Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)

விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள்.

இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

கண்டறியாத இந்த வெளிநாடென்று இங்கு வந்து....  இரவென்றும் பகலென்றும் தெரியாத நாளைப் போலே இருண்டு போன  மனங்களுடன்..  ஊரின் நினைவுகளோடு மனம் ஏங்கி ஏங்கித் தவித்தது. 

என்ன தான் மனம் எதை எதையோ நினைத்தாலும், அனேற்றா நேற்றுக் கதைத்தவகைளே மனதில் வந்து முட்டி மோதிக் கொண்டது. பறவை பறந்த பின்னும் ஆடும் கிளைகள் போல் அவள் மனம் ஆடிக் கொண்டிருந்தது.

மனம் சோர்ந்து உடல் தளர்ந்து சோபாவில் வந்து வீழ்ந்தாள்.

நேற்று நடந்த சம்பவம் மனத்திரையில் படமாய் ஓடியது.

ராதி.... நான் எப்படியும் உன்னுடன் இன்று கதைத்தாகியே வேண்டும், என்று சொல்லி பக்கத்திலிருந்து வந்து கதைத்தவைகள் எல்லாம் முளுமையாகவே அவளை நிலை குலையச் செய்து விட்டது.

நான் பல நாளா கவனித்து வருகிறேன். என்ன நீ இப்போ எல்லாம் முன்பு மாதிரியே இல்லை. உன்னிலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு... இப்ப எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாய் எரிச்சல்படுறாய்..... நீ முன்பு போல் சந்தோசமாகவும் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. இங்கே வேலை செய்யும் மற்றாக்களும் இதைத் தான் சொல்லுறார்கள். என்ன பிரச்சினையாக இருந்தாலும் கட்டாயம் இன்று நீ சொல்லித் தான் ஆக வேண்டும், என்று அனேற்றா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

எனக்கு அப்படியென்ன பிரச்சினை...? நான் முன்பு போலத் தானே இருக்கிறேன்.... என்றபடி தோளையும் ஆட்டி தலையையையும் அசைத்து... உதட்டளவில் சொன்னாலும் மனதளவில் ஏதோ இருக்கு என்பதை அவள் முகபாவனை காட்டிக் கொண்டது.

ராதி இன்றோ நேற்றோ பழகிய சினேகிதர்களல்ல நாம். எனக்கு உன்னை நன்றாகவே தெரியும், நீ எதையும் மறைக்க முயலாதே... நான் ஏதும் உனக்கு உதவலாமா என நினைத்துத் தான் கேட்கிறேன். மறைக்காமல் சொல் என்ற போது எதிர்பாராத விதமாக சீறி விழுந்தாள் ராதிகா.

அனேற்றா மிகவும் அருகில் நெருங்கி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டபடியே...... ராதி கொஞ்சம் அமைதியாய், சாந்தமாய் இரு. நான் உனக்கு உதவ விரும்புகிறேன, மனம் விட்டுக்கதை ராதி....

ஒன்றும் போசாமல் ஒருவரையொருவர் பார்த்தபடியே சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள்.

அனேற்றா.... எனக்கு எப்படிச் சொல்வது எதைச் சொல்வது என்று தெரியவில்லை என்றபடியே அவள் கைகளை மேலும் இறுகப்பற்றிக் கொண்டாள்.  

ராதிகா நிறையவே சம்பந்தம் சம்பந்தமில்லாத மாதிரி கதைத்தாள். இடையில் ஒன்றுமே பேசாமல் மௌனமானாள்... பின்னர் தொடர்ந்து ஏதேதோ சொன்னாள்... அவளை இடைநிறுத்துவது போல் ராதி.... சுற்றி வளைத்து எனக்குப் பேசத் தெரியாது, பேசவும் முடியாது.... நேரடியாகவே கேட்கிறன் உனது குடும்ப வாழ்வில்.... நீ எப்படி... சந்தோசமாய் இருக்கிறாயா........?  

திகைத்துப் போய் மெல்லென நிமிர்ந்து பார்த்தாள்.... எனக்கா,  எனக்கா... என்ன பிரச்சினை...  அவர் மிகவும் நல்லவர். மிகவும் அன்பானவர். ஏன் உனக்கும் அவரைப்பற்றித் தெரியும் தானே.... அவர் என்னை நன்றாகத் தானே வைத்துத்  பார்க்கிறார்.

போன சனிக்கிழமை கூட அம்மாவுடன் கதைக்கும் போது. அவ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதா... தங்கள் குடும்பம் இப்ப ஊரிலே தலை நிமிர்ந்து நிக்கிறதுக்கு இவர் தான் காரணம் என்றும், இவர் என்ரை மருமகன் இல்லை இவர்தான்... என் மகன் என்று சொல்லிச் சொல்லி அழுதா.... 

இங்கே கலியாண வீடு, சாமத்திய வீடு என்று ஏதாவது கொண்டாட்டம் என்று போனா வாற பொம்பிளையெல்லாம் நீ நல்லாக் கொடுத்து வைச்சவள் என்று.... வாற புது டிசைன் சாறி எண்டாலென்ன நகையென்டாலென்ன, உன்ரை மனிசன் உனக்கு உடனே வாங்கித் தந்திடுவார் என்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர் என்னை வைச்சிருக்கிறார், என்று சொல்லி பெருமைப்பட்டாள்.

