Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சட்டத்தின் பெயரால் வேசித்தனம்:

சட்டத்தின் பெயரால் வேசித்தனம்: பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து லேன்செட் (LANCET) பத்திரிகை எழுதிய தலையங்கம்

லேன்செட் பற்றிய ஒரு குறிப்பு

உலகின் தலை சிறந்த மருத்துவ இதழாகக் கருதப்படும் லேன்செட் (LANCET)  இந்திய நீதியைக் காறி உமிழ்ந்து தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதன் தலையங்கத்தை படிக்கும் முன் வாசகர்கள் லேன்செட் இதழைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடந்த 187 ஆண்டுகளாக வெளிவரும் இந்த வார இதழ் ஒரு சர்வதேச மருத்துவ அறிவியல் இதழ். மனித குலத்தை மேம்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இந்த இதழின் முதல் நோக்கம். தமது வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது இந்த இதழில் வெளியிடமாட்டர்களா என்று உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் தவம் கிடக்கும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்த ஒன்று. நோபெல் பரிசு வென்ற அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுகளை முதன்முதலாக இந்த இதழிலேயே வெளியிடுவது வழக்கம்.

 

அரிதாக சில நேரங்களில், இந்த இதழ் பல மருத்துவம் சாராத செய்திகளையும்  வெளியிடும்; பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், நிறுவனங்கள், முதலாளிகளுக்கு அஞ்சாமல் தனது நிலைப்பாட்டை வெளியிட்டு அதிர்ச்சியை கடந்த காலத்தில் ஏற்படுத்தியதும் உண்டு. எடுத்துக்காட்டாக, இராக் நாட்டில் படையெடுப்பு நடத்திய அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் 2004 ம் ஆண்டு வரை சுமார் பத்து லட்சம் பேர்களைக் கொன்று விட்டதாக ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு போரின் கோரமான உண்மையை மேற்குலகம் அறியச் செய்தது. அதுவரை உலகை ஏமாற்றி வந்த உலக மகாப் பொய்யர்களான பிரிட்டிஷ் பிரதமர் தோனி பிளேரும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல கையும் மெய்யுமாகப் பிடிபட்டு அவமானத்தில் தலை குனியவேண்டி வந்தது. போப் ஆண்டவர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நபர்களையும் அவர்களது மூடநம்பிக்கைகளையும் அறிவியலுக்கு முரணான கருத்துகளுக்காகவும் கடுமையாகச் சாடியதும் உண்டு.

மனித குலத்தின் உயர்ந்த மாண்புகளைக் காக்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து இதுவரை இந்த இதழ் பின் வாங்கியதாகச் செய்தி இல்லை. அந்த இதழ் பினாயக் சென் குறித்து தலையங்கம் எழுவது பினாயக் சென் போன்றோர் செய்து வரும் நற்செயல்களுக்கு சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாகும்.

——————————-

பினாயக் சென் வழக்கு குறித்து லேன்செட் எழுதிய தலையங்கம்:

எமது லேன்செட் இதழ் வெளிவரும் இந்த ஜனவரி 4 ம் தேதி பினாயக் சென் தனது 61 வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, தேசத் துரோகக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார். மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதருக்கு வழங்கப்பட்ட இச்சிறைத் தண்டனை சிறிதும் மனிதாபிமானம் இல்லாத கொடுஞ் செயல். இந்தத் தீர்ப்புக்கு முன்னர் அவர் வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று வரும் ஏழைகள், பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவிட்டவர். அவருடைய தன்னலமற்ற சேவை அவருக்கு பெற்றுத்தந்தது சர்வதேச மருத்துவக் கவுன்சில் வழங்கிய 2008  ம் ஆண்டுக்கான ஜோனாதன் மான் விருது.

அரசாங்கம் செய்து வரும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து பினாயக் அம்பலப் படுத்தி வந்ததே அவர் மீது சாட்டப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட இக்குற்றச்சாட்டின் பின்னணி. அவர் சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவரான நாராயண் சன்யால் என்பவருக்கு செய்தி கொண்டு தருபவர்  என்று  சாட்டப்பட்ட குற்றம் நம்ப முடியாத சாட்சிகளின் அடிப்படையில் அமைந்தது. அதைத் தொடர்ந்து  மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணை ஒரு மாயை, ஒரு மோசடி. அதன் முடிவு கேலிக்குரிய அநீதியான தீர்ப்பு.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக இந்தியப் பத்திரிகைககள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு நிறுவனம் பினாயக் சென் ‘ஒரு மனச் சாட்சியின் கைதி’ என்று வருணித்து இருக்கிறது. உலகின் தலை சிறந்த கல்வியாளர்கள் எண்பது பேர் இந்த அநீதியைக் கண்டித்து இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து எழுதி இருக்கிறார்கள். லேன்செட் இதழ் அவர்களோடு இணைந்து பினாயக் சென்னுக்கு ஆதரவாக இந்திய நீதியைக் கண்டித்துக்  குரல் கொடுக்கிறது.

2009 ம் ஆண்டு இந்திய அரசு இந்த வழக்கில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த அநீதியான தீர்ப்பை ஒரு வேளை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்தாலும்  செய்யலாம். ஒரு வேளை அது நடக்கவில்லையென்றால், ஏற்கனவே அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் மனித உரிமைக்  கடப்பாடுகள் நிரந்தரமான அவமானத்திற்கு உள்ளாகும். எங்கெல்லாம், இந்திய அரசு தன்னுடைய அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறியதோ அங்கெல்லாம் சென்று பினாயக் தன்னுடைய முயற்சியில் மருத்துவ உதவிகளையும் அடிப்படை மனித உரிமைகளையும் மக்கள் பெறுவதற்காகப் பாடுபட்டார். அதற்கான பரிசாக, பிரிட்டிஷ் காலனி அரசு எப்படியெல்லாம் அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்கியதோ, காந்தியைத் தேசத் துரோகி என்று தண்டித்ததோ அதேவாறு தண்டனை வழங்கி உள்ளது. தேசத் துரோகச் சட்டங்களைப் பயன்படுத்தி தனக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது காந்தி சொன்னார் ‘சுரண்டல்காரகளைப் பாதுகாக்க அறிந்தோ அறியாமலோ இந்த அரசு வேசித்தனம் செய்கிறது’. பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இந்தியாவின் நிலைமை காந்தி சொன்னபடியே இன்னமும் மாறாமல் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.

தமிழில் பவானி