Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கருங்காலி அரசியலும்; காலி இலக்கிய விழாவும்

புலிப் பினாமிகளும், அவர்களின்  இடது- திடீர் தேசியவாதிகளும் கொழும்பில் நடந்த இலைக்கிய சந்திப்பிற்கெதிராக கையெழுத்து போர் நடாத்தி, தோற்றுப் போய்,  ஓய்ந்துபோயுள்ள  நிலையில்; தற்போது சிறிலங்காவில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு; எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் வேஷ்டி தலைப்பில்  மறைந்தபடி  ஒன்றாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இவ் அறிக்கையில்  காலியில் இடம்பெறவுள்ள இந்த இலக்கிய விழாவினைப் புறக்கணிக்குமாறு மேற்குறித்த இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.  மேலும் இவ்வறிக்கையில் புகழ்மிக்க எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான Noam Chomsky, Arundathi Roy, Ken Loach, Antony Loewenstein, Tariq Ali, ஆகியோரும் உருத்திரமூர்த்தி சேரன் என்ற அன்டன் பாலசிங்கத்தின் வாரிசும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து எழுதிய தமிழரங்க  எழுத்தாளர் ராஜாஹரன் கீழ் கண்டவாறு  கூறுகிறார் .


“மக்கள் திரள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தான், இலங்கை பாசிச அரசின் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் எதிர்கொள்ள முடியும். தமிழ் – சிங்கள ஒடுக்கப்பட்ட  மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டை முன்வைக்காத, அதைக் கோராத,  அதுவல்லாத குறுகிய எழுத்து சார்ந்து எழும் புறக்கணிப்புவாத அரசியல்,  பூர்சுவா வர்க்கத்தின் அற்ப நலன் சார்ந்த குறுகிய வக்கிரமாகும். இந்த அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும்.”

 


இதன் மூலம் பாசிச சூழ் நிலையில்; புறகணிப்புவாதம் என்பதை பூர்சுவா வர்க்கத்தின் சந்தர்ப்பவாத அரசியலாக  அம்பலப்பட்டு  நிற்பதை தோலுரித்து காட்டுகிறார்.

அதே வேளை இன்று தன்னை உலக மஹா புத்தி சீவனாகவும், தமிழ் தேசியத்தின் இடதுசாரிக் காவலனாவும் காட்டிக் கொள்ளும் சில திடீர்அரசியல்வாதிகள், ராஜஹரனின்  நிலைபாட்டிலிருந்து தம்மை வித்தியாசமானவர்களாக காட்டிக் கொள்ளவும்,  தமது நிலைப்பாடு தான் இலங்கையில் புரட்சியையும்;  தமிழ் இன விடுதலையையும் பெற்றுத் தரும் என்பது போன்று பாவ்லா காட்டியபடி இந்த புறகணிப்புவாததிற்கு தூபம் காட்டுகிறனர்.


இது சம்பந்தமாக புலம்பெயர் புலிப் பினாமிகளுக்கு சிவப்பு சாயம் பூசும் நாவலன் தனது அறிக்கையில்   இவ்வாறு கூறுகிறார்.


“ஆரவாரமின்றி திரை மறைவில் ஜனநாயக நாடு ஒன்றின் சாதாரண நாளாந்த நிகழ்வு போல ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கிய விழாவிற்கு எதிரான கண்டனங்கள் அருந்ததி ராய்,  தாரிக் அலி,  நாஓம் சொம்ஸ்கி போன்ற போர் குணம் மிக்க குரல்கள் ஒலிப்பது,  ஒடுக்கப்பட்ட தேசிய  இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக் கீற்றுகளாகும்.


அமெரிக்கா, நெதர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசு சார் நிறுவனங்களின் ஆதரவோடு நடைபெறும் விழா நமது எதிரிகளை தெளிவாக இனம்காட்டியுள்ளது.


எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும் (Reporters Without Borders), ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பும் (Journalists for Democracy in Sri Lanka (JDS)) இணைந்து விழாவிற்கு எதிராக விடுத்த அறிக்கை அருந்ததி ராய், சொம்ஸ்கி,  தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு ஆரம்பிக்கப்பட்டடுள்ளது.”