ம்ம்ம்.... என்று தனக்குள் சிரித்தபடி, ஒரு தமிழ்பெண்ணாக தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நினைப்பில் இவள் அப்படிக் கதைக்கின்றாள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனேற்றா.

ராதி சரி... அன்று உன் அம்மா கதைத்த போது உன் கணவன் எங்கே நின்றார்.

வேலை..

நீ கலியாணவீடு, சாமத்தியவீடு என்று போகும் போது எப்போ உன்னுடன் வந்தார்...

அவருக்கு சனிக்கிழமையும் வேலை.... ஞாற்றுக்கிமையும் வேலை...

இப்போ அனேற்றாவுக்கு மூளையின் மூலையில் ஏதோவொன்று இடித்தது..... தலையை அக்கம் பக்கம் திருப்பியவளாய்... நான் தெரியாமல் தான் கேட்கிறன்.... நீ இப்படி எப்பவும் எந்த நேரமும் தனித்தே இருப்பதால் சந்தோசமாய் இருக்கிறாயா...  எனக்கு மறைக்காமல் உண்மை சொல்... நீ கடைசியாய் கணவனுடன்  எப்போ ஒன்றாய் இருந்தாய்...

புதுப்புது டிசையின் நகைகளும் உந்த உடுப்புக்களும் மட்டும் ஒரு பெண்ணுக்கு சந்தோசத்தை கொடுத்து விடுமா.....?

நாடியில் கை வைத்திருந்தபடி இருந்த ராதிகா, ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல் மௌனமாய் இருந்தாள்.

ராதி ராதி.... நான் கேட்பது உன் குடும்ப உறவு பற்றி... உன் செக்ஸ் வாழ்வு பற்றி.

அவளுடைய மௌனமும், அந்த முகமும் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டும் போல் இருந்தாலும் வார்த்தைகள் இல்லாது  தடுமாறினாள்.

நானும் ஒரு பெண். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், உண்மை நிலமைகளையும் அறியாதவள் அல்ல. வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் போலத் தான் தமிழ்ப் பெண்களுக்கும் இருக்கும். முஸ்லீம் பெண்களுக்குமிருக்கும். உலகத்திலுள்ள அனைத்துப் பெண்ணினத்துக்குமிருக்கும். இது இயற்கையானது.

மனம் திறந்து என்னுடன் உரையாடு... உன் அந்தரங்களை மனசுக்குள்ளேயே பூட்டி பூட்டி சேமித்து வைத்து ஒரு முளுமையான மனநோயாளியாக மாறப் போறாய். ஒண்டும் இல்லையெண்டு சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே...

ராதிகாவுக்கு ஓவென்று கத்திக் குளற வேண்டும் போலிருந்தது. இடம் பொருள் பார்த்து தன்னை அடக்கிக் கொண்டாள். இருந்தாலும் உள்ளத்திலிருந்த குமுறல்களை கண்ணீராய் வடித்தாள்.

அனேற்றா ஒன்றுமே பேசாது இறுக அவளைக் கட்டியணைத்தாள். இந்தப் பாசப்பிணைப்பு இருவரையும் கொஞ்ச நேரம் கட்டிப் போட்டது. ராதிகா கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள்.

ராதிகா கொஞ்சம் தலையை நிமிர்த்த அனேற்றா பிடியிலிருந்து தன்னை விலக்கி கொண்டாள்.

அவளது மௌனமும், அந்த முகபாவனைகளும் ஏதோ சொல்ல முடியாத ஒன்றை நினைத்து குளம்புகிறாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

திடிரென ஏதோ நினைத்து உறுதி கொண்டவளாய்.... நான் என்ன சொல்ல... குரல் தளதளத்தது.. நீண்ட காலமாய் நான் ஒரு விதவை போலத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... நீ விளங்கிக் கொண்டால் சரி இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதே... திரும்பவும் அழுபவள் போல் தளதளத்தாள்.

எனக்கு எல்லாம் விளங்குது ராதி.

ராதி இந்த உலகத்தை வியாபாரமாகவும், விளம்பரங்களாகவும் மாற்றி அளவில்லாத ஆசைகளையும், தேவைகளையும் கூட்டி காசு காசு என்றும், வேலை வேலையென்றும் ஆண் பெண்ணென்று வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறது இந்த பாழாப் போன உலகம்.

இதை விளங்காத பல பேர் குடும்பத்துக்கெனவும்,  மனைவிக்கெனவும் நேரத்தை ஒதுக்காது அலைந்து திரிந்து அன்பைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் தங்கள் இளமைக் காலத்தை தொலைத்து விடுகின்றார்கள்.

