Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"தெய்வத்தாய்" கருணை புரிந்தாரா?

"ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கபட்ட மனுவையொட்டி கடந்த ஓராண்டாக இந்திய ஆளும் வர்க்க ஜனநாயக மரபுகளின்படி பெரும் பெரும் சட்டவாக்க வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. இதன் பெறுபேறாக கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்னும் வாதாட்டப் புடுங்குப்பாடுகளுக்கு ஊடாக 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.!

மாற்றப்பட்ட இவ்வழக்கு நேற்று (18-2-ல்) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட மத்திய அரசு தரப்பு “ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல” என்றும் “முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதற்கு இவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றும் “இவர்கள் சிறையில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றும் “ஆட்சி மாற்றம் குடியரசுத் தலைவர் மாற்றம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டது இதற்காக தண்டனையை குறைக்கக் கூடாது” என்றும் வாதிட்டது.!

இந்த வாதத்தை நிராகரித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “காலதாமதம் ஏற்பட்டதற்கு அரசு காரணம் இல்லை என்பது நிரூபிக்கப்படவில்லை” என்றும் “நீண்ட காலம் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரூபிக்கத் தேவையில்லை” என்றும் கூறியிருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் “ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் குற்றவியல் சட்டங்களின்படி முடிவு எடுக்கலாம்” என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

"நீதிதேவதைத் தாயின்" முடிவு, சுபமுடிவாகி மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மகிந்தாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றத்துடிக்கும் ஐனநாயகத் தேவதை இதிலும் நல்லதோர் மன்னிப்புத் தாயாராகி விட்டார். வரும் தேர்தல் வெற்றிக்கு பெரும் முதலீடல்லவா? மதியுரைஞர் சோ பற்றிக் கவலையா? விடுங்கள் அநதப் புறம்போக்கை. தேவைக்கு ஏற்ப பாவிக்க வேண்டியதுதானே? மோடிகூட விடுதலைக்காக கோரிக்கை வைக்கப்போகின்றார்.

அம்மாவின் கருணை உள்ளம் ஒருபுறமிருக்க, ராஜீவ் கொலை வழக்கின் ஏகப்பட்ட குற்றவாளிகள் இவ்வழக்கிற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது இந்தியப் பரிபாலனத்தின் சகல வடிவங்களுக்குள்ளும் சிதம்பர ரகசியங்களாக இருக்கலாம். ஆனால் யார் யாரென்பது ஊருலகு அறிந்த செய்திகள். அதன் பிராயச்சித்தமே பிரியங்கா-நளினி சந்திப்பு.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சித்திரவதை மூலம் வாங்கப்பட்ட பொய்யான வாக்கு மூலங்கள் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. இதை கார்த்திகேயனே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே குற்றமற்றவர்களான மூவரும் செய்யாத குற்றங்களுக்கு பெரும் தண்டனைகளை அனுபவித்து விட்டார்கள். “இவர்கள் சிறையில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்பது உங்கள் முதலாளித்துவ ஜனணாயகத்தின் "ரூமச்" கணிப்பு. அவர்கள் பட்ட துயர்கள் போதும். உங்கள் இந்திய ஜனநாயகக் கண்களை திறந்து அவர்களை விடுதலை செய்யுங்கள்.