இதன் மூலம்  ஒரு சர்வதேச செயற்பாட்டாளர் அணி தமிழர்களுக்கு சார்பாகவும்;  இலங்கையில் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும் உருவாகியுள்ளதைப் போல கதையளக்கிறார். எனது  இந்த சிறிய கட்டுரையின்  நோக்கம் இலக்கிய மாநாடு சம்பந்தமாக இங்கு தத்துவ ஆய்வு செய்வதல்ல. மாறாக இந்த  புறக்கணிப்பு   கையெழுத்து வேட்டையின் பின்புலத்தில் உள்ள அமைப்பான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு (Journalists for Democracy in Sri Lanka (JDS), மற்றும் எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பு (Reporters Without Borders), போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்; இந்த புறகணிப்பு வாதத்திற்கு விளக்குப் பிடிப்போர் சொல்வது போல உண்மையிலேயே தமிழர்களுக்கு சார்பாகவும்;  இலங்கையில் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும் இயங்கக் கூடிய மக்கள் சக்திகளா?,  என்பதை ஒரு சிறு ஆய்வுக்குட்படுத்துவதும், இவர்களின் புறகணிப்பு வேண்டுகோளின் உண்மை தன்மையை ஆராய்வதுமேயாகும்.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பும்(Reporters Without Borders)

எல்லைகளற்ற செய்தியாளர்களின் அமைப்பு, எந்த வகையிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான அமைப்பு அல்ல. மாறாக  முதலாளித்துவ மானிட உரிமை  அடிப்படையில் எழுத்து-பேச்சுரிமைகான போராட்டம் நடத்துவதாக கூறும் இந்த அமைப்பு அடிப்படையில் போராடுவது  ஏகாதிபத்திய நலன்களைப்  பேணுவதர்காகவே.

Reporters sans frontières (RSF), என்ற இந்த பிரான்சை சேர்ந்த சர்வதேச அரசுசார நிறுவனமானது (INGO ) 1985 இல் உருவாக்கப்பட்டது . இதன் பின்னணியில் மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளும், அரச நிறுவனங்களும்,  பெரும் பணம் படைத்த முதலாளிகளும் இருந்துவருகின்றனர். இதன் வருமானத்தின் பெரும் பகுதி மேற்கு நாடுகளின்  அரச நிறுவனங்களாலும்  பாரிய முதலாளித்துவ,  மற்றும் பல்தேசிய கம்பனிகளாலும் வழங்கப்படுகிறது. உதாரணமாக   Sanofi-Aventis (€400,000, 10% of its budget), François Pinault, The Fondation de France, The Open Society Institute of George Soros, The Sigrid Rausing Trust, Benetton,  The Center for a Free Cuba (which donated €64,000 in 2002), Saatchi & Saatchi  போன்ற பல்தேசிய கம்போனிகளும் நேர்வே, ஸ்வீடன், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின்  மூன்றாம் உலக நாடுகளுக்கான அரசஅபிவிருத்தி நிறுவனங்களும்;  எல்லைகளற்ற செய்தியாளர்களின்  அமைப்பின் (Reporters Without Borders   ) முக்கிய நிதி வழங்குனர்களாகவுள்ளனர்.
இந்த  அமைப்பின் பெரும்பான்மையான செயற்பாடுகள்   அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு எதிராக செயற்படும்  கியுபா, வெனிசுவேலா, ஈரான், வடகொரியா, சீனா போன்ற நாடுகளை   குறிவைத்தே முன்னெடுக்கப்படுகிறது.  இந்த அமைப்பின் உண்மையான முகத்தைப் பற்றி எழுதுவதானால் ஒரு புத்தகமே எழுதலாம். இவ்வாறு ஏகாதிபத்திய நலம் காக்கும் அமைப்பு இலங்கையில் புரட்சிக்கும்,  ஜனநாயகதிற்கும், தமிழ் இன விடுதலைக்கும் வழிவகுக்கும் என படம் காட்டுவது புலிகள் செய்தது போல மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதேயாகும்.

ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு-Journalists for Democracy in Sri Lanka (JDS)

இலங்கையில் ஜனநாயகம்,  ஊடக சுதந்திரம், மற்றும் மனித ஊரிமைகான நடவடிக்கை குழு என்று தம்மை அறிமுகம் செய்யும் இக் குழு ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்குகிறது. இதில் இயங்குபவர்கள் பலர் முன்னாள் ஜேவிபி உறுப்பினர்கள் ஆவர். பிரேமதாச காலத்தில் படுபயங்கரமான ஒடுக்கு முறைகளை சந்தித்த இவர்களில் பலர் பிற்காலத்தில் INGO  உதவியுடன் ஊடகவியலாளர்களாகவும், மனித உரிமை பாதுகாவலர்களாகவும் அறியப்பட்டவர்கள். இவர்கள் பலருக்கு தமிழ் இனவிடுதலை சம்பந்தமாக சரியான பார்வை இருந்து வருகிறது. அதேவேளை  பல வருட ஒடுக்கு முறையும்; அதனில் இருந்து தப்பிக்க இவர்கள் சரணடைந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனான இவர்களது  ஊறவானது; இன்று இவர்களை சுயநலம் சார்ந்து ஏகாதிபத்திய  நலம் பேணும் வரட்டுவாதிகளாக உருவாகியுள்ளது.

