவுகளோடும் பொய்களோடும்
எரிந்தே போகும்.

யுகன்
25-02-2012