இவற்றை விட இந்த புலம்பெயர்ந்த முதலாம் தமிழ்தலைமுறையினரில் பலர் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக இருப்பதால், எப்படியாவது உழைச்சு சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து அல்லும் பகலும் ஓடித்திரிந்து தங்கள் வாழ்கையை அழித்துக் கொண்டு கடைசியிலே தாங்களே ஒன்றும் அனுபவிக்க முடியாத நோயாளிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்  ஒரு கசப்பான பெரிய உண்மை. 

இந்த நிலையில் எத்தனையோ தமிழ்பெண்கள் தனிமையாலும் விரக்தியாலும் தற்கொலை செய்திருக்கின்றார்கள். 

ராதி... இந்தக் கணவன் மனைவி உறவிருக்கே இது தான் இந்த உலகத்திலேயே ஓர் அற்புதமான உறவு. எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவியும், ஒரு பெண்ணுக்கு கணவனும் தான் இந்த உலகமே. 

இதை பல இடங்களிலே கணவன்மாரும், மனைவிமாரும் சரி இந்த உறவை விளங்கிக் கொள்வதுமில்லை. சரியாக புரிந்து கொள்வதும் இல்லை. இதனால் இந்த உறவுகளில் தெரிந்தோ தெரியாமலோ பல இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.

மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே போல ஒரு மனித வாழ்வின் வளர்ச்சிக்கு தெளிந்த முறையான இயற்கையோடு ஒத்த மனநிறைவடையக் கூடிய செக்ஸ் வாழ்க்கை இருவருக்கும் அவசியம் என்று உளவியல் சொல்லுது. 

ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை. இது எங்கள் கலாச்சாரம் என்று கட்டுப்பாடுகள் என்று இரும்பு வலைகளைப் போட்டு நீயே மாட்டுப்பட்டு இவையெல்லாம் பேசாப் பொருட்கள் என்று நினைத்து சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.... என்ன... ராதி... நான் சொல்வது சரிதானே...?

நீ வலு இலகுவாகவே சொல்லிப் போட்டாய்.... சாதாரண உடுப்பு கூட ஒரு கணவனுக்கு முன்னால் மாற்றிக் கொள்ள வெட்க்கப்படும் எம் தமிழ்பெண்ணினம் இந்த பாலியல் பற்றிக் கதைத்துக் கொள்வதா.... அது தான் முடியுமா...  

அப்படி ஒரு பெண் கதைத்தால் அதற்கென தமிழிலே எத்தனை வார்த்தைகள்... அப்பப்பா... ஒருத்தி அப்படிக் கேட்டுவிட்டால்... வாழ்க்கை பூராவும் அதையே சுட்டிக் காடடிக் காட்டி சண்டை நடக்கும்.... என்று சொல்ல நினைத்தாலும், ராதிகா ஒன்றுமே பேசாது மௌனமாய் தலைகவிழ்ந்து நின்றாள். 

ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை என்பது மட்டும் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

திடீரென மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்த ராதிகாவுக்கு நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருந்ததை நம்ப முடியாமல் இருந்தது. ஒரு ரீ போட்டுக் குடிப்பம் என நினைத்து குசினிக்குள் நுளைய, வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

இஞ்யைப்பா... எனக்குச் சரியான பசி, கெதியா சாப்பாட்டைப் போடு கை கால் கழுவிப் போட்டு வாறன் என்ற படி உள்ளே நுழைந்தான் கணவன்.

இவளும் எல்லாவற்றையும் எடுத்துச் சூடாக்கி மேசையில் வைக்க அவனும் வந்து அமரச் சரியாக இருந்தது.

ஏதோ ஜந்தாறு நாட்கள் சாப்பிடாதவனைப் போல அள்ளி அள்ளி எறிந்தான். வைத்த கண் வைக்காமல் பரிமாறிக் கொண்டிருந்தாலும் மனம் ஏதோ அனேற்றா சொன்னவைகளே நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

ராதி... சொன்னாப் போலே மறந்து போட்டேன், வாற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்னும் இரண்டு மணித்தியாலம் பிந்தித் தான் வருவன். அங்கே வேலை செய்யும் ஒரு போலந்துக்காரன் வேலையால் நிக்கிறானாம். அந்த வேலையையும் என்னைச் செய்வாயா என்று கேட்டினம், நானும் ஓமெண்டிட்டன். அதையும் கொஞ்சம் செய்தனெண்டால் சிவாண்ணை சொன்ன அந்தக் கொழும்பு வீட்டை வாங்கிப்போடலாம்... என்று சொன்ன படியே எழுந்து போய் கை கழுவிவிட்டு உள்ளே நுழைந்தான்

இடிவிழுந்தவள் ஒரு கணம் அதிந்து போனாள். இல்லை இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என நினைத்தபடி குசினியை ஒழுங்குபடுத்தி விட்டு படுக்கையறையினுள் உள்ளே நுழைந்தாள்.

பலத்த குறைட்டைச் சத்தத்துடன் அவன் ஒன்றுமே தெரியாதவனாய் தூங்கிக் கொண்டிருந்தான்.

விரக்தியை வெளிப்படுத்தாமல் அப்படியே விறைத்து போய் நின்றாள் ராதிகா.

முற்றும்