உதாரணத்திற்கு    அனைத்து மட்டத்திலும்  நன்கு தெரிந்த சுனந்த தேசபிரியவை கூறலாம்.     நல்லதொரு போராளியாக இருந்து பின்  MIRJE என்ற (Movement for Inter Racial Justice & Equality) சர்வதேச அரசசார்பற்ற நிறுவன உதவியுடன் யுக்திய என்ற பத்திரிகைக்கு தலைமை ஆசிரியராக இயங்கினார்.  பின்பு Free Media Movement of Sri Lanka, CPA (Center for Policy Alternatives) போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணத்தில் இயங்கும் அமைப்புகளின் தீவிர  செயற்பாட்டாளராகவும்,  அவ் அமைப்புகளின் திட்டங்களை நடைமுறைபடுத்துபவராகவும் இயங்கினார். பல பத்து மில்லியன்  ரூபாய்கள் இவரூடாக  சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் இலங்கையில் ஊடகம் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க பாவிக்கப்பட்டது. பின்னாளில் இவரும்    இன்னும் சிலரும்;    சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிதியை தவறாக பாவித்தனர் என்று லசந்த விக்கிரமதுங்கவை ஆசிரியராகக்  கொண்ட சண்டேலீடர்   அம்பலப்படுத்தியது.    இதன் பின் சுனந்த பதவி விலகினார். இன்று புலம்பெயர்ந்து வாழ்கிறார். இதனை  நான் இங்கு எழுதுவது சுனந்தாவை அவமானப்படுத்தவல்ல. அவரும் அவர் போன்ற பல முன்னாள்  மக்கள் நலம் சார்ந்த சக்திகள் எவ்வாறு இன்று சீரழிந்தனர் என காட்டுவதற்கே.

தமிழ் அரசியல் வட்டத்தில் பார்ப்போமானால்  இவரை போலவே  சீரழிந்தவர்கள் தான் முன்னாள்  தமிழ் முற்போக்குகளான  சரிநிகர் பத்திரிகையை சேர்ந்தவர்களாவர். இவர்களில் சந்தர்பத்தை  சரியாக பாவித்து;  தனது இருப்பை கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்தில்   நிலை நிறுத்தி கொண்டவர் திருவாளர் உருத்திரமூர்த்தி சேரன் என்றால் மிகையாகாது. இதன் அடிப்படையில்;  சீரழிந்து செயலிழந்த  இந்த முன்னாள் அரசியல் குட்டி சுவர்கள் எல்லாம் மக்கள் விடுதலைக்கு  வழிகாட்டும்  கோபுரங்கள் என கதை அளப்பதும்  “ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக் கீற்றுகளாகும்” என அறிக்கை விடுவதும்  சந்தர்ப்பவாத சகதியில் அரசியல் செய்யும் பிழைப்புவாதமாகும் .

காலி இலக்கிய விழா (Galle Literary Festival)

2007  இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவானது இலங்கையில் உள்ள அனைத்து      இனங்களையும் உள்ளடக்கிய மேல்தட்டு வர்கத்தின் இலக்கிய கொண்டாட்டமாகும்.  இந்த விழாவில் நடாத்தப்படும்  நிகழ்வுகள் அனைத்திலும் ஒருவர் பங்கு கொள்வதானால் அதற்கான கட்டணமாக 20000 ரூபாய்களை
செலுத்த வேண்டும். சல்சா நடனமும்,  வெளிநாட்டு மதுவும் வழிந்தோட நடத்தப்படும் இந்த இலக்கிய விழாவும், தமிழ் சுய தம்பட்டகாரர் கொழும்பில் நாடாத்தியது போன்றதொரு விழாவே. இதன் பின் இலங்கை அரசின் தன்நலம் சார்ந்த   தீவிரபிரசாரம் எதுவும் இல்லை. இந்த  விழாவை நிராகரிக்க கோரும் அறிக்கையில்  லசந்த விராம சிங்கவை கொலை செய்ததையும் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும்; எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் புறக்கணிப்புக்கான  காரணமாக கூறுகின்றனர். ஆனால்  லசந்த விக்ரமதுங்கவின் மனைவியும்; அவர் கொலையின் பின் தலைமை ஆசிரியராக சண்டேலீடரில்  பணிபுரிபவரும், மஹிந்த பாசிசஅரசின் விமர்சகருமான  சோனாலி சமரசிங்க   2009 இல் நடந்த விழாவில் கலந்து கொண்டார். (சோனாலி 2007 -2009 வரை ஒவ்வொரு  வருடமும் பங்கு பற்றியுள்ளார்.)

அதாவது லசந்த கொலை செய்யப்பட்டது தை மாதம் 8 ஆம் திகதி 2009  இல். சோனாலி விழாவில் கலந்து கொண்டது 1 ஆம் திகதி மாசி மாதம் 2009  இல். அவர் அதில்  Can journalism actually shape events?  who will get to  decide the new world order? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இன் நிகழ்வு தவறென்றால்,  இது மஹிந்த அரசு சார்ந்த ஏற்பாடென்ன்றால் அதன் விமர்சகரான   சோனாலி ஏன் இதில் பங்கு கொண்டார்?.   மேலும் ஏன் கடந்த வருடம் நடந்த நிகழ்விலும்; சண்டே லீடர் பத்திரிகையின் நிருபர்கள் பங்கு கொண்டுள்ளனர்? போன்ற கேள்வி இங்கு எழுகிறது .  இதற்கான பதில்; இவர்கள் லசந்தவின் கொலையை இங்கு பாவிப்பது தமது சுயதேவைக்காகவும் தமது அங்கிடுதத்தி அரசியலை சர்வதேச அரங்கிலும் நிலைநிறுத்துவதற்காகவுமே என்றால் மிகையாகாது .

சோனாலியுடன் மேற்கண்ட    விவாதத்தில் கலந்து கொண்ட   மற்றொருவர் பாக்கியாசோதி சரவணமுத்து. இவர் யாரென்றால்   Centre For Policy Alternatives என்ற நிறுவனத்தின் சர்வதேச நிதியில்,  சுனந்த தேசபிரிய போன்றவர்களுக்கு ”போராட” வசதி செய்பவர். இவரின் நிறுவனத்தின் நிதியை தவறாக பாவித்ததனால் தான், சண்டேலீடர் பத்திரிகையினால்  சுனந்த அம்பலப்படுதப்பட்டார்.

அடுத்ததாக   ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்களின் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும்,  இவர்களை போன்று இலங்கையில் INGO  நிதியில் ஜனநாயகத்திற்காகவும், மனித ஊரிமைக்காகவும் போராடுபவர்கள் பலரும்  இந்தவருட நிகழ்வில் பங்கு கொள்கின்றனர்.  உதாரணமாக இலங்கையின் பிரபல மனித உரிமைவாதி சுனிலா அபயசேகரவை கூறலாம்.

ஆகவே இன்று  இந்த புறகணிப்பு போராட்டம் செய்பவர்களும்; அவர்களுக்கு தூபம் போட்டு ஆராதனை செய்பவர்களும் சந்தற்பவாத, சுயநலம் சார்ந்த  அடிபடையிலேயே இந்த  புறகணிப்பு போராட்டதை மேற்கொள்கின்றனர்.

இறுதியாக

அருந்ததிராய், சொம்ஸ்கி,  தாரிக் அலி போன்றவர்களால் கையெழுத்திட்டு இந்த புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்; அது சரியான அரசியல்   அடிப்படையில் தான் முன்னெடுகப்படுகிறதென்ற வாதம் யாரவது முன்வைத்தால் அது கூட பிரமுகத்தனத்தின்  நிழலில் அரசியல் நடத்த முயலும் வெளிப்பாடே அல்லாமல் வேறொன்றும் இல்லை. அது போல தான்; ராஜஹரன் கருத்து   சொன்னால் அதற்கு எதிராக சொல்வது தான்  தமிழ் ஈழ   விடுதலைக்கான முன் நிபந்தனை என்பது போல அரசியல் அறிக்கை விடுவதுமாகும்.

பிற்குறிப்பு:
இந்த  கட்டுரை  மூலம் இந்த சந்தர்ப்பவாத புறகணிப்புவாதிகளை அம்பலப்படுத்துவதென்பது, காலி இலக்கிய விழாவின் வர்க்க அரசியலை நான் ஏற்றுகக் கொண்டவன் என்னபதல்ல. இந்த இரண்டு பிரிவினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இந்த இரு பிரிவினரின் அரசியலும் ஏகாதிபத்தியம் சார்ந்த மக்கள் விரோத அரசியலே !!!

ஊசாதுணை:

 

http://www.galleliteraryfestival.com/files/galle/Galle_LiteraryFestival_Programme_2009.pdf

http://www.asiantribune.com/node/14788

http://en.rsf.org/cuba.html

http://www.puthinappalakai.org/view.php?20110120102976

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7690:2011-01-22-115900&catid=343:2011

http://en.wikipedia.org/wiki/Reporters_Without_Borders

http://www.galleliteraryfestival.com/part2011

http://no.wikipedia.org/wiki/Lasantha_Wickrematunge

http://inioru.com/?p=19522

-மா . நீனா-

25/01/2011